விஸ்வ ரூபம் – எதிர்ப்பு, அடிபணிதல், சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள்

This entry is part 16 of 21 in the series 2 ஜூன் 2013

விஸ்வருபம் பற்றிய தொடர்ந்த விமர்சனத்தைக் காட்டிலும் இந்தத் தொடர் விஸ்வரூபம் பற்றிய விமர்சனங்களைப் பற்றி பெரிதும் பேசுவது வருக்தம் தருகிறது என்றாலும், தமிழ் விமர்சகரின் மனநிலையை , இடதுசாரிகள் என்று தம்மைச் சுட்டும் அறிவுஜீவிகளின் மனநிலையை விசாரணை செய்ய முயல்கிறது. ஆனால் இது பெரும்பாலும் நம் கண் முன்னே தோன்றி தன்னை நிலைனாட்டிக்கொண்டு விட்ட ஒரு அவலம் என்ற முறையில் மீண்டும் மீண்டும் விமர்சிக்கப்படவேண்டிய ஒன்று என்று எண்ணுகிறேன்.

சென்ற வாரம் எப்படி நாம் பொதுவாக சரித்திரத்தை, சரித்திரத்தின் அநீதிகளை கலையாகவும், இலக்கியமாகவும் பதிவு செய்வதில் பின் தங்கி இருக்கிறோம்.என்பது பற்றிச் சுட்டிக் காட்டி இருந்தேன். தொடர்ந்து வந்த சில கடிதங்களில் சில விடுபடல்கள் உள்ளன என்று நண்பர்கள் சுட்டிக் காட்டியிருந்தார்கள்.

இந்தியப் பிரிவினையை அடிப்படையாக வைத்து “தமஸ்” தொலைக் காட்சித் தொடர் கோவிந்த் நிஹலானியால் இயக்கப் பட்டு வெளிவந்துள்ளது. பால்ராஜ் சாஹ்னி நடித்த “கரம் ஹவா” படம் எம் எஸ் சத்யுவால் இயக்கப் பட்டது. இரண்டுமே முக்கியமான ஹிந்தி இலக்கிய கர்த்தா பீஷ்ம சாஹ்னியால் எழுதப் பட்டவை.

தலித் அடக்குமுறை பற்றியும், கோஷங்களைத் தாண்டி உயிர்ப்புடன் வெளிவந்த தமிழ்ப்படம் “ஒருத்தி”. அம்ஷன் குமார் இயக்கியது. தமிழின் சிறந்த படவரிசையில் தவறாமல் இடம்பெறும் ஒரு படம் இது. இதன் இன்னொரு சிறப்பு தலித் பெண்ணின் பார்வையில் படம் எடுக்கப் பட்டிருப்பது. பொதுவாக தலித் கதாபாத்திரங்கள் மேல்சாதியினர் “மனந்திருந்தும்” வகையில் துணைப் பாத்திரமாக மயப் புள்ளியல்லாமல் இருப்பது வழக்கம். “ஒருத்தி” அப்படியல்ல. (இதன் தயாரிப்பில் எனக்குத் தொடர்பு உண்டு.)

என் நோக்கம் இப்படி விதிவிலக்காக வந்த படங்களைப் பட்டியல் இடுவதல்ல. எப்படி வரலாற்று நோக்கில் கலை இலக்கியப் பதிவுகள் குறைவாக இருக்கின்றன என்று சுட்டிக் காட்டுவது தான்.

பொதுவாக வரலாற்றுணர்வும் வரலாறும் நிகழ்வுகளையும் சித்தரிப்பதில் நம் தயக்கம். நாம் மிகச்சிறப்பாகப போற்றும் மனிதர்களைக் கூட நாம் கலைவில் பதிவு செய்யவில்லை. காமராஜ், பெரியார் , பாரதி, அம்பேத்கர் பற்றிய படங்கள் வரக் கூட எத்தனை வருடங்கள் ஆயின? காந்தி பற்றிய படம் இந்திய இயக்குனர்கள் தயாரிக்க வில்லை. எம் எஸ் சத்யு விதிவிலக்காக இந்திய வரலாறு பற்றி தொலைக் காட்சித் தொடர் எடுத்திருக்கிறார். தொலைக் காட்சி இந்த முயற்சிகளுக்கான சரியான ஊடகம். ஆனால் பெரும் நிறுவனங்கள் கைவசம் உள்ள தொலைக் காட்சி அந்த முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பில்லை.

————————–

வாஸந்தி உயிர்மையில் எழுதியிருக்கும் கட்டுரை மிக வலுவாக தணிக்கைக்கும், இப்படி தணிக்கையைக் கோரும் அமைப்புகளுக்கு அடிபணியும் அரசியல் அதிகாரவர்க்கத்தினருக்கும் எதிரான குரலாக உள்ளது. “ஊமையராய், செவிடர்களாய்” என்ற தலைப்பில் எழுதியுள்ள வாஸந்தியின் கட்டுரை எப்படி கருத்து சுதந்திரத்தை மறுக்கும் ஒரு சமூகமாக உருவாக்கி வருகிறது என்பதைப் பதிவு செய்கிறார். இஸ்லாமிஸ்டுகளின் பாடத்தை அனைத்து குழுவினரும் கற்றுக் கொண்டுவிட்ட ஒரு சூழல் இங்கே நிலவுகிறது. ஏனென்றால் சகிப்பின்மையை வெளிப்படுத்தினால் ஒரு சில குறுங்குழுக்களைத் திரட்டி போராட்டம் கடை அடைப்பு செய்தால் தாம் தலைவன் ஆகிவிடலாம் என்ற நினைப்பு எல்லோருக்கும் உள்ளது.

இந்தப் போக்கை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டிய பத்திரிகையாளர்களும் மௌனம் சாதிக்கிறார்கள். ஆனால் மற்ற குழுக்கள் இஸ்லாமிஸ்டுகள் போல அந்த அளவு வன்மத்துடனும், ஒருங்கிணைப்புடனும் செயல் படுவதில்லை, என்பது மட்டுமல்ல, இஸ்லாமிஸ்டுகளை மைய நீரோட்ட முஸ்லிம்களாய்க் காட்ட வேண்டிய அரசியல் நோக்கோ செயல் படும் சில அறிவிஜீவிகளும் இஸ்லாமிஸ்டுகளின் “நியாயத்தை” முன்வைத்து வாதிடுகிறார்கள்.

விஸவ்ரூபம் பற்றியதல்லாமல், பொதுவாக சமூகச் சிந்தனைகளை “மனம் புண்படுகிறது”, என்ற பெயரில் தடை செய்து அச்சுறுத்தும் கலாசாரத்தை நிறுவ சிறிது சிறிதாக ஒரு புரையோட்டம் போல ஒரு சில குறுங்குழு இயக்கங்கள் தம்மை ஸ்தாபித்து வருகின்றன.
——————————–

இஸ்லாமிஸ்டுகளின் நியாங்க்களைப் பேசும் நோக்கில் எழுதப் பட்ட யமுனா ராஜேந்திரனின் கட்டுரை பற்றிய விமர்சனங்களை முன் வாரங்களில் பார்த்தோம். கிட்டத்தட்ட அதே பாணியில் எழுதப் பட்ட முத்துகிருஷ்ணனின் கட்டுரை மிக சுவாரஸ்யமான ஒன்று. இந்தக் கட்டுரையை கட்டுடைப்புச் செய்வதன் மூலம் தமிழ் அறிவுஜீவியாக நம் முன் வரும் நபர்களின் உளவியலைப் புரிந்துகொள்ள முடியும் என்பதால் விரிவாகப் பேசவேண்டிய ஒன்று.

————

Series Navigationகதிர்பாரதியின் ” மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” – கவிதை நூல் விமர்சனம்சூரியனை நோக்கி நேராகப் பாயும் வால்மீனும் (Comet), பூமியை நெருங்கிக் கடக்கும் பூத முரண்கோளும் (Asteroid)
author

கோபால் ராஜாராம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *