மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை

இனி இந்தியாவுக்கு வருவோம்.

karaikal

வேதங்களில் பேசப்படும் கார்க்கி வாச்கனவி, மற்றும் மைத்ரேயி ஆகிய பெண்கள் தங்களில் தேடலை தத்துவங்களின் ஊடாக பயணித்து ஆண்களுக்கு இணையாக நின்றதைக் காணலாம்.

 

தென்னிந்தியாவில் அவ்வை மூதாட்டி தான் முதல் வரிசையில்

வருகிறார். அவ்வை என்ற பெயரில் முச்சங்க காலத்திலும் பெண்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வை என்ற பெண்ணின் அடையாளம் தமிழ்ச் சூழலில் ஒரு வயதான மூதாட்டியாக மாறி இருக்கும் வாய்மொழி கதைகள் நமக்கு அவ்வையும் சொல்லாத இன்னொரு பெண்மொழியை முன்வைக்கின்றன. அதியமான் , பாரி , மூவேந்தர்கள்  என்று எங்கும் செல்லவும் அறிவுரை வழங்கவும் தகுதியும் ஆளுமையும் கொண்ட அவ்வை  ஏன் மூதாட்டி என்ற அடையாளத்துடன் முன்னிறுத்தப்பட்டாள் என்பதில் பெண் உடல் சார்ந்த சமூகத்தின் கெடுபிடிகள், கட்டுமானங்கள், வரையறைகள் நமக்கு தெரியத்தான் செய்கின்றன.

 

அவள் மூதாட்டியாக தான் இருந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்ற புரிதல் ஏற்படுகிற போது பெண்ணுடலை பாலியல் அடையாளமாகவும் ஆணின் இன்ப நுகர்ப்பொருளாகவும் கொண்டுவந்த சமூகத்தின் ஆணியச் சிந்தனை தான் அவ்வையாரை மூதாட்டியாக்கி இருக்க வேண்டும் என்ற உண்மைக்கு நெருக்கமான புள்ளியை நாம் சென்றடைய முடிகிறது. மெய்யியல் என்ற அறிவின்  தேடல் என்ற பொருள் கொண்டால், மைத்ரேயி, கார்க்கி, அவ்வை என்ற பெண்களின் பெயர்கள் முதல் நிலைப் பெறுகின்றன.

 

 

இதை அடுத்த மெய்யியல் என்பது வாழ்க்கை என்பது என்ன?

ஏன் பிறந்தோம்? தூங்காமை போன்றதா சாக்காடு? பிறப்புக்கும் இறப்புக்கு நடுவில் வாழ்வது மெய்யியலா? இறப்புக்கு பிந்திய வாழ்க்கையைத் தேடுவது மெய்யியலா? உலகம் எங்கும் இந்த மெய்யியல் தேடல் இன்றுவரை தொடர்கிறது. இந்த வரிசைக்கு வரும் போது தமிழ்ச்சூழலில் எனக்கு முதலில் நினைவுக்கு வருபவர் காரைக்கால் அம்மையார்.

 

.

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும்’ என்று கேட்டவர்.  பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் எழுதுவதற்கான வழிகாட்டியாக பதிகப் பாடல் வடிவத்தை உருவாக்கியவர். அவர் வாழ்க்கை பெண்ணின் மெய்வெளி கடந்த பாதையில் முதல் கட்டம்.

 

காரைககால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி. அவருக்கும் பரமதத்தன் என்பவருக்கும் திருமணம் நடக்கிறது. கணவர் பரமதத்தன் புனிதவதியிடம் ‘இரு மாங்கனிகளைக் கொடுத்துவிட்டு தன் வணிக்கத்தைக் கவனிக்க கடைக்குப் போய்விடுகிறான். அப்போது அவர்கள் இல்லத்திற்கு சிவனடியார் ஒருவர் திடீர் வருகைத் தருகிறார். சிவனடியாருக்கு அறுசுவை உணவு ஆக்கி கொடுக்க முடியாத நிலையில் தயிறு போட்டு பிசைந்த சோறும் கணவர் கொடுத்த மாங்கனியில் ஒன்றையும் பசியாற்ற கொடுக்கிறார் புனிதவதி. மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்த கணவன் பசியாறிவிட்டு மாங்கனியைக் கேட்கிறான். சிவனடியாருக்கு கொடுத்தது போக மீதமிருக்கும் ஒரு கனியை கணவனுக்கு கொடுக்கிறார். கனியின் ருசியில் லயித்த பரமதத்தன் இரண்டாவது கனியையும் எடுத்து வர சொல்கிறான். அந்தப் பழம் தான் இந்தப் பழம் என்று கவுண்டமணி செந்தில் மாதிரி காமெடி பண்ணவா முடியும் புனிதவதியால்?

 

அவர் சமையலறைக்குச் சென்று சிவனை மனமுருக வேண்டுகிறார். ‘உன் அடியாருக்கு தொண்டு செய்தால் உனக்குத் தொண்டு செய்ததாகுமே, எம்பிரானே, சிவனே… இப்போது என்ன செய்வேன்? ‘ என்று மனமுருகி கேட்க புனிதவதியின் கையில் இன்னொரு கனி வருகிறது. அந்தக் கனியை மகிழ்வுடன் கணவரின் கொடுக்க அதைச் சாப்பிட்ட பரமதத்தன் இந்தக் கனியின் சுவை இதுவரை நான் சாப்பிட்ட எந்த ஒரு மாங்கனியிலும் கண்டதில்லை, என்று சொல்லி புனிதவதியைப் பார்க்கிறான். எப்போதுமே பாருங்கள்… அந்தப் பெண்… இது நீங்கள் கொடுத்த அந்தக் கனிதான் என்று பிடிவாதமாக சொல்லி இருக்க முடியும். ஆனால் இன்றைக்கும் கூட ஒரு பெண்ணால் அப்படி சொல்ல முடிவதில்லை.

புனிதவதி உண்மையில் நடந்ததைச் சொல்கிறாள். அவன் நம்ப மறுக்கிறான். நீ சொல்வது உண்மையானால் ‘எங்கே என் முன்னால் இன்னொரு கனியை உன் சிவனிடமிருந்து கொண்டு வா பார்க்கலாம் ” என்கிறான். என்ன மாதிரியான ஒரு சோதனைப் பாருங்கள். ஆனால் அப்போதும் அந்தப் பெண் நம்புகிறாள் மீண்டும் சிவன் தனக்கு கனியைத் தருவான் என்று. அவள் நம்பிக்கை பொய்க்கவில்லை. அவள்: கைகளில் மீண்டும் ஒரு மாங்கனி. தன் கண்களை அவனால் நம்பமுடியவில்லை. அப்போது தான் பரமதத்தன் என்ற ஆண் ” இவள் எனக்கான பெண் இல்லை. இவள் என் மனைவி இல்லை, இவள் தெய்வப்பெண்” என்ற மனநிலைக்கு தள்ளபப்ட்டு புனிதவதியைப் பிரிந்து மதுரை  வந்து மதுரையில் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்துகிறான். புனிதவதியின் பெற்றோர் உறவினர் இதைக் கேள்விப்பட்டு புனிதவதியை அழைத்துக் கொண்டு மதுரை வருகின்றனர். அவனோ புனிதவதியின் கால்களில் விழுந்து வணங்குகிறான்” புனிதவதி என்ற பரமதத்தனின் மனைவி காரைகால் அம்மையார் ஆகி கைலாயத்து சிவனால் “அம்மையே’ என்றழைக்கப்படும் பெருமையை அடைகிறாள். இந்தக் கதையில் ஒரு முக்கியமான செய்தி, நாம் கவனிக்க வேண்டியது புனிதவதி ஏன் பேய் உரு கொண்டாள்? என்பதைத்தான். கணவன் தொட்ட இந்த உடல் நீங்கி இறைவனைப் போற்றுகின்ற சிவ பூத கண வடிவம் தனக்கு வேண்டும் என்று வேண்டுகிறாள் அந்தப் பெண். அவள் உடல் அவளே உதறித் தள்ளியதற்கு சொல்லப்படும் இக்காரணம் பெண் உடல்வெளி கடந்தப் பாதையின் முதல் அத்தியாயம்.

 

அவளை ஏற்க மறுக்கிறான் கணவன். அவள் உடலோ கணவன் தொட்ட உடல். அவள் சுமந்து கொண்டிருக்கும் அவள் உடல் அவளுக்கு இப்போது அவன் நிராகரிப்பின் காரணமாக அருவருப்பாக ஆகி இருக்கலாம். கொண்டவன் நிராகரித்தாலும் இறைவன் தன்னை நிராகரிக்க மாட்டான், தன்னை எப்போதும் ஏற்றுக்கொள்வான்  என்று நம்புகிறாள். அக்கணம் அவளுக்குத் தோன்றுகிறது தன்னை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் இறைவனிடன் இன்னொருவன் தொட்ட உடலுடன் எப்படி செல்வது ? என் இந்த உடலைத் துறக்கின்றேன்.. எலும்பும்,நரம்பும் துருத்தும் பேயின் உடல்கொண்டு கண்டவர் மருளும் வண்ணம் தன்னை ஆக்கிக்கொண்ட காரைக்காலம்மையார்,

”……இனி இவனுக்காகத்

தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்து

………பேய்வடிவு அடியேனுக்குப்

பாங்குற வேண்டும்” என ஆழ்மன வேகத்துடன்

 

பேயுரு கொண்டு உன்னைக் காண வருவேன்.. என்று சொல்கிறாள் அந்தப் பெண். கணவன் தொட்ட உடலுடன் இறைவனைக் காண மறுக்கும் மனநிலை, கண்வன் தொட்ட உடல் கணவனுக்கு மட்டுமே சொந்தமான உடல் என்ற கருத்துருவாக்கங்கள் காரைக்கால் என்ற பெண்ணுக்கு அன்றைய தமிழ்ச்சமூகம் வழங்கியது தான். காரைக்கால் அம்மையாரை மட்டும் இறைவன் அம்மையே ! என்று அழைத்து தாயுரு வடிவில் கண்டதும் ஆள் கொண்டதும் தமிழ்ச்சமூகத்தில் தாய்வழிபாட்டின் எச்சம் என்று கருத வேண்டி இருக்கிறது. குமரி முனையில் குமரியாக , இளம் பெண்ணாக இருக்கும் பெண்வழிபாடு முருகனின் தாயாக மாறியதும் இந்தப் பின்புலத்தில் வைத்து நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய புராணக்கதை.

 

Series Navigation