மிதிலாவிலாஸ்-18

This entry is part 9 of 23 in the series 11 அக்டோபர் 2015

 

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி

தமிழில்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

 

இரவு ஒன்பது மணியாகிவிட்டது.

சித்தார்த்தா திரும்பி வந்தான். சமையல் அறையில் பாட்டியுடன் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்த மைதிலியை பார்த்ததும் திகைத்துப் போனவனாய் நின்றுவிட்டான்.

“வா சித்தூ! உனக்காகத்தான் காத்திருக்கிறோம். பாட்டி உனக்காக பாயசம் செய்திருக்கிறாள்” என்றாள் மைதிலி எதிர்கொண்டு அழைத்தபடி.

“அந்தம்மாதான் செய்தாங்க சித்தூ! வாவா. பாயசம் ரொம்ப மணக்கிறது. இவ்வளவு அருமையான பாயசத்தை நாம் இதற்கு முன் சாப்பிட்டது இல்லை” என்றால் அன்னம்மா பாயசத்தை கிண்ணத்தில் ஊற்றிக்கொண்டே.

மைதிலி அன்னம்மாவின் கையிலிருந்து கிண்ணத்தை பிடுங்கிக் கொள்வது போல் வாங்கிக் கொண்டாள். “சித்தூ! சாப்பிடு” என்று ஸ்பூனால் அவன் வாயருகில் கொண்டு போன போது அவன் ஓரடி பின்னால் வைத்து தொலைவுக்கு நகர்ந்தான்.

“சாப்பிடு கண்ணா! நல்ல பையன் இல்லையா?” அவள் குரல் குழந்தையைக் கெஞ்சும் தாயைப் போல் இருந்தது.

அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷம் சித்தூவுக்கு வியப்பாக இருந்தது. அவள் முகத்தைப் பார்த்த பிறகு அவனால் மறுக்க முடியவில்லை.

“சாப்பிடு. ப்ளீஸ்!”

அவன் வேண்டுமென்றே கடியாரத்தைப் பார்த்து விட்டு, “ரொம்ப நேரமாகி விட்டது மேடம்” என்றான்.

“ஆமாம். நான் வீட்டுக்குப் போக வேண்டும் இல்லையா? சித்தூ! நீ சாப்பிடவில்லை என்றால் நான் வீட்டுக்குப் போக மாட்டேன்” என்றாள்.

அவன் கண்களில் பயம்! அவள் நீட்டிக் கொண்டிருந்த ஸ்பூனை அவள் கை படாமல் கவனமாக எடுத்துக் கொண்டு தானே வாயில் போட்டுக் கொண்டான்.

“ஆமாம் அம்மா! ரொம்ப நேரமாகி விட்டடது” என்றாள் அன்னம்மா. சித்தூவின் எரிச்சலை அவள் கண்டுகொண்டு விட்டாள்.

வேறு வழியில்லாமல் மைதிலி கிளம்பினாள். போக முடியாமல் போய்க் கொண்டிருந்தாள்.

“ரொம்ப நேரமாகி விட்டது. நீ துணைக்கு போய்விட்டு வாயேன்” என்றாள் அன்னம்மா.

“பாட்டி! நீ எதுவும் பேசாதே.” பற்களை கடித்தபடி தாழ்ந்த சொன்னான் சித்தார்த்தா.

மைதிலி கிளம்பி போய்விட்டாள்.

கார் போனதும் சித்தார்த்தா அன்னம்மாவின் பக்கம் திரும்பினான். கைகளை இடுப்பின் மீது வைத்துக் கொண்டு கண்கள் சிவக்க, “திரும்பவும் உன் நாடகத்தைத் தொடங்கிவிட்டாயா? என்று எரிந்து விழுந்தான்.

“நான் ஒன்றும் பண்ணவில்லையடா” என்று அன்னம்மா தலையில் அடித்துக் கொண்டு புலம்பினாள்.

“போதும் நிறுத்து. கொஞ்சம் பசை இருப்பவர்களைப் பார்த்தாலே பிலாக்கணம் பாடி உன் கஷ்டங்களை வெளிப்படுத்தி இருப்பாய். நீ எதுவும் சொல்லாமலேயே அந்தம்மாள் இவ்வளவு மளிகை சாமான் வரவழைத்தாளா?”

“இனிமேல் அப்படி எதுவும் செய்ய மாட்டேன்.” அன்னம்மா கும்பிடு போட்டாள்.

“ச்ச.. ச்ச! அந்த ஜுரத்தில் நான் செத்துப் போயிருந்தாலும் நன்றாக இருந்திருக்கும்.” சலித்துக்கொண்டே தன் அறைக்குள் போனான் சித்தார்த்தா.

*****

மைதிலி டிரைவ் செய்து கொண்டிருந்த கார் மிதிலாவிலாஸ் முன்னால் வந்து நின்றது. கூர்க்கா காரைப் பார்த்ததும் ஓட்டமாக போய் கேட்டைத் திறந்துக் கொண்டே குரலை உயர்த்தி “சாப்! அம்மாஜி ஆகயே” என்று கத்தினான்.

மைதிலி காரை போர்டிகோவில் நிறுத்தி வீட்டுக்குள் நுழையும் போது மாடியிலிருந்து அபிஜித் வேகமாக இறங்கி வந்து கொண்டிருந்தான். அருகில் வந்தவன் மனைவியின் கையைப் பற்றி, “மைதிலி! எங்கே போயிருந்தாய்?” என்று கவலையுடன் கேட்டான்.

மைதிலி பதிலுக்கு தாங்கமுடியாத சந்தோஷத்துடன் “அபீ!” என்று அவனை அழுத்தமாக கட்டிக் கொண்டாள்.

“இவ்வளவு தாமதம் ஆகிவிட்டது ஏன்? காலையில் நீ டாடியை பார்க்கப் போவதைப்பற்றி என்னிடம் தெரிவிக்கச் சொன்னாயமே. வர்த்தன் என்னிடம் சொன்னான். அப்பாவுக்கு உடல்நலம் சரியாக இல்லையோ என்று பதற்றமடைந்து அங்கே போன் செய்தேன். நீ வந்து விட்டு திரும்பிவிட்டதாக அப்பா சொன்னார். எத்தனை நேரம் ஆனாலும் நீ வரவில்லை. கார் எங்கேயாவது பிரேக் டவுன் ஆகிவிட்டதோ, பெட்ரோல் தீர்ந்து விட்டதோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். நானே இனி கிளம்பி வருவோம் என்று நினைத்திருந்தேன்.”

அவன் தன்னுடைய கவலையை சொல்லிக் கொண்டிருந்த போது மைதிலி அதொன்றையும் கவனிக்காதது போல் மேலும் அழுத்தமாக அவனைக் கட்டிக் கொண்டாள்.

அம்மாவும், அய்யாவும் அப்படி நெருக்கமாக இருப்பதை பார்த்துவிட்டு வேலைக்காரர்கள் அங்கிருந்து நகர்ந்து கொண்டார்கள்.

“ராஜம்மா! அம்மாவுக்கு சூடாக காபி கொண்டு வா. எதிர்பார்த்து பார்த்து நானும் களைத்துபோய் விட்டேன். எனக்கும் எடுத்து வா” என்றான்.

“இதோ கொண்டு வருகிறேன் அய்யா” என்றாள் ராஜம்மா.

அபிஜித் மனைவியின் கையைப் பற்றி மெதுவாக படிவழியாய் மாடிக்கு அழைத்துப் போனான். “மிசெஸ் மாதுருக்கு போன் செய்தேன். வரவில்லை என்றாள். சாரதா மாமியிடம் கேட்டேன். தெரியாது என்றாள்.” அபிஜித் மனைவியை நாற்காலியின் உட்கார வைத்தான். “எவ்வளவு களைத்துப் போயிருக்கிறாய் தெரியுமா?” என்றான்.

“களைத்துப் போயிருக்கிறேனா? சரியாக பாரு.” மைதிலி நிமிர்ந்து பார்த்துவிட்டு சிரித்தாள்.

“என்ன சந்தோஷம் இது? என்னவாகி விட்டது?” என்று கேட்டான்.

பதிலுக்கு மைதிலி சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து கொண்டாள். அவன் கழுத்தைச் சுற்றிலும் கையைப் போட்டு மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். “அபீ! நான் இன்று சந்தோஷமாக இருக்கிறேன்.     “

“நீ எப்போதும் இப்படித்தான் இருக்க வேண்டும்.”

“காரணம் என்னவென்று கேட்க மாட்டாயா?”

“நீயே சொல்லத்தான் போகிறாய். நீ சந்தோஷமாக இருக்கிறாய். அதுதான் எனக்கு முக்கியம்.” அவள் தலை மீது கன்னத்தைப் பதித்து கண்களை மூடிக் கொண்டான்.

ஒரு நிமிடம் முன்னால் அவன் மனம் முழுவதும் பதற்றம்! மைதிலிக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விட்டதா? காருக்கு ஏதாவது ஆகிவிட்டதா? தன்னிடம் பொறாமையால் பாம்புபோல் சீறிக் கொண்டு இருக்கும் எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் ஏதாவது செய்து விட்டார்களா? அவன் கண்கள் முன்னால் பல விதமான காட்சிகள்! மைதிலி நலமாகத்தான் இருப்பாள். இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவாள். அல்லது போனில் பேசுவாள். தன் மனதிற்கு தைரியம் சொல்லிக் கொண்டு அறையில் நடையை பயின்றவனாய் நிமிஷம் ஒரு யுகமாக கழித்து வந்தான்.

இப்போது மைதிலியை அருகில் இழுத்து அணைத்துக் கொண்ட போது நிம்மதியாக உணர்ந்தான். அவனுள் ஏற்பட்ட பதற்றம் மெள்ளமாக அடங்கிக் கொண்டிருந்தது.

“நான் ஏன் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா?” மைதிலி அவனை விடுவித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தபடி சொன்னாள்.

“சொல்லு.” அபிஜித் முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் அவள்தான் தனக்கு எல்லாமே என்ற உணர்வு!

அவன் கண்களுக்குள் ஊடுருவுவது போல் பார்க்கப் பார்க்க மைதிலியின் சந்தோஷம் பொங்கு அடங்கிய பால் குடம் போல் ஆயிற்று. அடி மனதில் எங்கேயோ உணர்வுகளின் கொந்தளிப்பு இருந்தாலும் அது வெளியில் வரவில்லை.

அதற்குள் ராஜம்மாமா ட்ரேயில் கவனமாக காபியைக் கொண்டு வந்து அங்கே வைத்தாள். “அம்மா! உங்களுக்காக காத்திருந்து காத்திருந்து அய்யாகூட காபி இன்னும் குடிக்கவில்லை” என்று சொல்லிவிட்டுப் போனாள்.

மைதிலி கணவன் பக்கம் பார்த்தாள். காபியை கோப்புகளில் ஊற்றிக் கொண்டே அபிஜித் சொன்னான். “மைதிலி! ப்ளீஸ்! நீ ஒருபோதும் இப்படி கவலையில் என்னை ஆழ்த்தி விடாதே. வயதாகி கொண்டு இருக்கிறது. உன்னைப் பற்றிய கவலையை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.”

அவன் வேடிக்கையாக சொன்ன இந்த வார்த்தைகள் மைதிலியை சிரிக்கவைக்க முடியவில்லை.

எப்போதும் பதிலுக்கு பதிலடிக் கொடுத்து, பூப்பந்துடன் விளையாடுவது போல் வார்த்தைகள் அவர்களுக்கு இடையே விளையாடும்.

இன்று மைதிலி எதுவும் சொல்லவில்லை. காபியை எடுத்துக் கொண்டாள். காபி கோப்பையில் அவளுக்கு சித்தூவின் முகம்தான் தென்பட்டுக் கொண்டிருந்தது. உடனே அந்த விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று தலையை உயர்த்தினாள்.

அபிஜித் போய் மிசெஸ் மாதுருக்கு போன் பண்ணிக் கொண்டிருந்தான். மைதிலி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அவள் சந்தோஷம் திரும்பவும் குறையத் தொடங்கியது. இது சாதாரண விஷயம் இல்லை. அவனிடம் சொல்லித்தான் ஆகவேண்டும். சொல்லாமல் அவளால் இருக்கவும் முடியாது. சொல்லவில்லை என்றால் அவள் குற்றவாளி ஆகி விடுவாள். மைதிலி இரண்டு மடக்கு காபியை குடித்துவிட்டு பக்கத்தில் வைத்து விட்டாள். ஒரு முடிவுக்கு வந்தவள் போல் எழுந்து அவன் பின்னால் போய் நின்றாள். அவன் இடுப்பைச் சுற்றிலும் கையைப் போட்டு முதுகில் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.

மிசெஸ் மாதுருடன் பேசிவிட்டு போனை வைத்துவிட்ட அபிஜித், வலது கையை பின்னால் நீட்டி விரல்களால் அவள் இதழ்களைத் தொட்டான்.

மைதிலிவுக்கு தாங்க முடியாத சந்தோஷம் ஏற்பட்ட போதெல்லாம் இப்படித்தான் பின்னாலிருந்து வந்து கட்டிப்பிடித்துக் கொள்வாள். அது அவள் சந்தோஷத்தின் உச்சத்திற்கு அடையாளம்.

அவள் எதுவும் சொல்லவில்லை.

“என்ன?” என்று கேட்டான்.

“அபீ! என்னுடைய சந்தோஷம் உன்னுடைய சந்தோஷம்தானே?”

“சந்தேகம் எதுக்கு வந்தது?”

“நீ சொல்லு.”

“சின்ன திருத்தம். உன்னுடைய சந்தோஷம் உன்னைவிட எனக்கு அதிக சந்தோஷம் தரும்.”

அதற்குள் திரும்பவும் போன் மணி ஒலித்தது. மைதிலி அங்கிருந்து நகரப் போனபோது வலதுகையை பின்னால் நீட்டி அவள் இடுப்பைப் பற்றி நிறுத்திவிட்டான்.

போன் பண்ணியது கருணாகரன். முக்கியமான விஷயம் பேசிக் கொண்டிருந்தார். அபிஜித் தனக்கு வேறு முக்கியமான் வேலை இருப்பதாகவும், பின்னால் தானே போன் செய்து பேசுவதாகவும் சொல்லிவிட்டு ரிசீவரை வைத்து விட்டான்.

மைதிலியின் பக்கம் திரும்பியவன், “இப்போ சொல்லு” என்றான்.

மைதிலி அவன் கண்களையே பார்த்தாள். அவன் ஆர்வத்துடன் பார்த்தான்.

மைதிலியின் மனதில் எங்கேயோ கதவுகள் மூடிக் கொண்டன. சுயநினைவு வந்து இந்த உலகத்தைப் பற்றிய பிரக்ஞை வந்தாற்போல் இருந்தது. அபிஜித் தன்னுடைய கணவன். கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாய் குழந்தைகள் வேண்டும் என்ற தவிப்பு! தங்கள் இருவருடைய கனவு! அந்தக் கனவு தன் மடியில் அமிருதமாய் விழுந்து தன்னை அதிர்ஷ்டசாலியாக மாற்றியது. இந்த செய்தியைக் கேட்டதும் அவன் தனியனாக உணருவானா? அவன் கனவு சின்னாபின்னம் ஆகிவிடுமா? அதற்குக் காரணமாகத் தானே இருப்பது தன்னால் சகித்துக் கொள்ள முடியுமா?

மைதிலியின் மனதில் விசித்திரமான கலவரம் பரவியது. இந்த வினாடி இந்த சந்தோஷத்தை அவனிடம் பகிர்ந்துக் கொண்டு அவன் மூலமாய் இருமடங்கு சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்ற தவிப்பை, ஏதோ தெரியாத சந்கோசம் அவளை பின் வாங்கச் செய்தது. அவசரப்படாதே என்று நாக்கைக் கட்டுப்படுத்தியது.

“சொல்ல மாட்டாயா? என்ன விஷயம்? என் கண்களுக்கு நீ பத்து வயது குறைந்து விட்டாற்போல் தென்படுகிறாய்? அந்த அற்புதமான விஷயம் என்ன?”

மைதிலி பதில் சொல்லவில்லை.

“போகட்டும். கண்களை மூடிகொள்ளட்டுமா? காதில் சொல்கிறாயா?” கண்களை மூடிக் கொண்டே சொன்னான்.

மைதிலி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பதில் சொல்ல முடியாதவள் போல் அவனை அணைத்து கொண்டாள். “காதில் சொல்லு” என்றான் அவன் அவள் பக்கம் குனிந்து.

“ஊஹும். இப்போ வேண்டாம்.” தெளிவற்ற குரலில் சொன்னாள். அவளுக்கு வாழ்க்கையில் முதல் முறையாக ஒன்று புரிந்தது. அபிஜித்தை வருத்தப் படுத்தும் எந்த சந்தோஷமும் தனக்கு உண்மையான சந்தோஷம் இல்லை என்று.

இரவு பதினோரு மணி ஆகிவிட்டது. பகல் முழுவதும் வேலையில் பிசியாக இருந்த அபிஜித் சீக்கிரமாக தூங்கிவிட்டான். மைதிலிக்கு உறக்கம் வரவில்லை. அவன் கை அவள் இடுப்பைச் சுற்றி இருந்தது. சித்தார்த்தாவின் விஷயத்தை அவன் எப்படி எடுத்துக் கொள்வான் என்று மைதிலியின் மனதில் இருந்த தயக்கம் போகப் போக பதற்றமாக மாறியது. அவள் கை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவன் கை மீது படிந்தது. ஒருக்களித்துப் படுத்திருந்த அவனது மூச்சுக் காற்று அவள் காதருகில் பட்டுக் கொண்டிருந்தது. அவள் கண்முன் சித்தார்த்தாவின் முகம் தென்பட்டது. அவன் அனுபவித்த வேதனைகள் அன்னம்மாவின் குரல் வழியாக அவள் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

“ஒருமுறை என்ன நடந்தது தெரியுமா? அவனுக்கு தாங்க முடியாத ஜுரம். கை கால்கள் குச்சியாகி விட்டிருந்தன. டாக்டர் மருந்து எழுதிக் கொடுத்தார். என்னிடம் பணமில்லை. வீட்டுக்காரர் வாடகைக் கொடுக்கவில்லை என்று ஏற்கனவே எரிந்து விழுந்து கொண்டிருந்தார். இது தொற்று நோய் என்றும், தன் குழந்தைகளுக்கு ஒட்டிக்கொள்ளும் என்றும் சொல்லி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். நான் அவனைத் தூக்கிக் கொண்டு ஒரு கடையின் வாசலில் படுக்க வைத்தேன். ஆண்பிள்ளை, வளர்ந்து பெரியவன் ஆனால் என்னைக் காப்பாற்றுவான் என்று நினைத்தேன். எனக்கு அந்த கொடுப்பினை எல்லை போலும். வளர்த்த ருணம் அவ்வளவுதான் என்று நொந்துகொண்டேன். பிளாட்பாரத்தின் மீது இருந்த என்னை பிச்சைக்காரி என்று நினைத்து ஒருவன் காசு போட்டுவிட்டு போனான். முதலில் வருத்தமாக இருந்தாலும் காசை பார்த்த பிறகு சந்தோஷமாக இருந்தது. நானே பிச்சை கேட்க ஆரம்பித்தேன். வந்த காசில் டீக்கடையில் டீ வாங்கி குடித்து விட்டு அவனுக்கும் கொடுத்தேன். அதைக் குடித்துவிட்டு அவன் வாயிலெடுத்தான். அப்பொழுதான் வந்த கடைக்காரன் பையன் செத்துவிடப் போகிறான், இங்கிருந்து உடனே போய் விடு என்று விரட்டினான். பக்கத்திலேயே கோவில் ஒன்று இருந்தது. சனிக்கிழமை! பிச்சைக்காரர்கள் எல்லோரும் வரிசையாக உட்கார்ந்து இருந்தார்கள். நானும் சித்தூவை வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன். காசு நன்றாகவே வந்தது. மருந்து வாங்கி கொடுத்தேன்.

தருமாஸ்பத்ரிக்கு அழைத்துப் போகச் சொல்லி பக்கத்தில் இருந்த பிச்சைக்காரி சொன்னாள். தானே எங்களை அழைத்தும் போனாள். அங்கே இருந்த டாக்டரம்மா ரொம்ப நல்லவள். என்னையும், சித்தூவையும் நன்றாக கவனித்தாள். சித்தூ தேறிக்கொண்டான். எங்களுக்கு யாரும் இல்லை என்று தெரிந்து தனக்கு தெரிந்த இன்னொரு டாக்டரம்மாவின் வீட்டில் வேலைக்கு ஏற்பாடு செய்தாள். நான் சமையல் செய்வேன். சித்தூ வீடு பெருக்கி மற்ற வேலைகள் செய்வான். அந்த டாக்டர்ம்மாளின் கணவன் குடிகாரன். குடித்துவிட்டு வந்து சும்மாவே வந்து சித்தூவை அடிப்பான்.”

அந்த வார்த்தைகளை நினைவுப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று நினைத்தாலும் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தன. அந்த அடிகள் தன்மீது விழுந்தாற்போல் வலித்தது. தாங்கிக் கொள்ள முடியாதவள் போல் மைதிலி எழுந்து உட்கார்ந்துகொண்டாள். அப்படி உட்காரும் போது தன்னையும் அறியாமல் அபிஜித்தின் கையைத் தள்ளிவிட்டாள்.

அத்துடன் அவனுக்கு லேசாக விழிப்ப்பு வந்தது. தூக்கக் கலக்கத்திலேயே “என்னம்மா?” என்று மைதிலியின் தோளில் கையை பதித்து பின்னால் சாய்த்துக் கொண்டான். மார்பின் மீது அவள் தலை சாய்த்து இருந்தது. மறு நிமிடம் அவன் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டான்.

மைதிலியின் முகம் அவன் மார்பின்மீது பதிந்து இருந்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது. கடவுள் தனக்கு இவ்வளவு சந்தோஷமான, வசதிகள் நிறைந்த வாழ்க்கையை ஏன் கொடுத்தார்? அந்த கஷ்டங்களை தனக்கு கொடுத்து சித்தூவை வசதியாக வைத்திருக்கக் கூடாதா? பத்தொன்பது வருடங்கள்! மைதிலியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

சித்தூ! சித்தூ! அவள் மனம் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது. அபிஜித்துடன் வாழ்ந்த இந்த வருடங்களின் சந்தோஷமும், நினைவுகளும் எதிர்பாராத விதமாக மனதின் அடியில் புதைந்து போய்க் கொண்டிருந்தன.

அன்று இரவு தாய் தனக்கு அபார்ஷன் செய்விக்க போவதாக சொன்ன போது, தான் வேதனையுடன் வயிற்றின் மீது கையைப் பதித்து, “எனக்கு நீ… உனக்கு நான்” என்று நினைத்தது நினைவுக்கு வந்தது. இந்த வினாடியில்தான் அது நடப்பது போல் இருந்தது. அந்தக் குழந்தையை இந்த உலகத்திற்கு கொண்டு வருவதற்காக எவ்வளவு தவித்தாள்? எத்தனை கனவுகள் கண்டாள்? பத்தொன்பது வருடங்கள் கழித்து அந்த கனவு நினைவாக மாறி தன் கண்முன்னால் நிற்கிறது.

சித்தூ யாரென்று தெரிந்ததும் அவனிடம் நெருங்க முடியாமல் தன்னைச் சுற்றிலும் ஒரு தடுப்புச் சுவர்! அபிஜித் இந்த உண்மையை எப்படி எடுத்துக் கொள்வான் என்று தயக்கமாக இருந்தது. அவனுக்கு, தனக்கும் குழந்தைகள் இருந்திருந்தால் இவ்வளவு சங்கடம் ஏற்பட்டு இருக்காது. இருவரும் கண்ட கனவு, அந்த ஆனந்தம் தன் ஒருத்திக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது.

மைதிலியின் மனதில் சந்தோஷமும், துக்கமும் சமஅளவில் கலந்து இருந்தன. இந்த விஷயத்தில் அபிஜித்தின் மனதை கடுகளவு கூட தன்னால் நோகடிக்க முடியாது. அவனை வருத்தப் படுத்தினால் அந்த வேதனை ஆயிரம் மடங்காக மாறி தன் மனதை அறத்தால் துண்டுகளாக்கி விடும். மைதிலிக்கு நேரம் நகருவது போல் இருக்கவில்லை.

எப்போது விடியும், எந்த சாக்கு வைத்துக்கொண்டு சித்தூவிடம் போகலாம் என்று துடிப்பாக இருந்தது. யோசனைகளால் களைத்துப் போனவள் விடியற்காலை நேரத்தில் கண்ணசந்து விட்டாள்.

திடீரென்று விழிப்பு வந்து எழுந்து உட்கார்ந்து கொண்டாள். மணி ஆறரை ஆகிக் கொண்டிருந்தது. அபிஜித் ஏற்கனவே எழுந்து விட்டிருந்தான். குளியலை முடித்துக் கொண்டு தலையைத் துவட்டிக் கொண்டே வந்தான்.

படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்த மனைவியைப் பார்த்ததும் “குட் மார்னிங்!” என்றான்.

“ஆறரை ஆகிவிட்டதா?” மைதிலி சட்டென்று கட்டிலை விட்டு வேகமாக இறங்கப் போனாள். அபிஜித் வந்து அவள் கையைப் பற்றி வலுக்கட்டாயமாக நிறுத்தினான். குனிந்து மேஜை மீது இருந்த பேப்பரை எடுத்து காண்பித்தான்.

“பார்! நம் விளம்பரம் இன்றைய பேப்பரில் வந்திருக்கிறது. ரொம்ப அழகாக இருக்கு இல்லையா?” என்றபடி பேப்பரை அவள் மடியில் விரித்தான்.

அதில் சோனாலியின் படம், சித்தார்த்தாவின் விளம்பர வரிகளுடன் இருந்தது. அதன் பின்னணி, அவள் அணிந்திருக்கும் உடைகள், அவள் நின்றுகொண்டிருந்த போஸ், முகத்தில் வெளிப்பட்ட உணர்வுகள் எல்லாமே பார்ப்போரின் கண்களை ஈர்க்கும் விதமாக இருந்தன. சித்தார்த்தா எழுதிய விளம்பர வரிகளை அபிஜித் படித்துக் காண்பித்தான். மைதிலி மந்திரத்திற்கு வசப்பட்டவள் போல் கேட்டுக் கொண்டிருந்தாள். அந்த வரிகளின் மீது கையை வைத்தாள். தன்னுடைய மகனின் தொடுகையைப் போல் உணர்ந்தாள்.

அபிஜித் பெருமை பொங்கும் குரலில் சொன்னான். “நம் விளம்பரம் பல வடிவங்களில் மார்கெட்டிற்கு போய் விட்டது. போஸ்டர்ஸ், ஸ்டிக்கர்ஸ், டி.வி.யில், ரேடியோவில் ஜிங்கிள்ஸ் எல்லா விதமாகவும். இன்று முதல் இந்த சஞ்சலனம் தொடங்கிவிட்டது. எவ்வளவு வேகமாய் கன்ஸ்யூமர்களை கடையின் பக்கம் ஈர்க்கும் என்று காத்திருந்து பார்க்க வேண்டும். ஷோ ரூம்களுக்கு ஆளுயர போட்டோக்கள் போய் விட்டன.”

அபிஜித் எது செய்தாலும் இப்படித்தான். மனதை ஒருமுகப்படுத்தி செய்வான். வீசும் அம்புகள் நேராக பாய்வது போல் இருக்கும் அவன் செயல்கள். அவன் நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. எந்த வெற்றியும் அவனுக்கு அப்பாற்பட்டது இல்லை. சித்தார்த்தாவின் விஷயம் கூட!

“மேடம்! சீக்கிரமாய் வர்றீங்களா? சேர்ந்து காபி சாப்பிடுவோம்.” அவன் எழுந்து டிரெஸ்ஸிங் டேபிள் அருகில் சென்றுகொண்டே கேட்டான்.

மைதிலி கட்டிலைவிட்டு இறங்கினாள்.

பத்து நிமிடங்கள் கழித்து மைதிலி வந்த போது அபிஜித் போனில் பேசிக் கொண்டிருந்தான். மிசெஸ் மாதுர் பேப்பரை பார்த்து விட்டாள் போலும். போன் செய்திருக்கிறாள்.

மைதிலி வந்து உட்கார்ந்து கொண்டாள். சித்தூ இந்நேரத்திற்கு எழுந்து இருப்பானா? அன்னம்மா காபி கொடுத்து இருப்பாளா?

மைதிலிக்கு அந்த நிமிடமே போய் சித்தூவுக்கு தன் கையால் காபி கொடுக்க வேண்டும் போல் இருந்தது. அந்த தருணம் தன் வாழ்க்கையில் எப்போ வரும்? சித்தூ யாரென்று தெரிந்த பிறகும் தொலைவில் இருப்பது அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

நினைவு வேறு எங்கேயோ இருந்த நிலையில் மைதிலி காபி பருகிக் கொண்டிருந்தாள்.

“ஏய்! என்ன இந்த விபரீதம்? என்னை விட்டுவிட்டு நீ மட்டும் காபி குடிக்கிறாயா?” போன் உரையாடல் முடிந்து விட்டது போலும். அபிஜித் வந்து கொண்டே கேட்டான்.

காபி குடித்துக் கொண்டிருந்த மைதிலி அப்படியே நின்றுவிட்டாள். நிமிடத்தில் தன்னை சமாளித்துக் கொண்டவளாய், “நாம் என்ன சின்ன குழந்தைகளா? இன்னும் பழைய படியே ஜாலியாக பொழுது போக்குவதற்கு?” என்று எழுந்து போகப் போனாள்.

அபிஜித் கையைப் பற்றித் தடுத்துவிட்டான். “என்ன விஷயம்? இன்றைக்கு புதிய சொற்பொழிவுகளைக் கேட்கிறேன். சின்னக் குழந்தைகளா? ஆமாம், பெரியவர்கள் ஆகிவிட்டோம். இருந்தாலும் குழந்தைகள் இல்லாத வீட்டில் நமக்கு நாமே குழந்தைகளாய்…”

மைதிலி திடீரென்று கையை நீட்டி அவன் வாயைப் பொத்தினாள். “தயவுசெய்து அப்படிச் சொல்லாதே” என்றாள்.

“என்ன வார்த்தை?” பொத்தியிருந்த கைக்குப் பின்னாலிருந்து கேட்டான்.

“குழந்தைகள் இல்லை என்று.”

“நமக்கு இருக்காங்களா?”

மைதிலி அவன் வாயிலிருந்து கையை எடுத்துவிட்டு அவனுக்கு முதுகைக் காட்டியபடி நின்றாள்.

“ஐ யாம் சாரி மைதிலி! ரியல்லி சாரி. நமக்கு குழந்தைகள் இல்லை என்று சொன்னது தவறுதான்.” அவளை தன்பக்கம் திருப்பிக்கொண்டே, “கருணை இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் எல்லாம் நம் குழந்தைகள்தான் என்று நானே சொல்லி இருக்கிறேன். ஐ யாம் ரியல்லி சாரி. என்னவோ போல் இருக்கிறாயே? ஏன்? உடம்பு சரியாக இல்லையா?” என்று கேட்டான்.

மௌனம்தான் மைதிலியின் பதிலாக இருந்தது. “இந்த நாளின் தொடக்கமே டல்லாக இருக்கிறது. ஓ.கே. எல்லா நாளும் ஒன்றுபோல் இருக்காது இல்லையா? அப்படி இருந்தால் அது இயந்திரகதியில் இருக்கும். அப்படித்தானே?”

மைதிலியிடமிருந்து அப்போதும் போல் பதில் வரவில்லை.

“மைதிலி! என்ன ஆயிற்று?”

ஒன்றுமில்லை என்பது போல் தலையை அசைத்தாள்.

அவன் கடியாரத்தைப் பார்த்துக் கொண்டான். “இன்றைக்கு நம் வீட்டுக்கு போர்ட் மெம்பர்ஸ் எல்லோரும் லஞ்சுக்கு வருகிறார்கள். நான் எட்டு மணிக்கெல்லாம் ஆபீசில் இருக்கிறேன் என்றும், வர்த்தனை வரச் சொல்லி சொல்லியிருக்கிறேன். ஒன்பது மணிகெல்லாம் ஒரு பைலை அனுப்ப வேண்டும். பிறகு வேறு ஆட்கள் வரப் போகிறார்கள். உன்னிடம் பத்தரை மணிக்கு முன்னால் பேச முடியாமல் போகலாம். சமர்த்துப் பெண்ணாக குளித்துவிட்டு ப்ரேக்பாஸ்ட் சாப்பிடு. நிம்மதியாக அரைமணி நேரம் தூங்கி எழுந்த பிறகு லஞ்சுக்கு என்ன செய்யணும் என்று ராஜம்மாமாவிடம் சொல்லு. ஓ.கே.” சொல்லிவிட்டு அவன் போய்விட்டான். மைதிலி அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.

ராஜம்மாமா வந்தாள். “அம்மா! அய்யா ப்ரேக்பாஸ்டுக்கு எத்தனை மணிக்கு வருவாங்க?”

“தெரியாது” என்றாள் மைதிலி.

ராஜம்மாமா வியப்புடன் பார்த்துவிட்டு உள்ளே போய்விட்டாள். எப்போதும் சரியாக நேரத்தைச் சொல்லும் மனுஷி இன்று தெரியாது என்று சொல்கிறாளே?

மைதிலிக்கு சோர்வாக இருந்தது. அபிஜித்திடம் அவள் கேட்க மறந்து விட்டாள்.

அவனுக்கு கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் வீட்டுக்கு வருவான். இல்லையென்றால் அவன் சொன்ன நேரத்திற்கு ஆபீசுக்கு அனுப்பி வைப்பாள். இன்று அந்தப் பேச்சே நினைவில் இருக்கவில்லை.

ஒன்பது மணிக்கு அபிஜித் தானே போன் செய்து மைதிலியிடம் பேசினான். தூங்கினாளா என்று விசாரித்துவிட்டு, காலை உணவு நான்கு பேருக்கு போதுமானதாக அனுப்பி வைக்கச் சொன்னான்.

பத்து மணி ஆகிக் கொண்டிருந்தது. மைதிலி அறையில் நடையை பயின்றுக் கொண்டிருந்தாள். அவளால் ஒரு நிமிடம்கூட அந்த வீட்டில் இருக்க முடியாது என்று தோன்றியது. அவசரப்படக் கூடாது. இந்த விஷயத்தில் அவசரமே கூடாது. ஜாக்கிரதையாக இந்த விஷயத்திற்கு தீர்வு காண வேண்டும். அபிஜித் தன்னைப் புரிந்துகொள்வான். அந்த நம்பிக்கை தனக்கு முழுமையாக இருக்கிறது. சித்தார்த்தாவை அவன் ஏற்றுக் கொள்வான். மிஞ்சிப் போனால் கொஞ்ச காலம் பிடிக்கலாம். இது சின்ன விஷயம் இல்லை. அவனைத் தொந்தரவு செய்து தொல்லைக் கொடுக்கக் கூடாது. அவன் பொறுமைசாலி. எதிராளியை புரிந்துகொள்ள முயற்சி செய்வான். அந்த பண்புதான் தன்னை பத்திரமாக கரையில் சேர்க்கப் போகிறது. தன் மனதிற்கு கட்டுப்பாடு அவசியம். உணர்ச்சி வசப்பட்டு அந்த கொந்தளிப்பில் தவறான பாதையில் சென்று வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக் கொள்ளக் கூடாது. அபிஜித்தின் சகவாசத்தில் தான் கற்றுக் கொண்ட பாடம் இதுதான்.

தனக்கு வேண்டிய நிஜமான சந்தோஷத்திற்கு அவன் தடை சொல்ல மாட்டான் என்ற தைரியம் தனக்கு இருக்கிறது.

 

Series Navigationஅவன், அவள். அது…! -5மிதிலாவிலாஸ்-19
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *