வஞ்சிக்கப்பட்ட வழக்கு வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கை – பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’

Spread the love

(இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’ திரைப்படத்தை முன் வைத்து)
சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘காதல்’ என்னும் வெற்றிப் படமொன்றைத் தந்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ’வழக்கு எண் 18/9’. இன்றைய சூழலில், ஒரு குற்றப் பின்னணி எவ்விதம் வழக்காக மாறி, சட்டத்தின் பாதையில் பயணித்து, தீர்ப்பாய் மாறுகிறது என்பது கதை. அதனினும் முக்கியமானது, அதனால் நிகழும் எதிர்வினை. எந்த எதிர்வினையின் தீவிரமும், அதற்கான காரணத்தின் தீவிரத்தைப் பொருத்தே அமையும்.எதிவினைக்கான நியாயங்கள், எதிர்வினைகளுக்கான நியாயங்களே.இயல்பான அல்லது சட்டரீதியான நியாயங்களுக்குள் அடங்குவதில்லை.

ஒவ்வொரு கலைஞனுக்கும், ஒவ்வோர் இடம் பலம். பாலாஜி சக்திவேல், உச்சத்தில் எப்போதும் உச்சத்தில் இருப்பவர். ‘காதல்’ திரைப்படத்தைப் போலவே, இப்படத்திலும் நிரூபித்திருக்கிறார்.அதை நிகழ்த்துவதற்காக அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக்களம் மிகவும் யதார்த்தமானது.அதேசமயம், கதைசொன்ன விதம் புதுமையானது.
தந்தை வாங்கிய கடனை அடைக்க வேண்டிய நிர்பந்தத்தில், வட இந்திய முறுக்கு கம்பனியில் வேலைக்கு சேர்கிறான்.கொடூரமான சூழலில்அடிமை போல் துயருற்று கடனை அடைக்க, அவனின் தாய் தந்தையின் மரணம் அடைந்த செய்தி கூட மறைக்கப்பட ,அறிய வரும் போது எண்ணெய் சட்டியாய் கொதிப்புற்று, தப்பி வருகிறான்.அவன் ஊரை விட்டு செல்லும்போது ‘படிப்போம் பயன் பெறுவோ’ என்னும் சுவர் வாசகப் பின்புலம், இன்னும் கொள்கைகள் வெற்று கோஷங்களாக நீர்த்து போனதின் அடையாளம்.

சென்னைத் தெருவொன்றில் மயக்கமுற்று விழும் அவனுக்கு யாரும் உதவ முன்வராத வேளையில், விலைமாது ஒருவர் உதவி செய்து, சாலையோரக் கடையொன்றில் சேர்த்து விடுகிறார்.எந்த விலைமாதுவை இந்தச் சமூகம் விலக்கி வைக்கிறதோ, அவரிடத்தில் தான் விலைமதிப்பில்லா சகமனித நேயம் இருக்கிறது. இத்தகைய அரிய முரண்களால் தான் இந்தச் சமூகம் இன்னும் உயிர்த்திருக்கிறது.
அவனின் கடையைக் கடந்து, தினமும் வீட்டு வேலை செய்வதற்காக செல்லும் பெண்மீது ஏற்படும் காதல், ஏழ்மையின் விளிம்பில் தத்தளிக்கும் மனத்தின் மத்தாப்புக் காதல்.
கதாநாயகியின், புகைப்படம் அவனின் மணிப்பர்ஸில் இடம்பெறுவதற்கான, பின்னோக்கிய புனைவுதான் உடன் வேலை செய்யும் சிறுவனின் கூத்து பற்றிய புலமும், சினிமா ஆர்வத்தில் புகைப்படம் எடுக்கும் காட்சியும். எனினும் அச்சிறுவன் அதற்கு பாந்தமாக பொருந்துகிறான்.
நண்பன் பொய் சொல்ல மாட்டான், எனவே அவன் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அவன் பொய் சொல்கிறானாம். சிறுவர்கள் சில வேளைகளில் இதுபோல முதிர் விஷயங்களால் உருவகிக்கப்படும் போது மெல்லிய சிலிர்ப்பு உண்டாகி விடுகிறது.
நாயகி வேலை செய்யும் வீட்டுப் பெண்ணின் காதலன், அவளை செல்போனில் படம் எடுப்பதும் அதைத் தொடரும் பிரச்சனையில், அவளின் மீது ஆசிட் வீச்ச முயற்சிக்க எதிபாராத விதமாக நாயகி சிக்கிக் கொள்கிறாள். கணிணியும் செல்போனும் அறிவியலின் மேன்மையெனக் கருத நேரும் அதேசமயம், விரல் நுனியில் இருக்கும் விபரீதம் என்பதை அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
இந்த வழக்கு தான் ‘வழக்கு எண் 18/9’ ஆக பதிவு செய்யப்படுகிறது. அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி. நல்லவரைப் பார்த்திருக்கிறோம். கெட்டவரைப் பார்த்திருக்கிறோம். நல்லவரைப்போல நடிக்கும் கெட்டவரைப் பார்த்திருக்கிறோம். நல்லவராகவே அடையாளப்படும் கெட்டவராக இருக்கிறார் இவர். இவரிடம் இத்தனை வன்மமா? ஆபத்து. (சபாஷ் இன்ஸ்பெக்டர்).
யார் ஆசிட் ஊற்றியது என்னும் துப்பறியும் வேலைக்குள் இயக்குனர் செல்லவில்லை; அது அவருக்கு அவசியமாகவும் படவில்லை. ஏனெனில், அது வெளிப்படை. அந்த வெளிப்படை தான் வழக்கின் திசைமாறும் போக்கை வலிமையாக்குகிறது; கோபமூட்டுகிறது.
தான் காதலிக்கும், தன்னைக் காதலிக்காத (அது வரை) பெண்ணுக்காக ஏழு ஆண்டு சிறைத்தண்டனை ஏற்கிறான். அது தான் காதல். உள்ளெழும் காதல்.
கண்களில் பூக்கும் காதல் கரைந்து விடுகிறது.
நெஞ்சினில் பூக்கும் காதல் தான் இப்படி நிமிர்ந்து நிற்கிறது.
’கேவலம் பத்து லட்ச ரூபாய்க்காக, தப்பு செஞ்சவன விட்டுட்டு அப்பவிய ஜெயிலுக்கு அனுபினேல்ல. இவுங்களால் என்ன செய்ய முடியும்? கேவலம் வேலக்காரி தான அப்படிங்கிற நெனப்பு, ‘ என்பதாக ஒரு தாளில் எழுதிக் கொடுத்து, அதை இன்ஸ்பெக்டர் வாசித்து முடிக்க, கோர்ட் வாசலிலேயே, நாயகி அவரின் முகத்தில் ஆசிட் வீசுகிறாள்.
முடியும், எங்களாலும் முடியும்.
அவளின் எதிர்வினை சட்டப்படி குற்றம். தண்டனை பெற்று சிறைக்குச் செல்கிறாள். ஆனால், அந்த எதிர் வினைக்கான காரணம் ஆராயப்பட வேண்டியவர்களால் ஆராயப்படுகிறதா? அதுதான் பார்வையாளனின் நெஞ்சங்களை அலைக்கழிக்கிறது. காரணம், ’வழக்கு எண்18/9’ மட்டுமல்ல; அதேபோல வஞ்சிக்கப்பட்ட வழக்குகள் எத்தனை இருக்கக் கூடும் என்கிற அச்சமும் தான்.
யார் சொன்னது?
காத்திரமான, யதார்த்தமான படங்களை ரசிகர்கள் வரவேற்பதில்லையென்று. கரகோஷமிட்டு வரவேற்கிறார்கள்.
நல்ல படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் லிங்குசாமி, படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல்-தமிழ் உலகின் நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியவர்கள்.
-தமிழ்மணவாளன்

Series Navigationகுகைமனிதனும் கோடிரூபாயும் நூல்வைதீஸ்வரன் வலைப்பூ