ப.மதியழகன் கவிதைகள்

Spread the love

மணல் வீடு

 

வானக்கூரையை

தொட்டுக் கொண்டு

நிற்கும்

கலங்கரை விளக்கம்

படகுகளைத் தாலாட்டும்

கடலலைகள்

கடலில்

நீந்தும் மீன்கள்

வலையில் அகப்பட்டால்

பாத்திரத்தில் பதார்த்தமாய்

கிடக்கும்

கடலின் ஆழத்தில்

பனித்துளி முத்தாக

உருமாறும்

கடலலைகள்

எழுப்பும் ஓசை

ஆர்மோனியத்திலிருந்து

வெளிவரும்

சுதியைப் போலிருக்கும்

பால்யத்தில்

கிளிஞ்சல்கள் பொறுக்கிய

நாம் தான்

கடற்கரையிலும் கைபேசியில்

உரையாடுகிறோம்

கட்டிய மணல் வீட்டை

அடித்துச் சென்ற

கடலலையைப் பார்த்து

குதூகலித்தனர் குழந்தைகள்.

 

 

 

 

 

 

 

தூரத்துச் சந்திரன்

 

வீதியில் உறங்கியவன்

விழித்தெழுந்தான்

இருள் அவனை

அணைத்துக் கொண்டது

பிறந்தால்

ஆணா, பெண்ணா

என்று கேட்பார்கள்

இறந்தால் பாடியை

எப்ப எடுக்கறீங்க

என்று பரிதாபப்படுவார்கள்

நகர்ந்து கொண்டே

இருந்தால் தான்

அது நதி

தேங்கினால் அது குட்டை

குப்பைத் தொட்டியில்

வாழ்க்கையைத் தேடுபவர்களும்

இருக்கத்தான் செய்கிறார்கள்

இரை தேடிச் சென்ற பறவை

கூட்டுக்குத் திரும்பாததால்

குஞ்சுகள் கத்திக் கொண்டிருக்கும்

நிலா தூரத்திலிருந்து

இதையெல்லாம் பார்ப்பதால்

தாய் பறவையைப் பற்றிய

சேதி சொல்லத் துடிக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வார்த்தை

 

வார்த்தைகள்

எழும் முன்பே

கண்கள் பேசிவிடும்

எரியும் நெருப்பு

இரையாக்கப் பார்க்கும்

பறவையின் கூட்டை

முகப்பு விளக்கின்றி

வரும் வாகனம்

சாலையின் தடுப்புகளை

மோதி நிற்கும்

விலாசம் தவறாக

எழுதப்பட்ட கடிதம்

உரியவரிடம் சென்றுசேர

தவமிருக்கும்

தோற்றப் பொலிவைக்

காட்ட

ஒரு கண்ணாடி தேவையா

மின்விசறி சுழலாவிட்டால்

கொசுக்கள்

அக்குபஞ்சர் சிகிச்சையை

மேற்கொண்டிருக்கும்

வீதியின் பேரமைதியை

குலைக்கும்

ஊளையிடும் நாயின்

சத்தம்

தவறுதலாக மோதி்க்கொண்டோம்

ஸ்நேகமாக புன்னகைத்தான்

கோபத்தில் கொட்ட இருந்த

வார்த்தைகளை மென்று

விழுங்கினேன் நான்.

 

 

 

 

ப.மதியழகன்

 

Series Navigationகாலம் – பொன்காட்சியும் தரிசனமும்