முள்வெளி அத்தியாயம் -10

This entry is part 7 of 33 in the series 27 மே 2012

“டாக்டர் சிவராமை சந்தித்தேன். அவர் கருத்தில் ராஜேந்திரன் ஒரு பக்கம் கடுமையான மன அழுத்தத்திலும் மறுபக்கம் கற்பனாசக்தியுடைய எழுத்து முயற்சியிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார். விபரீதமான எதையும் வெளியுலகில் அவர் செய்யாததால் காலப் போக்கில் அவர் மனம் சமனப் படும் வரை காத்திருப்பதே சிறந்தது. அவர் மன அழுத்தத்துக்கான காரணமும் பிடிபடவில்லை. இது ஆரம்ப நிலையே. மீட்க முடியாத நிலைக்கு ராஜேந்திரன் போகவில்லை. எனவே நீ கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. டாக்டர் சங்கீதா ‘ஈமெயிலை’ லதாவுக்கு அனுப்பிய பிறகு நர்ஸ் ஸ்ரீகலாவை அழைத்தாள். “ஸ்ரீகலா. தமிழ் நல்லா வருமா உனக்கு/”
“பேஷன்ட்ஸ்கிட்டே பேசிப் பேசி நல்லாப் பாடம் ஆயிடுச்சு டாக்டர்.”
“உங்க ஊர்க்காரங்க நிறைய பேர் நல்லாப் பாடுவாங்களே.”
“கலாக்ஷேத்ராவில படிச்சவங்க என்னோட ரிலேடிவ்ஸ் நல்லாப் பாடுவாங்க டாக்டர்”
“பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ” இந்தப் பாட்டுக் கேட்டிருக்கியா ஸ்ரீகலா?”
“எம் எஸ் மீரா படத்தில பாடினது”
“இதை டிவி ஸீரியலுக்குப் பாடற ஒருத்தரைக் கண்டுபிடிப்பியா?”
” முடியும் டாக்டர். எங்க ரிலேடிவ்ஸ்ல ஒரு பொண்ணு ஸ்ருதி சுத்தமாப் பாடும்”
“குட். ஒரு டிவி ஸீரியல்ல நீ நடிக்கச் சான்ஸ் கிடைச்சா நடிப்பியா?”
“நெஜமாவா டாக்டர்?” ஸ்ரீகலாவின் முகத்தில் மெலிதான சிவப்பு.
“ஆமாம். உனக்கு சம்மதமா?”
“யெஸ் டாக்டர்’
“தமிழ் படிக்கத் தெரிஞ்ச ஒரு ஆள வெச்சு இந்தக் கதையைப் படி. டிவிக்காரங்க கூப்பிட்டு அனுப்புவாங்க’
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்”, டாக்டர் கொடுத்த கத்தைப் பேப்பருடன் ஸ்ரீகலா நகர்ந்தாள்.
**__
**__**
** வாயிற்கதவு திறந்தவுடன் வேலைக்காரியை இடித்துத் தள்ளாத குறையாக ராஜேந்திரன் வெளியே வந்து படியிறங்கித் தோட்டத்தில் வைத்திருந்த தொங்கு கூடையில் அமர்ந்து ஆட ஆரம்பித்தான்.

வேலைக்காரி ஓடிப் போய் செக்யூரிட்டியிடம் “இவுரு மென்டலானதிலேருந்து ஒரே தல நோவு” என்றாள். வாட்ச்மேன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த ராஜேந்திரனை வீட்டுக்குள் வரச் சொல்லி மன்றாடியது பலனளிக்கவில்லை.

வாகனங்களின் பேரிரைச்சலுடன் அங்கிருந்து இங்கும் பின்னர் வேறு இடத்துக்கும் மக்கள் விரைந்து கொண்டே இருக்கிறார்கள். நகருவது வேறு ஒருவரை அல்லது ஒன்றை நகர்த்துவதற்காக. விரைவது சமூக வாழ்க்கையின் ஒயா விரைவுகள் தொய்யவே கூடாது என்று உறுதி செய்வதற்காக.

எதையேனும் தேடி ஓடுவது என்பது ஒன்று ; ஓடிக் கொண்டே இருந்தால் தேடிக் கொண்டே இருக்க ஏகப்பட்டது கிடைக்கும் என்பது ஒன்று. இப்படி ஓடுபவர்கள் நகரத்தில் வெளிப்படையாக ஓடுகிறார்கள். கிராமத்தில் ஓடாமலேயே ஓடுகிறார்கள். நகரத்தின் ஓட்டம் கிராமத்தில் கசிந்து பரவி விட்டது. நகரம் என்னும் நாணயத்தின் ஒரு பக்கம் ஓட்டம். மறுபக்கம் பாசாங்கான நாசூக்கு.

திடீரென ஊஞ்சல் நின்றது. மஞ்சுளா. “எதுக்கு வெளியே வந்தீங்க? ” ராஜேந்திரன் எதுவும் பேசவில்லை.

“வாங்க.. உள்ளே வாங்க.. நேரா பாத்ரூமுக்குப் போங்க.. ” அவனது கையைப் பிடித்து இழுத்து வீட்டுக்குள் அழைத்துப் போனாள். அவளுடன் வந்து தள்ளி நின்றபடி இருந்த இளைஞன் அவர்கள் பின்னாடியே போனவன் வாயிலில் தயங்கி நின்றான். “கம் இன் ஸைட். ஹீ மஸ்ட் கம் அவுட் க்ளீன் ஷேவன்.”
“யெஸ் மேம்”
ராஜேந்திரன் குளித்து வெளியே வந்ததும் அவனது தலை முடி ஒன்றை சோறு பதம் பார்ப்பது போல் தொட்ட மஞ்சுளா “குட். நல்லாத் துவட்டி விட்டிருக்கீங்க. அல்டர்னேட் டேஸ் மார்னிங்க் நேரா இங்கே வாங்க”
“யெஸ் மேம்”

தனது அறையில் நுழைந்ததும் ராஜேந்திரன் நாற்காலியில் அமர்ந்து எழுதினான்:

காற்று தன்னிச்சையாய்த்
திரிகிறது என்பது தோற்றம்
மேகத்தையும் மழையையும்
காற்றுதான் கட்டுப் படுத்தும்
என்பது மாயை
தோற்றம் மாயை
என்னும் ஆடைகளைப்
புனைந்து திரியும் உண்மை
தன்னிச்சையாய்
**__
**__**
** ஆஸ்பத்திரிப் படுக்கையில் ஒரு பெரியவர் கையில் காகிதங்களுடன் உரத்து வாசிக்க ஆரம்பித்தார். ஸ்ரீகலா பவ்யமாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள். “கதையோட தலைப்பு ‘அவசரம்'”.

காலை மணி ஏழு.
கதவைத் திறந்து ஷோபனா உள்ளே நுழைந்தாள். “சித்ரா இன்னும் எழுந்துக்கல்லியா?” ரமேஷ் பதில் சொல்வதற்குள் கழிப்பறைக்குள் சென்று விட்டாள்.அவள் வெளியே வந்து பல் துலக்குவதற்குள் ரமேஷ் காபி கலந்து விட்டான். அவள் நேரே படுக்கையறைக்குள் நுழைந்து சித்ராவை எழுப்ப அவள் அழுதபடியே எழுந்தாள்.

“சீக்கிரம் பல் தேச்சு பாத்ரூம் போயிட்டு வா.. இன்னும் அரை மணியிலே ஸ்கூல் வேன் வந்திடும்”

ரமேஷ் அவளிடம் காபி டம்ளரை நீட்டினான். “வேண்டாம் ரமேஷ். நான் லெமன் ஜூஸ் குடிக்கப் போறேன். நேத்திக்கி யூடெரஸ் ரிமூவ் ஆன லேடி நைட்டெல்லான் அனத்தித் தூக்கத்தையே கெடுத்திட்டா. நர்ஸ் பொழப்புப் பொழைக்கறத்துக்கு பதிலாக் குப்பை அள்ளலாம்”. ரமேஷ் பதிலேதும் சொல்லாமல் எலுமிச்சம்பழத்தைத் தேடி ‘ஃப்ரிட்ஜை’த் திறக்கும் போது ஒரு ‘ஸாஸ்’ பாட்டில் கீழே விழுந்து உருண்டது. நல்ல வேளை உடையவில்லை.

“பொறுமையாப் பண்ணுங்கப்பா. நீங்க எல்லாத்தையும் உருட்டிட்டு மெஸ் அப் பண்ணிட்டுப் ஆஃபீஸ் போயிடறீங்க. தூங்கி எழுந்து க்ளீன் பண்ணிட்டு சமைச்சு முடிக்கறத்துக்குள்ளே அவ வந்திடறா. அவளை கவனிச்சு டியூட்டிக்கிக் கெளம்பறத்துக்குள்ளே தாவு தீந்து போவுது”

சித்ரா தனது பள்ளிக்கூடச் சுமைப் பையில் ஏதோ தேடிக் கொண்டிருந்தாள். ஷோபனா அவள் முதுகில் ஒரு அடிவைத்து “இப்ப என்னடி தேடறே? ராத்திரி ஃபுல்லா கார்ட்டூன் நெட் ஒர்க், அப்பாவோட கேரம்னு கொட்டம் போட்டுட்டு … போடீ பாத்ரூமுக்கு..” என்று அவளைப் பிடித்துக் கழிப்பறைக்குள் தள்ளினாள். வெளியே வந்த உடன் படுக்கையறைக்குள் இழுத்துச் சென்றாள். சீருடை அணிந்த சித்ரா ஹாலில் சம்மணமிட்டு அமர்ந்தாள். அவள் பின்பக்கமாக அமர்ந்த ஷோபனா அவளது தலைமுடியை பின்னத் தொடங்கினாள். “கூன் போடாதடி. நேரா உட்காரு” குழந்தையின் முதுகில் குத்தினாள். சித்ரா ஓ என்று அழத் துவங்கினாள். “அழாதடீ. கண்மை கரைஞ்சிடும்”

ரமேஷ் ‘நூடுல்ஸ்’ எடுத்து வரும் போது சித்ரா தனது ஸ்கூல் பையைச் சுற்றி புத்தகங்களைப் பரப்பி இருந்தாள்.

“டைம் ஆச்சேடா கண்ணு” என்றான் ரமேஷ். “அப்பா… நான் சாப்பிட்டுக் கிட்டே சொல்றேன். அந்த புக்ஸை மட்டும் எடுத்து உள்ளே வெச்சுடறியா?”

அவன் புத்தகங்களையும் பைக்குள் ஒழுங்கு செய்து முடிப்பதற்குள் ‘ஸ்கூல் வேன்’ ஹாரன் ஒலித்தது. “அப்பா லன்ச்சுக்கு ப்ரெட் வெச்சியா?”

“உடனே ரெடி பண்றேன்”. ஒரு தட்டின் மீது இரண்டு ரொட்டித் துண்டுகளை வைத்தான். அவை இரண்டின் மீதும் சீராக ‘ஜாமை’த் தடவினான். பிறகு வெண்ணை. ஒவ்வொரு ரொட்டி மீதும் மற்றொரு ரொட்டியை வைத்தான். அதற்குள் ஹாரன் சத்தம் இன்னும் நீண்டு இன்னும் ஓங்கி ஒலித்தது. ரொட்டியை இறுதியாகக் குறுக்காக வெட்ட வேண்டும். ஷோபனா குறுக்காக வெட்டி இரண்டு முக்கோணங்களாக அவற்றை பிசிறில்லாமல் கச்சிதமான முக்கோணங்களாய்க் கொண்டு வருவாள்.

கத்தியை வைத்து வெட்ட ஆரம்பித்தான். அழுத்தம் தாங்காமல் பீங்கான் தட்டு ஒரு புறம் சரிந்தது. இடது கையால் தட்டின் ஒரு பக்கத்தை அழுத்திக் கொண்டு ரொட்டி ஜோடியை வெட்டினான். அழுத்தி வெட்டிய வேகத்தில் ரொட்டியை வெட்டி முடித்து இடது கைக் கட்டை விரலுக்குக் கீழே உள்ளங்கை ஓரத்தில் கத்தி ஆழமாக இறங்கிவிட ரத்தம் குபுகுபுத்தது. தரையில் வழிந்தது. ” அப்பா.. ரத்தம்.. ” சித்ரா கீச்சிட்டாள். ” ‘உஸ்’ கத்தாதே.. அம்மா எழுந்தாத் திட்டுவா என்றபடி குளியலறைக்குள் புகுந்து ஒரு துண்டை ஈரப்படுத்தி கையில் சுற்றிக் கொண்டான். சென்ற வழியெல்லாம் ரத்தம். குழந்தை பயந்து ஓரமாக் நின்றாள். ஈரத்துணியைக் கையில் சுற்றிக் கொண்டு வெளியே வந்தவன் சமையலறைக்குச் சென்று அவளது ‘லன்ச் பாக்ஸி’ல் ரொட்டியை வைத்து, குடி தண்ணீர் பாட்டிலை நிரப்பி அவளது முதுகுப் பைக்குள் போட்டான். “ஷீவை வேன்லே போட்டுக்கோ” என்று அவளை வாரித் தூக்கிக் கொண்டு மறு கையில் ‘ஷீ’ ‘ஸாக்ஸ்’ இவற்றை எடுத்து குழந்தையின் முதுகுப்பையையும் கையில் மாட்டிக் கொள்ள முயன்ற போது ரத்தம் பீறிட்டுத் துண்டை நனைப்பது தெரிந்தது. அதைப் பொருட்படுத்தாமல் மாடிப் படிகளில் தடதடவென இறங்கி அவளை வேனுக்குள் ஏற்றிய போது ‘உன்னை மாதிரி நாலு பேரு இருந்தாப் போதும் என் பொளப்பு நடந்த மாதிரிதான்’ என்றான் டிரைவர்.

‘ஷோபனா ஊருலே இல்லியா? உங்க கையிலே என்ன ஆச்சி? ‘ என்றார் ஒரு பாட்டி. “ஒன்றுமில்லை” என்று வீட்டுக்குள் விரைந்தான்.

‘ஃப்ரிட்ஜை’ ஒற்றைக் கையால் திறக்கும் போது மறுபடி ‘ஸாஸ் பாட்டில்’ கீழே விழுந்தது. இந்த முறை உடைந்தது. நல்ல வேளை. கொட்டிய ‘ஸாஸி’லேயே நிறைய உடைந்த கண்ணாடித் துண்டுகள் சிக்கிக் கொண்டன. அதனால் அதிக தூரம் தெறிக்கவில்லை. ஹாலில் ‘ஸாஸ்’. சமையலறை முதல் குளியலறை வரை ரத்தம் என வீடே பயங்கரமாகக் காட்சி அளித்தது. ஷோபனா மட்டும் இப்போது விழித்திருந்தால் பெரிய ரகளை ஆகி இருக்கும்.

‘ஃப்ரிட்ஜின் ஃப்ரீஸரி’லிருந்து ‘ஐஸ் ட்ரே’யை வெளியில் எடுத்தான். உணவு மேசை மீது வைத்து ‘ஐஸ் க்யூப்’ ஐ எடுக்க முயன்றான். வழுக்கித் தரையில் ஓடிச் சிதறின பனிக் கட்டிச் சில்லுகள்.. ஒரிரு பெரிய சில்லுகளை எடுத்து கையைச் சுற்றியிருந்த பருத்தித் துண்டை உதறி விட்டு, ‘வாஷ் பேசினி’ல் கையைக் காட்டிக் குழாயைத் திறந்து விட்டான். உறைந்தும் உறையாமலுமிருந்த ரத்தம் தண்ணீரோடு கலந்து ஓடியது. குபுகுபுவெனப் புதிதாக ரத்தம் கொப்பளித்தபடியே இருந்தது. ‘ஐஸை’ வத்து அழுத்திக் கையை அப்படியே மூடிக் கொண்டான். அதீத சில்லிப்பு வலி தருவதாக இருந்தது. சற்றே அயற்சியாக உணர்ந்தான். சோபாவில் அமர்ந்தான். குழந்தை பாதி ‘நூடில்ஸை’ சாப்பிடாமற் போனது வருத்தமாக இருந்தது.

சில நிமிடங்கள் கழித்து விரல்களை விரித்துப் பார்த்த போது ஒரு வழியாக ரத்தம் உறைந்திருந்தது.

தரை துடைக்கும் துணியை எடுத்து நனைத்து தரையில் உலர்ந்து கொட்டியிருந்த ரத்தக் கறைகளைத் துடைத்தான். இன்று அலுவலகத்துக்கு சீக்கிரம் போக வேண்டி இருந்தது. துணியில் ரத்தக் கறை பார்க்கக் கோரமாய் இருந்தது. அப்படியே குப்பைக் கூடையில் போட்டான். நினைவுக்கு வந்தவனாய் கையைச் சுற்றி ரத்தத்தை உறிஞ்சச் சுற்றியிருந்த பருத்தித் துண்டை குளியலறையில் வீசியிருந்த இடத்தில் இருந்து எடுத்தான். அது ரத்தத்தால் மிகவும் தோய்ந்து அசிங்கமாயிருந்தது. அதையும் குப்பைக் கூடையில் போட்டான்.

குளிப்பதும் உடையுடுத்துவதும் பெரிய சவாலாயிருந்தது. நடு உள்ளங்கை வரை பெரிய ஆழ்ந்த வெட்டு. எங்கே ரத்தம் மறுபடி பீறிட்டு வருமோ என்று உஷாராக இயங்க வேண்டியிருந்தது. சாப்பிடுமளவு பொறுமையும் நேரமுமில்லை. ரத்தம் பீறிடாமல் வாசல் ‘க்ரில் கேட்’டைப் பூட்டுவது பெரிய வித்தையாக இருந்தது. இரண்டு சக்கர வாகனத்தின் ‘நடு ஸ்டாண்ட்’டை விடுவித்து வண்டியில் ஏற முயன்ற போது கவனப் பிசகால் மீண்டும் ரத்தம் கசிந்தது. வண்டிக்கு ‘ஸைட் ஸ்டாண்ட்’ போட்டு விட்டு கையில் ‘கர்ச்சீஃபை’ சுற்றிக் கொண்டு தெருக்கோடியில் இருந்த 24 மணி நேர ‘க்ளினிக்’கில் நுழைந்தான்.

“கையில காயம் அர்ஜன்ட்” என்றான் வரவேற்பில் இருந்த பெண்ணிடம்.

“எல்லோருக்குமே அர்ஜன்ட் தான் ஸார். மண்டையிலே அடி பட்டவங்களே க்யூல இருக்காங்க. ஒரே ஒரு நர்ஸ்தான் கட்டுப் போடறது.. ஊசி போடறது எல்லாமே. வெயிட் பண்ணுங்க..” என்றாள்.

Series Navigationபாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-3)கயஸ்கானின் காரண காரிய சரித்திரம்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *