பிணம் தற்கொலை செய்தது

அசைவற்று கிடந்தது பிணம்
அதன்மீது அழுகைஒலிகள் தேங்கியிருந்தன
வார்த்தைகளில் சொல்லமுடியாத
துயரத்தின் ரேகை படர்ந்திருந்தது.
எழுந்து நடந்து செல்ல முடியாதென்பது
பிணத்திற்கு தெரிந்திருக்க கூடும்
தன்னை எரிப்பதற்கோ
அல்லது புதைகுழியில் அடக்குவதற்கோ
எதுவாக இருப்பதற்கும் தயாராயிருந்தது.
பிணங்களோடு வாழ்தலில் உள்ள ஆர்வம்
வற்றிப் போகவில்லை.
வானத்திறப்பின் நிகழ்தலில்
முடிவற்றதொரு நெடும்பயணம்
தேவதைகளைத் தேடி தேடி
பிணத்தின் பயணம் தொடர்கிறது.
முக்ம்பார்த்து நாளாயிற்று
எதிரும் புதிருமாய் கூட சந்திக்கமுடியவில்லை.
எதையேனும் வெற்றிக் கொள்ள
அல்லது தோல்வியுற
உருவாகும் உலகில் நீயும் நானும் எதுவுமற்றும் கூட.
பிணவாடை எல்லோருக்கும் பிடித்திருந்தது
ஒரு ஆச்சர்யமான சம்பவம்தான்
ஒருலட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்பாக
தாழியில் புதைக்கப்பட்டிருந்தது
ஆதித் தாயின் உடம்பிலிருந்து முளைத்த
தாவரங்களின் இலைகளில்
தீராத சலனம் தொற்றியிருந்தது
தொலைபேசி அடித்துக் கொண்டிருக்கிறது
ஆளில்லாத வீடென்று தெரியாமல்
கடிகாரம் ஓடிக் கொண்டிருக்கிறது
இதயத்தை
வாசலில் கழற்றிப் போட முடியவில்லை.
பறக்கும் புராக்குகளில் ஏறி
வானமெங்கும் பறந்து செல்ல பிணம்தயார்.
ஞானிகள் செத்துக் கிடக்கிறார்கள்.
பரணில் வீசி எறிந்த புத்தக மலையில்
செத்து கிடக்கிறது
வரலாறும் பெருச்சாளி ஒன்றும்
பிணத்தின் மெளனத்தை
யாராலும் பொருள் கொள்ள முடியவில்லை.
கொசாவா கஷ்மீர்
பள்ளப்பட்டி ரஹ்மத் நகர்
துப்பாக்கி அணுகுண்டு
ஓட்டுச் சீட்டு ஐந்தாண்டுதிட்டம்
எச்சிலிலை இன்டெர்நெட்
விரல்துண்டுபட்ட வேதனையை
எந்த வீச்சரிவாளும் பங்கு போடவில்லை.
பிணம் திகைப்புற்று நிற்கிறது
சொல்லிவைத்த தத்துவங்களை
சிறிதுசிறிதாய் தின்றுதீர்த்தவாய்களின்
பசி தீரவில்லை.
உன்னையும் என்னையும் விதவிதமாய் கொல்லும்
ஆயுதங்களும்
மந்திரங்களும் துரத்திவருகின்றன.
எதுவும் பேச முடியவில்லை.
மின்விசிறி இறகின் கொலைக்கயிற்றில்
சடலம் தொங்குகிறது.
பிணம்
மீண்டுமொருதடவை தற்கொலை செய்தது.

ஹெச்.ஜி.ரசூல்

Series Navigationஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சிசெதில்களின் பெருமூச்சு..