பெரிதே உலகம்

Spread the love

கத்திரி வெயில் வறுத்தெடுக்கும் கடற்கரை மணலில்
கைவிடப்பட்டதாய்த் திரியும் கிழவனுக்கு அலைகள் தேற்றினாலும்
என்ன ஆதரவிருக்கும்?

சேரிக் குடிசையிலிருந்து தன் பெண்டின் சிகையைப் பிடித்து
’தர தர’வென்று தெருவில் இழுத்துச் செல்லும் ’தற்கொண்டானுக்கு’
என்ன இரக்கமிருக்கும்?

பேருந்திலிருந்து கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளிவிடப்பட்டு சாலைப்
புழுதியில் விழுந்து கிடக்கும் குடிகாரன் மேல் பயணிகள் யாருக்கும்
என்ன அக்கறையிருக்கும்?

பரட்டைத் தலையும் கந்தையுமாய்த் தான் பாட்டுக்குத் திரியும்
பைத்தியக்காரனை ’லத்தி’யில் துரத்தும் போலிஸ்காரனுக்கு
என்ன நியாயமிருக்கும்?

உலகில்
எல்லா நதிகளுமா வறண்டு போகும்?

குடியிருப்பில் யாரும் கிட்டக்கூட வரவில்லையானாலும்
இருக்கும் போது
மரியாதையாய்த் தன்னை நடத்தாத
மாரடைப்பில் இறந்தவனின் பிணத்தை வீட்டுக்குள் கிடத்த
கை கொடுத்துத் தூக்கும் ’கூர்க்கா’வின் சால்பினை
என்ன சொல்ல?

பரந்த உப்புக்கடல் மேல் கருக்கலில் தனியாய்ப் பறந்து செல்லும்
ஒரு சிறு பறவையின் நம்பிக்கையை
என்ன சொல்ல?

பெரிதே உலகம்.
பேரன்புடையோர் பலரே.

கு.அழகர்சாமி

Series Navigation