விளையாட்டும் விதியும்

மட்டையும் பந்தும் கொண்டு

தனக்கான விளையாட்டை

ஆரம்பித்துவிட்டது குழந்தை.

டெலிவிஷனின்

இருபத்து நாலு மணி நேர

விளையாட்டுக் காட்சிகளை

எள்ளளவும் பிரதிபலிக்கவில்லை

அது தன் விளையாட்டில்.

விளையாட்டின் விதிகளைத்

தானே இயற்றிக்கொண்டு

குழந்தை ஆடிக்கொண்டிருந்ததில்

வீட்டின் வாசல்

புதுமையில் பொலிந்துகொண்டிருந்தது.

அப்படி இல்லை என்பதாய்

உலகம் ஏற்றுக்கொண்ட விதிகளை

அதன் அப்பா திணிக்க முற்பட்டபோது

குழந்தையைத் தடுக்காதே என்பதாய்

விழிகள் விரித்து

உதடுகள் குவித்து

” உஷ் ” என்று

ஒற்றை விரலில் அம்மா

எச்சரிக்கை செய்தது

புதிய விளையாட்டாய்ப் பட்டது

குழந்தைக்கு.

— ரமணி

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 13காதலில் கதைப்பது எப்படி ?!