முனகிக் கிடக்கும் வீடு

 

கதவு

காத்துக் காத்து

தூர்ந்து கிடக்கும்.

 

இரவு பகல்

எட்டி எட்டிப்

பார்க்கும்.

 

அறை ஜன்னல்களின்

அனாவசியம்

காற்றடித்துச் சொல்லும்.

 

அறைக்குள்

சிறைப்பட்ட வெளியைக்

குருவிகள்

வந்து வந்து

விசாரித்துச் செல்லும்.

 

நடுமுற்றம்

நாதியற்றுக் கூச்சலிடும்.

 

வெயிலில் காய்ந்தும்

மழையில் நனைந்தும்

காலத்தின் மொழியை

அது

கற்றிருக்கும்.

 

ஒற்றையடிப் படிக்கட்டு உச்சியில்

நாய்க்குட்டி போல்

ஆகாயம்

காத்துக் கிடக்கும்.

 

முழுநிலா வெளிச்சத்தில்

இறந்து போன மனிதர்கள்

முன்கூடப் புகைப்படங்களிலிருந்து

உயிர் பெற்று உலவுவர்.

 

வேப்ப மர வேர்கள்

தேடித் தேடிப் போய்க் கொண்டிருக்கும்

எங்கோ

கனவு தேடித் தொலைந்தவனை.

 

கிழடு தட்டிக்

கிறுக்கு பிடித்ததாய்

சதா முனகும் அவன் வீடு

’அவன் வந்து கொண்டே இருக்கிறான்’ என்று.

———————————————————–

Series Navigationவாழ்வே தவமாய்!புத்தாக்கம்