புகைப்படமாய் உருமாறும் புனைவு – [ ”வளவ. துரையன் சிறுகதைகள்” முழுத்தொகுப்பை முன்வைத்து ]

Spread the love

 

     முனைவர் க. நாகராஜன், புதுச்சேரி

 

 

 

எழுத்தாளர் வளவ. துரையனின் 135 சிறுகதைகள் அடங்கிய முழுத்தொகுப்பு தாரிணி பதிப்பகத்தால் “வளவ. துரையன் கதைகள்” என்னும் பெயரில் சமீபத்தில் வெளிவந்துள்ளது. வளவ. துரையன் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன இலக்கிய உலகில் காத்திரமாக இயங்கி வருபவர். ‘மலைச்சாமி’, மற்றும் ‘சின்னசாமியின் கதை’ என இரண்டு நாவல்களைத் தந்தவர். சங்க இலக்கியங்களில் ஆழங்கால்பட்டு ‘சிகரங்கள்’ மற்றும் ‘வலையில் மீன்கள்’ எனும் கட்டுரை நூல்களைத் தந்தவர். ‘விடாததூறலில்’ மற்றும் ‘ஒரு சிறு தூறல்’ எனும்  நவீன கவிதைத் தொகுப்புகளையும் ‘பசி மயக்கம்’ எனும் மரபுக்கவிதைத் தொகுப்பும் தந்தவர். அவர் எழுதிய ‘அர. இராசாராமன் ஆற்றுப்படை’ அவருடைய சங்க இலக்கிய மரபுக்குச் சான்று தரும். ‘வைணவ விருந்து’ பெரியோர் சிந்தனைகள்’ போன்ற பொதுச்சிந்தனை நூல்களுக்குச் சொந்தக்காரர். ‘சங்கு’ சிற்றிதழின் ஆசிரியர். இத்தனைச் செய்திகளும் ஏற்படுத்தும் பெரிய எதிர்பார்ப்புகளோடு சிறுகதைத் தொகுப்பை வாசகர்கள் அணுக வேண்டி உள்ளது.

 

பொதுவாகவே வளவ. துரையனின் எழுத்து நேர்க்கோட்டுத்தன்மை [linear] உடையது. நேரடியான கூறல் முறை, வலிமையான உரையாடல்கள், மத்திய தர மற்றும் விளிம்பு நிலை மாந்தரின் தினசரி வாழ்வில் புலப்படும் / வெளிப்படும் ஒரு சிறிய முடிச்சு, எதிர்பாராத திருப்பம் தரும் முடிவு என்கிற சூத்திரத்தில் பெரும்பாலான கதைகளை அடக்க முடியும் என்ற போதிலும். உயிர்ப்பான தென்னாற்காட்டுத் தமிழும், கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்படும் முறையும்; கதைகளை விஸ்வரூபம் எடுக்கச்செய்து நம் மனமெங்கும் வியாபிக்க வைக்கின்றன.

 

உதாரணமாக ‘மாறா உவமை’ கதையை எடுத்துக் கொள்ளலாம். காட்சிக்கு மிக எளிய கணவன்—மனைவி கருத்து வேறுபாட்டைத் தீர்த்துவைக்கும் பண்ணையார் தம்பதியினரின் கதை என்றாலும், கதை ஏற்படுத்தும் அதிர்வு, பல நாள்கள் அக்கதையையே அசைபோட வைக்கிறது. “அறுத்து விடுங்க சாமி” எனும் மாமியாரின் குரல் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 

கதை சொல்லும் முறையில் பின்பற்றப்படும் உத்திகள் வாசகரின் வறட்டுத்தனமான வாசிப்பை மாற்றி அமைத்துப் புத்துணர்வு ஊட்ட வல்லது. வளவ. துரையன் வேறுபட்ட உத்திகளை ஆங்காங்கே பயன்படுத்துகிறார். அவரது ஆகச் சிறந்த கதைகளில் ஒன்றான “தேரு பிறந்த கதை”யை அவ்வாறு குறிப்பிடலாம். முனுசாமிக்கிழவன் என்ற கிராமத்துக் கதை சொல்லும் பெரியவரின் குரலோடு கதை தொடங்குகிறது. கோயில் தேர், என்ன காரணத்தால் செய்யப்பட்டது என்கிற கேள்விக்கு சுவாரஸ்யமாக, வர்க்கப் பார்வையை முன்வைக்கும் கதை இது. ஒரு நாடகமாகவே, பல காட்சிகளோடு தேரு பிறந்த கதையை, சிறுகதை விவரிக்கிறது. கதையில் பொங்கும் அங்கதம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். ‘மூக்கொழுகி’ மலையனூரு தேரு பாக்கப் பூட்டான்; ‘குசுவப்பன்’ வீராம்பட்டணம் தேருவுக்குப் பூட்டான். என்கிற பூர்வாங்க அடித்தளக்குறிப்புகளோடு சிறுகதை தொடங்கும்.

 

படிமங்கள் கவிதைக்கு அழகு சேர்ப்பவை. படிப்பவர் மனத்தில் படைப்புகளைப் படிய வைப்பவை. கவிதைக்கு மட்டுமன்று; எல்லாவகைப் படைப்புகளுக்கும் ’படிமம்’ தேவை என்கிறது நவீன இலக்கியம். வளவ. துரையனின் ‘கருடன்’ கதை வலிமையான படிமத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. கதைசொல்லி ஒரு வைணவர். எல்லா நல்ல காரியங்களுக்கும் வானத்தில் படிக்கும் கருடனை நல்ல சகுனமாகக் கருதுபவர். அந்த எண்ணம் வலுப்பெறக் காரணம் ஒருநாள் சகுனம் பார்க்காமல் மேற்கொள்ளும் மாட்டுவண்டிப் பயணம் விபத்தில் முடிவதே. கதை ஒரு மருத்துவமனை வாசலில் தொடங்குகிறது. பிரசவத்திற்காக மருமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவளின் பனிக்குடம் உடைந்து மிகவும் ஆபத்தான நிலை. கதைசொல்லியோ வானத்தில் கருடனைத் தேடுகிறார்; கழுகு வருகிறது; காக்கை வருகிறது; ஆனால் கருடன் மட்டும் வரவே இல்லை. கதையைப் படிக்கும் வாசகனும் கருடனின் வரவுக்காகப் பரபரப்பாகக் காத்துக்கொண்டிருக்கிறான். கவிதை நயம் வாய்ந்த முடிவோடு கதை முடிகிறது. சந்தேகத்திற்கிடமில்லாமல் “கருடன்” ஒரு மிகச் சிறந்த கதை.

 

”சாப விமோசனம்” சிறுகதை மூலம் புராண மறு உருவாக்கக் கதைப்போக்கைப் புதுமைப்பித்தன் தொடங்கி வைத்தார். பெரும்பாலான எழுத்தாளர்கள் இந்தப்போக்கில் சோதனை முயற்சிகள் செய்து பார்த்திருக்கிறார்கள்.

 

‘நயனபலி’ கதையில் வளவ. துரையனும் செய்திருக்கிறார். சிவபெருமானுக்காகக் கண்களைப் பெயர்த்து வைத்த திண்ணனின் [கண்ணப்பர்] மறு உருவாக்கமே ‘நயனபலி’. ‘நயனபலி’ எனும் தலைப்பே மிருதுவான கவிதையாக விரிகிறது. காட்டில் அமைந்துள்ள சிவாலயத்தில் தினசரி பூஜையை நிகழ்த்தும் அர்ச்சகர் மற்றும் காட்டரண் தலைவர் வெளிப்படுத்தும் பதற்றம் கதைக்கு உயிரோட்டம் சேர்க்கிறது. நாடகக் காட்சிகளைக் கவனத்துடன் தவிர்த்து உற்றுப் பார்க்கும் கண்ணின் மணிகளோடு கதை முடிகிறது. கயிற்றில் நடக்கும் வித்தை போன்ற சோதனையில் வளவ. துரையன் வெற்றிகரமாகத் தேறியுள்ளார் என்பதை நிச்சயமாக நாம் சொல்லலாம்.

 

வளவ. துரையன் சிறுகதைகளின் மற்றுமொரு சிறப்பு துல்லியமான புவியியல் குறியீடுகளும், சித்தரிப்புகளும் ஆகும். உதாரணமாக ‘காலமாற்றம்’ கதை. இருபது ஆண்டுகளில் வளவனூர் கூட்ரோடு அடைந்த மாற்றத்தைக் குறிப்பிடும் கதை. சொல்லாமல் சொல்லும் மாற்றம் மனிதர்களின் புற வாழ்க்கையைப் பற்றியது. இன்னும் உற்று நோக்கினால் அவர்களின் அகவாழ்க்கையையும் பற்றியது.

 

சமயத்தில் வளவ. துரையனின் கதைகள் ‘சட’ ’சட’ என முடிவது போலத் தோன்றுகிறது. நிறைய விவரிப்புகளுக்குச் சத்திதியக் கூறுகளைக் கொண்ட ‘திரை’ சிறுகதை திடீரென்று முடிவது நெருடலாக உள்ளது.

 

மொத்தத் தொகுப்பையும் படித்து முடித்து மனத்தில் அசைபோடும்போது ஒரு வண்ணமயமான புகைப்படத் தொகுப்பு [ Photo Gallery ] விரிவதுபோல பல கதைகள் நேர்த்தியான காட்சிகளாக மனத்தில் தோன்றி மறைகின்றன. கதை மாந்தர்கள் துலக்கம் பெறுகின்றனர். தங்குதடையற்ற உரையாடல்கள் அருவிகளென வழிந்தோடுகின்றன. ஏராளமான கதைகள் நீண்ட காலத்திற்கு நினைவில் நிற்கும் என்னும் நினைப்பு மனத்தில் எழுகிறது. வளவ. துரையனின் எழுத்துகள் புன்னகையையும், திருப்தியையும் தருகின்றன.

 

[வளவ. துரையன் கதைகள்—முழுத்தொகுப்பு—வெளியீடு : தாரிணி பதிப்பகம்—–ப்ளாட் எண் 4ஏ, ரம்யா ப்ளாட்ஸ்—32/79, காந்தி நகர் 4-ஆவது பிரதான சாலை—அடையார்—சென்னை 600 020—-பக் : 680—விலை : ரூ 600/ பேசி: 99401 20341]

Series Navigationவலைஞர்கள் வாசகர்கள் கலந்துரையாடல்எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’