ராதா டீச்சர்
சியாமளா கோபு
திருச்சி தேசிய நெடு்சாலையில் மதுராந்தகம் தாண்டியதும் வளவனூர் சந்திப்பில் உள்ள அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி தொடங்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தது. மாணவர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். ராதா டீச்சரும் அப்போது தான் உள்ளே நுழைந்தாள். தலைமை ஆசிரியை அறையில் கையொப்பமிட்டு விட்டு தன் வகுப்பான பத்தாம் வகுப்பு சி பிரிவிற்கு வந்த போது கரும்பலகையை சுத்தம் செய்து விட்டு பதிவு வருகை என்று எழுதிக் கொண்டிருந்தாள் மரியா. அவளுடன் பேசிக்கொண்டிருந்தாள் வேல்விழி. இவளைக் கண்டதும் குட்மார்னிங் டீச்சர் என்று முகமன் சொன்னார்கள் இருவரும். இன்னும் மற்ற
மாணவிகள் வர ஆரம்பிக்கவில்லை.
எனவே இவர்களிடம் பேச்சுக் கொடுத்தாள் ராதா டீச்சர். “தினமும் சீக்கிரமே வந்து விடுகிறீர்களே. உங்க ஊருக்கு சீக்கிரமே பஸ் வந்துடுதா. பரவாயில்லையே”
“எங்க கிராமத்துக்கு பஸ் கிடையாதுங்க டீச்சர். நான் ஒரு கிலோமீட்டர் நடந்து வந்து மெயின் ரோடில் பஸ் பிடிக்கணும். அதை விட குறுக்காலே நடந்து வந்தால் பள்ளிக்கூடத்துக்கே வந்து விடலாம்” என்றாள் வேல்விழி
“வருகிற வழியில் தான் என் வீடும் இருக்கு. அதனால் ரெண்டு பேரும் சேர்ந்தே வந்துடுவோம்” என்றாள் மரியா.
மதிய உணவின் போது கணக்கு டீச்சர் கல்பனா ராதாவிடம் சொன்னாள். “உன் வகுப்பில் வேல்விழியும் மரியாவும் சரியில்லை” என்று.
திகைத்துப் போனவள் “ஏன் என்னாயிற்று?”
“ரெண்டு பேரும் எப்போது பார்த்தாலும் ஒருத்தர் மேலே ஒருத்தர் சாய்ந்து கொண்டு எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள்”
அதுக்கா இவ்வளவு பில்டப் என்ற மைண்ட் வாய்ஸ்ஐ புறம் தள்ளி “இடம் மாற்றி உட்கார வைப்பது தானே” என்றாள்.
“அதுக்கும் மூஞ்சியைத் தூக்கி
வைத்துக் கொள்கிறார்கள்”
“என் வகுப்பிலும் இதே தான். இடித்துக் கொண்டு தான் உட்காருவார்கள். ரெண்டு பேர் தலையும் ஒன்றாகவே தான் இருக்கும்” என்றாள் ரேகா. ஆங்கில ஆசிரியை.
“ஆமாம். மதிய உணவு நேரத்திலும் இருவரும் ஒரே டப்பாவில் இருந்து தான் சாப்பிடுவார்கள். அது என்ன கன்றாவியோ! பார்க்க சகிக்கவில்லை” தமிழாசிரியை சாரதா டீச்சர். கூடவே சொன்னாள் “ராதா உன்னிடம் ரிபோர்ட் பண்ணியாச்சு. நாளைக்கு ஏதேனும் ஏடாகூடமா ஆச்சுன்னா அப்புறம் எங்களை சொல்லக் கூடாது”
என்ன ஏடாகூடமாகும் என்று தன்
மனதில் தோன்றிய நினைவை ஒதுக்கி விட்டு அவர்கள் இருவரையும் மறுநாள் காலையில் தனிமையில் விசாரித்தாள்.
“டீச்சர், எனக்கு கணக்கு வராது. வேலு தான் சொல்லித் தருவாள்”
“ஆமாம் டீச்சர், எனக்கு ஆங்கிலம் வராது. மரியா தான் சொல்லித் தருவாள்”
“எதுக்கு நீங்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லித் தரனும். டீச்சரிடம் கேட்கலாம் இல்லே. வகுப்பிலே பேசிக் கொண்டே இருந்தால் டீச்சருக்கு எரிச்சல் வரும் இல்லையா?”
“அவுங்க உங்களை மாதிரி பொறுமையா சொல்லித் தர
மாட்டேங்கறாங்க. ஒருதடவைக்கு ரெண்டாவது தடவை கேட்டால் நீயெல்லாம் ஏன் படிக்க வரேன்னு கோபப்படறாங்க”
“சரி. அது ஏன் ரெண்டு பேரும் ஒருத்தர் தொடையில ஒருத்தர் தொடையை இடித்துக் கொண்டு சாப்பிடனும்?”
“அது…….” வெட்கப்பட்டாள் மரியா.
ஆனால் தயங்கி தவித்து தொடர்ந்தாள் வேலு. ”டீச்சர். நான் சோறு கொண்டு வர மாட்டேன்”.
“ஏன்.? தூக்கி கிட்டு வர கஷ்டமா இருக்கா?”
“இல்லே டீச்சர். எங்க அம்மா காலையிலே கூலி வேலைக்கு
போயிடும். அதனால சோறாக்காது. காலைக்கு பழையதை சாப்பிட்டு விடுவேன். மதியத்துக்கு சோறு கிடையாது”
“எங்க வீட்ல இவளுக்கும் சேர்த்து சோறு கேட்க முடியாது. அதனால எனக்குன்னு கூட கொஞ்சம் கேட்டு எடுத்துக் கிட்டு வருவேன். அதை ரெண்டு பெரும் பகிர்ந்து சாப்பிடுவோம்”
“பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு போகும் போது நான் மரியாவின் வீட்டிற்கு போய் அவுங்க அம்மா வேலையில் இருந்து வரும் வரை வீட்டுப்பாடத்தை முடித்து விட்டு தான் எங்க வீட்டுக்கு போவேன். எங்க வீட்டில் போனதும் ஆட்டை பிடிச்சி கட்டனும். அது இதுன்னு எங்க அம்மா எனக்கு நெறைய வேலை
வெச்சிருக்கும்” என்றாள் வேல்விழி.
இதில் இருவரையும் எங்கே குறை சொல்வது?
ஸ்டடி விடுமுறைக்கு முதல் நாள் வகுப்பில் கையெழுத்து நோட்டை கொடுத்து ஒருவருக்கு ஒருவர் அவரவர் எண்ணங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.
சாரதா டீச்சர் வகுப்பில் நுழைவதைக் கூட கவனிக்கவில்லை யாரும். அப்படியே ஒவ்வொரு நோட்டாக வாங்கி அவர்கள் எழுதியதை பார்த்தாள். வேல்விழி நோட்டும் மரியாவின் நோட்டும் அவளுக்கு திகைப்பை கொடுத்து கோபத்தை அதிகமாக்கியது.
தலைமைஆசிரியை இருவரின்
நோட்டையும் படித்து விட்டு எதிரே நிற்கும் அவர்களை முறைத்து விட்டு ராதாவிடம் அவர்கள் நோட்டை வீசாத குறையாக கொடுத்தார்கள். மற்ற ஆசிரியைகளும் அங்கே தான் இருந்தார்கள்.”இந்தா நீயே படிச்சிப் பாரு உன் பிள்ளைகளோட யோக்கியதையை. கருமம். கருமம். கலிகாலம் முத்திப் போச்சு”
வாங்கிப் பார்த்தாள் ராதா. மரியா எழுதியிருந்தாள்.”அரபிக்கடலை விட அதிக அன்பும் பசிபிக்கடலை விட பெரிய பாசமும் கொண்ட என் வேலு. என் உயிர் போனாலும் உன்னை நான் மறக்க மாட்டேன்”
“கண்ணை இமை மறக்கலாம். உன்னை நான் மறப்பேனா? என் நெஞ்சைப் பிளந்து பார். அங்கே நீ தான் இருப்பாய். என்றென்றும் உன்
நினைவில் வேலு.”
“நாளை உங்கள் பெற்றோரை அழைத்து வாருங்கள்” என்று ஆணையிட்டார் தலைமை ஆசிரியை.
“வேண்டாம் மேடம். எனக்கு இவர்களின் குடும்ப பின்னணி தெரியும். நான் பேசுகிறேன் இவர்களிடம்” என்றாள் ராதா டீச்சர்.
ஆளாளுக்குப் பேசினார்கள். என்னென்னவோ பேசினார்கள். ஒன்றும் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. ஏதேதோ உதாரணங்கள்.
இருவரும் குனிந்த தலையை நிமிர்த்தவில்லை. முகம் கன்றி கறுத்துப் போயிருந்தது. கன்னங்களில் கண்ணீர்
பெருக்கெடுத்து ஓட அவர்கள் இருவரும் நின்றிருந்த கோலம் ராதாவிற்கு பாவமாக இருந்தது.
“டீச்சர், நாங்க ஒருத்தர் மேலே ஒருத்தர் பாசமா இருப்பது தப்பா? எப்போதுமே பிரியாமல் இருக்கணும்னு நெனச்சது தப்பா? இப்படி அசிங்கமா பேசறாங்களே. செத்துப்போகணும் போல் இருக்கு டீச்சர்”
அழுத இருவரையும் பரிவுடன் பார்த்த ராதா “ரெண்டு பேரும் என்னை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்” என்று மெல்ல சொன்னாள்.
“இந்த வயதில் பையன்களுடன் ஒருவித உணர்வு ஏற்படுவது எவ்வளவு இயற்கையோ அதேப்போல நமக்கு மிகவும்
உதவியாக இருக்கும் நம் பெண் நண்பர்களிடமும் உயிரைப் போல ஒரு அன்னியோனியம் உண்டாவது மிகவும் இயல்பானது தான். உங்கள் உணர்வுகளில் திருட்டுத்தனம் இல்லாதவரை உங்கள் எண்ணங்களில் நேர்மை இருக்கும் வரை அது அசிங்கம் கிடையாது. ஆனால் பார்ப்பவர்களின் பார்வைக்கு நம் நடவடிக்கைகள் தப்பாக இருக்க கூடாது என்றால் அதற்கு ஏற்றார் போல நாம தெளிவாக நடந்து கொள்ள வேண்டும்.”
“அதற்காக இப்படி எல்லாமா பேசுவார்கள்? செத்துப் போயிடலாம்னு இருக்கு”என்றனர் இருவரும் ஒரு சேர.
“இன்றைய காலகட்டம் அப்படி.
செத்துப் போயிட்டால் பிரச்சினை சரியாகி விடுமா? இந்த உலகம் பெரியது. நீங்கள் சந்திக்க போகும் பிரச்சினைகளும் அநேகம். எதிர்கொண்டு வாழனும். கோழையாக இருக்க கூடாது”
“அப்படின்னா நாங்க பிரெண்ட்ஸ் ஆ இருக்க கூடாதா?”
“யார் சொன்னா? யார் கண்ணையும் உறுத்தாதது போல இருக்க வேண்டும். நீங்கள் வளர்ந்து விட்டீர்கள். உங்களுக்கு புரிகிறதா?”
“புரிகிறது டீச்சர். நாங்கள் எங்கே தப்பு செய்தோம் என்று நன்றாகவே புரிகிறது.”
“நல்லது. நீங்கள் நன்றாக படியுங்கள். பெரிய அந்தஸ்த்தில்
வாருங்கள். அன்று உலகம் உங்களை முன்னுதாரணமாக காட்டும். இருந்தால் இவர்களைப் போல பிரெண்ட்ஸ் ஆ இருக்கணும்.என்று”
ராதா டீச்சர் காரை விட்டு இறங்கினாள். எதிர் கொண்டு வரவேற்றாள் வேல்விழி.”டீச்சர் இவர் என் கணவர். ஏங்க இவங்க தான் எங்கள் ராதா டீச்சர்”
“தெரியுமே. நீயும் மரியாவும் இவர்களைப் பற்றி எவ்வளவு சொல்லியிருக்கீங்க”
“ஆமாங்க. இன்றைக்கு நான் ஒரு எஞ்சினியர். மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளர். மரியா
டென்டிஸ்ட். அரசு மருத்துவமனையில் பல்டாக்டராக இருக்கிறாள். இவர்கள் இல்லையென்றால் இது நடந்திருக்காது”
“அவ்வளவு ஏன் ரெண்டு பேரும் இன்றைக்கு உயிரோடு இருந்திருக்க மாட்டோம்” வேல்விழியை அணைத்துக் கொண்டு ராதா டீச்சரை கும்பிட்டாள் மரியா.
ஒரு பிரச்சினையை மட்டுமே பார்க்காமல் அதற்கான தீர்வை மாற்றி யோசித்த ராதா டீச்சர் போன்ற சுக்கான்களால் எத்தனை மாணவர்களின் வாழ்க்கை என்னும் கப்பல்கள் நல்ல முன்னேற்றமான பாதையில் திசை திருப்பப்பட்டிருக்கிறது என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மை தானே.!