மகாபலிபுரத்தில் என்னைக் கவர்ந்த சில சிற்பங்கள்

 

 

 

அருச்சுனன் தபசு

அருச்சுனன் தபசு எனக் கூறப்படும் கல்லோவியம் இரண்டு பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் கூட்டாகும் .

அவை  ஒவ்வொன்றையும் அவற்றின் அழகியலையும் பலவாறு வர்ணிக்கமுடியும். எனது நோக்கம் அதுவல்ல.

நம் எல்லோருக்கும் தெரிந்த மகாபாரதத்தில் வரும் அருச்சுனன் பாத்திரம் ஹோமரின் கிரேக்க காவியத்தில் வரும் ஆக்கிலிஸ் என்ற வீர னின் பாத்திரத்தைப் போன்றது.

காலத்தைக் கடந்து இந்தப் பாத்திரம் மக்கள் மனதில் நிற்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வில்லாற்றல்  கொண்ட அவனது வீரம். மற்றது பல பெண்களுடன் உறவு கொள்வது . இந்த இரண்டையும் எந்த யுகத்திலும் எந்தக் கலாச்சாரத்திலும் விரும்பாதவர்கள் இருக்கிறார்களா?

நடக்கவிருக்கும் பாரதப் போரில் வெற்றிபெறுவதற்காக, பாசுபதாஸ்திரத்தைப் பெறும் முயற்சியில் அருச்சுனன் சிவனை நோக்கித் தவம் செய்யும் நிலையினைக் காட்டும் சிற்பத்தில், விலா எலும்புகள் வெளித் தெரிகின்றன. கவுதம புத்தர் தீவிரமாகத் தவம் செய்த போது அவரது விலா எலும்புகள் தெரிவதைக் காட்டும் சிலைகளைப் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால், புத்தருக்குக் தனது கடுமையான விரத நிலையால் எதுவும் கிடைக்காது என்பதை உணர்ந்து நடுநிலையான பாதையே (Middle Path) தேவை என்ற முடிவுக்கு அவர் வருகிறார். இங்கு அருச்சுனனது தவத்தை மெச்சிய சிவன், அவன் முன் தோன்றி,  பாசுபதாஸ்திரத்தை கொடுப்பதற்குத் தயாராக அவனருகில் இருக்கிறார் என்பதுபோல இந்தச் சிற்பம் உள்ளது .

தற்கால உக்ரேன் – ரஷ்யப் போரில், உக்ரேனிய அதிபர் செலன்ஸ்கிக்கு அணுவாயுதத்தைப் பாவிப்பதற்குக் கொடுக்க வேண்டும் எனப் போலந்து அரசியல்வாதி சொன்னதாக ஒரு செய்தியை வாசித்தேன். தவம் கிடந்து ஆயுதம் எடுக்க முடியுமென்றால் இக்காலத்திலும் இப்படியான ஒரு நிலையைப் பார்க்க முடியும், இதுபோலச் செய்யமுடியும். மற்றவரிடம் ஆயுதம் கேட்டு வாங்கிப் போர் செய்வது அந்தக் காலத்தில் மட்டுமல்ல , இந்தக்காலத்திலும் நடப்பதால் – மகாபாரதம் நம்மிடையே தொடர்ந்து வாழும் இதிகாசமாகிறது. அதனால், பழையவை எல்லாம், புராணக் கதைகள் என வெறுமனே புறந்தள்ள முடியாது.

அருச்சுனன் தபசு என்ற கல்லோவியத்தில் தேவர்கள், முனிவர்கள், சந்திரன், சூரியன், மிருகங்கள் எனப் பல உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அது அருச்சுனன் அல்லவென்றும், தனது மூதாதையரை உயிர்ப்பிப்பதற்காகக் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகீரதனது தவம் என்றும் சிலர் எனச் சொல்கிறார்கள். தற்போதைய சென்னைக்கு எங்கிருந்தாவது நீரைக் கொண்டு வரவேண்டிய தேவையுள்ளது. அதனை எப்படிக் கொண்டு வரலாம் என்பதற்கு பல்லவ சிற்பிகள் அன்றே நமக்கு வழி காட்டியுள்ளார்கள் என்றும் சொல்லலாம்.

யானையின் உருவம் ஒன்று அழகாகச் செதுக்கப் பட்டுள்ளது. தந்தத்தின் இறுதிப்பகுதி இரண்டாகப் பிரிந்து இருப்பதால், அதனை இந்திரனது ஐராவதம் என்கிறார்கள். எனது கண்களை மிகவும் கவர்ந்தது, இந்த யானையின் முன்பாக ஒரு பூனை, எலிகளுக்கு மத்தியில் அருச்சுனனைப்போலத் தவம் செய்யும் பஞ்சதந்திரக் கதையின் காட்சியாகும். நம் வாழ்க்கையில்தான் எத்தனை பேர் இந்தப் பூனைகளைப் போல இப்படி வந்து போகிறார்கள்?

கந்தர்வர்கள், கன்னரர்கள், அப்சரசுகள் என பல உருவங்களை இங்கே பார்த்தபோது, ஏற்கனவே கம்போடியாவில் அங்கோர் வாட்டில் உள்ள சிற்பங்கள் நினைவில் ஓடின. காஞ்சிச்சிற்பங்களின் தொடர்ச்சியான சிற்பக் கலை வடிவமே தென் கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியது என்பதை நீலகண்ட சாத்திரியார் வலியுறுத்துகிறார்.

பல்லவர்களது கொடியான சிங்கமும் , அர்ச்சுனனது கொடியான குரங்கும், இந்த சிற்பங்களில் அதிகமாகக் காணப்பட்டன. அருச்சுனன் தபசு சிற்பத்திற்கு அருகில் பேன் பார்க்கும் குரங்குகளின் சிற்பமும் தனியாக உள்ளது.

 

கிருஷ்ண மண்டபம்

 

கிருஷ்ண மண்டபம் ஒரு குகைக் கோயில். இயற்கைச் சிதைவிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் ஒரு மண்டபமாக அது செதுக்கப்பட்டுள்ளது. பாகவதத்தில் கண்ணன், கோவர்த்தன மலையைத் தூக்கி பெருமழையிலிருந்து ஆயர்பாடி கிராமத்தைப் பாதுகாப்பது மிகவும் இயற்கையாகவும் உள்ளது. பாகவதம் படிக்காதவர்களுக்கு ஜெயமோகனின் மகாபாரத வரிசையில் வரும் நீலம் ஆயர்பாடியை நமது கண்ணில் அது உருவாக்கும். இங்குள்ள ஆயர்பாடி கிராமம் மிகவும் யதார்த்தமானது. அத்துடன் அது நமக்குப் பல செய்திகளைச் சொல்கிறது

கிராமத்தின் விளிம்பில் அமைந்திருக்கும் காடுகள், அங்குள்ள மிருகங்கள் கூட இயற்கையின் அழிவிலிருந்து கண்ணனால் பாதுகாக்கப்படுகின்றன. தற்போதைய காலத்தில் நாம் கிராமத்தைச் சுற்றியிருக்கும் காடுகள், ஆறுகள் , குளங்களை எல்லாம் அழிக்கிறோம். ஓடைகளை வழி மறிக்கிறோம். மலைகளை உடைத்து வீடுகளாக்குகிறோம் என்ற விடயம் எனது மனதில் எழுந்தது. ஒரு மிருக வைத்தியராக இங்கு பசுவில், ஆயன் ஒருவன் பால் கறப்பதும், பசு தன்னருகே நிற்கும் கன்றைத் தனது நாவால் நக்கிக்கொண்டிருப்பதும் , அவற்றுக்கு முன்பாக காளைமாடு நிற்பதும் மிகவும் இயற்கையானவையாக எனக்குத் தோன்றின.

பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருந்தது.

 

மகிஸவர்தனி குகை

 

அடுத்தது மகிஸவர்தனி குகை. அதனைப் பார்ப்பதங்கான ஆவலை எனக்குத் தூண்டியவர் கவிஞர் இந்திரன். திராவிட  சிற்பக்கலை என்ற நிகழ்வில் அவர் பேசும்போது  மகிசாசுரன் சண்டையைப் பற்றிய இந்தச் சிற்பத்தைப் பற்றிச் சிலாகித்துப் பேசினார். அதனால் ஆதனைப் பார்க்கவேண்டும் என்ற எனது ஆர்வம் எனக்குள் ஏற்பட்டிருந்தது. இந்தக்குகையில் சுவரோவியம் போல் மூன்று காட்சிகள் உள்ளன. முருகன் குழந்தையாக சிவன் பார்வதியுடன் சேர்ந்திருப்பது. அது நடுவே இருக்க,  ஒரு பக்கத்தில் விஷ்ணு சயனம் செய்யும் காட்சியும், மறு பக்கத்தில் மகிசாவர்தனியின் போர்க் காட்சியும் இடம்பெற்றுள்ளன.

பெரும்பாலான மகாபலிபுரக்காட்சிகள் வார்த்தைகளால் மட்டும் விவரிக்க முடியாதவை . பார்ப்பவர்கள் அந்தச் சிற்பக் காட்சிகளைத் தங்களது மனதில் பதியவைத்துக் கொள்ளவேண்டும். அவற்றைப் பார்க்கும்போது ஒரு சிறந்த நாவல் இலக்கியம் போல அவற்றின் முப்பரிமாணமாணத் தோற்றம் மனதில் பதியும். முதலில் பாத்திரங்களின் நடத்தைகள், பின்னர் அந்தப் பாத்திரங்கள் சார்ந்திருந்த சமூகத்தின் சமூக கட்டமைப்புகள்,  இறுதியாக அவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் தத்துவங்கள் என ஒவ்வொன்றும் நெஞ்சில் அடுத்தடுத்து எழுந்து நிலைபெறும். இந்த சித்திரங்களில் மகாபாரதம், புராணங்கள், அவற்றில் இடம்பெற்ற பாத்திரங்கள் மற்றும் கொடிகள், சின்னங்கள் என்பவை எல்லாம் செதுக்கப்பட்டபோதிலும் இவற்றின் மூலம் பல்லவ அரசு தனது வெற்றியைக் கொண்டாடும் முகமாக இங்கே வைக்கப்பட்ட வெற்றிச்சின்னங்களையே கற்களில் உருவாக்கியுள்ளது என்பதே வெளிப்படுகிறது.

 

கைலாசநாதர் கோவில்

 

அடுத்தநாள் காஞ்சிக்குச் சென்று அங்குள்ள கைலாசநாதர் கோவிலை பார்த்தேன். எல்லா கோவில்களுக்கும் தாய் கோவிலாக நரசிம்ம பல்லவனால் அது அமைக்கப்பட்டது . தஞ்சைப் பெரிய கோவிலைச் சோழர்கள் அமைக்க இந்த கைலாசநாதர் கோவிலே முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. மகாபலிபுரத்துச் சிற்பங்கள் கருங்கல்லால் ஆக்கப்பட்டவை . ஆனால், கைலாசநாதர் கோவில் சாண்ட் ஸ்ரோன் எனப்படும் மணற்கற்களால் ஆக்கப்பட்டதால் விரைவான சிதைவிலிருந்து காக்கப்படுகின்றது.  இந்த கோவிலை எப்படியாவது,  இயற்கையின் சிதைவிலிருந்து பாதுகாக்க ஆவன செய்ய வேண்டும். அதற்கு இக்காலத்தில் பல வழிகள் உள்ளன. யாராவது கவனிப்பார்களா? அரசு ஏதாவது செய்யுமா? என்ற அங்கலாய்ப்பு எமக்கு ஏற்படுவதத் தவிர்க்க முடியவில்லை.

 

காஞ்சிபுரம் பட்டுச் சேலை

காஞ்சிபுரம் சென்றுவிட்டுப் பட்டுச் சேலை பார்க்காமல் வரமுடியுமா?

இம்முறை சியாமளாவுடன் போகாததால், குறைந்த பட்சமாக நெசவு செய்யுமிடத்திற்குச் சென்று சியாமளாவுக்கு ஒரு பட்டுச்சேலை வாங்கினேன். அவர்கள் பட்டு நெசவு செய்யுமிடத்தைக் காட்டும்போது சீனாவில் பட்டுநூல் எடுக்குமிடத்தில் கொல்லப்பட்ட புழுக்களின் எண்ணிக்கையைப் பார்த்த நினைவு எனக்கு வந்தது. அத்துடன் பட்டுச்சேலை அணியும் “பட்டு மாமிகள்” மனக் கண்களில் அணிவகுப்பாக வந்து போனார்கள். இலட்சக்கணக்கில் பட்டுப்பூச்சிகளைக் கொலை செய்து பட்டுச் சேலை அணிவதிலும் ஒரு மாட்டைக் கொன்று,  நூறு பேர் உணவுண்பது குறைவான பாவமல்லவா என நினைத்தேன் .

நமது தென்னாசிய கலாச்சார வாழ்க்கையில் முரண்பாடுகளே நிறைய உள்ளன.

செத்த மாட்டின் தோலை உரிப்பவன் தாழ்ந்த சாதி. ஆனால், அதன் தோலில் காலணி செய்து டக் டக் என நடப்பவன் உயர்சாதி என்பார்கள். ஆண்டவனின் சிலையைச் செய்பவன் அதனை ஆலயத்தில் பிரதிஸ்டை செய்தபின்னர், ஆலயத்துக்குள் போவதற்கு அனுமதி இல்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் உண்டு. தனித்தனி வாதமும் உண்டு.

 

Series Navigationஅர்த்தமுண்டு