பவர் பாயிண்ட் தொடர்பான தமிழ்ச்சொற்கள்

Spread the love

கோ. மன்றவாணன்

நம் திரையரங்குகளில் படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பும் இடைவேளையின் போதும் ஸ்லைடு போடுவார்கள். பெரும்பாலான ஸ்லைடுகளில் புகை பிடிக்காதீர்… எச்சில் துப்பாதீர்… முன் இருக்கையில் கால் நீட்டாதீர்… இருக்கை மாறி அமராதீர்… எனக் கட்டளைகள் இருக்கும். பின்னர் ஸ்லைடு வழியாக விளம்பரம் போட்டார்கள். தற்போது விளம்பரங்கள் எல்லாம் குறும்படங்களாக உருவாக்கப்பட்டுத் திரையிடுகிறார்கள். இந்த Slilde என்பதைத் தமிழில் படச்சில்லு என்று சொல்லலாம்.

தற்காலத்தில் பவர் பாயிண்ட் என்ற மென்பொருள் வழியாகவே ஸ்லைடுகளை உருவாக்கிக் காட்சிப்படுத்துகின்றனர். அதனை ஒளிச்சில்லு என்றுகூடச் சொல்லலாம்.

சில்லு என்பதற்கு இணையாக “வில்லை” என்றொரு சொல்லும் உண்டு. அந்த “வில்லை” இங்குப் பயன்படுத்தினால் பொருள் குழப்பம் ஏற்படும். படவில்லை என்று எழுதினால் பட வில்லை என்று பொருள் கொள்ளாமல் “என்மேல் எதுவும் படவில்லை” என்பார்கள். ஒளிவில்லை என்று எழுதினால் ஒளி வில்லை என்று பொருள் கொள்ளாமல் “எங்களிடத்தில் எந்த ஒளிவும் இல்லை” என்று பொருள் கொள்வார்கள்.

பவர் பாயிண்ட் என்பது அந்த மென்பொருளுக்கு இடப்பட்ட பெயர்தான். பயன்பாட்டை அடிப்படையாக வைத்து உருவான சொல் இல்லை. Face Book என்பதை முகநூல் என்றதுபோல்… பவர்பாயிண்ட் என்பதற்குத் திறன்சுட்டி என்றோ திறன்புள்ளி என்றோ திறன்முனை என்றோ தமிழ்ப்பெயர் சூட்டலாம். பயன்படுத்தப் பயன்படுத்த அதுவும் ஏற்கப்படலாம்.  அதைவிடவும் படச்சுட்டி என்ற சொல்லைப் பயன்படுத்தினால் பவர் பாயிண்ட் என்பதன் பயன்பாடும் தெரியும். ஒன்றைச் சுட்டுவதால்… காட்டுவதால்… சுட்டி எனலாம். மவுஸ் என்பதற்கும் சுட்டி என்று சொல்கிறோமே என்பார் உண்டு. படம், திறன் என்பவையோடு சேர்ந்து சுட்டி வருவதால் அவ்வாறு பொருள்குழப்பம் ஏற்படாது.

பவர்பாயிண்ட் என்ற படச்சுட்டி மூலமாக எந்தப் பொருள்குறித்தும் எழுத்துகளாக படங்களாக ஸ்லைடுகள் உருவாக்கப்படுகின்றன. ஸ்லைடு எழுதுவதற்கு உதவியாக, ஆயத்த வடிவங்களும் அந்த மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்லைடுகளைத் தொகுப்பாக அடுக்கி, ஒன்றன் பின் ஒன்றாகக் காட்சிப் படுத்துகிறார்கள். ஆகவே மென்பொருள் வழியாக இத்தகைய ஸ்லைடுகள் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பப்படுவதால் அதனைப் படச்சில்லு என்றோ ஒளிச்சில்லு என்றோ சொல்லலாம். ஒளிச்சில்லு என்பதில் பொருள்பொருத்தம் மிகஉண்டு. எனினும் படச்சில்லு என்பதில் இருக்கும் எளிமை ஒளிச்சில்லுவில் இல்லை.

ஸ்லைடு ஷோ என்பதைப் படச்சில்லு காட்சி என்றோ ஒளிச்சில்லு காட்சி என்றோ சொல்லலாம். இதில் இன்னொரு பார்வையும் இருக்கிறது.

பழங்காலத்தில் பனை ஓலைகளைப் பதப்படுத்தி எழுதி நூலாக்கம் செய்தார்கள். பல ஓலை நறுக்குகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக் கட்டினார்கள். அதனைச் சுவடி என்றார்கள். அதுபோலவே இந்த ஸ்லைடு ஷோக்களில் பயன்படுத்தப்படும் ஒளிச்சில்லுகளும் உள்ளன. ஸ்லைடுகளின் கோப்புக்குப் படச்சுவடி / ஒளிச்சுவடி என்றும் ஸ்லைடு ஷோவுக்குக் படச்சுவடிக் காட்சி / ஒளிச்சுவடிக் காட்சி என்றும் சொல்லலாம்.

பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் என்பதை ஒளிச்சுவடி முன்னிடல் / ஒளிச்சுவடி முன்னிடுகை என்றும் சொல்லலாம். படச்சுவடி முன்னிடல் / படச்சுவடி முன்னிடுகை என்றும் குறிப்பிடலாம்.

இவ்வாறு பல சொற்கள் இருக்கின்றன. இவற்றில் இருந்து, சொல்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் எளிமையாக இருக்கும் சொற்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். அந்த வகையில் கீழ்க்கண்டவாறு சொற்களைப் பயன்படுத்தலாம.

Slide – படச்சில்லு

Slides in a file format – படச்சுவடி

Slide show – படச்சுவடிக் காட்சி

Power Point Presentation : படச்சுவடி முன்னிடல் / படச்சுவடி முன்னிடுகை

Power Point (Soft Wear) : படச்சுட்டி,

Series Navigationகை கூட வேண்டும் அன்பு நடமாடும் கலைக் கூடம்சாகித்ய அகாதமி விருது (2015) பெற்ற “இலக்கியச் சுவடுகள்” – ஆ.மாதவன்