மறுநாளை நினைக்காமல்….

Spread the love

எஸ். ஸ்ரீதுரை

            கல்யாணப் பெண்ணின் குடும்பம்

            கலகலப்பாய் இருக்க முயற்சிக்கிறது.

            வாங்கியிருக்கிற பெருங்கடன்

            எடுத்திருக்கிற ஏலச்சீட்டு

            கணிசமாய்ப் பெற்றுள்ள கைமாற்றுகள்

            எகிறப்போகும் வட்டித்தொகை எல்லாமும்

            கைகுலுக்கக் காத்திருக்கின்ற

            மறுநாளை நினைக்காமல்

கல்யாணப் பெண்ணணின் குடும்பம்

            கலகலப்பாய் இருக்க முயற்சிக்கிறது.

            நாதசுரத்துக்கு நான்காயிரம்

            ஆர்க்கெஸ்டிராவுக்குப் பத்து

            ஐயருக்கு இரண்டு

            சமையலுக்கு நாற்பத்தைந்து

            பாலுக்கும் கறிகாய்க்கும்

            பூவுக்கும் பழத்துக்கும்

            தாம்பூலப் பாக்கெட்டுக்கும்

            தண்ணீர்லாரிக் கட்டணத்துக்கும்

            கல்யாணமண்டப வாடகைக்கும்

            என்ன செய்வதென்ற கவலை

            எப்போதும் ஒருபக்கம் துளைக்க,

            அடுத்ததாய்ச் சமைந்தவளுக்கு

            அரைபவுன் இல்லாததும்

            மூத்த மகள் சம்பாத்தியம் இனி

            மாப்பிள்ளையின் மணிபர்ஸில்

            ஒடுங்கப் போவதும்  மறு பக்கம் துவைக்க

            நாளைய கவலையை

            நாளைக்கெனவே ஒதுக்கிவைத்து

            ‘வாங்க, வாங்க’ என்று

            வருவோரிடம் பல்லிளித்து….

            மறுநாளை நினைக்காமல்

            கல்யாணப்பெண்ணின் குடும்பம்

            கலகலப்பாய் இருக்க முயற்சிக்கிறது.

                **** **** **** ****

Series Navigationஉரையாடல் அரங்கு – 13டௌரி தராத கௌரி கல்யாணம் ……18