பனம்பழம்

 

             டாக்டர் ஜி. ஜான்சன்

 

OLYMPUS DIGITAL CAMERA         பனம்பழத்தின் சுவையே தனி. அதன் மணமும் அப்படியே. இனிப்பும் கசப்பும் கலந்த சுவையோடு நல்ல மணத்துடன் உள்ளே மஞ்சள் நிறத்தில் சாறு நிரம்பிய சதையையும் நாரையும் கொண்டது பனம்பழம். பனம்பழம் எப்போதும் கிடைக்காது. வருடத்தில் சில மாதங்களில்தான் அது கிடைப்பதுண்டு. அப்போதுதான் கிராமங்களில் நொங்கு, பதநீர் எளிதில் கிடைக்கும். பனை மட்டைகளில் மடித்து நொங்கு விற்பார்கள். மண்பானைகளில் பதநீர் கொண்டுவருவார்கள்.

          பனம்பழம் அப்படி கொண்டு வந்து விற்கமாட்டார்கள். அவை மரங்களிலேயே பழுத்துவிடுபவை. அதிலும் நொங்குக்காக வெட்டப்படாத பனங்காய்களின் குலைகள் மரத்திலேயே இருந்தால்தான் அவை பழுத்து பனம்பழமாகும்.

          பழுத்த பழமாக இருந்தாலும் அதன் தோல் வாழவழப்புடன் கடினமாகவும் இருக்கும். அதைக் கடித்து பிய்த்து உள்ளேயுள்ள சதையையும் நாரையும் மென்று சப்பினால் சுவையோ சுவை!

பழுத்த பனம்பழங்கள் மரத்திலிருந்து தானாக கீழே விழுந்துவிடும். இரவில் விழுபவை காலையில் மரத்தடியில் கிடக்கும். யார் அந்த பக்கம் விடியலில் போகிறார்களோ அவர்கள் அவற்றை எடுத்துக்கொள்வார்கள்.

பனம்பழத்தின் சுவை சிறு வயதிலேயே மூளையில் நன்கு பதிந்துவிட்டதால், இப்போதுகூட பனம்பழம் என்று நினைத்த மாத்திரத்தில் நாவில் உமிழ்நீர் ஊரும்.இன்றுபோல் அன்று நடந்த சம்பவம் ஒன்று இன்றும் பசுமையாக உள்ளதால் இந்த குழந்தை வயதில் நடந்த வீரதீரச் செயலை அப்படியே இப்போது எழுத முடிகிறது.

எங்கள் கிராமத்தின் எல்லைகளில் வயல்வெளியின் வரப்புகளில் பனை மரங்கள் காணலாம். ஊரின் உள்ளேயே ஒரு சில வீடுகளின் தோட்டங்களில் ஒன்றிரண்டு மரங்கள் உள்ளன.

எங்கள் அற்புதநாதர் ஆலயத்தின் பின்புறம் கல்லரைத் தோட்டம் அமைந்துள்ளது. அதன் எல்லையாக வரிசையாக பனை மரங்கள் உள்ளன.

இருட்டியபின் அங்கெல்லாம் போகக்கூடாது என்பார்கள். அங்கு என் முன்னோர்கள் யாரையும் புதைத்ததில்லை. என் தாத்தாவும் பாட்டியும் கிறிஸ்துவர்கள் ஆனபிறகு எங்கள் குடும்பத்தில் யாரும் சாகவில்லை., அப்பாவும் பெரியப்பாவும் மலாயாவில் இருந்ததால், அவர்கள் கல்லறை காட்டுவார்களோ என்ற சந்தேகத்தில் தாத்தா அவருக்கும் பாட்டிக்கும் கல்லறை கட்டி வைத்திருந்தார்.

images 2        பனை மரத்துக்கு  ” போராசுஸ் ஃப்லபெல்லிபெர் ” ( Borasus Flabellifer ) என்று தாவரவியல் பெயர் உள்ளது. இது கிரேக்கச் சொற்கள். Borasus என்பது பனம்பழத்தின் வழவழப்பான .வெளித்தோலைக் குறிப்பது. Flabellifer என்பதன் பொருள் விசிறி தூக்கி என்பது. பனை மட்டைகள் விசிறி வடிவில் உள்ளவை.

பனைமரம் ” பால்மே ” குடும்பத்தைச் ( Palme Family ) சேர்ந்தது.

பனை மரம் தமிழ் நாட்டின் தேசிய மரமாகப் போற்றப்படும் சிறப்புக்குரியது. இதுபோல் கம்போடியாவிலும் பனை மரம் தேசிய மரமாகும். அங்கு புகழ் பெற்ற பண்டைய விஷ்ணு ஆலயமும் பல்லவ மன்னன் ஜெயவர்மனின் அரண்மனையுமான ” அங்கோர் வாட் ” ( Angkor Wat ) சுற்றிலும் பனை மரங்கள் நின்று அழகூட்டுவதைக் காணலாம். இந்தோனேசியாவிலும் பனை மரங்கள் அதிகம் காணலாம்.

பனை மரம் முப்பது மீட்டர் உயரம் வளரும் நெடிய மரமாகும். அதன் மட்டைகள் மூன்று மீட்டர் நீளம் உள்ளவை. இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் பண்டைய காலத்தில் பனை மட்டைகளில் எழுதி ஓலைச் சுவடிகளாகப் பாதுகாத்துள்ளனர். பனை மட்டை வீட்டுக் கூரை, பாய், கூடை, விசிறி, குடை போன்றவற்றுக்குப் பயன்பட்டுள்ளது. இதுபோன்று பனை மரத்தில் சுமார் 800 பயன்பாடுகள் உள்ளதாகக் கூறப்படுகின்றன.

அதிகமான காற்று வீசும்போது பனை மரமும் லேசாக அசைத்து ஆடும். அப்போது பனை ஓலைகள் ஒன்றோடொன்று உரசும்போது ஒரு ஓசை எழும். இதை வைத்தே நம் முன்னோர்கள் ” பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது ” என்று அர்த்தத்துடன் பழமொழியும் கூறியுள்ளனர்.

பனை மரத்தின் புகழ் பாடியது போதும். இனி கதைக்கு வருகிறேன்.

எங்கே விட்டேன்? … ஆமாம். குழந்தை வயதில் எனது வீரதீரச் செயல்தானே?

அப்போது எனக்கு வயது நான்கு. சில நாட்களில் என்னுடைய சின்ன தாத்aதா வீட்டில் இரவில் தூங்குவது வழக்கம். வீடு கோவிலின் அருகே எதிர் புரத்தில் இருந்தது. காலையில் விடிந்ததும் எழுந்து என் வீட்டுக்கு அம்மாவிடம் ஓடிவிடுவேன்.

ஒரு நாள் பொழுது நன்றாக விடியாத அதிகாலை. படுத்திருந்த என்னைக் காணவில்லை என்று பதறியடித்துக்கொண்டு தாத்தா அம்மாவிடம் சென்றுள்ளார். சுமார் இருபது வீடுகள் தாண்டினால் எங்கள் வீடு.

அங்கும் நான் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டவர்கள் குய்யோமுறையோ என்று கூச்சலிட்டு இன்னும் உறங்கிக்கொண்டிருந்த ஊராரை எழுப்பிவிட்டனர்.

images 3          தாத்தாவின் வீட்டுக்குப் பின்புறத்திலேயே குளம் உள்ளது. எல்லாரும் அங்கு சென்று தேடியுள்ளனர்.அங்கும் நான் இல்லை.

ஊரே தேடியும் என்னைக் காணவில்லை.

வயல்வெளிக்கு மாடுகளை ஒட்டிச்சென்ற ஒருவர் என்னைப் பார்த்துவிட்டு மாடுகளை அப்படியே விட்டுவிட்டு ஊருக்குள் ஓடி எல்லாரையும் கூட்டி வந்துவிட்டார்.

வந்தவர்கள் அனைவரும் என்னைப் பார்த்து வியந்து போயினர்! என்னை எங்கே பார்த்தார்கள் என்பது இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்குமே?

நான் கல்லறைத் தோட்டத்தில் ஒரு கல்லறையின்மேல் உட்கார்ந்துகொண்டு பனம்பழத்தைச் சுவைத்துக்கொண்டிருந்தேன்!

( முடிந்தது )

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 48 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) பெண்ணின் வடிவழகு ..!அதிரடி தீபாவளி!