மறுப்பிரவேசம்

This entry is part 9 of 20 in the series 26 ஜூலை 2015

சிறகு இரவிச்சந்திரன்.

நானும் ‘தண்ணி வண்டி’ தங்கராசும் ஒண்ணா படிச்சவங்க. ஒரு நாள் ஓல்டு பாய்ஸ் மீட்டிங்லே தங்கராசுதான் இதைப் பத்தி பேசுனான். ‘அவனுக்கு செம கிக்கு’ மணிவண்ணன் சொன்னான். நமக்கு மட்டும் இல்லையான்னு நெனைச்சுகிட்டேன். பொறியியற்கல்லூரிலே படிச்சுட்டு தனியார் கம்பெனிகள்லெ வேலை பார்க்கிற எங்களுக்கு கிடைக்காத ‘கிக்’கா. அதனால ஏற்படுற மன வருத்தத்திலே நாங்க போடாத ‘பெக்’கா. ‘இல்ல மாம்ஸ் நமக்குன்னு ஒரு எடம் வேணும்.ஜாலியா பேச , தண்ணியடிக்க’ எல்லோரும் அவனைப் போல நித்திய கிளாஸ் பூரண குவாட்டர்னு இல்லாட்டாலும் ஒரு தனி எடம் வேணுங்கறதிலே வேற அபிப்பிராயம் இல்லாததனால ஒட்டு மொத்தமா ஒத்துகிட்டோம். தன்னோட ஐடியா ஒர்க் அவுட் ஆனதில சந்தோஷப்பட்டுகிட்டே தங்கராசு தள்ளாடியபடியே வெளி நடப்பு செஞ்சான்.

அடையார் ஆத்து ஓரமா ஒதுக்குப் புறமா ஒரு பெரிய எடத்தை இருவது வருஷ லீசுக்கு ஏற்பாடு செஞ்சாச்சு. ஆளுக்கு அஞ்சாயிரம் போட்டு ‘லைப்’ மெம்பர் ஆயிட்டோம். நாங்க நாலஞ்சு பேர் பேசின விசயம் ஊர் பூரா பரவி எங்களோட படிச்சவன், முன்னால படிச்சவன், பின்னால் படிச்சவன், வெளிநாடு போனவன் , வேலையே பாக்காதவன்னு பத்து நூறு பேரு சேந்துட்டாங்க . கிளப் கொடிகட்டிப் பறக்குது. பொண்டாட்டி புள்ளைங்களை கூட்டிகிட்டு வர செலவில்லாத ஒரு எடங்கற வகையிலெ ‘கிளப்’ எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. அமர்களமா ‘பார்’ போட்டு பாட்டில்களை கம்பெனிலேர்ந்தே வரவழைச்சு விலையையும் சல்லிசாக்கின வுடனே குடிக்காதவங்களுக்கும் பிடிச்சுப் போச்சு. ‘பார்’லெ இருக்கற அப்பாங்களை தொந்தரவு பண்ணாம இருக்கறதுக்கு புள்ளைங்களுக்கு ஊஞ்சல், சறுக்கு மரம், கிளி கூண்டுன்னு ‘செட் அப்’ பண்ணியாச்சு. பாப் கார்னும் கோன் ஐசும் கொடிகட்டி பறக்குது. கூடவே ‘சிட்டிசனுங்களுக்கு’ மொளகா பஜ்ஜி.

மாசம் ஒரு நா விசிடி பொரஜக்டர் கொணாந்து படம் போடுவாங்க. அப்படித்தான் அன்னிக்கு ‘அழகி’ படம் போட்டாங்க. சனிக்கிழமையா இருக்கறதாலெ ரெண்டு பெக் போட்டு படம் பாத்திட்டிருந்தேன் நானு. படத்திலெ அந்த சம்முகமும் தனலட்சுமியும் காட்டசொல்ல கொஞ்சம் குறுகுறுன்னு இருந்தது. அப்புறம்தான் கொஞ்சம் சுதாரிச்சுகினு படத்தை உன்னிப்பா பாக்க ஆரம்பிச்சேன். இந்த தங்கர் பச்சான் நம்ப ஊர் ஆளா. கதை நம்ப கதை மாதிரியே இருக்குதேன்னு யோசிச்சேன். மனசு பிளாஷ் பேக்கிலே பள்ளிப்பாளயம் போயிட்டுது.

நான் பத்தாவது வரைக்கும் பள்ளிப்பாளையம் காகித ஆலை பள்ளிக்கூடத்திலேதான் படிச்சேன். என் கூட படிச்சவன் எவனும் பட்டணம் வரலை. ஆலையில வேலை செஞ்சுகிட்டிருந்தாரு எங்க அப்பா. ஆலை நிர்வாகமே பள்ளிக்கூடத்தை நடத்திச்சு. நோட்டு புத்தகமெல்லாம் நிர்வாகமே தரும். ஏழாங்கிளாஸ் படிச்சிட்டுருக்கும்போதுதான் மாணிக்கங்கறவரு அங்கே வேலைக்கு சேந்தாரு. அவரு ஐடிஐ டிப்ளமோ படிச்சுட்டு சூப்பர்வைஸரா சேந்ததா சொன்னாங்க. அந்தக் காலத்திலேயே அவரு பைக்கிலே வருவாரு. அவரு போண்ணுதான் நந்தினி. அதுவும் ஏழாங்கிளாஸ். ஸ்கூலுக்கு சைக்கிள்லே வரும். பாக்க கொஞ்சம் சுமாரா இருக்கும். பட்டணத்திலேர்ந்து வந்ததினாலே பவுடர், பொட்டுன்னு கூட கொஞ்சம் மெருகேத்தினதாலே பசங்க பெல் அடிச்சாலும் அது வர வரைக்கும் வாச கேட்டை விட்டு நவுர மாட்டாங்க. எனக்கும் பாக்க ஆசைதான்னாலும் அப்பனும் ஆத்தாளும் சின்னவயசிலேர்ந்து
2
கரைச்சுஊத்தின ‘இன்ஜினியராவணுங்கற போதனை’ மனசை உலுக்கி கிளாஸ் ரூமை நோக்கி காலைத்தள்ளும். பசங்க பக்கம் ஓர பெஞ்சுல நானும் அந்தப் பக்கம் நந்தினியும் உக்காந்தது மத்த பசங்களுக்கு பொறாமையா இருந்ததென்னவோ உண்மைதான். நானா போய் பேசாட்டாலும் நான் கொஞ்சம் படிக்கிற பையங்கறதனாலே நந்தினியே எங்கிட்டே சந்தேகம் கேக்க வரும். பத்தாவது படிச்சு முடிக்கிறதுக்குள்ளே எங்களுக்குள்ளே ஒரு இது வந்து ஒட்டிக்கிச்சு. அத காதல்னு சொல்றதா வேற என்னான்னு சொல்றதுன்னு இன்னிக்கும் எனக்கு தெரியல.

பதிணொண்ணாம் கிளாஸ் பரிட்சை முடிஞ்ச உடனே டவுனுக்கு அனுப்பணுங்கறதனாலே நந்தினியை அவங்கப்பன் டைப் கிளாஸ¤க்கு அனுப்பிட்டாரு. பட்டணத்திலே படிச்சா உடனே இன்ஜினியராவலாம்னு எங்கப்பா என்னை மாமா வூட்டுக்கு அனுப்பிட்டாரு. அப்புறம் நான் அஞ்சு வருஷம் படிச்சதும் யூனிவர்சிட்டி ரேங்க் வாங்கினதும் இந்தக் கதையில ஒட்டாத விசயம். அப்ப ஒட்டிக்கின விசயம் என்னான்னு கேக்கறீங்களா. அதான் இந்தக் கதையே.

நான் இன்ஜினியரிங் கல்லுரிலே படிக்கும் போதே கிருஸ்டினாங்கற கிருஸ்த்துவப் பொண்ணு எங்கூட படிச்சது. அதுக்கு என் கிராமத்து லுக் பிடிச்சுப் போச்சு போலிருக்கு.சந்தேகமே வராத விஷயங்களுக்கெல்லாம் சந்தேகம் கேக்க ஆரம்பிச்சுது. அப்ப தான் எனக்கு சந்தேகமே வந்துது. இந்தப் பொண்ணு ஒரு மாதிரியோன்னு. ஆனா அடுத்த வாரமே அந்த சந்தேகம் தீர்ந்து போச்சு. சிவாஜி கிருஷ்ணண் ‘ ஆகா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்’னு பாடின உடனே ‘பளார்’ னு ஒரு அறை வுட்டுச்சு. இது நல்ல பொண்ணுதான். நம்ப கிட்டே தான் ஒரு ‘இது’ ன்னு புரிஞ்சுது. அஞ்சு வருஷம் முடியறதுக்குள்ளே ஸ்டரக்சரல் ஆர்கிடெக்சர் மாதிரி எங்க நெருக்கம் வளர்ந்துடுச்சி. இத்தனைக்கும் நடுவில நான் படிப்பை விட்டுக் கொடுக்கல. அப்பன் ஆத்தா கேட்டுகிட்டா மாதிரி யூனிவர்ஸிட்டி கோல்ட் மெடல் வாங்கித்தான் ஓஞ்சேன்.

கிருஸ்டினா அப்பன் பெரிய பணக்காரன். நாலஞ்சு கம்பெனி வச்சிருந்தான் அந்தக் காலத்திலேயே. இது ஒரு நா போய் அப்பன் கிட்டே என்னைத் தான் கட்டிக்குவேன்னு சொல்லியிருக்கு. அவனும் அந்தஸ்து பாத்து முடியாதுன்னு சொல்லியிருக்கான். இது உடனே பாத்ரூம் உள்ளார போய் மணிக்கட்டு நரம்பை வெட்டிக்கிச்சு. அப்பன் அலறிட்டான். பொண்ணை ஆஸ்பத்திரியிலே சேத்துட்டு என் ரூமைத் தேடி ஓடியாந்தான். ‘பேசும் படம்’ சினிமால வரா மாதிரி சிந்தாதிரிப்பேட்டையில ஒரு சின்ன சந்துல ஒரு ரூம்ல அப்ப நான் இருந்தேன். ரெண்டு சைக்கிள் ஒண்ணா வந்தா ரோட்ல ஆளுங்களுக்கு எடமிருக்காது. ‘செவர்லே’ காருல வந்த அப்பன் குப்பன் சுப்பனாட்டம் நடந்து என் ரூமுக்கு வந்தான்.படிக்கட்டு ஒன்றரை அடி கூட இருக்காது. ஆளு அகலத்தில் ரெண்டடி இருப்பான் போலிருக்கு. எப்படி நுழையறதுன்னு யோசனை பண்ணிகிட்டே மேலே பாத்தான்.

பாதி பல்லு தேச்சுகிட்டிருந்த நான் எப்படித் துப்பரதுன்னு தெரியாம நொறைய வாய் ஒரத்தில் அடக்கிக்குனு ‘யாழ் சாழ் வேணும் ‘ னு கேட்டேன். என் பேரைச் சொல்லி அவரா அவனான்னு சொல்லத் தெரியாம தயங்கினான். அப்பவே புரிஞ்சுகிட்டேன் இவன் கிருஸ்டினா அப்பன்னு. ‘ ஒன் மினிட்’ னு சொல்லிட்டு சட்டையை மாட்டிகினு கீழே ஓடியாந்தேன். விவரம் சொன்னான். ஆஸ்பத்திரிக்கு ஓடி அவளைப் பாத்து எனக்கெதிர அவ அப்பன்கிட்டே சத்தியம் வாங்கிக்கினு என்னைக் கல்யாணம் செஞ்சதெல்லாம் ஒரு பிளாஷ் மாதிரி நடந்து போச்சு. இதுல எங்கப்பன் ஆத்தாவுக்கு கொஞ்சம் வருத்தம். அதுக்கப்புறம் அவங்க ரொம்ப நாள் பட்டணம் பக்கமே வரலை.

கிருஸ்டினா எம்பேர்ல இருந்த கிக்குல நான் மதம் மாறட்டான்னு கேட்டா. நான் வாணான்னுட்டேன். ஒன் சாமியை நீ கும்பிடு என்
3
சாமியை நான் கும்பிடறேன்னு சொல்லிட்டேன். இருந்தாலும் ஒன் பொண்டாட்டியா ஆன பொறவு இந்தப் பேரு எனக்கு வாணாம் வேறே பேர் வைய்யின்னு அவதான் என்னை கேட்டுக்கிட்டா. அப்பத்தான் ‘அழகி’ சமாச்சாரம் நம்ப லைப்பிலே வந்து வெளையாண்டுது. பேருதானே நந்தினின்னு வெக்கட்டுமான்னு கேட்டேன். நந்தினி பேரு நல்லாயிருக்கேன்னு குஷியாயிட்டா. கொஞ்ச நாள்லே அவளுக்கு கிருஸ்டினான்ற அவளோட அப்பன் வெச்ச பேரே மறந்து போச்சு. இது நடுலே நான் வேல விசயமா வெளியூர் போனதும் அவ அந்த சமயத்தில அப்பன் வூட்டுக்குப் போனதும் சாதாரணமா எல்லா வூடுங்கள்ளேயும் நடக்கிற விசயந்தான்.ஈரோட்டுக்குப் பக்கங்கறதால அப்படியே ஊர் பக்கம் போனதும் எங்கயும் நடக்கிறதுதான். பம்பு செட்ல குளிக்கறதுக்காக நான் வயக்காட்டுக்குப் போனதும் என் கூடப் படிச்ச ‘கோலி குண்டு’ நந்தினி சமாச்சாரத்தை எடுத்து வுட்டதும்தான் இந்தக் கதையோட திருப்பம்.

நந்தினி புருஷனும் குடிகாரனாம். சின்ன வயசிலேயே அவளோட அப்பன் கடனைக் கழிக்கறாப்பல அவளை ஒரு கெவுருமெண்டு வேலைக்காரனுக்கு கட்டி வச்சிட்டாராம். குடியும் குடுத்தனமுமா அவ ஈரோட்லதான் இருக்காளாம். ‘கோலிகுண்டு’ பாத்தானாம். அவனுக்கு ‘கோலிகுண்டு’ ன்னு பேரு வந்ததே அவங்கண்ணை வச்சுத்தான். பின்னே பாக்காம இருப்பானா. நந்தினி பத்தி சொன்னவுடனே ஒரு சிலிப்பு வந்துச்சு. எங்கடான்னு கேட்டேன். ஏன் பாக்க ஆசையா இருக்கான்னு அவன் திருப்பி கேட்டான். ஆமான்னுதான் வச்சிக்கயேன். சொல்லுன்னு கேட்டேன். நந்தினி இப்ப வேலை பாக்குதாம். கெவுர்மெண்டு வேலை. அவ புருஷன் குடிச்சு கொடல் வெந்து செத்துட்டானாம்.

அந்த மாசம் ஈரோட்டுக்கு போவ முடியல. அதுக்கடுத்த மாசமும் முடியல. இதுக்குள்ளே அப்பன் வூட்டுக்கு போன என் நந்தினி மறுபடியும் கிருஸ்டினாவா திரும்பிருந்தா. அவ அப்பன் என்னா மாயம் பண்ணான்னு தெரியல. என்னை பேர் சொல்லி கூப்பிட ஆரம்பிச்சா. கொஞ்சம் கோவம் கொறைஞ்சு எங்கூட பட்டணத்துக்கு வந்த என் அப்பனும் ஆத்தாவும் இதைப் பாத்து அடுத்த வண்டிக்கே ஊருக்கு கெளம்பிட்டாங்க. நந்தினி எங்கிட்டே ஒரு நா பாஸ்போர்ட் காமிச்சா. சரி பெரிய எடத்துப் போண்ணு. அவங்கப்பன் கூட வெளிநாடு போவும். நமக்குத்தான் அதுக்கெல்லாம் வக்கில்லையேன்னு கம்முனு இருந்துட்டேன். ஒரு நா காலங்காலையில எழுந்து அப்பன் கார்ல போனா. சாயங்காலம் வந்து சொல்றா அமெரிக்காவுக்கு படிக்கப் போறேன்னு. திரும்பி வர்றதுக்கு கொறஞ்சது நாலு வருசம் ஆவுமாம். கூடவே வந்த அவ அப்பன் வராமயும் போலாங்கறான். எனக்கு கோவம் வந்திருச்சு. திரும்பி வராததுக்கு எதுக்கு புருஷன்னு கேட்டுட்டேன். அவங்கப்பன் நமுட்டா சிரிக்கிறான். நந்தினி கம்முனு என்னைப் பாத்துகினே நிக்கறா. அதுக்குதான் மாப்பிளேன்னு அவங்கப்பன் என்னாண்டே பேசறான். என்னாடா இது அதிசயமா இருக்குது. எந்நாளும் இல்லாத திருநாளா இந்தாளு என்னை மாப்பிளேன்றானேன்னு அப்பவே எனக்கு ஒரு சந்தேகம். அது போய் மனசுக்குள்ளாற வேலை செய்யறதுக்குள்ளே அடுத்த குண்டைப் போட்டுட்டான். பிசினஸ¤ டல்லு எல்லாத்தையும் ஏறக்கட்டிட்டு நானும் அங்கேயே போய் செட்டில் ஆயிடலாம்னு பாக்கறேன்றான். போறவ மொத்தமா முடிச்சுகினு போய்த் தொலை. நானும் தல முழுவிடறேன்னு நானும் கத்திட்டேன். எப்பவும் கொண்டார்ர பொட்டியை மடியில வச்சுகினு நம்பரைத் திருப்பி பொட்டியை தொறந்து ஏதோ பேப்பரை எடுக்கிறான். விடுதல பத்திரமாம். கையெழுத்து போடணுமாம். பதிலுக்கு எதுனா வேணுமாங்கற மாதிரி மோவாயை தூக்கறான். பதிலே பேசாம கையெழுத்து போட்டுட்டு கைய வாசப்பக்கம் காமிச்சேன்.

‘என்னாங்க ஆபிசுக்கு கெளம்பலயா’ ன்னு நந்தினி கொரலு கேக்குது உள்ளாறேந்து. ‘தோ கெளம்பறேன்’னு சொல்லிட்டு எழுந்துக்கறேன். இன்னா கொழப்பமா இருக்குதா. என் சம்சாரம் நந்தினிதான். அமெரிக்கா இல்ல பள்ளிப்பாளயம்.
0

Series Navigationகேள்வி பதில்ஐயம் தீர்த்த பெருமாள்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *