மதத்தின் பெயரால் அத்துமீறல்

ஏ. ஆர். கமாலுதீன்,சென்னை

காலச்சுவடு அக்டோபர் இதழில் கடிதம் பகுதியில் வந்துள்ள செந்தியின் கடிதம் பற்றிச் சில உண்மைகளை தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது. செப்டம்பர் இதழில் வெளியான ‘அவர்களுடைய விருப்பங்களே எமக்குச் சட்டங்கள்’ ‘தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு’ ஆகிய இரு கட்டுரைகளையும் இணைத்துப் பார்ப்பது அறியாமையின் உச்சகட்டம்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் இறைவன் அருளித்தந்த வேதமான குர்ஆனும் அதற்கு விளக்கமாக வாழ்ந்து காட்டிய நபிகள் நாயகம் (ஸல்லலாஹி அலைவஸல்லம்) அவர்களின் வாழ்க்கையுமே சட்ட மூலாதாரங்கள். இதற்கு முரண்படும் எல்லாமே புறந்தள்ளப்பட வேண்டிய குப்பைகள். அவ்வகையில்தான் தக்கலை அஞ்சுவண்ணம் பீர்முகம்மதியா முஸ்லிம் அஸோசியேஷன் முஸ்லிம் ஜமாத் கவிஞர் ரசூலை ஊர் விலக்கம்செய்ததும். ஒரு மனிதன் முஸ்லிமா இல்லையா என்று தீர்மானிப்பது ஊர் ஜமாத் நிர்வாகிகளோ முத்தவல்லிகளோ இமாம்களோ அல்ல படைத்த இறைவன் மட்டுமே. ஒருமுறை நபிகள் கூறினார், “உங்களின் தோற்றத்தையோ செல்வத்தையோ இறைவன் பார்ப்பதில்லை; உங்கள் உள்ளங்களையும் செயல்களையுமே கவனிக்கிறான்”

முதலில் பிற முஸ்லிமைப் பார்த்து காஃபிர் (இறை மறுப்பாளர்) என்று ஃபத்வா (தீர்ப்பு) கூறுவதே தவறு. விலக்கப்பட்ட ஒன்று. ஓர் இஸ்லாமிய அரசு ஆட்சியில் இருந்தாலொழிய இது அனுமதிக்கப்பட்டதல்ல. தக்கலை அபீமுஅமு ஜமாத் ஓர் இஸ்லாமிய அரசாகத் தன்னைப் பாவித்துக்கொண்டு தீர்ப்புக் கூறியிருப்பது நகைப்புக்கிடமானது. தக்கலை அபீமுஅமு ஜமாத் மட்டுமல்ல தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிவாசலின் நிர்வாகம் இது போன்றவர்களின் கையில் சிக்கி இஸ்லாமிற்கு ‘நற்சான்றிதழ்கள்’ வழங்கிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு வக்ஃப் வாரியம் என்பது ஓர் அரசாங்க அமைப்பு. இந்த அமைப்பில் உள்ளவர்கள் குர் ஆனுக்கும் நபி வழிக்கும் புறம்பான நடவடிக்கையையோ தீர்ப்பையோ சட்டத்தையோ வழங்கினார்கள் என்றால் அதைப் புறந்தள்ளுவதற்கும் விமர்சிப்பதற்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிமை உள்ளது.

ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் இதுபோன்ற ஃபத்வாக்களை (தீர்ப்புகளை) அள்ளி வீசிக்கொண்டிருப்பது, தங்களின் அதிகாரம் தகர்ந்துபோகாமல் தற்காத்துக்கொள்ளும் ஓர் அரசியல் உபாயமே அன்றி வேறல்ல. அவர்களுக்குத் தேவையெல்லாம் தங்களின் பீடங்களைப் பாதுகாத்துக்கொள்வது மட்டுமே. எத்தனை பள்ளிவாசல் இமாம்கள் (மார்க்க அறிஞர்கள்) சுதந்திரமாக உரையாற்றுகிறார்கள்? நிர்வாகத்தின் சார்பில் இதைப் பேசாதே; அதைப் பேசாதே என்று ஆணையிடப்படுகிறது. வட்டி தீமை என்று பேசாதே; விபச்சாரம் கொடிய பாவம் எனச் சொல்லாதே; மது விலக்கப்பட்டது எனக் கூறாதே; ஏமாற்றுவது, திருடுவது பற்றி எல்லாம் நீ பேசாதே என்று கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள் நிர்வாகிகள்.

மத அடிப்படைவாத உணர்வால் கவிஞர் ரசூல் பந்தாடப்பட்டுள்ளார் என்று சொல்கிறார் செந்தி. தக்கலை அபீமுஅமு ஜமாத்தின் செயல்பாட்டை நோக்கினால் அங்கு மத அடிப்படைவாதம் தென்படவில்லை. தங்கள் பதவிக்கும் அதிகாரத்திற்கும் ஆட்சிக்கும் வேட்டுவைக்கும் ஒரு துருப்புச் சீட்டாகத்தான் ரசூலை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். தங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் மாற்று அரசியலின் முகமாக ரசூலை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். தனிப்பட்ட வேறு சொந்தக் காரணங்களாலும் அவர் பழிவாங்கப்பட்டு காஃபிர் ஆக்கப்பட்டிருக்கலாம்.

தக்கலை அபீமுஅமு ஜமாத்தின் செயல்பாட்டில் மதம் முன்வைக்கப்படவில்லை. மதத்தின் பெயரால் அத்துமீறல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

நன்றி
காலச்சுவடு
நவம்பர் 2011

Series Navigationகதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…