மருத்துவக் கட்டுரை – இடுப்பு வலி

This entry is part 19 of 24 in the series 8 பெப்ருவரி 2015

                              

இடுப்பு வலி என்பது நம் அனைவருக்கும் எப்போதாவது உண்டாவது இயல்பு. பெரும்பாலும் அதிக தூரம் நடப்பது, மாடிப் படிகள் ஏறுவது, கடினமான வேலை, பாரமான பொருளைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பு வலி உண்டாகிறது. இது போன்ற வலி சற்று ஓய்வேடுத்ததும் அல்லது மருந்து உட்கொண்டதும் தானாக குறைந்துவிடும். இதை ” மெக்கேனிக்கல் ” அல்லது செயல்பாட்டு   வலி எனலாம். ஒரு செயல்பாடு காரணமாக உண்டாகும் வலி இது. ஆனால் ஓய்வெடுத்தும், அல்லது மருந்து உட்கொண்டும் பலன் இல்லாமல் தொடர்ந்து இடுப்பு வலித்தால் அதன் பின்னணியில் வேறு எதோ காரணம் உள்ளது என்பதை நாம் உணரவேண்டும். அப்போது கட்டாயமாக மருத்துவரிடம் சென்று பரிசோதனைகள் செய்து கொள்வதே நல்லது.
இடுப்பு வலியை LUMBAR BACK PAIN என்று கூறுவதுண்டு . Lumbar என்பது இடுப்புப் பகுதி.அந்தப் பகுதியில் உள்ள தண்டு எலும்புகளில்தான் பெரும்பாலும் பிரச்னைகள் எழும். காரணம் நம் உடலின் எடையை தூக்கிச் செல்லும் எலும்புகள் அவை. நாம்  குனியும்போதும், நிமிரும்போதும் அந்த எலும்புகளில்தான் அதிக அசைவு உண்டாகும்.அகவே இப் பகுதியில் அதிக பாதிப்பு உண்டாகி வலி எடுக்கும்.இந்த வலி எலும்புகளின் மூட்டுகள், தசை நார்கள், தசைகள் போன்றவற்றில் உண்டாகலாம். எலும்பு அல்லது தண்டு வடம் நழுவினால் நரம்புகளில் அழுத்தி வலியை உண்டாக்கலாம்.
இடுப்பு வலி வயதுடனும் நிறைய தொடர்புடையது. சில வயதில் குறிப்பிட்ட சில வகையான பிரச்னைகள் எழலாம்.ஆகவே நோயின் தன்மையை நிர்ணயம்  செய்யும் வேளையில் வயதும் கருத்தில் கொள்ளப்படும்.

                                                                   இடுப்பு வலிக்கான சில காரணிகள்

மெக்கேனிக்கல் அல்லது செயல்பாட்டு இடுப்பு வலி
——————————

——————–

* தண்டு வடம் நழுவுதல் – இதில் திடீரெண்டு கடும் வலி உண்டாகும்.
* மூட்டு அழற்சி – இதில் மாலையில் வலி அதிகமாகும்.
* எலும்பு முறிவு – இது விபத்தால் உண்டாவது.
* முதுகுத் தண்டு சுருக்கம் – நீண்ட நாட்கள் வலி

அழற்சி
————
*  கிருமித் தொற்று – காலையில் வலி அதிகம் . எலும்பு இறுக்கம் இருக்கும்.உடற்பயிற்சி வலியைக் குறைக்கும்.
* அன்கைலோசிங் ஸ்போன்டைலோசிஸ் –  இந்த வகையான எலும்பு நோய் தொடர்ந்து வலியை உண்டாக்கும். துவக்க காலத்தில் வலி குறைவாகவும்,நாட்கள் ஆக ஆக வலி அதிகமாகவும் இருக்கும்.

ஆபத்தான காரணிகள்
——————————

———–

* புற்று நோய் – 20 வயதுக்கு குறைவானவர்களுக்கும் 50 வயதுக்கு மேற்பட்டவருக்கும்  கடுமையான வலி உண்டாகும். காய்ச்சல், எடை குறைதல் போன்றவை உண்டாகும்.
* மல்டிபல் மைலோமா – இந்த நோயில் தொடர்ந்து வலி எடுக்கும்.
* காசநோய் மூட்டு வலி – இதில் முன்பு காசநோய் இருந்திருக்கும்.
* பேக்டீரியா கிருமித் தொற்று எலும்பு வலி – இதில் பேக்டீரியா கிருமிகள் அல்லது எச்,ஐ.வி. வைரஸ் கிருமித் தொற்று இருக்கலாம்.
* முதுகுத் தண்டு சுருக்கம் – இதில் கால்  நரம்புகள் பாதிப்பு, சிறுநீர்ப்பை பாதிப்பு, பெருங்குடல் பாதிப்பு பாலியல் உணர்வு பாதிப்பு ஆகியவை உண்டாகும்.

இப்போதெல்லாம் இளம் வயதுடையவர்களுக்கு தண்டு வடம் நழுவுதல் ( slip disc ) மிகவும் பரவலாக காணப்படுகிறது. இது 20 முதல் 50 வயதுடையோருக்கு உண்டாகிறது. 50 வயதுக்கு மேல் தண்டு வடம் வடிவிழந்து போவதால் அது நழுவும் வாய்ப்பில்லை. இது உண்டானால் திடீரென்று கடும் இடுப்பு வலியும் அந்தப் பக்கத்து காலிலும் வலி உண்டாகும். வயதானவர்களுக்கு பாதிக்கப்பட்டுள்ள எலும்பு நரம்பில் அழுத்துவதால் வலி உண்டாகும்.இந்த வலி எதாவது பளுவான வேலை செய்யும்போது அல்லது பாரமான பொருளைத் தூக்கும்போது திடீரென்று உண்டாகும்.அசையும்போது வலி கூடும். தசைகள் இறுக்கத்தால் நிற்கும்போது ஒரு பக்கமாக சாய்ந்து நிற்க நேரிடும். இதனால் நொண்டி நொண்டி நடக்க நேரிடும்.

                                                                      பரிசோதனைகள்

இடுப்பு வலி உண்டானால் அதன் காரணத்தைக் கண்டு பிடிக்க சில பரிசோதனைகள் உள்ளன. வயது, வலி வந்த விதம், வலியின் தன்மை போன்றவற்றை வைத்தே மருத்துவர் பெரும்பாலும் காரணத்தை எளிதில் கூறிவிடுவதுண்டு. வலி தொடர்ந்து நீடித்தால் ஒருசில பரிசோதனைகள் தேவைப்படும். அவை வருமாறு:

* இரத்தப் பரிசோதனை – இதில் செல்களின் அளவு, கால்சியம், பாஸ்பேட், அல்கலைன் பாஸ்பேட்டேஸ் ஆகியவற்றின் அளவும் ஈ.எஸ்.ஆர். என்பதின் அளவும் பார்ப்பார்கள்.

* எக்ஸ்ரே – முதுகுத் தண்டு எலும்பின் படம் பிடித்துப் பார்ப்பார்கள்.

* ஸ்கேன் – இதில் கிருமித் தொற்று, புற்று நோய் ஆகியவற்றின் மாற்றங்கள் காணலாம்.

* எம்.ஆர்.ஐ.- இதில் தண்டு வடம் நழுவுதல், நரம்புகள் பாதிப்பு போன்றவை தெரியவரும்.

                                                             சிகிச்சை முறைகள்

காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை தரப்படும்.பொதுவாக வலி குறைக்கும் மருந்துகள், போதுமான ஓய்வு, பயிற்சி முறைகள் ஆகியவை போதுமானவை. படுத்த படுக்கையாக இல்லாமல் வலி தாங்கும் வரை சுறுசுறுப்புடன் இயங்க முயலவேண்டும். படுக்கும்போது நேரான சற்று கடினமான மெத்தையில் படுப்பது நல்லது. வலி குறைக்கும் மருந்துகளால் நிவாரணம் இல்லையேல், அல்லது நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்பது தெரியவந்தால் ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படும்.

( முடிந்தது )

2 Attachments

Preview attachment PID.jpg

Series Navigationதனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடுகலித்தொகை காட்டும் பழக்கவழக்கம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *