வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27

Spread the love

சீதாலட்சுமி

அன்பின் வழியது உயிர்நிலை திலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

 

கழனி  மாஅத்து விளைந்துகு தீம்பழம்

பழன வாளை கதூஉ மூரன்

எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல

மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.

 

இது ஓர் பெண்ணின் புலம்பல். அவள் யாராயிருந்தால் என்ன, பெண்ணிற்கு இயல்பாகத் தோன்றும் உணர்வுகள் கட்டியவளுக்கும், காதல் பரத்தைக்கும் ஒன்றுதான்.

இப்பாடல்  நம் சங்க இலக்கியத்தில் ” குறுந்தொகை” காட்டும் காட்சி. பரத்தையின் கூற்று. மருத நிலவாழ்க்கையைப் பாடுபவர் ஆலங்குடி வங்கனார்

காதல் பரத்தை, காமக்கிழத்தி பற்றிய பாடல்கள் நம்மிடையே நிறைய உண்டு.

காட்டுவாசியாய் வாழ்ந்த மனிதன் நாட்டுவாசியாய் ஆன பொழுது அவன் அமைத்தது குடும்பம் மட்டுமல்ல பரத்தையர் சேரியையும் சேர்த்துத்தான் அமைத்தான்.  ஆணின் இன்பத்திற்கு அவள் ஓர் பொம்மை. அவள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு ஆரம்ப காலத்திலேயே மதிப்பில்லை.. இதைப் பேசினால் பெண்ணியம் என்கின்றார்கள். தெய்வங்களின் பெயர்களைக் காட்டி எத்தகைய இடங்களில் உயர்த்தி வைத்திருக்கின்றோம் என்கிறார்கள்.  சமாதானத்திற்கு அவை அடையாளங்கள். நாகரீகமும் பண்பாடும் வளர்ந்த பொழுது தாய்மைக்கு சமுதாயம் மரியாதையும் கொடுத்தது. அதே சமயத்தில் இன்னொரு பிரிவையும் பெண்ணினத்தில் உண்டாக்கி விளையாடியதையும் மறுக்கமுடியாது.

கோவலன் செத்த பிறகு மாதவி மட்டும் நகரில் வாழ்ந்திருந்தால் மீண்டும் அவளை ஓர் வியாபாரப் பொருளாக்கியிருப்பார்கள். அவளுக்குப் பிறந்த மணிமேகலையின் கதியும் அலங்கோலமாகியிருக்கும்.. அன்றைய சமுதாய விதிகள் அப்படி. அந்த கட்டமைப்பிலிருந்து தப்ப முடியாது. நல்ல வேளை. மாதவி தன் மகளுடன் துறவறக் குடிலுக்குள் புகுந்தாள். செல்வந்தன் கோவலனுடன் வாழ்ந்த போதிலும்  இந்திரவிழா போன்ற விழாக்காலங்களில் பல ஆடவர் முன் ஆடத்தானே செய்தாள். கோவலன் மனத்தில் பொறாமைப் பேய் நுழையக் காரணம் அந்த நிகழ்வுதானே கோவலன் மாதவியைப் பிரிந்து மனைவியுடன் மதுரைக்குச் சென்றான். பழி நேர்ந்தது. கொலையுண்டான். மதுரைமா நகரம் தீயுண்டதற்குக் காரணம் மனிதன் அன்று ஏற்படுத்தியிருந்த கட்டமைப்பு.

பரத்தையர் கூட்டம் ஓர் தொடர் கதை

பிறன்மனை நோக்குதல் கூடாது என்று நம் வள்ளுவப் பெருந்தகை கூறி யுள்ளார். ஆனால் வீரமென்றும் தன் நாட்டின் நலத்திற்கென்றும் கூறிக் கொண்டு போருக்குச் சென்ற பொழுது மனிதன் செல்வம் மட்டுமா கொண்டு வந்தான்? அங்கிருந்த பெண்களையும் கொண்டு வந்து மாடுகளைக் கொட்டிலில் அடைப்பது போல் அடைத்து வைத்த இடம்தானே வேளம். அவள் பெயர் பின்னர் வேளாட்டி என்றாயிற்று. வேளாட்டிச் சீர் பழக்கத்தைப் பார்த்திருகின்றீர்களா? நம் தமிழ் மண்ணில் என் காலத்தில் இத்தகைய பெண்கள் வாழும் ஊர்களை நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் வீடுகளுக்குப் போயிருக்கின்றேன். அவர்களுடன் பழகியிருக்கின்றேன். அவர்களின் வேதனைகள் எனக்குத் தெரியும். அவர்கள் போராட்டங்களை நான் அறிவேன். இது வரலாற்று உண்மைகள். பெண்ணியம் வெளிப்பாடல்ல.

இந்தப்பிரச்சனை நமது மண்ணில் மட்டுமல்ல.  உலகம் முழுவதிலும் காணும் பிரச்சனை. மனிதன் தோன்றி இரண்டு லட்ச ஆண்டுகள் என்று கூறினாலும் அவன் ஓர் கட்டமைப்புக்குள் வாழத் தொடங்கியது ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகள் என்று கூறுவர். அன்று வெளியூர் செல்ல வாகனங்கள் கிடையாது. நடை, பின்னர் மிருகங்கள் உதவியுடன் அவன் பயணங்கள் அமைந்தன. வெளியில் சென்றால் வீடு திரும்ப மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகலாம். அவன் உடல்பசி தீர்க்க இம்முறையைக் கையாண்டான். வீடுகளிலும்  ஓர் கட்டுப்பாடான வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால் விருப்பத்திற்குப் பரத்தையர் சேரிகளையும் ஏற்படுத்திக் கொண்டான். தாய்மை சமுதாயம் என்று இருந்தவை மிக மிகக் குறைவே. எனவே இந்த வாழ்க்கை முறையை சமுதாயம் மறுக்கவில்லை. அந்தப் பழக்கம் தொடர்கதையாய் வருகின்றது. யாரை நோவது? வீட்டுக்குள் ஒருத்தி விளக்காய் வாழ்ந்தாள். வெளியில் பெண் மெழுகுவர்த்தியாய் வாழ்ந்தாள். இதுதான் வாழ்வியல்! பெண்ணுக்குச் சிந்திக்க சுதந்திரம் கிடைத்தது. பேச ஆரம்பித்தாள். எனவே புலம்புகின்றாள்.

எத்தனை சட்டங்கள் வந்தாலும், திட்டங்கள் அமைத்தாலும், பல தொண்டு நிறுவனங்கள் உழைத்தாலும் தொடர்ந்து நீடிக்கும் பிரச்சனைகள்

Prostitution

Sex abuse

Child labour

Slavery

Exploitation

Violance

இவைகள் மட்டுமா?  சுயநலமும் சுரண்டலும் ஒரு பக்கம், போதையூட்டும் பல வளையங்கள், அரசியல் முதல் ஆன்மீகம்வரை பொய்மைக் கலப்பு.. இதுதான் நம் சூழல்.. விலங்குகள் வாழும் பகுதியை விடக் கொடியதான சுழலுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றோம். நம்மால் எல்லாப் பிரச்சனை களையும் தீர்த்துவிட முடியாது. மாற்றங்களின் வேகம் மருட்டுகின்றது. அந்த மிரட்டலிலும் தன்னிலை இழக்காத மனவலிமையுள்ளவர்கள் இன்னும் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றது. ஒவ்வொருவரும் நம்மைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நம்மால் முடிந்த நல்லவைகளைச் செய்வோம்.

என் நிலைபற்றி சில வரிகள். இயற்கையழகு சூழ்ந்த ஒரு பகுதியில் ஓர் வீடு வாங்கியுள்ளான் என் மகன். நான்கு ஏக்கர் பரப்பளவு. உயர்ந்த மரங்கள் – பரந்த புல்வெளி – சிறிய ஏரி.  வாத்து, கொக்கு சில சமயம் மயில்கள் வருகின்றன. பாம்புகள் விளையாடும் இடம். ஒரு நாள் முதலையே விருந்திற்கு வந்துவிட்டது. எல்லாம் சரி. ரசிக்கும் சூழல்தான். ஆனால் முதியவளான எனக்கு இச்சூழல் ஒத்துவரவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு காய்ச்சல் வந்துவிட்டது. சலிப்பும் வந்துவிட்டது. படிப்பதில்லை. யாருடனும் பேசுவ தில்லை. எழுதுவதும் இல்லை. இத்தனையும் சில நாட்கள்தான். ஒரு நாள் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினால் நம் புதியமாதவி

திண்ணைக்கு நன்றாகத் தெரிந்தவர் புதிய மாதவி. தன் மகள் வீட்டிற்கு அமெரிக்கா வந்துள்ளார்கள். அவ்வளவுதான் இரு பெண்மணிகளின் கலந்துரையாடல் அடிக்கடி நிகழ ஆரம்பித்தது. எங்களுக்கிடையில் மாற்றுக் கருத்துக்கள் உண்டு. ஆனால் சண்டை போட்டுக் கொள்ள மாட்டோம். அரசியல் பின் புலமும் பெண்ணியம் பேசும் வீரமும் மட்டுமல்ல. பம்பாயில் பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சமூக நலப்பணிகளும் செய்து வருகின்றார்கள். எங்கள் பேச்சில் சமுதாயப் பிரச்சனைகள்தான் அதிகம் இருக்கும்.

உடல்நல மில்லாது இருந்தபொழுது அவர்கள் அழைத்தது இரவு நேரத்தில்.. கூப்பிட்டது மாதவி என்று அறியவும் உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தேன். நாங்கள் பேசி முடிக்கும் பொழுது என்னுடைய நேரம் இரவு 2.30 என்று மணியைக் காட்டியது. எனக்குள் மாற்றத்தை உணர்ந்தேன். என் சோர்வுக்கு மருந்தானார் மாதவி. மனித இயல்பு விசித்திரமானது.

என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் இப்பொழுதும் தொடர்ந்து வருபவர்கள் புனிதவதி இளங்கோவனும், ருக்மணியும்தான். வரலாற்றுப் பயணம், இலக்கிய சந்திப்புகள் இவற்றில் புனிதம் இருப்பார். சமுதாயம் நோக்கிச் செல்லும் பொழுது ருக்மணியை அழைத்துச் செல்வேன். ஏனென்றால் அங்கே பார்ப்பதுடன் பணி நிற்காது. ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அதற்கு ருக்மணி வேண்டும். அவள் மூலம் பலர் உதவி கிடைத்துவிடும். பணிகளும் நடக்கும். பணி ஓய்வு பெற்ற பின்னரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் ருக்மணி. நானும் இந்தியாவில் இருந்திருந்தால் வீட்டில் இருந்திருக்க மாட்டேன்.

பயிற்சி கொடுப்பதில் ருக்மணி சிறப்புத் திறன்படைத்தவள். இன்னும் அரசுடனும் பல தொண்டு நிறுவனங்களுடனும் தொடர்பு வைத்திருப்பவள்.   “CONSULTANT.” என்று அறிமுக அட்டை வைத்திருப்பவள். எங்கள் சிந்தனை களை அடிக்கடி பரிமாறிக் கொள்வோம்

என்னிடம் ஓர் வழக்கமுண்டு. சென்னைக்குச் செல்லும் பொழுது நூலகங்கள், பதிப்பகங்களுக்குப் போவேன். ஒரு நாள் நானும் ருக்மணியும் கலைஞர் பதிப்பகத்தில் புதிய வரவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கே வந்த மூன்று பெண்மணிகள் “அம்மா” என்று ருக்மணியை அழைத்தனர். அவர்கள் திருநங்கைகள்.  அரவாணிகள் தங்களைத் திருநங்கைகள் என்று அழைப்பதையே விரும்பினர். அவர்களுடன் பேசுவதற்காக நாங்கள் வெளியில் வந்தோம். மகளிர் மேம்பாட்டுக் கழகத்தில் ருக்மணி வேலை பார்க்கும் பொழுது பழக்கமானவர்கள். வங்கிக் கடன் பெற்று சிறு தொழில்களைச் செய்து வருகின்றவர்கள்.  என் பணிக்காலத்தில் என் கவனத்தில் வராத ஒரு பிரிவினர்.  சிறு தொழில் செய்யும் பொழுதும் கூட மற்றவர்களின் கேலியும் கிண்டலும் இருந்ததால் தொழிலில் முன்னேற முடிய வில்லை. எனவே பிச்சைத் தொழிலைச் செய்துவந்தனர்.

மூவரும் சேர்ந்து வந்தது பிச்சை எடுப்பதற்காக. அதுவும் கூட அவர்கள் ஓர் தனிவழியில் நடத்தினர். சேர்ந்து கடைகளுக்கும் வீடுகளுக்கும் சென்று பிச்சை கேட்பர். கிடைப்பதைப் பங்கிட்டுக் கொள்வர்.  செவிவழிச் செய்திகள், கதைகள் மூலம் அவர்களைப் பற்றி அறிந்ததன்றி களத்தில் இறங்கி ஆய்வு செய்து அவர்களுக்கு உதவும் திட்டங்களைச் சிந்திக்காமல் விட்டது என்னை உறுத்தியது.  இப்பொழுது வயதாகிவிட்டது. இருப்பினும் அவர்களைப்பற்றி நிறைய தெரிந்து கொள்ள விரும்பினேன். அந்தப் பெண்களுடனும் சில நிமிடங்கள்தான் பேச முடிந்தது.. வீதியில் விசாரணைக் கடை விரிக்க முடியாது. ருக்மணி வேறு ஒரு இடத்திற்குக் கூட்டிச் செல்வதாக உறுதி அளித்தாள்.  கொடுத்த வாக்குறுதியையும் காப்பாற்றினாள். நாங்கள் சென்று பார்த்தவர் ஓர் திருநங்கைதான். அவள் ஓர் நாட்டிய தாரகை

நர்த்தகி நடராஜ்

நர்த்தகி நடராஜும் அவளுடன் சக்தியும் இருந்தனர்.  நாங்கள் வருவதை அறிவித்து விட்டே சென்றோம். நாங்கள் மட்டுமல்ல வேறு யாரானாலும் முதலில் பேசி ஒப்புதல் வாங்கிச் சென்றால்தான் வீட்டுக் கதவு திறக்கப்படும் அவர்கள் நிலை அப்படி.

அவள் பெற்றோர் அவளுக்கிட்ட பெயர் நடராஜ். அவள் குருநாதர் இட்ட பெயர் நர்த்தகி. ஆண் குழந்தையாகப் பிறந்தவன்தான் நடராஜ். நாளாக ஆக பெண்ணுணர்வை உணர ஆரம்பித்தான் அதற்கேற்ப ஆடை அணிய விரும்பினான். மற்றவர்கள் கேலி செய்ய ஆரம்பித்தனர். அந்த சின்ன வயதிலேயெ சில ஆண்கள் கெட்ட நோக்கத்துடன் துன்புறுத்த ஆரம்பித்தனர். அம்மாவிடம் கூறிய பொழுது அடி கிடைத்தது. “செத்துத் தொலை” என்ற சொல்லடியும் கிடைத்தது.

அடித்துவிட்டு அழும் அம்மாவைப் பார்க்கவும் உடல் வலியை விட மன வேதனை அதிகமாகியது. தன்னால் தனக்குப் பின் பிறந்தவர்கள் வாழ்க்கை பாதிக்கக் கூடாது, சமுதாயத்தில் பெற்றோர்களைக் கேலிக்குள்ளாக்குவது கூடாது என்று தீர்மானித்த நடராஜ் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டான். அவனைப் போன்ற நிலையில் இருந்த சக்தியின் நட்பு அவனுக்கு ஓர் துணையைக் கொடுத்தது.

சிறுவயதிலேயே நடராஜிற்கு நாட்டியக் கலையின் மேல் பற்று. அதைக் கற்றுக் கொள்ள அவன் தேடிப் போன இடம் சாதாரணமானதல்ல. வைஜயந்திமாலா போன்றவர்களுக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த திரு கிட்டப்பா அவர்களைத்தான் தேடி போனான். அவரோ அவர்கள் நிலை கண்டு சிரித்திருக்கின்றார். நடராஜ் மனம் தளரவில்லை. கும்பிடும் நாட்டியக் கடவுளே அர்த்தநாரீஸ்வரர்தானே என்று சொல்லியிருக்கின்றான்.. கிட்டப்பா அயர்ந்து போனார். ஆனாலும் நாட்டியம் கற்றுக் கொடுக்க சம்மதிக்கவில்லை. ஒரு வருடம் அயராமல் அவரைத் தேடிப்போய் வேண்டினான் நடராஜ். அவன் வேண்டுதலுக்குப் பலன் கிடைத்தது. நர்த்தகி என்ற பெயரும் கிடைத்தது.

இப்பொழுது அவன் அவளாகி விட்டாள். நர்த்தகி நடராஜ் நாட்டியத்துடன் ஒன்றிவிட்டாள். . பல வருடங்கள், ஓர் சிறந்த ஆசானிடம் கற்ற கலை யானதால் அவள் நாட்டியத் திறமை சிறப்பாக அமைந்தது

அரங்கேற்றத்திற்கு முதலில் மேடை கிடைக்கவில்லை. மயிலாப்பூரில் எத்தனை சபாக்கள் !  ஆனால் ஆசிரியரின் புகழால் அக்குறை நீங்கியது. அதே ஆசிரியரின் பெயரால் பத்திரிகையாளர்களூம் அவரது ரசிகர்களும் வந்தனர். நடராஜ் நர்த்தகியின் புகழ்வாய்ந்த பயணம் தொடங்கியது.

தங்குவதற்கு இடம் பார்த்த பொழுது குடியிருப்பு காலனிகளில் இடம் தர மறுத்தனர். அங்கும் போராடி இடம் பெற்றனர். ஆமாம் சக்தியும் உடன் சேர்ந்தே இருந்ததால் ஒருவருக்கொருவர் துணையாக அமைந்தது. வீட்டுக் கதவு தட்டப்பட்டாலும் யாரென்று தெரியாமல் கதவைத் திறக்க மாட்டார்கள். அவர்கள் நிலை அப்படி.

திருநங்கைகளுக்கு அரசு கொடுத்த அங்கீகாரத்தின் படி அவர்கள் பிச்சை எடுக்கலாம், விபச்சாரம் செய்யலாம். வெளியில் கண்டால் பிச்சை வீட்டில் இருந்தால் விபச்சாரம். அதை எண்ணி கதைத் தட்டிவிடுவார்கள். பெரிய மனிதர்களில் சிலர் கூட அவர்களைக் கெட்ட எண்ணத்துடன் அணுகிய பொழுது மனம் நொந்திருக்கின்றனர். கலையரசிக்கே அந்த கதியென்றால் மற்ற திருநங்கைகளின் கதியை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அவள் நாட்டியத்திறமை வெளி நாட்டிலும் பேசப்பட்டது. அவளை அந்த நாடுகளுக்கு அழைத்தனர்.

திருநங்கை ஆணுமல்ல, பெண்ணுமல்ல. எனவே ரேஷன் கார்டு கூட கிடைக்கவில்லை.  வங்கியில் கணக்கு ஆரம்பிக்க முடியாது. எப்படி பாஸ்போர்ட் கிடைக்கும்?. ஒவ்வொன்றிற்கும் போராடினார்கள். அவள் கலையால், நிலையால் சாதிக்க முடிந்தது. மற்றவர்களின் நிலை அப்படி யில்லையே!. திருநங்கைகளின் பிரச்சனைக்களைப் பின்னர் பார்ப்போம். முதலில் நர்த்தகி நடராஜ் பற்றி பார்க்கலாம். அவர்கள் வீட்டிற்குச் சென்றவுடன் அன்புடன் வரவேற்பு. முதன் முதலில் திருநங்கைகள் பற்றிய விபரங்களை நான் அதிகம் அறிந்து கொண்டது நடராஜ் நர்த்தகி மூலம்தான். வேதனையுடன் அமைந்த நேர்காணல். பின்னர் நாட்டியம் பற்றிப் பேச ஆரம்பிக்கவும் முகம் மலர்ந்தது. அவள் மேடை நிகழ்ச்சியைப் வீடியோ எடுத்து வைத்திருந்ததைப் போட்டுக் காண்பித்தாள். அப்படியே அயர்ந்து போனேன்.

நான் நாட்டியம் கற்றது மிகக் குறைவான காலம்தான். மேடையில் ஆடியதுவும் குறைவே. ஆனாலும் நாட்டியம் பார்க்கப் பிடிக்கும். என் காலத்தில் குமாரி கமலா ஆடும் படங்கள் எது வந்தாலும் போய்ப் பார்ப்பேன். வயதான பின்னர் அபிநய தாரகை பாலசரஸ்வதியின் நாட்டியத்தை மேடையில் பார்த்தேன். பின்னர் திருமதி பத்மா சுப்பிரமணியத்தின் ரசிகையானேன். இத்தனையும் நான் சொல்வதற்குக் காரணம் எனக்கும் ஓரளவு நாட்டிய அறிவும் பற்றும் உண்டு என்பதற்காகத்தான். நர்த்தகியின் நாட்டியத்தில் சின்னஞ் சிறுகிளியே என்ற பாட்டிற்கு ஆடிய பொழுது முகபாவங்கள் பாலசரஸ்வதியை நினைவூட்டியது. நவரசங்களையும் காட்டக் கூடிய முகம். கண்களில் ஒளி. பிறப்பின் குறை தெரியவில்லை..இப்பொழுது நர்த்தகி நடராஜிற்கு சமுதாயத்தில் ஓர் அங்கீகாரம், மதிப்பு.

தொலைக்காட்சியில் “ இப்படிக்கு ரோஸ் “ நிகழ்ச்சியால் ரோஸிற்கு நிறைய ரசிகர்கள்.

கல்வி, கலை இவைகளில் திறன் பெற்று வளர்ந்தால் பொருளும் புகழும் கிடைக்கும். சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு மதிப்பும் மரியாதையுடன் கூடிய வாழ்க்கைக்கு இதுவே வழி. சலுகைகள் மட்டும் போதாது. பொறுப்புடனும் அக்கறையுடனும் முன்னேறப் பணி யாற்றுகின்றவர்கள், பயன்பெறுகின்றவர்கள் இருவருமே தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்தல் வேண்டும். வரண்டு போய் அதிக நாட்கள் காய விட்டு விட்ட நிலத்தை எப்படிப் பாடுபட்டு உழுது, உரமிட்டு தகுதிக்குக் கொண்டு வருகின்றோமோ அதே போல் இவர்கள் கற்கவும் திறனை வளர்க்கவும் சிறப்பு முறையில் திட்டங்கள் வகுத்து செயல்படுத்த வேண்டும்.

திருநங்கைகளின் பிரச்சனைகள் ஒன்றா இரண்டா? பெயர்களும் எத்தனை? அலி, பேடி, அரவாணி யென்று பல பெயர்கள். படிக்கச் செல்லுமிடத்தில் கேலியும் கிண்டலும் அங்கிருந்து அவர்களைத் துரத்துகின்றது. வீட்டிலும் இருக்க முடியாமல் பிறந்து வளர்ந்த இடத்திலும் வசிக்க முடியாமல் கேலிப் பேச்சுக்கள் துரத்துகின்றன. பணியிடங்களிலும் கிண்டலும் கேலியும் பேசி விரட்டுகின்றனர்.

அவர்கள் ஓடி ஒண்டிக் கொள்ளும் இடம் அரவாணிகள் கூட்டம். ஆண், பெண் அறுவை சிகிச்சை அங்கே கொடூரமானது. சிகிச்சைக்குப் பின்னும் பல பிரச்சனைகள். அவர்களுக்குப் பாலியல் தொழிலும் ஆடிப்பாடி பிச்சை எடுப்பதுவும் தொழிலாக அரசு அனுமதித்தது. அவர்களுக்கென்று எந்த மதிப்பும் கிடையாது. அவர்களே தங்களுக்குச் சில கலாச்சாரங்கள், சடங்குகள், விழாக்கள் என்று வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அறுவை சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்குச் செல்வதற்கு வழி ஏற்பட்டது.

தமிழ் நாட்டில் அரவாணிகளுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டது. அதன் மூலம் இவர்களுக்குச் சில நன்மைகள் கிடைத்தன.  இறந்த காலத்தில் பேசக் காரணம் மூன்றாண்டு முடியவும் மீள் பதிவு செய்திருக்க வேண்டிய வாரியம் மீளப் பதிவுச் செய்யப்படாமல் விடுபட்டுவிட்டது. கிடைத்துவந்த நலன்களும் நின்று போயின. துறையின் கவனச் சிதறல்கள்கள் காரணமா அல்லது ஆட்சி மாற்றம் காரணமா என்று தெரியவில்லை. எதுவாக இருப்பினும் திருநங்கைகள் இதற்கு மீண்டும் நம்பிக்கையுடன் முயற்சி செய்கின்றனர். அவர்கள் நம்பிக்கை வீணாகாமல் நிறைவேற்றப்படட்டும்.

தமிழகத்தில் 2008 ஏப்ரலில் “அரவாணிகள் நல வாரியம்” தொடங்கப்பட்டு அரவாணிகளை இனி திருநங்கை என அழைக்கப்படலாம் என்றும் உத்திர விடப்பட்டது. தமிழகத்தில் திருங்கைகளைக் கணக்கெடுத்த பொழுது 30000 பேர்கள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் மூலமாக திருநங்கைகளுக்கு நலத்திட்டம் வழங்கும் வகையில் 6 திருநங்கைகளுக்கு தலா இருபது ஆயிரம் மதிப்பீட்டில் கறவை மாடுகளும், 4 திருநங்கைகளுக்கு கலைத்தொழில் கருவிகள் வாங்குவதற்கு தலா இருபது ஆயிரமும், 7 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் 127 திருநங்கைகள் கண்டறியப் பட்டனர்.

 

சமூக நலத்துறையின் மூலமாக 58 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மூலமாக 72 திருநங்கைகளுக்கு வடவீரநாயக்கன் பட்டியில் தலா 3 சென்ட் வீதம் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

 

68 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகளும், பாரதி என்ற திருநங்கைக்கு முன்னோடி வங்கியின் மூலம் கல்விக் கடனாக 21 ஆயிரம் ரூபாய், மகளிர் திட்ட மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக 5 சுய உதவிக்குழு ஆரம்பிக்கப் பட்டுள்ளது. 17 திருநங்கைகளுக்கு அரசு காப்பீட்டு திட்டத்தில் அடையாள அட்டை வழங்கப் பட்டுள்ளது இன்னும் இது போன்ற உதவிகள் அங்கும் இங்குமாக சில கிடைத்துள்ளன. தேவையினைப் பார்க்கும் பொழுது இது மிகக் குறைவு. இருப்பினும் நல்ல தொடக்கம்.

 

கல்விக்கு உதவியென்று ஆரம்பித்து உதவி இடையில் நின்றதால் படிப்பைப் பாதியில் நிறுத்த வேண்டியதுவும் நடந்துள்ளது. கற்றவர்களுக்கும் வேலை கிடைப்பது அரிது. வேலைக்குச் சென்ற சிலராலும் வேலையைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை

 

இங்கே என்னுடைய அனுபவம் ஒன்றினைக் குறிப்பிட விரும்புகின்றேன்

காஞ்சிபுரத்தில் மாவட்ட சமூக நல அலுவலராகப் பணியாற்றி வந்த காலத்தில் மாணிக்கம் என்ற ஒரு கிராம சேவிக்கா அங்கே பணியாற்றிக் கொண்டிருந்தாள். அவள் குடும்பத்தில் மூன்று பெண்கள் ஒரு ஆண். மூன்று பெண்களும் அரவாணிகள். ஆனால் மாற்றங்கள் பெரிய அளவில் இல்லை. பிறந்தவுடன் பெண் என்று கொடுத்ததை மாற்றவில்லை. பள்ளிப் படிப்பை முடித்தவுடன் மாணிக்கத்திறகு கிராம சேவிகா பதவி கிடைத்தது. பெண்னின் உடை போட்டிருந்தாலும் கொஞ்சம் ஆண்மையும் வெளிப்படும். இரு சக்கிர வண்டியில்தான் கிராமங்களுக்குச் செல்வாள். தெருவில் கேலிப் பேச்சு இருக்கும். ஆனாலும் வேகமாகப் போய்விடுவாள். அவள் அன்பும் உண்மையான உழைப்பிலும் கிராமப் பெண்கள் பாசத்துடன் பழகினர். அந்த மாவட்டத்திலேயே அவள்தான் சிறப்பான பணியாளர்

 

ஒவ்வொரு ஆண்டும் “சிறந்த கிராம சேவிகா” மாவட்டந்தோறூம் தேர்ந்தெடுப்போம். அதற்குப் புள்ளிவிபரங்கள் சேகரிக்க ஓர் படிவம் உண்டு. எல்லோரிடமிருந்தும் அறிக்கை வர ஆரம்பித்தன. அறிக்கையினைப் பார்த்தவுடன் ஆத்திரம் வந்தது.. அந்த அளவு பொய்யான புள்ளிவிபரங்கள். எனக்கு ஆரம்ப நாட்களை நினைவூட்டியது. உரக்குழிகள் கணக்கு மாதம்தோறும் தர வேண்டும். ஒருவர் கொடுத்த புள்ளி விபரங்களில் ஒரு வருடக்கணக்கைப் பார்த்தால் ஊரின் பரப்பளவிற்கு மேல் இருந்தது. அதாவது கிராமமே உரக் குழி. அத்தனையும் பொய்யான புள்ளி விபரங்கள்.

 

அவசரக் கூட்டம் போட்டு நேரிடை விசாரணை செய்து கண்டித்தேன். பின்னர் எல்லோரும் சரியான அறிக்கை கொடுத்த பொழுது மாணிக்கத்தின் அறிக்கை சிறப்பாக இருந்தது. மற்றவர்களும் அவள் கடும் உழைப்பை அறிவார்கள். . மாவட்டத்திற்கு மட்டுமல்ல மாநிலத்திலேயே சிறந்த ஊழியர் என்ற விருது அறிவிக்கப்பட்டது. எனக்கு மகிழ்வை மட்டுமல்ல மன நிறைவையும் கொடுத்தது. மாணிக்கத்தின் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே? வேறென்ன இருக்கின்றது? என்னிடம் பணியாற்றிய ஒரு திருநங்கைக்கு, அவளின் உண்மையான உழைப்பிற்குச் சரியான அங்கீகாரம் கிடைத்தது.. அவளுக்கு அன்றும் இன்றும் நான் அம்மாதான்

 

நடராஜ் நர்த்தகியும் எனக்கு மகளானாள். சென்னைக்குச் சென்றால் தொலை பேசியிலாவது அவளுடன் பேசுவேன்.

 

மீண்டும் திருநங்கைகளீன் நலனுக்காக, அவர்கள் நிலை உயர வாரியம் உயிர்பெற வேண்டும்.

 

மற்றவர்களைப் போல் இவர்களுக்கும் கல்வியும், வேலை வாய்ப்பும் கிடைக்க அரசு வழி செய்திடல் வேண்டும்.

 

இவர்களில் கல்வியிலோ கலைகளிலோ  சிறப்பாக வருவார்கள் என்பதற்கு அடையாளம் காணின் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் போன்ற அமைப்புகள் இவர்களின் வளர்ச்சிக்கு வேண்டிய உதவிகள் செய்யலாம்.

 

ஒவ்வொரு மாவட்டத்தலும் ஒரு கவுன்ஸ்லிங் அமைப்பு இவர்களுக்காக அமைத்தல் நல்லது. தொண்டு நிறுவனங்கள் பொறுப்பேற்கலாம். காரணமாகத்தான்  தொண்டு நிறுவனங்களைப் பற்றிக் கூறினேன். பிறக்கும் பொழுது இயல்பாகப் பிறந்து சிறுவயதிலேயே உடலிலோ உணர்விலோ மாறுதல் ஏற்படும் பொழுது பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன. அப்பொழுது அவர்களை அழைத்து விசாரணை செய்து உண்மை நிலையினைக் கண்டறிதல் வேண்டும். ஒருவரை ஊதியத்தில் அமர்த்தி விட்டால் அவர் முழு அக்கறையுடன் செய்வார் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. தொண்டு நிறுவனம் என்றால் அன்று நேரமிருப்பவர்கள் சேர்ந்து பயிற்சி பெற்றவர்களையும் அருகில் வைத்துக் கொண்டு குடும்பம் போல் விசாரித்தால் அதிக பலன் இருக்கும்.

 

பிள்ளைகளின் மாறுதல்களைக் கண்டு கோபத்தில், வேதனையில் பேசும் பெற்றோர்கள், வேடிக்கையாக நினைத்து கேலி பேசுகின்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வழி செய்யலாம்.

 

வீட்டில் வசிக்க முடியாத நிலையில் வெளியேற நேர்ந்தால் படிப்பு முதற்கொண்டு பாதிக்கப்படும். அப்படி வருகின்றவர்களுக்கு தங்கிப் படிக்க, தொழில் கற்க ஓர்  shelter home  நடத்தலாம். சமுக நல வாரியம் மான்யம் பெற்று இதனை நடத்தலாம்.

 

ஓரளவு வசதி படைத்தோர் வீடுகளில் இரண்டு பிரச்சனைகளில் ஒன்றோ அல்லது இரண்டும் வரலாம். சிறுகுழந்தைகளைக் கவனிக்க ஆயா வைக்க வேண்டும். நம்பிக்கை யானவர்களைத்தான் வேலைக்கு வைக்க முடியும். அதே போல் வயதானவர்கள் முடியாத நிலையில் இருப்பவர்களைக் கவனிக்கவும் உதவியாளர்கள் தேவை. திருநங்கைகளுக்குப் பயிற்சி கொடுத்து இப்பணிகளில் அமர்த்தலாம்.  இதுவரை இந்த முயற்சி எடுத்ததில்லை. இதனையும் முயற்சி செய்து பார்ப்பதில் தப்பில்லை. திருநங்கைகளுடன் பழகியதில் அவர்களிடம் அன்பும் அக்கறையும் இருப்பதை உணர்ந்ததால் இந்தா எண்ணம் தோன்றியது. எனக்குத் தெரிந்தவரை இக்கருத்துக்களைத் தெரிவிக்கின்றேன். சிறந்த சிந்தனையாளர்கள், கற்றவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் கூடி திருநங்கைகள் வாழ்வும் நலமாக அமையத் திட்டங்கள் வகுக்க வேண்டுமென்று என் கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

 

இறுதியாகச் சொல்ல விரும்புவது. பிறக்கும் உயிரினங்களில் ஆணென்றும் பெண்ணென்றும் இரு இனங்களாகத் தோன்றி வாழ்க்கையை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். எந்த இனம் என்று சொல்ல முடியமல்  வாழ்க்கையைத் தொலைத்து விட்டவர்கள் இவர்கள்.  சீரிய வாழ்க்கை வாழ முயல்பவர்களையும் விடாது துரத்தும் அரக்க மனம் படைத்தவர்கள் தங்களைக் கொஞ்சம் அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இவர்களை மேலும் சிதைக்க வேண்டாம். இது என் வேண்டுகோள்.

 

என் “தேடல்” பகுதியில் வெகு நாட்களாக ஒர் விருப்பம் ஒதுங்கி தவித்துக் கொண்டிருந்தது. அந்த விருப்பம் நிறைவேற வாய்ப்பு கிடைக்கவும் மனம் சுறுசுறுப்பை அடைந்தது.

 

பம்பாய்க்குப் போக வேண்டும்

ஊர் சுற்றிப் பார்க்கவா? இல்லை. பம்பாயில் ஓர் இடம் செல்ல வேண்டும்

சிகப்பு விளக்குப் பகுதி. REDLIGHT AREA

வீதிகளைப் பார்க்க வெண்டும்.

வீடுகளுக்குள்ளும் செல்ல வேண்டும்.

அங்கே வாழும் பெண்களைப் பார்த்துப் பேச வேண்டும்

நகர வாழ்க்கையா அல்லது நரக வாழ்க்கையா, அதுபற்றி அடுத்து பார்க்கலாம்

 

“காமம், கோபம், பேராசை , இம்முன்றுமே மரணத்தின் நுழைவாயில்கள்

காமத்தின் வசப்பட்டவன் வெட்கத்தை அறியமாட்டான்

கீழானது அனைத்தையும் ஒதுக்கித் தள்ளுங்கள். உள்ளேயும் புறத்தேயும் தூய்மையுடன் விளங்குங்கள்.

சொர்க்கமும் நரகமும் மனதின் சிருஷ்டியே

சொர்க்கம் உங்களுக்குளேயே இருக்கின்றது “

சுவாமி சிவானந்த மகரிஷி

(தொடரும்)

படத்திற்கு நன்றி

 

Series Navigationமிஷ்கினின் “ முகமூடி “இந்த நேரத்தில்——