மருத்துவக் கட்டுரை- புட்டாளம்மை ( MUMPS )

டாக்டர் ஜி. ஜான்சன்

புட்டாளம்மை என்பதை அம்மைக்கட்டு நோய், கூகைக்கட்டு அல்லது பொன்னுக்கு வீங்கி என்றும் அழைப்பார்கள். இது காதின் கீழ் புறமுள்ள பேரோட்டிட் சுரப்பியின் ( Parotid Gland ) வீக்கமாகும். பேரோட்டிட் சுரப்பி என்பது செவிமடலுக்குக் கீழ் உள்ளெ அமைந்துள்ள உமிழ் நீர் சுரப்பியாகும். இந்த சுரப்பி வீங்குவதால் வலி உண்டாகிறது. அதனால் வாயைத் திறப்பதிலும் , உணவு உண்பதிலும் சிரமம் ஏற்படலாம்.
இந்நோய்க்கான காரணம் தெரியாத காலத்தில் இதை ஒருவகை அம்மை நோயாகக் கருதினர் நம் முன்னோர். அதனால் தாயாரின் தங்கச்சங்கிலியை நோய்வாய்ப்பட்ட சிறுவர் கழுத்தில் போட்டனர். இதன் காரணமாக அம்மைக்கட்டு நோய்க்கு, பொன்னுக்கு வீங்கி என்ற பெயர் நிலைத்து விட்டது.
இது வைரஸ் தொற்றால் உண்டாகிறது. அதன் பெயர் பேராமிக்ஸோவைரஸ் ( Paramyxovirus ). இந்த வைரஸ் கிருமி நீர்த்துளிகளால் ( droplet ) பரவுகிறது. நோயால் பாதிக்கப்படடவர் இருமும்போதும் தும்மும்போதும் எளிதில் தொற்றிக்கொள்ளும். இக் கிருமியின் அடைக் காலம் ( Incubation Period ) 18 நாட்கள். வைரஸ் கிருமிகள் உடலினுள் புகுந்தபின்பு இந்த 18 நாட்கள் அவை நோய் அறிகுறிகள் ஏதும் இல்லாமல் பெருகும் காலம் எனலாம். இதனால்தான் இதை அடைக் காலம் என்கிறோம்.அதன்பின்புதான் அறிகுகள் தோன்றும்.

நோய் அறிகுறிகள்

இந்த நோய் பொதுவாக பள்ளிப் பிள்ளைகளையும் இளம் வயதினரையும் தாக்கவல்லது. மருத்துவப் பரிசோதனையின் மூலம் நோயை நிர்ணயம் செய்யலாம். சில வேளைகளில் கன்னப் பொந்தின் மென் சவ்வு ( Buccal Mucosa ) பரிசோதனை, மற்றும் இரத்தத்தில் IgM பரிசோதனைகள் தேவைப்படலாம். நோய் அறிகுறிகள் வருமாறு:
* காய்ச்சல்
* தலைவலி *
* பலவீனம்
* பேரோட்டிட் சுரப்பியின் வீக்கமும் வலியும்
சில சமயங்களில் பின்வரும் விளைவுகளும் ஏற்படலாம்.

* விரையழற்சி – Orchitis
* மூளை உறைஅழற்சி – Meningitis
* கணைய அழற்சி – Pancreatitis
* இதயத் தசை அழற்சி – Myocarditis
* கல்லீரல் அழற்சி – Hepatitis
* அண்டப்பை அழற்சி – Oophoritis
* உணர்ச்சி நரம்பணு செவிடு – Sensorineural Deafness

சிகிச்சை முறை

அறிகுறிகளுக்கு ஏற்ற நோய்க்குறி சிகிச்சை ( Symptomatic Treatment ) தரப்படும். பொதுவாக இந்த நோய் ஒருவாரம் வரை நீடித்து குறைந்துவிடும்.
இந்த நோயை அம்மையாகக் கருதியதாலும், இதற்கு நேரடி மருத்துவம் இல்லாத காரணத்தாலும், இதற்கு மரபு வழி மருத்துவம் இன்னும் நம்மிடையே பின்பற்றப்படுகிறது. செந்சந்தணம் அல்லது பனங்காயின் சாறு போன்றவை கன்னத்தில் பூசப்படுகின்றது. நீலத்தையும் கன்னத்தில் பூசும் பழக்கமும் உள்ளது. குடிக்க பன்னீர் தரப்படுகிறது.நோயாளியை தனிமைப்படுத்தி வெளியில் செல்லவும் அனுமதிப்பதில்லை.

தடுப்பு முறை

முத்தடுப்பு ஊசியான MMR என்னும் தடுப்பு ஊசி போடுவதால் புட்டாளம்மை பிள்ளைகளுக்கு வராமல் தடை செய்யலாம்.

( முடிந்தது )

Series Navigationநரேந்திரன் குறிப்புகள். (சத்குரு ஜக்கி வாசுதேவ், காலேஸ்வரம் )  தொடுவானம் 243. பத்து பெர்சன்ட்