புலம்பெயர்வு

This entry is part 7 of 45 in the series 26 பிப்ரவரி 2012

கணேஷ்

வீட்டின் பின்புறம் இருந்த பூந்தொட்டிகளுக்கு நீருற்றிக்கொண்டிருந்தாள் ரிவோலி. சனிக்கிழமை மதியம். சாம்பல் நிறவானம். நவம்பர் மாதத்தில் மஞ்சள் நிறவானத்தை பார்ப்பது அபூர்வம். பொதுவாக சனிக்கிழமை ரிவோலியின் வீட்டில் அவளுடைய மாணவர்கள் வருவது வழக்கம். இன்று யாரும் வரவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தோட்டத்தில் உலாத்திக்கொண்டிருந்தாள்.

பக்கத்து பங்களாக்காரர்கள் உறங்கிக்கொண்டிருப்பார்கள். வெள்ளியிரவு லேட்நைட் பார்டிகளிலிருந்து அதிகாலை வந்து, அசதி நீங்காமல் தூக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும். அங்கு இரு இளம் பெண்கள் தத்தம் காதலருடன் வசிக்கிறார்கள். அங்கு வசிக்கும் ஒரு ஆடவன், ரிவொலியின் மாணவன். வங்கதேசத்தில் உள்ள சிலேட் நகரிலிருந்து முனைவர் பட்டம் பெற டொரொண்டொ வந்தவன். ரிஸ்வான் என்று பெயர். அவனுடைய காதலி – ரிபெக்கா – சட்டம் பயில்கிறாள். கனடாவைச்சேர்ந்தவள். மற்ற ஜோடியைப்பற்றி ரிவோலிக்கு அதிகம் தெரியாது. ரிஸ்வான் ரிவோலியின் வீட்டிற்கு வழக்கமாக வந்து போகிறவன். ஒரிரு முறை அவனது காதலி ரிபெக்காவும் அவனோடு வந்திருக்கிறாள்.

இந்த ரிஸ்வான் ரிபெக்காவுடன் கடைசி வரை இருப்பானா? பால் வடியும் முகம் கமிட்மெண்டுக்கு அடையாளமாகாது. அப்படியிருந்தால், தேவ்-வும் என்னுடன் இருந்திருப்பான். தனியாக இருக்கும் பொழுதுகளில் எல்லாம் தேவ் பற்றிய சிந்தனை திரும்ப திரும்ப வருகிறது.

எங்கு போனார்கள் டேனியலும், சிவப்பெருமாளும்? சனிக்கிழமை மதியம் அவர்கள் செய்யும் ஆய்வு சம்பந்தமான உரையாடலுக்காக வருகிறேன் என்ற மாணவர்கள். டேனியலை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றாள். அவர்களிருவரும் பல்கலைக்கழகத்தில் இருந்தால். அங்கே வந்து கூட உரையாட தயார் என்று சொல்லலாம் என்று நினைத்தாள். டேனியல் போனை எடுக்கவில்லை.

குளியலுக்கு பின்னர், புத்துணர்வு மீண்டது போலிருந்தது. பாஸ்டா செய்து சாப்பிட்டாள். உப்பு குறைவாக போய் விட்டது. பாதி சாப்பிட்டுவிட்டு, மீதியை ஃப்ரிட்ஜ்-ஜில் வைத்தாள். டேனியலிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. சிவ பெருமாள் தன் உறவினர்களின் இல்லத்திற்கு போய் விட்டபடியாலும், டேனியலின் காதலியின் பிறந்த நாள் விழா ஞாயிறன்று வருவதால் அதன் ஆயத்தப்பணிகளில் காதலிக்கு உதவி புரியவேண்டியிருப்பதாலும், சனிக்கிழமை மதியம் வர இயலாது என்று தெரிவித்திருந்தான். முன்னரே தெரிந்திருந்தால், ரிவோலி தன் தோழிகளிருவரை சந்திக்க சென்றிருப்பாள்.

தில்லிக்கு போன் செய்து, தந்தையுடன் பேசினாள். “எப்படியிருக்கிறாய்?” என்ரு வாஞ்சையுடன் கேட்டார் ரிவோலியின் தந்தை – சுரேந்திர மெஹ்ரா. பிசினசிலிருந்து ஒய்வு பெற்று கோயில், ஆன்மீகம், நண்பர்கள் என்று காலத்தை கழித்து கொண்டிருக்கிறார். “நீ சம்பாதிக்க வேண்டுமென்று என்ன இருக்கிறது? அவ்வளவு தூரம் சென்று ஆசிரியையாக பணியாற்றும் உனக்கு நம் ஊரில் எளிதாக அதே வேலை கிடைத்து விடாதா? என் பக்கத்தில் இங்கே, தில்லியில் நீ இருக்கலாகாதா?” என்று பலமுறை மன்றாடிக்கேட்டிருக்கிறார். அப்பொதேல்லாம், ஒரு வறட்டு மௌனத்தை விட வேறு பதில் இருந்ததில்லை ரிவோலியிடம். அண்ணனிடம், அண்ணியிடம் மாதம் ஒருமுறை பேசுவதோடு சரி. அண்ணனின் குழந்தைகளிடம் சிற்ப்பான பரிவோ உறவுமுறையோ ரிவோலிக்கு இதுவரை இருந்ததில்லை. அப்படி வருவதற்கான சந்தர்ப்பமும் நிகழவில்லை, ஏனெனில், ரிவோலி தில்லி சென்று அவர்களையெல்லாம் சந்தித்து ஐந்தாறு ஆண்டுகளாகி விட்டன.

அப்பாவிடம் சில நிமிடங்கள் பேசியபிறகு, சைக்கிளை ஒட்டிக்கொண்டு, பல்கலைகழக கிளப்புக்கு போனாள். கொஞ்ச நேரம் டென்னிஸ் விளையாடினாள். அவளுடன் விளையாட்டில் பங்கு பெற்ற தோழியுடன் உட்கார்ந்து அரட்டை கொஞ்ச நேரம். பின்னர் இருவரும் சேர்ந்து திரைப்படம் காண முடிவு செய்தார்கள். “கறுப்பு அன்னம்” என்ற ஆங்கிலப்படம். ரிவோலி இரண்டு மணி நேரங்களுக்கு திரைப்படத்தில் லயித்திருந்தாள். கூட வந்த தோழி, திரைப்படம் முடிந்தவுடனேயே விடைபெற்றாள். ரிவோலி இரவு உணவை ரெஸ்டாரண்டில் தனியாக உண்ண வேண்டியதாகி விட்டது.

வீட்டுக்கு திரும்பிய அரை மணி நேரத்தில், தொலைக்காட்சி ஒடிக்கொண்டிருந்த சத்தத்தையும் மீறி ஹாலில் இருந்த சோபாவில் கண்ணயர்ந்தாள். ஒரு மணியிருக்கும். சடக்கென்று விழித்து, உதட்டில் வழிந்த எச்சிலை துடைத்துக்கொண்டாள். தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, படுக்கையறையில் சென்று படுத்தாள். தூக்கம் விலகி விட்டது. நெடுநேரம், நிலையில்லாத சிந்தனைகள். புரண்டு, புரண்டு, மெத்தையே உஷ்ணமாகியது போல பட்டது. அறை ஹீட்டர் அனணக்க வேண்டுமோ? படுக்கையிலிருந்து எழுந்து, ஃப்ரிட்ஜிலிருந்து வைன் பாட்டிலை திறந்து இரண்டு மடக்கு விழுங்கினாள். பாதி படித்து, டேபிளில் மேல் மடித்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய எழுத்தாளர் ஒருவர் எழுதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட  நாவலை படிக்க ஆரம்பித்தாள்.   

ஞாயிறு காலையில், ரிவோலி விழித்தபோது ஒரே தலைவலி. பால் சேர்க்காமல் காபி குடித்தாள். தேவ் சரியான காபி குடியன். நாளைக்கு ஐந்தாறு முறை குடிப்பான். ரிவோலிக்கு தேவ்வுடன் வசிக்க ஆரம்பிக்கும் முன்னதாக காபி குடிக்கும் பழக்கம் இருந்ததில்லை. காபி குடிக்க ஆரம்பித்ததே, படுதலைவலியென்று, தலை துவட்டும் துண்டை தலையில் கட்டிக்கொண்டு ரிவோலி சயனித்திருந்த ஒரு ஞாயிறன்று தான். சுடச்சுட காபி போட்டு எடுத்து வந்தான். “இந்த அமிர்தத்தை பருகிப்பார்…உன் தலைவலி ஓடிப்போய்விடும்” என்றபடி அவள் அருகில் அமர்ந்து காபிக்கோப்பையை தந்தான். அவன் தோள்களில் சாய்ந்து கொண்டே அருந்தினாள். தலைவலி போனது காபியாலா? அல்லது தேவ்வின் அணைப்பினாலா?

ரிவோலியுடன் வாழ்ந்த நாட்களில்,  அவனிடம் மது அருந்தும் பழக்கமிருந்ததில்லை. இப்போது குடிக்க ஆரம்பித்திருக்கலாம். தெரியாது. ரிவோலிக்கு மதுப்பழக்கம் தொற்றிவிட்டிருந்தது. தேவ் அவள் வாழ்க்கையை விட்டு நீங்கிய கொஞ்ச நாட்களில் குடிக்க ஆரம்பித்தாள். ஒரு வருடம் முன்பு, குடல் வியாதி வந்து, சிகிச்சை பெற்றபோது குடிக்கும் பழக்கத்தை மட்டுப்படுத்திக்கொண்டாள்.

தன் கடந்த வாழ்க்கையின் அங்கம் தேவ். கடந்த காலத்தை முழுதும் மறத்தல் சாத்தியமானதா? தேவ்வின் மேல் நான் கொண்டிருந்த காதல் தர்ககபூர்வமானதல்ல! காதலில் விழுதல் என்ற சொற்றொடர் எத்துனை பொருத்தமானது? குழியை தேர்ந்தெடுத்தா விழுகிறோம்? விபத்தாக, எந்த திட்டமிடலும் இல்லாமல் தானே விழுகிறோம்.

வெதுவெதுப்பான ஷவர்க்குளியல்! வழக்கத்தை விட அதிகமான நேரம் குளித்தாள். ஒற்றை துண்டை அணிந்தவண்ணம், கண்ணாடியை பார்த்தவாறு, கேசத்தை துடைத்தாள். காதுக்கு மேல், ஒரிரு வெள்ளை முடிகள் எட்டிப்பார்த்தன. கத்திரிக்கோலினால் வெட்டினாள். வெட்டப்பட்ட வெள்ளை முடிகளை, சன்னல் வெளிச்சத்தில் பார்த்தபடியே தடவிக்கொடுத்தாள். தேவ்-வையும் இது மாதிரி தன் வாழ்க்கையிலிருந்து வெகு முன்னரே எடுத்தெரிந்திருக்க வேண்டும். ஏன் முடியாமல் போயிற்று? வேண்டாமென்று வெட்டிய வெள்ளை முடியை தூக்கி எறிய மனமில்லாமல் தடவிக்கொடுப்பது மாதிரியான ஒரு தெரிவை நான் செய்தேன்.

ரிவோலியும் தேவ்வும் அமெரிக்கா வந்து டெக்ஸாசில் உள்ள ஹண்ட்ஸ்வில் நகரில் உயர் படிப்பு படிக்க ஆரம்பித்த நாட்களில் நடந்த ஒர் உரையாடல் ரிவோலியின் நினைவுத்திரையில் ஒடிற்று.

“நான் ஒரு ப்ரேக்மடிஸ்ட்…இத்தனை வருடம் காதலித்தது, அமெரிக்கா வரை ஒன்றாக படிக்க வந்து சேர்ந்தது வரை ஓகே. சேர்ந்து ஒரே வீட்டில் இருப்பது கூட சரிதான். ஆனால் ஒன்றை நீ கருத்தில் வைத்து முடிவெடு. என் வீட்டில் என் பெற்றோர் நம் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள். ட்ரெடிஷனல் மார்வாரி பிசினஸ் குடும்பத்தில் பிறந்தவன் நான். எங்கள் கம்யூனிடியை விட்டு வேறு யாரையும் திருமணம் செய்தல் முடியவே முடியாத ஒன்று.”

   

தேவ் மேற்கண்டவற்றை ஒரு சலனமுமில்லாமல் சொன்னான். ரிவோலி ஒரு வெறுமையான முகபாவத்துடன் கேட்டுக்கொண்டாள். குழப்பமா? அல்லது கோபமா? கடுமையாக ஏமாற்றப்படும் உணர்வா? எதை அவள் முகம் பிரதிபலித்தது? இரண்டு தினங்கள் இருவருக்குமிடையில் ஒரு சம்பாஷணையும் நடக்கவில்லை. தேவ் ஹாலில் படுத்துக்கொண்டான். படுக்கையறை கதவை சார்த்திக்கொண்டு, வெகுநேரம் சிந்தித்தாள். மூன்றாவது நாளிரவு, படுக்கையறைக்குள் தேவ் அனுமதிக்கப்பட்டான்.

“உன்னைக்கண்டு பித்தேறி, நீ படித்த கல்லூரியின் ஹாஸ்டல் சுவரை தாண்டிக்குதித்து, நள்ளிரவில் உன் அறை புகுந்து என் காதலை நானேதான் சொன்னேன். அமேரிக்காவில் படிக்கவேண்டும் என்ற உன்னுடைய இலட்சியத்துக்கு குறுக்கே நிற்காமல், அதே சமயம் உன்னை விட்டு பிரியக்கூடாது என்ற எண்ணத்தால், என் குடும்பத்தினரிடம் பிடிவாதம் பிடித்து, நீ சேர்ந்த அதே பல்கலைக்கழகத்தில் சேர்ந்து…..இதெல்லாம் எதற்காக? உன் மேல் கொண்ட கட்டுப்பாடில்லா நிபந்தனையற்ற காதலால்….இனிமேலும் நிபந்தனை விதிக்க மாட்டேன்…உன் படிப்பு முடியும் வரை சேர்ந்தே இருப்போம்…” – என்றாள் ரிவோலி. சொற்கள் தெளிவாக வெளிப்பட்டன.

“படிப்பிற்கு பிறகு நான் உன்னை திருமணம் செய்யாமல் போனால்..?” – வினவினான் தேவ். புன்னகைத்த மாதிரி இருந்தது. 

“உன் மனம் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன் பெற்றோர்களிடம் நீ எனக்காக பேசுவாய்”

“அப்படி பேசாமல் போய், வீட்டில் பார்த்து வைக்கும் பெண்ணை நான் கல்யாணம் செய்து கொண்டால்…?” – புன்னகையுடன் கேட்டான் தேவ். அவன் கைகள் ரிவோலியின் இடைப்பகுதியை லேசாக துழாவிக்கொண்டிருந்தன.. அவள் பதில் கூறுமுன் அவள் இதழ்களை அழுத்தி முத்தமிட்டான்.

வெள்ளை முடிகளை குப்பையில் எறிந்தாள்.

அவள் பேராசிரியராக இருக்கும் பல்கலைக்கழகத்தில் கணக்கராக இருக்கும் ஆஃப்ரோ-கரிபியப்பெண் – க்ரிஸ்டினா என்பவள் ரிவோலியின் நண்பி. ட்ரினிடாடில் பிறந்து வளர்ந்தவள்.  புசுபுசுவென்று சுருண்ட முடியும், உச்ச சாரிரமும் கொண்டவள். ரிவோலி தங்கியிருக்கும் ஊரிலிருந்து பத்து மைல் தள்ளியிருந்த ஒரு கிராமத்தில், டையமண்ட்ஸ் இன் என்ற பெயர் கொண்ட ஒர் அழகான பப் (pub) இருந்தது. எல்லா ஞாயிறு மாலைகளும் ரிவோலியும் க்ரிஸ்டினாவும் அங்கு போவது வழக்கம். அன்று வழக்கத்திற்கு மாறாக ரிவோலி கோனியாக் அருந்தினாள். பபில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ரிஸ்வானும் ரிபெக்காவும் அன்று அந்த பபில் இருந்தார்கள். ரிஸ்வான் ரிவோலியைப்பார்த்து கையாட்டினான்.

க்ரிஸ்டினாவின் நகைச்சுவையுடன் கூடிய பேச்சை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தாள். வார்த்தைக்கு வார்த்தை புணர்ச்சியின் ஆங்கிலச்சொல்லை சேர்த்து சேர்த்து க்ரிஸ்டினா பேசிக்கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது.

ரிவோலியின் கைத்தொலைபேசி கூவியது. பபில் நிலவிய சத்ததில் கைத்தொலைபேசியின் அலறல் காதில் விழவில்லை. க்ரிஸ்டினா தான் சொன்னாள். கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு பபின் வாசலுக்கு வந்தாள். ரிவோலியின் அண்ணியுடைய அக்கா டொரொன்டொவில் வசிக்கிறாள். அவளுடைய அழைப்புதான் அது.

“ஓ! பபில் இருக்கிறாயா?” – அண்ணியின் அக்காவின் குரலில் ஏளனம் தொனித்தது.

“இல்லை…இன்று திருமணப்பெண்கள் கொண்டாடும் கர்வாசௌத்…நீ தனியே இருப்பாயே….இன்று இரவு எங்கள் வீட்டில் சாப்பிட அழைக்கலாமென்று பார்த்தேன்….என் கணவரும் காரில் உன்னை அழைத்து வருகிறேன் என்றார்…நீ பிஸி போலிருக்கிறது”

கைத்தொலைபேசி வைக்கப்பட்டதும் ரிவோலி கசப்பாக உணர்ந்தாள். கண்மண் தெரியா கோபவுணர்வு நெஞ்சில் பெருக்கெடுத்தது. இரண்டு மூன்று பெக் மதுவை வேகமாக குடித்தாள்.

“எனி திங் ராங்?” என்று க்ரிஸ்டினா கேட்டாள்.

ஒன்றுமில்லை என்று பொருள் படும்படியாக புணர்ச்சியின் ஆங்கிலச்சொல்லை ரிவோலியும் பயன்படுத்தியதும் இருவரும் குபீரென சிரித்தனர்.

திடீரென்று, க்றிஸ்டினாவிடம் சொல்லிக்கொண்டு ரிவோலி வீட்டுக்கு கிளம்பினாள். பபின் வாசலை அடைந்ததும் வாந்தியெடுத்தாள். அவள் வாந்தியெடுப்பதை பார்த்த ரிஸ்வானும் ரிபெக்காவும் அவளை காரில் உட்காரவைத்தனர். ரிஸ்வான் காரை செலுத்திச்சென்று, ரிவோலியை வீட்டில் விட்டான்.

திங்கள் கிழமை ரிவோலி விழிக்கும் போது எட்டரை மணியாகிவிட்டது. அன்று அவளுடைய முதல் லெக்சர் ஒன்பது மணிக்கு இருந்தது. உடல் நிலை சரியில்லையென்று விடுப்பெடுத்துக்கொண்டாள். இது மாதிரி திட்டமிடப்படாத, கடைசி நேர விடுமுறை எடுப்பது அவ்வளவாக நிகழுந்ததில்லை.

காபி போட்டுக்குடித்து தலைவலியை விரட்ட சோம்பலாக இருந்தது. சோஃபாவில் அமர்ந்து, கண்ணை மூடி உட்கார்ந்திருந்தாள். முந்தைய நாள் மாலை நடந்ததை எண்ணி, ரிவோலிக்கு தன் மீதே வெறுப்பு வந்தது. தன்னைப்பற்றி நெருங்கிய உறவினர்களே வம்பு பேசியும் அவளை கொஞ்சம் கூட பாதிக்காது இருந்திருக்கிறது. எவளோ ஒரு தூரத்து உறவுக்காரி நக்கல் பண்ணியதால் இத்தனை சலனம் ஏன் ஏற்பட்டது?

தில்லியிலிருந்து அண்ணனின் போன் செய்தான். சேம விசாரிப்புக்கு பிறகு அவன் சொன்ன செய்தி ரிவோலியினுள்ளில் அதிசயமாக எந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கவில்லை.

“கேள்விப்பட்டாயா? ஒரு துயரகரமான சம்பவம். உன் பழைய நண்பன் – தேவ் – தன் மனைவி, தன் மூன்று வயது மகன் – இவர்களை தன் கைத்துப்பாக்கியால் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டான்….கலிபோர்னியவில் உள்ள சான்ஹொசேயில் வசித்து வந்திருக்கிறான். ஒரு வருடம் முன்னர் பங்குசந்தையில் எல்லா முதலீடுகளையும் இழந்ததால், மனனிலை சரியில்லாமல் அலைந்திருக்கிறான்… சி என் என்னில் காட்டுகிறார்கள் பார்…”

சி என் என்னில் தேவ்வின் பழைய புகைப்படமொன்றை ஸ்டில்லாக காட்டிக்கொண்டிருந்தார்கள். ரிவோலி எடுத்த புகைப்படம். எட்டு வருடங்களுக்கு முன்னர் நயாகராவில் எடுத்தது.

பின் குறிப்பு : ரிவோலி கனடாவிலிருந்து தாயகம் திரும்பிவந்துவிட்டாள். சண்டிகர் நகரில் வாழ்கிறாள். வழக்கறிஞர் ஒருவரை மணந்து கொண்டாள். அவளுக்கு ஆறு மாதம் முன்பு ஒர் அழகான பெண் குழந்தை பிறந்தது.

 

Series Navigationஅப்பாவின் சட்டைசாகித்திய அகாதெமி பரிசு பெற்ற காவல் கோட்டம்—-ஒரு ார்வை
author

கணேஷ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *