வாழ்க்கை ஒரு வானவில் – 23

This entry is part 3 of 25 in the series 5 அக்டோபர் 2014

 

“ஓட்டல் முதலாளி அனுப்பி வெச்சாரு. இந்த லெட்டரை உன்னாண்ட குடுத்துப் பணத்தை வாங்கிட்டு வரச் சொன்னாரு….நோட்டிசு குடுக்காம திடீனு நின்னுட்டியாமே? அதான்… லெட்டர்ல எல்லாம் வெவரமா எளுதியிருக்காரு…இந்தா…” என்ற அவன் லுங்கியை உயர்த்தி அரைக்கால்சரராயிலிருந்து நான்காக மடிக்கப்பட்டிருந்த ஒரு கடிதத்தை எடுத்து அவனிடம் கொடுத்தான்.

அதைப் பிரித்து ராமரத்தினம் படித்தான். கடிதம் எந்த விளிப்பும் இன்றி மொட்டையாக எழுதப் பெற்றிருந்தது: `என்னடா நினைச்சிண்டு இருக்கே? இந்த லெட்டரைக் கொண்டு வர்ற ஆளு கையில உன் ஒரு மாசச் சம்பளத்தை முழுசா அப்படியே குடுத்து அனுப்பு. இல்லாட்டி உதைபடுவே. இதைக் கொண்டு வர்ற ஆளு பெரிய ரவுடி… அதனால ஒழுங்கா நடந்துக்க…’ என்று அது யாரிடமிருந்து யாருக்கு என்பதற்கான குறிப்பே இல்லாமல் அது எழுதப்பட்டிருந்தது.

வாசலுக்குப் போன ராமரத்தினம் இன்னும் திரும்பாததால், ரமணியும் சேதுரத்தினமும் எழுந்து வந்தார்கள்.

“என்ன, ராமு?” என்றவாறு வந்து நின்ற சேதுரத்தினத்தின் பார்வை கடிதம் கொண்டுவந்திருந்தனின் மீது விழுந்தது. அந்த ஆளும் சேதுரத்தினத்தைப் பார்த்தான். அவனது முகத்தில் ஒரு திடுக்கீடு தோன்றியது.

“என்ன, வீரபத்திரன்! எப்படி இருக்கீங்க? எங்க வந்தீங்க இங்கே?” என்று சேதுரத்தினம் வினவியதும், அவன் தலையைச் சொறிந்துகொண்டு, “சார் வீடா இது? ராமரத்தினம்கிற இந்தத் தம்பி யாருங்க?” என்றான் அசட்டு இளிப்புடன்.

“இவன் என்னோட நெருங்கின தோஸ்து. என்ன விஷயமா வந்தீங்க?” என்று அவன் கேட்டதும், ராமரத்தினம், “இதைப் படிச்சுப் பாருங்க, சேது சார்!” என்று அந்தக் கடிதத்தை அவனிடம் கொடுக்க, அவன் அதை வாங்கிப் படிக்கலானான்.

“முருகன் விலாஸ் ஓட்டல் முதலாளிதானே உன்னை அனுப்பினது?” என்று அதைப் படித்து முடிதததும் அவன் கேட்க, அவன், “ஆமாங்க, சார்1” என்று பதிலிறுத்தான்.

“அவர் கிட்ட சொல்லுங்க. நீங்க இங்க வந்தப்ப ராமுவோட – அதாவது இந்த ராமரத்தினத்தோட – ஒரு போலீஸ் அதிகாரியை இங்க பார்த்ததா… அந்தப் போலீஸ் ஆஃபீசர் ராமுவோட தோள்லே கை போட்டுக்கிட்டுப் பேசிட்டிருந்ததாச் சொல்லணும். அவனோட தங்கையைக் கூடிய சீக்கிரம் கல்யாணம் கட்டப் போற ஆளு அவருனு தெரிய் வந்ததால பயந்துக்கிட்டு நீங்க திரும்பிட்டதாயும் சொல்லணும்…கொஞ்சம் ஒதுங்கி நின்னு ரெண்டு பேரும் பேசினதைக் கேட்டதுலேர்ந்து, இந்த விவரம் மட்டுமில்லாம, ராமுவுக்கு சீக்கிரமே போலீஸ் இலாகாவிலே வேலை கிடைக்க இருக்குன்னும் தெரிஞ்சுக்கிட்டதாயும் சொல்லணும். தெரிஞ்சுதா?”

“சரிங்க, சார். சொல்றேன்…அந்த லெட்டரைக் குடுத்துடுங்க, சார்.”

“ஆமாமா. திருப்பிக் குடுத்துடறேன். நீங்கதான் போலீஸ் ஆஃபீசரைப் பார்த்ததும் பயந்துக்கிட்டு லெட்டரை ராமு கிட்ட குடுக்காமயே ஓடிட்டீங்களே! இல்லையா?… ராமு! அதோ எதிர்ல இருக்கிற அந்த ஜெராக்ஸ் கடையில இதோட ஒரு காப்பி எடுத்துக் கையோட காவலுக்கு வெச்சுக்குங்க.. பின்னாடி ஏதாவது தகராறு வந்தா உபயோகப்படும்….” என்று சேதுரத்தினம் சொன்னதும் ராமரத்தினம் உடனே கிளம்பினான்.

“சார், சார்! அதெல்லாம் வேணாம், சார். அப்பால நான் வம்பிலே மாட்டிக்குவேன்…”

“மாட்டிக்குங்க, வீரபத்திரன்! அன்னைக்கு உங்களை ஆபத்துலேர்ந்து நான் காப்பாத்தினப்ப என்ன சொன்னீங்க? இனிமேப்பட்டு இது மாதிரி அடாவடி வேலை யெல்லாம் செய்ய மாட்டேன்னு சொன்னீங்கல்லே? இப்ப மறுபடியும் அதே மாதிரிப்பட்ட தொழில்ல இறங்கிட்டீங்களே!…”

“சரி, சார். உங்க இஸ்டம்… ஆனா என்னைக் காட்டிக் குடுத்துறாதீங்க…”

“சரி சரி…. நானா எதுவும் செய்ய மாட்டேன். உங்க முதலாளி மறுபடியும் ஏதாச்சும் சேட்டை பண்ணினாருன்னா இந்த லெட்டரை வெச்சு அவரை மடக்குவேன். அப்ப நீங்க மாட்டிக்கிறதும் மாட்டிக்காததும் அந்தாளு கையில தான் இருக்கும்….அப்புறம் இன்னொண்ணு. அந்த முருகன் ஓட்டல் முதலாளி கிட்ட போய்ச் சொல்லுங்க . .நாங்கல்லாம் எஸ்.பி., ஏ.சி., போலீஸ், கீலீஸ்னெல்லாம் ஏதேதோ இங்கிலீஷ்ல பேசிட்டிருந்தது உங்களுக்குச் சரியாப் புரியல்லேன்னு. எங்கள்லே ஒருத்தரு போலீஸ் ட்ரெஸ்ல இருந்ததைப் பார்த்ததும் நீங்க பய்ந்துக்கிட்டுத் திரும்பிட்டதாக் கண்டிப்பா அந்தாளு கிட்ட சொல்லணும். என்ன, தெரிஞ்சுதா?”

“சரிங்க…”

ஜெராக்ஸ் கடை எதிரிலேயே இருந்ததால், ராமரத்தினம் போன சுருக்கில் திரும்பி வந்தான் “எதுக்கும் இருக்கட்டும்னு நாலு காப்பி எடுத்துண்டு வந்தேன், சேது சார்…”

“நல்ல வேலை பண்ணினே, ராமு…. ஒண்ணை நீ வெச்சுக்க. மத்ததை எங்கிட்ட குடு. … இந்தாங்க, வீரபத்திரன். நீங்க கொணாந்த ஒரிஜினல். கொண்டுட்டுப் போய் அந்தாளு கிட்ட குடுங்க…அது சரி. இப்ப எங்கே வேலை செய்யறீங்க?”

“நம்ம பழைய கம்பெனியிலேர்ந்து விலகிட்டதுதான் உங்களுக்குத் தெரியுமே, சார்? அப்பால இன்னொரு துணிக்கடையிலே கஜக்கோல் போடுற வேலை கிடைச்சிச்சு. அத்தையும் விடும்பட்டி ஆயிப்போச்சு…”

“ஏன்? அங்க என்ன தகராறு? கஜக்கோல் போடுற இடத்துல கன்னக்கோல் வெச்சீங்களா?” என்று சேதுரத்தினம் அவன் காதில் கிசுகிசுத்தான்.

அவன் பதில் சொல்லாது அசடு வழிய நிற்க, “சரி, சரி. இனிமேற்பட்டு இது மாதிரி வேலைக்கெல்லாம் சம்மதிக்காதீங்க….”

வீரபத்திரன் மூவரையும் நோக்கிப் பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டுவிட்டு அங்கிருந்து தன் சைக்கிளில் விரைந்து சென்றான்.

மூவரும் உள்ளே வந்தார்கள். தான் மீதி வைத்திருந்த ஆறிப்போன காப்பியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு ராமரத்தினம் ஆயாசத்துடன் தம்ப்ளரை வைத்தான்.

பின்னர் மூவரும் நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள்.

“நீங்க இருந்தது நல்லதாப் போச்சு, சேது சார். …அது சரி, அந்த வீரபத்திரனை எப்ப, எதுலேர்ந்து காப்பாத்தினீங்க?”

“அவனும் நானும் ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஒரே கம்பெனியிலதான் வேலை பண்ணிட்டு இருந்தோம். அது ஒரு மரக்கடை. இவன் அங்கே கேர்டேக்கரா யிருந்தான். ராத்திரி வேளையில செம்மரக் கட்டைகளை லாரியிலே திருட்டுத்தனமாக் கடத்திண்டு போய் வித்துப் பணம் பண்ணிட்டான். இவனோட கூட்டாளி ஏதோ சண்டையால இவனைக் காட்டிக்குடுத்துட்டான். இவன் எங்கிட்ட வந்து அழுதான். வித்த பணத்தைத் திருப்பிக் கட்டிட்டாப் போதும் ஒரு எச்சரிக்கையோட விட்டுடலாம்னும், ரெண்டு, மூணு வருஷத்துக்கு இன்க்ரிமெண்ட்டைப் பிடிச்சுக்கலாம்னும் நான் சொன்னதை மேலதிகாரி ஒத்துக்கல்லை. ஆனா அந்த அதிகாரி ஒண்ணும் யோக்கியமானவன் இல்லே. இவன் மரம் கடத்தினான். அந்த அதிகாரி ரெண்டு எலெக்ட்ரிக் டைப்ரைட்டர்ஸையே கடத்தினதா அந்த நேரத்துல எனக்கு வேற ஒரு ஆள் மூலமாத் தெரியவந்தது. இதை நான் வீரபத்திரன் விஷயத்துல ஒரு துருப்புச் சீட்டாப் பயன்படுத்தத் தீர்மானிச்சேன். வீரபத்திரனை வெறும் எச்சரிக்கையோட விடல்லேன்னா, அவர் செஞ்ச அந்த மோசடி பத்தி வெளியில சொல்லிடுவேன்னு அவனை விட்டே சொல்லச் சொன்னேன். அந்த டைப்ரைட்டர்ஸை அவர் வித்த இடம் தனக்குத் தெரியும்னும் அந்த நம்பர்களை வெச்சு அவரைத் தன்னால மாட்டிவைக்க முடியும்னுன் ஒரு அடி அடிக்கச் சொன்னேன். ஆனா அதைப் பணிவான முறையிலே அவர் கிட்ட சொல்லச் சொன்னேன். அவனும் சொன்னான். அதனால வெறும் எச்சரிக்கையோட விட்டுட்டார். … ஆனா வேற ஏதோ ஃப்ராட் கேஸ்ல மாட்டிண்டு அவருக்கு அதனால வேலை போயிடுத்து. … வீரபத்திரன் பண்ணினது தப்புத்தான். நான் தப்புக்குத் துணை போகப்பட்டவன் இல்லே. ஆனா பெரிய பெரிய அதிகார்கள்லாம் தப்புப் பண்ணிட்டுத் தப்பிக்கிறதோட மட்டுமில்லாம, கீழ்மட்டத்து ஊழியர்களை அவங்க தண்டிக்கிற அக்கிரமத்தை என்னால சகிக்க முடியல்லே. அதான் அவனுக்கு உதவி பண்ணினேன்……”

….. மேலும் பற்பல விஷயங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்த பின் சேதுரத்தினம் இரவுச் சாப்பாட்டுக்குத் தங்கிக்கொள்ள, ரமணி தனது பைக்கில் கிளம்பிப் போனான்.

”நீங்கள்லாம் டிஃப்ன் சாப்பிடுங்கம்மா. நான் குழந்தையை வாங்கிக்கிறேன்,” என்ற சேதுரத்தினம் கோமதி நீட்டிய குழந்தையைப் பாயுடன் சேர்த்து வாங்கிக்கொண்டான். ஆனால் குழந்தை கை மாறியதுமே சிணுங்கத் தொடங்கியது.

“நாங்க சாப்பிட்டாச்சு. நீங்க மூணு பேரும் வாசல்ல நின்னு வந்தவனோட பேசிண்டு இருந்த்ப்ப சாப்பிட்டு முடிச்சுட்டோம்….”

சில விநாடிகளில் குழந்தை அழவும் தொடங்கிற்று.

“பாரேன்! கை மாறினதும் புரிஞ்சுண்டு அழுறதை! இதைத்தான் நாங்க மடிச்சூடுன்னு சொல்றது. ஆள் மாறினா அதுகளுக்குத் தெரிஞ்சுடும். யாரோட மடிச்சூட்டுல அது தினமும் அதிக நேரம் இருக்கோ அதுதான் வேணும்னு கேக்கும். இந்தச் சிணுங்கலுக்கும் அழுகைக்குக் அதுதான் அர்த்தம். மாலாவை விட் அது கோமதி கிட்டத் தான் அதிக நேரம் இருக்கு. அதான்….”

“சரி… இந்தாங்க. அழுகையை நிறுத்த மாட்டேங்கிறா. நீங்களே வாங்கி வெச்சுக்குங்க்!” என்ற சேதுரத்தினம் சிரித்துக்கொண்டே மீண்டும் கோமதியிடமே குழந்தையைக் கொடுத்தான்.

அவளும் புன்சிரிப்புடன் அதை வாங்கி மடியில் கிடத்திக்கொண்ட மறு விநாடி ஏதோ மந்திரம் போட்டாற்போலக் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டது.

“ஆமா? நானும் பார்க்கிறேன். அன்னைக்கே சொல்லணும்னு. அதென்ன, நீங்க கோமதியைப் போய் வாங்க, போங்கன்னு பேசறீங்க? அவ சின்னப் பொண்ணுங்க. இருபது வயசுதான் ஆறது…” என்ற பருவதத்தை, “நீங்க கூடத்தான் வயசுல பெரியவங்க. எங்கம்மா வயசுல இருக்கீங்க. நீங்க மட்டும் நீங்க, வாங்கன்னுதானே என்னோட பேசலாமா?” என்று சேதரத்தினம் அவளை மடக்கினான்.

“அது வேற, இது வேற…”

“அதெப்படி அது வேற, இது வேற?”

பருவதத்தால் உரிய பதிலைச் சொல்ல முடியவில்லை.

“என்ன இருந்தாலும் அசல் வீட்டு ஆம்பளைகள் வயசுலே சின்னவங்களா யிருந்தாலும், மரியாதையாத்தான் பேசணும்!” என்று சில நொடிகள் கழித்துச் சமாளித்தாள்.

“அப்ப? நான் அசல் வீட்டு ஆம்பளையா! நான் இந்தக் குடும்பத்து ஆளு மாதிரியில்லே கள்ளமில்லாம உங்களோட பழகிட்டு இருக்கேன்?” என்று சேதுரத்தினம் தொடரவும் பருவதம் திருதிருவென்று விழித்தாள்.

“சேது சார் கிட்ட நல்லா மாட்டிண்டியா!” என்று ராமரத்தினம் சிரித்தான்.

“என்னதான் இருந்தாலும் நான் உங்களை நீ போட்டுப் பேசுறதெல்லாம் முறையா யிருக்காதுங்க…”

“சரி.. அப்படின்னா, நான் கோமதியை நீ போட்டுப் பேசுறதும் முறையா யிருக்காது…”

அவர்களது வாக்குவாதம் அத்துடன் நின்றது.

சற்றுப் பொறுத்து, “யாரு வந்தாங்க, ராஜா?” என்று பருவதம் குரல் கொடுக்க, “எங்க கம்பெனி யிலேர்ந்தும்மா. வேலைக்கு வரச்சொல்லித்தான். முடியாதுன்னுட்டேன். வீண் வம்பும்மா….” என்று ராமரத்தினம் பதில் சொன்னான்.

“ஆமாம்ப்பா. வேண்டாம்….”

…..”எங்கேடா போயிருந்தே படை பதைக்கிற வெய்யில்லே?” என்றவாறு, கூப்பிடுமணியை அழுத்திய ரமணிக்குக் கணேசன் கதவு திறந்தார்.

“ராமரத்தினத்தோட வீட்டுக்குத்தாம்ப்பா. அந்தப் பொண்ணு மாலாவைப் பார்த்து அவகிட்ட நேர்ல பேசலாம்னு போயிருந்தேம்ப்பா….”

“அட, வெக்கங்கெட்ட பயலே! பெத்த தகப்பன் கிட்ட இப்ப்டிப் பேசுறதுக்கு உனக்குக் கூச்சமா இல்லே?” என்றவாறு அவர் அவன் உள்ளே வந்ததும் கதவைச் சாத்தினார். கூடத்தில் அரிவாள்மணைக்கு முன் அமர்ந்து கறிகாய் அரிந்து கொண்டிருந்த சமையல்காரர் வேலுமணி நாசூக்காக அப்பால் நகர்ந்து சென்றார்.

“இதுல என்னப்பா கூச்சமும் நாச்சமும் வேண்டிக்கிடக்கு? எதுக்குக் கூச்சப்படணுமோ அதுக்குத்தாம்ப்பா கூச்சப்படணும்….வரதட்சிணை வாங்குறதுக்குக் கூசணும். பெத்த பிள்ளையை இது மாதிரி விக்கிறதுக்குக் கூச்சப்படணும். ஏழைபாழைகளை ஏமாத்துறதுக்குக் கூச்சப்படணும்… பிடிச்ச பொண்ணுகிட்ட உனக்கும் இஷ்டமான்னு கேக்குறதுக்கு எதுக்குப்பா கூசணும்?”

கணேசன் வாயடைத்துப் போனார்.

“இங்க வாடா…” என்று தமது அறைக்குள் நுழைந்த அவரை அவன் காலணிகளை உதறிய பின், பின் தொடர்ந்து சென்றான்.

மேசையருகே இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்ட அவர், “உக்காருடா,” என்றார்.

“என்னப்பா பேசப் போறீங்க? உங்க பழைய பல்லவியைப் பாடப் போறீங்க. அதானே?” என்று வினவியவாறு அவனும் அவரெதிரில் அமர்ந்தான்.

“இவ்வளவு பெரிய விஷயத்துல பெத்த தகப்பனுக்கு எதிரா ஒரு முடிவு எடுத்திருக்கியேடா? இது நியாயமா?”

“அதையேதாம்ப்பா நானும் கேக்கறேன். கல்யாணம்கிறது எவ்வளவு பெரிய விஷயம்! பெத்த ஒரே மகனுக்கு விரோதமா அவனோட சொந்த விஷயத்துல நீங்க தலையிட்டு உங்க முடிவை அவன் மேல திணிக்கப் பார்க்கிறது மட்டும் நியாயமாப்பா?”

“அப்ப? உன்னை வளர்த்து, படிக்க வெச்சு, உனக்கு நோய் நொடின்னு வந்தா கவனிச்சு, ஒரு நல்ல உத்தியோகத்துலேயயும் அமரவைக்கிறதுக்கு மட்டுந்தான் அப்பனா? மத்ததுக்கெல்லாம் இல்லையா?”

“அதுக்கெல்லாம் நன்றிக்கடனா நானும் உங்களுக்க் ஒரு மகன் செய்ய வேண்டிய கடமைகளை யெல்லாம் ஒழுங்காச் செய்வேம்ப்பா! உங்களுக்கு ஒரு நோய்நொடின்னு வந்தா நானும் கவனிப்பேன். ஏற்கெனவே நானும் செஞ்ச்சிருக்கேன். சொல்லிக் காட்டவேண்டாமேன்னு பார்த்தேன். சொல்ல வைக்கிறீங்க. கடைசி வரைக்கும் உங்களை என்னோட வெச்சுக் காப்பாத்துவேன்….”

“அதான் எவளையோ இழுத்துண்டு கிளம்பறதா இருக்கியாக்கும்! அவ இந்த வீட்டுக்குள்ளே நுழையறதை நான் அனுமதிக்க முடியாது. என் விருப்பத்துகு விரோதமா உன் இஷ்டப்படி அந்தக் கிரிசைகெட்ட தேவடியாளைக் கல்யாணம் பண்ணிகிறதா யிருந்தா இப்பவே நீ இந்த இடத்தை விட்டுப் போயிடு…”

“வாய்க்கு வந்ததை யெல்லாம் துப்பாதீங்கப்பா. மரியாதை கெட்டுப் போயிடும்…” என்ற ரமணி முகச் சிவந்து எழுந்து நின்றான். மேசை விளிம்பில் பதிந்திருந்த அவன் கைகளின் விரல்கள் அதிர்ந்துகொண்டிருந்தன.

“மரியாதை கெடுறதுக்கு இன்னும் என்னடா இருக்கு? போடா வெளியே!….”

ரமணி மேற்கொண்டு எதுவும் பேசாமல் எழுந்துகொண்டான். தன்னறைக்குப் போனான். ஒரு பெரிய பெட்டியில் தன் துணிமணிகள், இன்னொன்றில் மற்ற அத்தியாவசியப் பொருள்காள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டான். அவன் தன்னறையை விட்டு வெளியே வந்த போது, சமையல்காரர் வேலுமணி, “ரமணி! என்னப்பா இது! அவர்தான் ஏதோ ஆதங்கத்துல இப்படிப் பேசறார்னா நீ – படிச்ச பிள்ளை – இப்படி எடுத்தேன், கவுத்தேன்னு நடந்துக்கலாமா?” என்றார்.

“அவரும்தான் படிச்சிருக்கார். டபிள் க்ராஜுவேட்!.. என்ன பிரயோஜனம்? வெறும் வெத்துவேட்டு!”

வேலுமணி தன் குரலைத் தணித்துக்கொண்டார்: “கொஞ்சம் பொறுமையா இருப்பா… பிடிவாதமாயும் அதே நேரத்துல அப்பா கிட்ட மரியாதையாயும் நீ இருந்தா அவர் தானே வழிக்கு வந்துடுவார்.”

“ஹ்ம்… கல்லுலேர்ந்து நார் உரிக்கிற கதைதான்!….”

“போ, போ.. உன் ரூமுக்குப் போப்பா!“ என்ற வேலுமணி அவன் கையில் வைத்துக்கொண்டிருந்த பெட்டிகளைப் பிடுங்கினார்.

தன்னறைக்குள் நுழைந்த அவனுக்குப் பின்னாலேயே போய் அந்தப் பெட்டிகளைக் கீழே வைத்துவிட்டு. “அவர் கோவத்துல சொலற வார்த்தைகளுக் கெல்லாம் அர்த்தம் கிடையாது, ரமணி. அதையெல்லாம் நீ பெரிசா எடுத்துக்கக் கூடாதுப்பா!” என்றார்.

“நான் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற பொண்ணைத் தேவடியான்னு சொன்னார்… அதையெல்லாம் நான் சகிச்சுக்கணுமா, அண்ணா!”

“கடவுளே! அப்படியா சொன்னார்?”

“ஆமா. வெளியே போடான்னும் சொன்னார்….”

“அதை எதுக்கு நீ வீட்டை விட்டு வெளியே போடான்னு சொன்னதா எடுத்துக்கறே? தன்னோட ரூம்லேருந்து வெளியில போகச் சொன்னார். அவ்வளவுதான்…உன்னை விட்டுட்டு அவரால ஒரு நாள் இருக்க முடியுமாப்பா? ”

“சரி. ஒத்துக்கறேன்… ஆனா அந்தப் பொண்ணைத் தேவடியாள்னு சொல்லலாமா, அண்ணா?”

“தப்புதான்! அவர் அப்படி சொன்னது என் காதுல விழல்லே… அதைப்பத்தி நானும் அவர்கிட்ட சொல்றேன் அவர் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுன்னு….”

“உங்க வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து நான் இப்ப சத்தியா வெளியிலே போகல்லே. ஆனா இன்னொரு வாட்டி இப்படியெல்லாம் அவதூறாப் பேசினார்னா என்னால தாங்கிக்க முடியாது. ஆமா. சொல்லிட்டேன்!”

“சரி…. காப்பி கொண்டு வரட்டுமா?”

“அப்பா குடிச்சாச்சா?”

“இல்லே. நீ வர்றதுக்குத்தான் காத்துண்டிருந்தார்…”

“நான் அந்தப் பொண்ணு வீட்டுக்குத்தான் போயிருந்தேன். என்னோட ஃப்ரண்ட் ராஜாவை நீங்கதான் பாத்திருக்கீங்களே! அவனோட தங்கையைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்றேன். அவங்க வீட்டுல டிஃபன் காப்பி ஆயிடுத்து. அப்பாவுக்கு மட்டும் கலந்து குடுங்க.”

வேலுமணி காப்பி கலந்து எடுத்துக் கொண்டு கணேசனின் அறைக்குப் போனார். கதவைத் தள்ளித் திறந்தவர் திடுக்கிட்டுப் போனார்.  – தொடரும்

 

Series Navigationசுத்த ஜாதகங்கள்அழியாச் சித்திரங்கள்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *