புது ரூபாய் நோட்டு

Spread the love

siva02எஸ். சிவகுமார்

“தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு; இன்னிக்காவது புது ரூபா நோட்டு வாங்கிண்டு வாடா, மறந்துடாதே ! “ எனப் பூஜை அறையிலிருந்தே குரல் கொடுத்தார் அனந்தகிருஷ்ணன். வேலைக்குக் கிளம்பும்போது அப்பா இப்படி நினைவுபடுத்தக் கத்தியது வேணுவுக்கு எரிச்சலாயிருந்தது; “ம்… நான் வரேன்” என்றுக் கோபமாகக் கிளம்பினான்.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி சமயத்தில் அவருக்குப் புது ரூபாய் நோட்டு வேண்டும். வங்கிக்குச் சென்று அவருடைய நண்பர் ராகவனிடம் கேட்டுப் புது ரூபாய் நோட்டு ஒரு கட்டு வாங்கி வந்துவிடுவார். ஒரு ரூபாயில் ஆரம்பித்த இந்தப் பழக்கம், பணவீக்கத்தினால் இப்போது பத்து ரூபாயாக உயர்ந்துவிட்டது.

விடியற்காலையில் முதலில் எழுந்து எல்லாரையும் எழுப்பி விட்டுவிட்டு, முதல் எண்ணைக் குளியலை அவர் முடித்து விடுவார். ஒவ்வொருவராகக் குளித்துமுடித்து அவரிடம் புதுத் துணிகளை வாங்கி உடுத்திக் கொண்டு, அவருக்கு நமஸ்காரம் செய்வார்கள். ஆளுக்கு ஐம்பது ரூபாய்; பத்து ரூபாய் நோட்டுகளாகக் கொடுப்பார். வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் என்று இல்லை. நாயனக்காரர், பால்காரர், தபால்காரர், வீட்டு வேலைக்காரப்பெண், தெருக்கூட்டுபவள், பேப்பர் பாய் என அந்தப் பட்டியல் நீளும். அதை வாங்கிக் கொண்டவர்கள் முகத்தில் தெரியும் வெளிச்சம்தான் அவரின் சந்தோஷம். இப்போது உடல் நலப் பின்னடைவினால் வெளியில் நடமாட முடியவில்லை. அதனால் மகனிடம் புது நோட்டு வாங்கிவரச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

வேணுவுக்குத் திருமணமாகி ஐந்து வருடம் ஆயிற்று. மனைவி ரேணுகா வீட்டு நிர்வாகம் செய்கிறாள். மூன்று வயதில் ஒரு பையன் ஸ்ரீராம். ஆனாலும் அனந்தகிருஷ்ணனோ இன்னும் வேணுவைச் சிறுபையன் போலவே பாவித்துப் பேசுவார். அவர் கணக்கு ஆசிரியராக இருந்து ஒய்வு பெற்றவர். அவருக்கு எல்லாருமே மாணவர்களாகத்தான் தெரிந்தார்கள். கண்டிப்பாக இருந்தாலும் அவர் மனம் விசாலமானது. யார் வந்து என்ன உதவி கேட்டாலும் தன்னால் முடிந்ததைச் செய்வார்.

வேணு படிப்பில் கெட்டிக்காரனில்லை. தட்டுத் தடுமாறி வணிகவியல் பட்டப்படிப்பு முடித்தான். செங்கல்பட்டில் இருக்கும் ஒரு துணிக்கடையில் வேலை கிடைத்தது. கடையின் மொத்த வரவு செலவுக் கணக்குகளைக் கவனித்துக் கொள்ள நான்குபேர். அதில் ஒருவன் இவன். இவர்களை மேற்பார்வையிட ஒரு மேலாளர். நான்கு பேரும் சுழற்சி முறையில் வங்கிக்குப் போவார்கள்.

ஒரு வாரமாக வேணுதான் வங்கிக்குப் போகிறான். வங்கிக் காசாளரிடமும், மேலாளரிடமும் புது ரூபாய் நோட்டு வேண்டுமெனக் கேட்டு அலுத்துவிட்டான். நாளை நாளை என்று தினமும் நாட்கடத்துகிறார்கள். இன்று எப்படியும் வாங்கி விடவேண்டும்; இல்லாவிட்டால் முடியாது என்று வேணு மனதில் உறுதி செய்துகொண்டான். முதலாளி மாம்பலத்தில் புதுக்கடை நாளை மறுநாள் திறக்கிறார். வேணுவுக்கு நாளையிலிருந்தே அங்கேதான் வேலை.

பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருவழிப் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டுச் செங்கல்பட்டு செல்லும் ரயிலில் ஏறினான். செங்கல்பட்டு சேர்ந்தவுடன் வண்டியிலிருந்து இறங்கிய ஜனக்கடலில் சங்கமமாகி ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வந்தான். கடைக்குச் செல்ல நடந்தாக வேண்டும் அல்லது ஆட்டோவில் போகவேண்டும். பேருந்து கிடையாது. சீக்கிரம் சென்று மேலாளரிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு முதலில் வங்கிக்குப் போய்வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டே வேகமாக நடந்தான். அப்படி வேகமாக நடக்கும்போதுகூட அவனுடைய கண்கள் தெருமுனைத் திருப்பத்தில் வலதுபுறம் அனிச்சையாகத் திரும்பிப் பார்த்தன.

கடந்த பத்து நாட்களாகக் கடையிலிருந்துத் திரும்பிவரும்போது அந்த இடத்தில் நின்று, தினசரி அவன் பார்க்கின்ற காட்சி, தாடி மீசையுடன் ஒரு பிச்சைக்காரன். இரண்டு கால்களும் இளம்பிள்ளை வாதத்தினால் சூம்பியிருக்கும். கட்டம் போட்ட ஒரு பழைய லுங்கியை நான்காக மடித்துத் தரையில் விரித்து அதன்மேல் அமர்ந்திருப்பான். அவனுக்கு முன்னால் ஒரு சிமென்ட் சாக்கு மடித்துப் போட்டு அதன் மேல் ஒரு தகர டப்பா. அதன் மூடியில் நீளவாக்கில் ஓட்டை போட்டு உண்டியல் போல் ஆக்கப்பட்டிருக்கும். டப்பாவின் பக்கவாட்டில் ‘தர்மம் தலை காக்கும்’ என்று எழுதி, பக்கத்தில் எம்.ஜி.ஆர். படம் ஒட்டிய ஒரு அட்டை, மூங்கில் குச்சியின் துணையுடன் நிற்கும். அவன் யாரிடமும் பிச்சை கேட்பதாகவே தெரியவில்லை. எங்கோ தூரத்தில் யாரையோ பார்ப்பது போல் ஒரு பார்வை.

அப்பாவின் தர்ம குணம் வேணுவுக்கும் இருந்தது. அந்தப் பிச்சைக்காரனுக்குக் காசு போடவேண்டும் என்றுப் பாக்கெட்டில் துழாவுவான். சில்லறை ஏதும் இருக்காது. சரி, நாளைக்குப் போடலாம் என்று ரயிலைப் பிடிக்கச் சென்றுவிடுவான். தினமும் இப்படித்தான் நடக்கிறது. இன்று திரும்பி வரும்போது அந்த பிச்சைக்காரனுக்குப் பத்து ரூபாய் பிச்சை போடவேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டான்.

வேணு கடைக்குள் நுழைந்துத் தன்னுடைய நாற்காலியில் அமர்ந்தான். இன்னும் மேலாளர் வரவில்லை. அவர் வந்தவுடன் வங்கிக்குக் கிளம்பவேண்டும்; அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். சரியாகப் பத்து நிமிடங்களில் மேலாளர் வந்தார். “வேணு ! இன்னிக்கி நீ பேங்குக்குப் போகவேண்டாம். முதலாளியே நேரா பேங்குக்குப் போறாராம். பெண்டிங் இருக்கற அக்கௌன்ட்ஸ் எல்லாம் என்ன என்னன்னு எங்கிட்ட டிடைல்டா சொல்லிட்டு வீட்டுக்குக் கிளம்பு. நாளைக்கு முதலாளி ஏதாவது சந்தேகம் கேட்டாச் சொல்லணுமில்லே; உன்னையாக் கூப்பிட முடியும்? அப்புறம் முதலாளி சொல்லச் சொன்னாரு, புதுக்கடையிலே அக்கௌன்ட்ஸிலே வேற யாரையும் போடலையாம்; பத்து நாளைக்கு எல்லா விஷயமும் நீதான் பாத்துக்கணுமாம்” என்று அவனுடைய திட்டத்திலே ஒரு வெடிகுண்டு போட்டார்.

வேணுவுக்குத் திக்கென்றது. இன்றுதான் கடைசி நாள் இங்கே. நாளை புதுக்கடைக்குப் போய்விட்டால் இன்னும் பத்து நாட்களுக்கு வெளிவேலை எதற்கும் போகமுடியாது. புதுரூபாய் நோட்டை மறந்துவிட வேண்டியதுதான் என மருகினான். வேறு வழியில்லாமல், தான் இதுவரை பார்த்துக்கொண்டிருந்த கணக்குவழக்குகள் சம்பந்தமான பேரேடுகளை எடுத்து வந்து மேலாளர் முன் பரப்பிவைத்தான். முடிந்துபோன விஷயங்களையும், பாதியில் இருக்கும் வேலைகளில் இனி என்ன என்ன செய்யவேண்டும் என்று விவரித்து விளக்க ஆரம்பித்தான்.

பிற்பகல் மூன்றரை மணியளவில் எல்லாம் முடிந்தது. சகபணியாளர்களிடம் சொல்லிக் கொண்டு வேணு கிளம்பினான். ரயில் நிலையத்துக்கு அருகில்தான் வங்கிக் கிளை; ஆட்டோவில் போனால் பத்து நிமிடங்களில் போய்விடலாம். வெய்யிலாகவும் இருந்தது. காசைப் பார்க்காமல் ஆட்டோவில் ஏறி வங்கிக்குப் போனான். வங்கியுள் நுழையும்போது கைக்கடிகாரத்தைப் பார்த்தான். பணிநேரம் முடிய இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன.

நேராகக் காசாளர் வரதராஜனிடம் சென்றுப் புதுப் பத்துரூபாய் ஒரு கட்டு வேண்டுமென்றான். “என்ன வேணு சார், இவ்வளோ டைம் கழிச்சு இப்பதான் வரீங்க? காலைலயே எல்லாம் தீர்ந்து போச்சே ! வேணுமின்னா மேனேஜரைக் கேட்டுப் பாருங்க; உள்ளே ஏதாவது பேலன்ஸ் வச்சிருந்தாலும் வச்சிருப்பாங்க” என்று உதட்டைப் பிதுக்கினார். மேலாளரின் தரிசனம் கிடைக்க இன்னும் ஒரு பத்து நிமிடம் ஆயிற்று. “வாங்க வேணு ! கங்கிராட்ஸ் ! மாம்பலம் கடைக்கு நீங்கதான் அகௌன்ட்ஸ் ஹெட்டாமே? காலைலே உங்க பாஸ் சொன்னார். இன்னொண்ணும் சொன்னார். ரகசியமா வச்சிக்கிங்க. உங்க எல்லாருக்கும் ஒருமாச போனஸ் இந்த வருஷம் ! மொத்த அமௌண்டுக்கும் புதுக்கட்டா வாங்கிட்டுப் போயிட்டார். ஜமாய்ங்க!” என்றார். இதற்குமேல் மேலாளரிடம் புதுரூபாய் கேட்பதில் எந்தப் பயனும் இல்லை என்று தெரிந்துபோனது. “தேங்க யூ சார்!” என்று விடைபெற்று வெளியில் வந்தான்.

செலவுக்குப் பணம் வேண்டும். தன்னுடைய டெபிட் அட்டையை ‘ஏடீஎம்’மில் செருகி இழுத்து ரகசிய எண்ணைப் பதித்து ரூபாய் இரண்டாயிரம் வேண்டுமென்று ஆணையிட்டான். அது ஆயிரம் ரூபாய்த் தாள்கள் இரண்டைத் துப்பியது. முன்பெல்லாம் ஐநூறு, நூறு எனத் தருகின்ற இயந்திரம், பணக்காரத்தனமாக இப்போது ஆயிரத்தில் தருகிறது. நேரமாகிவிட்டதால் இதற்குமேல் வங்கியுள் சென்றும் சில்லறை கேட்க முடியாது.

போனஸ் இப்போது கைக்கு வராது. தீபாவளிக்கு அடுத்த நாள் பூஜையெல்லாம் செய்து அப்புறம்தான் முதலாளி போனஸ் தருவார். போனஸை நினைத்து மகிழ்ச்சி ஏற்பட்டாலும் தீபாவளிக்கு முன்பாகப் புதுரூபாய் கிடைக்காததே வருத்தமாகி முன்னிலையில் நின்றது. சிந்தித்தபடியே ரயில் நிலையத்தை நோக்கி நடந்தான்.

நடக்கும்போதே பிச்சைக்காரனின் நினைவு வந்தது. பர்ஸைத் திறந்துபார்த்தான். இருபது ரூபாய் இருந்தது. குழந்தைக்கு ஏதாவது வாங்கலாம் என்றுப் பெட்டிக்கடையில் பத்து ரூபாய்க்கு ‘ஃபைவ் ஸ்டார்’ சாக்லேட் வாங்கினான். மீதமிருந்த பத்து ரூபாயைச் சட்டைப் பையிலேயே வைத்துக்கொண்டான். அப்பாவிடம் புதுரூபாய்க்கு என்ன சமாதானம் சொல்வது என்றுத் தெரியவில்லை. தீபாவளி என்றால் விடியற்காலையில் சீக்கிரம் எழுந்து வீட்டு வாசலில் ஐந்து நிமிடமாவது சரவெடி வெடித்துத் தீர்க்கவேண்டும் அனந்தகிருஷ்ணனுக்கு. இல்லாவிட்டால் அவர் தலையே வெடித்துவிடும்; வேணுவுக்கோ சாமி, கோவில், பண்டிகை எதுவும் ஆகாது; வெடிகளைக் கண்டால் ஆகவே ஆகாது. இருந்தாலும் இன்றைக்கே பட்டாசு வாங்கிக் கொண்டுபோய் அப்பா கையில் கொடுத்துச் சமாளிக்கலாம் என்றுத் தோன்றியது. வழியில் தெரிந்த பட்டாசுக் கடைக்குள் நுழைந்தான்.

கடையில் கூட்டமே இல்லை. நல்ல வேளை, பட்டாசு சீக்கிரம் வாங்கிக் கொண்டு போய்விடலாமென்று நினைத்தான். மணி இன்னும் ஐந்து கூட ஆகவில்லை. கூட்டம் சேர இன்னும் நேரமாகும். அதுவுமில்லாமல் தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம் இருக்கிறது என்பதுகூடக் காரணமாக இருக்கலாம். சுற்றிச் சுற்றி வந்து வெடிகள் நிறையவும், மற்றவை குறைவாகவும் தேர்ந்தெடுத்தான். எல்லாவற்றையும் கூடையில் போட்டுப் பணம் செலுத்தவேண்டிய இடத்தில் கொடுத்து, “ரேட்டெல்லாம் பாத்துப் போடுங்க சார்!” என்று ஒரு அசட்டுச் சிரிப்போடு விண்ணப்பித்தான்.

“அதெல்லாம் கரெக்டா இருக்கும் சார்! ஹோல்சேல் ரேட்டு ! ஐநூத்திப் பத்து ரூபா குடுங்க சார்! ” என்றுக் கடைப்பெயர், முகவரி, வரிசை எண் என்று எதுவுமில்லாத ஒரு ரசீது எழுதிக் கிழித்துப் பவ்யமாக வேணுவின் கையில் கொடுத்தார் கடைக்காரர். பர்ஸைத் திறந்து ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து ஜம்பமாக நீட்டினான் வேணு. “ஒரு பத்து ரூபா இருக்கா பாருங்க” என்ற கடைக்காரரின் கண்கள், வேணு பதில் சொல்வதற்குள் அவன் சட்டைப்பையில் அரைகுறையாக நீட்டிக்கொண்டிருந்த பத்து ரூபாயைப் பார்த்துவிட்டன. அவர் பார்வை சென்ற திசையைக் கவனித்த வேணு, மீதம் இருந்த ஒரே ஒரு பத்து ரூபாயைச் சரியாக மடித்துவைக்காதத் தன் முட்டாள்தனத்தை நொந்துகொண்டான். மறுத்து எதுவும் சொல்லமுடியாமல் அந்தப் பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு, பட்டாசுப் பையையும் மீதம் ஐநூறு ரூபாயையும் வாங்கிக்கொண்டு நகர்ந்தான்.

ஐநூறு ரூபாயைப் பர்ஸில் வைக்கும்போதுதான் நகைச்சீட்டுக்கு இந்தமாதத் தவணை இன்னும் கட்டாதது நினைவுக்கு வந்தது. இதுதான் கடைசித் தவணை. இதைக் கட்டினால்தான் கட்டிய பணம் பத்தாயிரத்தோடு ஆயிரம் ரூபாய் கூடுதல் பரிசாகக் கிடைக்கும். பதினோராயிரத்துக்கு அடுத்த மாதம் ஏதேனும் நகை வாங்கிக்கொள்ளலாம். நகைக்கடை பஜாரில் இருந்தது. தன்னுடைய மறதியை நொந்துகொண்டே வந்தவழியே திரும்ப நடந்து நகைக்கடைக்குச் சென்றான். ஐநூறு ரூபாய்த் தவணையைக் கட்டிவிட்டுத் திரும்பவும் ரயிலடிக்கு நடந்தான்.

பிச்சைக்காரன் வழக்கமாக உட்கார்ந்திருக்கும் தெருவுக்குள் திரும்புமுன் திருப்பத்தில் இடதுபுறம் பார்த்துக்கொண்டே தயங்கித் தயங்கி மெள்ள நடந்தான். பிச்சையிடக் கைவசம் சில்லறை இல்லையே என்று வருத்தம் அவன் நடையை மேலும் தளர்த்தியது. பிச்சைக்காரனுக்கு முன்னால் நின்றான்.

வழக்கமாகப் பார்க்கும் தன் நெடுந்தூரப் பார்வையை விலக்கி, “என்ன சாமி, கை ரெண்டும் நல்லாத்தானே இருக்கு இவனுக்கு, ஏன் பிச்சை எடுக்குறான்னு பாக்குறியா? கையும் ஒண்ணும் பிரயோசனம் இல்லே” என்றுச் சொல்லி வேணுவை நிலைகுலையச் செய்தான் பிச்சைக்காரன். “அதெல்லாம் இல்லப்பா; உனக்குக் காசு போடணும்னு தெனம் நெனைப்பேன். சில்லறையே இருக்காது. இன்னிக்கி உனக்குக் குடுக்கறதுக்காகவே ஒரு பத்து ரூபா வச்சிருந்தேன். அதுவும் செலவாயிடிச்சு. என்ன செய்யறதின்னு யோசிக்கிறேன்” என்று மன்னிப்புக் கேட்கும் தொனியில் பதில் சொன்னான் வேணு.

ஒரு கை அவன் முதுகில் தட்டியது. திரும்பிப் பார்த்தான்; வங்கிக் காசாளர் வரதராஜன்! “என்ன வேணு சார், இன்னுமா நீங்க வீட்டுக்குப் போகலே?” என்று துக்கம் விசாரித்தார். ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை மட்டும் வைத்துக்கொண்டு, அந்தப் பிச்சைக்காரனுக்குப் போடச் சில்லறை இல்லாக் கொடுமையைச் சுருக்கமாகச் சொன்னான். “அட, இவ்வளதானா! நீங்க கிளம்பிப் போனப்பறம் பேங்க் ஸ்டாஃப் எல்லாரும் இன்னிக்கே புது ருபா நோட்டு வாங்கிக்கிங்கன்னுச் சொல்லிட்டாங்க. எல்லாருக்கும் குடுத்தப்பறம் எனக்குன்னு பத்து ரூபா கட்டு மூணு இருந்தது. ஜாஸ்திதான். இருக்கட்டும்னு எடுத்துக்கிட்டேன். இந்தாங்க ஒரு கட்டு. உங்க ஆயிரம் ருபா நோட்டை என்கிட்டத் தள்ளுங்க” என்றுப் புதுப் பத்து ரூபாய்க் கட்டு ஒன்றை வேணுவிடம் நீட்டினார். “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்!” என்று உணர்ச்சி வசப்பட்டான். ரூபாய்க் கட்டில் கடைசியில் இருக்கும் தாளை உருவிப் பிச்சைக்காரன் வைத்திருந்த டப்பாவுக்குள் மடித்துப் போட்டான். மறுபடியும் வரதராஜனுக்கு நன்றி சொல்லிவிட்டு, ரூபாய்க் கட்டைக் கைப்பைக்குள் வைத்துக்கொண்டான். ரயிலேறிப் பல்லாவரம் வந்து வீட்டுக்கு வரும்போது எட்டு மணி ஆகிவிட்டது.

“என்னடா, இன்னிக்கிச் சீக்கரம் வந்துட்டே? புது நோட்டு வாங்கிண்டு வந்தயா?” என்று அனந்தகிருஷ்ணன் வரவேற்றார். பட்டாசுப்பையைக் கீழே வைத்துவிட்டுக் கைப்பையைத் திறந்து அலுப்புடன், “இந்தாங்கோ!” என்று ரூபாய்க் கட்டை அவரிடம் கொடுத்தான். அதைப் பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது. புதுரூபாய்க் கட்டாயிருந்தாலும், வழக்கம் போல அதை எண்ணிச் சரிபார்க்கத் தொடங்கினார். “என்னடா தொண்ணூத்தொம்பதுதான் இருக்கு? எண்ணிப் பார்த்து வாங்க மாட்டியோ? பாங்கிலேயே ஃப்ராடு பண்றாளா?” என்று அலறினார். தான் அலைந்த கதை எதையும் சொல்லிக் கொண்டிருக்க வேணுவுக்கு நேரமில்லை; விருப்பமும் இல்லை. சலிப்பாக இருந்தது. “உண்டியல்லப் பத்து ரூபா போட்டேம்பா!” என்றான். “குருவாயூரப்பா! இப்பவாவது இவனுக்கு நல்லபுத்தி குடுத்தியே!” என்றுக் கைகளை மேலே உயர்த்திக் கும்பிட்டார் அனந்தகிருஷ்ணன்.
__________________________________________________________________________________

Series Navigation‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………29 ஞானக்கூத்தன் – ‘கவிதைகளுக்காக’தாகூரின் கீதப் பாமாலை – 76 கனவுகளில் மிதப்பாய் .. !