‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

 

 

 

  1. துளி பிரளயம்

திடீர் திடீரெனத் தளும்பும் மனம்…

சில சமயம் லோட்டா நீராய்

சில சமயம் வாளி நீராய்

சில சமயம் தண்ணீர் லாரியாய்

சில சமயம் ஆடிப்பெருக்கு காவிரியாய்

சில சமயம் சமுத்திரமாய்….

ஐஸ்கட்டிக்கடலாய் உறைந்திருக்கும்

நேரமெல்லாம்

அடியாழத்தில் தளும்பக் காத்திருக்கும்

லாவா….

 

  1. துளி ஞானம்

அவர் போடாத வேசமில்லை யென்றார் இவர்

இவர் போடாத வேசமில்லை யென்றார் அவர்

அவ ரிவரா யிவ ரவராய்

எவ ரெவ ரெவ ரெவ ரென

எனக்குமுனக்கும வர்க்கு மிவர்க்கும்

எல்லாம் தெரியும்தானே யானாலுமேதும்

தெரியாதுதானே

காதுங்காதும் வைத்ததாயும்

ஏதுஞ்சொல்லாதிருத்தலே நன்றாமே

யாதும் ஊரேயாயின் யாவரு மெதிரியாக

தீதும் நன்று மென்றும் பிறர் தர வாராததாக

சூதும் வாதுமறிந்தும் அறியாதியங்குமொரு

மனமெனும் அருவரமே

வாழ்வின் ஆகப்பெருஞ்சாதனையா மென்

றறிவேனே பராபரமே.

 

 

  •  
Series Navigationபெண்ணுக்கென்று ஒரு கோணம்பாரதியும் சிறுகதை இலக்கியமும்