வார்த்தைப்பொட்டலங்கள்

0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 7 in the series 12 ஆகஸ்ட் 2018

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(*சமர்ப்பணம் : வாழத்தெரியாதவர்களுக்கு)

எப்போதும் தயாராய் தேர்ந்தெடுத்த சில வார்த்தைகளை
நான்கைந்து பொட்டலங்களாகப்
பிரித்து முடிந்துவைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைக்கேற்றவாறு அவை சின்னதும் பெரியதுமாக இருக்கலாம்.
சிக்கென்று எஸ்எம்எஸ் டெம்ப்ளேட் போல்
அல்லது, சித்தி தொடங்கி வாணி ராணி சாகாமெகா சீரியல்போல்.

மறந்துவிடாமலிருக்க அவற்றின்மேல்
குறியீடுகள் அல்லது குறிப்புகள் தந்தால் நலம்.
கூடவே, செய்முறைவிளக்கங்களுமிருந்தால்
மிகவும் உதவியாயிருக்கும்
மற்றவர்களுக்கு;
ஒருவேளை நீங்கள் மறந்துவிட்டால் உங்களுக்குமேகூட.

என்றாலும் பொட்டலங்களின் பட்டியல்களையும்
அவற்றின் பயன்பாடுகளையும்
மனதில் உருப்போட்டுக்கொண்டுவிடுவதே
சாலச் சிறந்தது.

உதாரணமாக, முட்கள் என்று தலைப்பிட்ட பொட்டலத்தை
மலரென்று எடுத்துக்கொண்டு
நல்லவர்மேல் தவறுதலாகத் தூவிவிடலாகாது.
அதாவது, நாம் நல்லவராக எடுத்துச்சொல்ல
விரும்புகிறவர் மீது.

அதேசமயம் முட்களால் காயப்படுத்தப்படவேண்டியவராய்
நம் மனம்போனபோக்கில் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் மீது
அந்தப் பொட்டலத்திலுள்ளதைப் பயன்படுத்தத்
தவறவேகூடாது.

பாராட்டுச்சொற்களடங்கிய பொட்டலத்தை
சரியான நேரமாகப் பார்த்துப் பயன்படுத்தப்
பழகவேண்டும்.

பாராட்டு என்பதன் பல்பரிமாணங்களை
– உண்மையான, பொய்யான, காக்கா, ஜால்ரா,
ஐஸ்கட்டி அல்லது பனிமலை அன்னபிற _
தருணம் பார்த்து தக்கதொரு அளவில் கொடுக்க
தினமும் பயிற்சிசெய்தல் இன்றியமையாதது.

உண்மை பொய் என்பதெல்லாம்
நமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பொறுத்து
மாறுமாகையால்
அந்தப் பொட்டலங்களிலுள்ள சொற்களை அவ்வப்போது இடம்மாற்றிக்கொள்ளலாம்.

முற்றற்ற சொற்களின் முற்றத்தில்
இயல்பாய் நடைபழகுவோர் ஏறக்குறைய
இல்லாமலாகிவிட்ட பின்
சற்றும் பாரபட்சமற்றுச் சொற்களைக் கையாளுவோர்
முக்காலே மூணு வீசம்
முட்டாள்களாக்கப்பட்டுவிட்டபின்
வார்த்தைப்பொட்டலங்களின்றி வாழும் வழியேது….?
அட, வாழ்க்கைதான் ஏது….?

Series Navigationஅப்பால்…தொடுவானம் 234. பேராயர் தேர்தல்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *