அகநானூறு உணர்த்தும் வாழ்வியல் அறன்கள்

This entry is part 3 of 40 in the series 8 ஜனவரி 2012

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
மனித வாழ்க்கை உயர்வானது, அரிதானது. வாழ்தல் என்பது இயற்கை மனிதனுக்கு அளித்த பெருங்கருணை. காற்றும் நீரும், வெப்பமும் அள்ளக் குறையாமல் காலம் காலமாக வழங்கிவரும் இயற்கைப் பேராற்றல்கள். அவற்றின் வழி அனைத்து வசதிகளும் பெற்ற மானுடரிடம், இவ்வியற்கை ஆற்றலைச் சமமாகப் பகிர்ந்து வாழ்வை அனுபவித்து வாழாமல், தங்களுக்குள் சமயம், மொழி, இனம். சாதி போன்றவற்றால் வேறுபட்டு மனித உறவுகளைப் பிரித்தனர். வாழ்தல்; என்பதன் பொருள் காணாது, புரியாது போய்விட்டது. புரியாது அழியும் மனித இனத்தை, தீய வழியிற் செல்லும் மனித அறிவைச் செம்மைப்படுத்தும் கலைவடிவமாக இலக்கியம் திகழ்கிறது.
ஒவ்வொரு காலத்திலும் தோன்றும் இலக்கியங்கள் அவ்வக் காலத்தே வாழும் மக்களுக்கு வாழும் அறன்களை எடுத்தோதுகின்றன. அவை கூறும் வாழ்வியல் அறன்கள் அக்காலத்திற்கு மட்டுமின்றி காலங்கடந்தும் மனித இனத்திற்கு வழிகாட்டுகின்றன. அவ்வகையில் அகநானூறு, காலங் கடந்தும் மனித வாழ்க்கைக்குரிய வாழ்வியல் அறன்களை எடுத்துரைக்கின்றது. அகநானூறு, மொழியும் வாழ்வியல் அறன்களை விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
வாழ்வியல் அறன்கள்
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தனக்கென சிலவற்றை வகுத்துக் கொண்டு, மற்றவர்களும் தமது எதிர்பார்ப்புக்குள் அடங்க வேண்டும் என எண்ணுகின்றனர். அவ்வெதிர்பார்ப்பு தகர்க்கப்பட்டு பிரச்சினையாகும்போது வாழ்வியல் அறன் அங்கு தேவைப்படுகிறது. அங்ஙனம் தேவைப்படுகின்ற அறக்கருத்துக்கள் அனைத்துச் சமுதாய மக்களுக்கும் ஏற்புடையதாக இருத்தல் வேண்டும் (இரா சந்திரசேகரன், (ப.ஆ.), தமிழ் இலக்கியம் வாழ்வியலறம், ப. 21). மனித வாழ்வில் கடைபிடிக்க வேண்டியன இன்னவை, வேண்டாதன இன்னவை என்று ஆய்ந்து கண்டு உரைத்தலே வாழ்வியல் அறன் (இரா சந்திரசேகரன், (ப.ஆ.), தமிழ் இலக்கியம் வாழ்வியலறம், ப. 146). ஆகும் என்ற கருத்திற்கேற்ப அகநானூறு, மக்கட் சமுதாயம் நீடு நன்னெறியில் வாழ்வதற்கான வாழ்வியல் அறன்களைத் தொகுத்துரைக்கின்றது.
பழந்தமிழர்கள் அறத்தின் பால் அழுந்திய நெஞ்சுடையராவர். புலவர்கள் மக்கள் பின்பற்றி வாழ வேண்டிய வாழ்வியல் அறன்களை வரையறுத்துக் கூறினர். அறத்தின் காவலர்களாகிய அச்சான்றோர்கள் வழங்கிய பொன்மொழிகளாகிய அறநெறிகள் சங்க இலக்கியங்களுள் சிறப்பாகக் கருதப்பெறும் அகம், புறம் இரண்டிலும் மல்கிக் கிடக்கின்றன. இவற்றில் இடம்பெறும் வாழ்வியல் அறன்களைப் பின்வருமாறு பகுக்கலாம். அவையாவன:
1. சமுதாய வாழ்வியலறன்கள்
2. குடும்ப வாழ்வியல் அறன்கள்
என்பனவாகும்.
சமுதாய வாழ்வியல் அறன்கள்
சமுதாயம் – விளக்கம்
சமுதாயம் எனும் சொல்லிற்கு ஆறு வகையான பொருள்களைத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது. அவை, ‘‘மக்களின் திரள், பொருளின் திரள், கோயிலின் நிருவாக அதிகாரிகளின் கூட்டம், பொதுவானது பொதுவாகவேணும் அவரவர்க்குப் பங்கு பிரித்தேனும் அனுபவிக்கப்படும் ஊர்ப் பொதுச்சொத்து, உடன்படிக்கை’’ (ஆ. வேலுப்பிள்ளை, தமிழ் லெக்சிகன், தொகுதி,3,ப.1300) என்பனவாகும்.
பண்டைக் காலத்தில் சமுதாயம் எனும் பொருளால் ‘மன்பதை’ எனும் சொல் கையாளப்படுவதை ‘‘மன்பதை காக்கும் நின் புரைமை’’ (புறநானூறு, பாடல் எண், 210) எனப் புறநானூற்றுப் பாடல்வழி அறியமுடிகின்றது.
தமிழ்-தமிழ்-அகரமுதலி மேற்குறித்த ஆறு பொருள்களோடு ‘மன்பதை’ என்பதையும் சேர;த்துக் கூறுகின்றது (மு. சண்முகம்பிள்ளை, தமிழ்-தமிழ்-அகரமுதலி, ப. 201)
செந்தமிழ் அகராதி, ‘‘மக்களின் திரள் பொதுவானது’’ (ந.சி. கந்தையா, செந்தமிழ் அகராதி, ப. 244) என இருபொருள்களை மட்டுமே தருகிறது. இவற்றிலிருந்து பல இனமக்களின் கூட்டமைப்பே ‘சமுதாயம்’ என்ற சொல் குறிப்பதை அறியலாம்.
மனிதன் தொடக்கத்தில் தனித்து வாழும் இயல்பு கொண்டவனாகத் திகழ்ந்தான். பின்னர் பாதுகாப்புக் கருதி மனிதர்கள் ஒன்று சேர்ந்து கூட்டம் கூட்டமாக வாழும்முறை தோன்றியபோதுதான், ‘சமுதாயம்’ என்ற ஒரு நிலை உருவானது. கட்டுப்பாடின்றித் திரிந்த நிலைமாறி மக்கள் கூட்டம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய சமுதாயமாக மாறிய நிலையில் அது தனக்கென ஒரு சில வாழ்க்கைப் பண்புகளையும், நெறிகளையும் கொண்டதாகத் திகழத் தொடங்கியது.
தொடக்கத்தில் உணர்வு நிலையில் வாழத் தொடங்கிய மக்கள் கூட்டம் பின்னர் பகுத்தறியும் ஆற்றலால், அறிவுநிலையில் வாழத் தலைப்பட்டபோது, சமுதாயம் என்ற ஒரு முழுஅமைப்பு உருவானது. ‘‘தனிமனிதனின் ஒன்றுபட்ட கூட்டமைப்பே சமுதாயம் எனப்படும்’’ (ப. மகாலிங்கம், திரு.வி.க.வும் காந்தியக் கோட்பாடுகளும், ப. 22) என்னும் கருத்தும் ‘சமுதாயம்’ என்ற சொல்லுககும் அதன் தோற்றத்திற்கும் விளக்கம் தருவனவாய் அமைந்துள்ளன. சமுதாயம் மேன்மையடைய அகநானூறு வாழ்வியல் அறன்களைப் பகுத்துரைத்துள்ளது.
சமுதாயத்தில் உள்ள மக்கள் ஒழுக்கத்துடன் வாழ்ந்து உன்னத, ஒழுக்கம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க காலம் கடந்து நின்று பயன் நல்கும் அறக்கருத்துக்களையும் வாழ்வியல் அறன்களாக இவை வலியுறுத்துகின்றன.
பாவ நெறியில் செல்லுதலும், இரத்தலும் கூடாது
ஒருபோதும் யாரும் பிறர; வெறுக்கின்ற பாவ நெறியில் செல்லக் கூடாது. அவ்வாறு செல்லாமல் இருக்கக்கூடிய நல்வாழ்க்கையை வாழ வேண்டும். அதுவே வாழ்வியல் அறம் ஆகும். இவ்வறத்தை மீறி வாழ்தல் கூடாது. மேலும் பிறர் வீட்டு வாயிலில் சென்று இரத்தல் கூடாது. அவ்வாறு இரப்பது இழிவானது. இதனைத் தவிர்க்க வேண்டுமெனில் அறவழியில் பொருளீட்ட வேண்டும் என்று தனது மனைவியிடம் தலைவனானவன் கூறுகின்றான். இத்தகைய வாழ்வியல் அறத்தை,
‘‘அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும் புனையிழை’’ (அகம்., 155)
என்ற அகநானூற்றுப் பாடல் எடுத்தியம்புகின்றது. இதனுடன்,
‘‘ஈயென இரத்தல் இழிந்தன்று’’
என்ற புறநானூற்றுப் பாடல்வரி ஒப்பு நோக்கத்தக்கதாக அமைந்துள்ளது.
குடும்ப வாழ்வியல் அறன்கள்
குடும்பம் அடிப்படைச் சமுதாய அலகாக விளங்குகிறது. ‘‘திருமணத்தின் மூலம் பிணைக்கப்பட்டு ஒரு குடியிருப்பில் கணவன், மனைவி, தாய், தந்தை, மகன், மகள், தம்பி, தங்கை போன்ற உறவு முறைகளுடன் பொதுப்பண்பைப் படைத்தும் காத்தும் வளர்ச்சியுறுவதே குடும்பம்’’ எனப் பிரிட்டானியக் கலைக் களஞ்சியம் விளக்கம் தருகிறது. தமிழ்க் கலைக்களஞ்சியம், ‘‘குடும்பம் எல்லாச் சமூகங்களிலும் உள்ள அடிப்படையான அமைப்பு. குடும்பத்தினின்று உறவு ஏற்படுகிறது. சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் குடும்பம் அடிப்படையானது. இக்குடும்பம் சமுதாய வழக்காலும் சமயத்தாலும் கட்டுப்படுத்தப்படுகிறது (தமிழ்க்களஞ்சியம், தொகுதி, IV ப. 8) எனக் குடும்பத்திற்கு விளக்கம் தருகிறது.
பாஸ்கல் கிஸ்பர்ட் எனும் அறிஞர், ‘‘திருமண அடிப்படையில் உருவாகும் ஓர் உயிரினக் குழுவே குடும்பமாகும். இக்குடும்பம் மக்கட்பேற்றின் மூலம் விரிவடைகிறது. உறவு முறையில் தொடர்பைத் தெளிவுபடுத்துகிறது. பண்பாட்டு அமைப்பைக் காத்து வருகிறது. உறுப்பினர்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்குரிய வழிகளை வகுக்கிறது’’(ஜெ.நாராயணன் (மொ.பெ.ஆ.), சமூகவியலின் அடிப்படைக் கோட்பாடுகள், ப. 99) என்று குடும்பம் பற்றி எடுத்துரைக்கிறார்.
குடும்பத்தின் தோற்றம் பற்றி எங்கெல்ஸ், ‘‘ஒருதார மணமே குடும்பத் தோற்றத்தின் அடிப்படையாக அமைகின்றது. குடும்ப வாழ்வின் தோற்றத்தில்தான் சமூக வாழ்வு நெறியுன் அடித்தளம் அமைகிறது. சமூகம் நெறியுடன் விரிவடையக் குடும்பமே காரணமாகிறது’’ (எங்கெல்ஸ் பிரடரிக், குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், ப. 179) என்று கூறுகின்றார்.
ரெனால்டுஸ்மித், ‘‘குடும்பம் என்பது இரத்த உறவுகளின் வழியாகவோ திருமணம் மூலமாகவோ தொடர்புடைய உறுப்பினர;களை உள்ளடக்கிய சமூகக்குழு என்று பொதுவாகக் கருதப்படுகிறது’’ என்கிறார்.
குடும்பம் சமுதாயக் கட்டமைப்பிற்கு அடிப்படையாக அமைவதுடன் தனிமனிதப் பண்பு வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கும் மனித உறவு மேம்பாட்டிற்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பதனை மேற்கூறிய கருத்துக்கள் தெளிவுறுத்துகின்றன எனலாம். அகநானூறும், புறநானூறும் பண்பட்ட குடும்ப அமைப்பு சிறக்கவும், குடும்பத்தின் வழி சமுதாயத்தில் மக்களிடம் நற்பண்புகள் மேம்படவும் பல நன்னெறிகளை வழங்குகிறது.
அகநானூறு உரைக்கும் குடும்ப வாழ்வியல் அறன்களை,
1. கணவன் – மனைவிக்குரிய இல்லறக் கடமைகள்
2. கணவன் – மனைவிக்குரிய பண்புகள்
என இரண்டு வகையாகப் பகுக்கலாம்.
கணவன், மனைவிக்குரிய இல்லறக் கடமைகள்
திருமணத்திற்குப் பின் தலைவன், தலைவி இருவரும் உடல் உள்ள அளவில் கூடி இன்புற இல்லறத்தில் ஈடுபடத் தொடங்குவதே குடும்ப வாழ்க்கை என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. கணவன், மனைவி இருவரது உறவு மிக உன்னதமானதாகும்.
இல்லறம் நல்லறமாகத் திகழ வேண்டுமெனில் கணவன், மனைவி உறவு நன்கு அமைதல் நலம். இணைபிரியாத கணவன், மனைவி உறவு தான் குடும்ப மகிழ்வின் மகுடமாக விளங்கும். கணவன், மனைவி உறவு சரியாக இருந்தால்தான் இருவருடைய வாழ்க்கையும் அமைதியாக இருக்கும். அவர்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகள் நல்ல குழந்தைகளாகச் சமுதாயத்திற்கு ஏற்ற குழந்தைகளாகப் பிறக்கும். எனவே கணவன், மனைவியிடையே நல்லுறவு அவசியமாகும். அகநானூற்றின் பாடல்கள் கணவன் மனைவி உறவு பற்றியும், அவர்களது இல்லறக் கடமைகள் குறித்;தும் தெளிவுற எடுத்துரைக்கின்றன.
இல்லறக் கடமைகள் நிறைவேறப் பொருள் தேவை. இதனை உணர்ந்த தலைவன் கடமைகளைத் திறம்பட ஆற்றுவதற்குப் பொருட்கருவியை நாடுகிறான். முன்னோர் வைத்த தாயப் பொருளைக் கொண்டு இல்லறம் செய்வதைச் சிறுமையாகக் கருதுகின்றான். அதனால் தலைவன் தனது மனைவியை விட்டுப் பொருளின் பொருட்டுப் பிரிந்து போனான். இஃது அவனது மனைவிக்குப் பிடிக்கவில்லை. இதனை,
‘‘அறன்கடைப்படாஅ வாழ்க்கையும் என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும் புனையிடை என்றுநம்
இருளெர் ஐம்பால் நீவியோரே
நோய்நாம் உழக்குவ மாயினும் தாம்தம்
செய்வினை முடிக்க தோழி’’ (அகம்.,155)
என்று மருதன் இளநாகனார் பாடுகிறார். இப்பாடலில் கணவனது அறவுணர்வும், மான உணர்வும், மிக்கிருப்பதை புலவர் சுட்டி கணவன் இல்லறக் கடமை உணர்ந்து செயல்படல் வேண்டும் என்றும் மொழிவது குறிப்பிடத்தக்கது.
கணவன் தன் மனையாள் மீதும், அவள் பெற்ற குழந்தை மீதும் அன்புடையோனாக இருத்தல் வேண்டும். இவ்வறத்தினை,
‘‘கடவுட கற்பொடு குடிக்கு விளக்காகிய
புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின் நன்னராட்டி’’ (அகம்.184)
என்று அகநானூறு குறிப்பிடுகின்றது. இப்பாடல் கற்புடைய நங்கையே மனை விளக்காவாள். அந்நங்கை பெறும் குழந்தை குடி விளக்காகும் என்பதனையும் உணர;த்தி அவர;களிருவரையும் பாதுகாத்தல் தலைவனாகிய கணவனுக்குரிய கடமையாகும் என நவில்கின்றது.
பொருள் காரணமாகக் கணவன் பிரிகின்றபோது மனைவி அவனைத் தடுத்தல் கூடாது. அவனையும், அவன் வினையையும் வாழ்த்தும் அறிவுடையோளாக இருத்தல் வேண்டும். அஃது அவளது இல்லறக் கடமையுமாகும். இதனை,
‘‘விழுநிதி எளிதினின் எய்துக’’ (அகம். 205)
என்ற தலைவியின் கூற்று வழி அகநானூறு புலப்படுத்துகிறது.
சுற்றத்தினைப் பாதுகாத்தல்
சுற்றத்தினரைக் காப்பது கணவன் மனைவி இருவரது கடமையாகும் இதனை இருவரும் செவ்வையாகச் செய்தல் வேண்டும். தலைவனின் இம்முயற்சிக்குத் தலைவியும் இசைதல் வேண்டும். இவ்வில்லற அறனை,
‘‘இரப்போர் ஏந்துகை நிறையப் புரப்போர்
புலம்பில் உள்ளமொடு புதவதந் துவக்கும்
அரும்பொருள் வேட்டம் எண்ணிக் கறுத்தோர்
சிறுபுன் கிளவிச் செல்லல் பாழ்பட
நல்லிசை தம்வயின் நிறுமார்’’ (அகம். 389)
என மொழிகிறது. சுற்றத்தைக் காக்கவும், கேட்டினை விலக்கவும், பகையை நட்பாக்கவும், ஈத்து உவக்கவும், புகழ் தேடவும் பொருளைத் தேடுகிறான் கணவன். இவ்வாறு செய்தல் அவனது இல்லறக் கடமையாகும் என்று அகநானூறு(99) எடுத்துரைப்பது உன்னற்பாலதாகும்.
விருந்தினரைப் போற்றல்
இல்வாழ்க்கைக் கடமைகளுள் விருந்தோம்புதலை இன்றியமையாத பண்பாகக் கொள்ள வேண்டும். விருந்தோம்பல் எனபது உயர;ந்த பண்பாகும். அதனாற்றான் சங்க காலத்தில் விருந்தினை ஊடற்றணிக்கும் வாயில்களுள் ஒன்று எனக் கூறினர். விருந்தினை இன்முகங்காட்டி இன்சொல்லாடி வரவேற்க வேண்டியிருத்தலின் விருந்து வந்தபோது தலைவி தலைவன் மாட்டுக் கொண்டிருந்த ஊடலை மறைத்து வைத்து, விருந்தோம்புதற்குரிய முறைகளைக் குறித்துத் தலைவனுடன் கலந்து உரையாடி இனிதே முடிப்பாள்.

அகநானூறும் விருந்தோம்பலை இல்லறக் கடமையாக வலியுறுத்துகிறது. பாகன் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான். தலைவன் தன் தோளால் அவனை அணைத்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தான். தலைவி நல்லதொரு விருந்து பெற்றாள். இதனை,
‘‘வரைமருள் மார்பின் அளிப்பனன் முயங்கி
மனைக் கொண்டு புக்கனன் நெடுந்தகை
விருந்தேர் பெற்றனள் திருந்திழை யோளே’’
என அகநானூறு(384) மொழிகிறது.
அகநானூறு மொழிவதைப் போன்றே புறநானூறும் விருந்தோம்பலை இல்லறக் கடமையாக எடுத்துரைப்பது ஒப்பு நோக்கத்தக்கது. இல்லாள் விருந்தினராக வந்த பாணர்களுக்கும் புலவர்களுக்கும் உணவிட்டு, அவர்கள் உண்பதனால் உண்டாகும் ஆரவாரத்தில் மகிழ்ந்து மேலும்மேலும் அத்தகையோருக்கு வேண்டியவற்றை இட்டு உண்பித்தலில் தளராள் என்பதையும், அவள் கணவனும் அவள் போன்றே கை ஓயாமல் ஈயும் பண்பு படைத்தவன் என்பதையும் புறநானூறு எடுத்துக் கூறி (புறம் 334) அதனை இல்லறக் கடமையாகவும வலியுறுத்துகிறது. புறநானூற்றுத் தலைவி நடுகல்லை வணங்கி,
‘‘விருந்தெதிர் பெறுகதில் யானே’’ (புறம்.306)
என்று வேண்டுகிறாள். மேலும் கணவன் இல்லத்தில் இல்லாத போதும் மகளிர் தம் இல்லத்தினை நோக்கி வரும் விருந்தினைப் போற்றினர். தனது மனைவியிடம் ஒரு விருந்தினனைக் காட்டி இவனை என்போல் போற்று என்று கணவன் மொழிகின்றான். இங்ஙனம் பல விருந்N;தாம்பும் நிகழ்ச்சிகளைப் புறநானூறு(395, 101, 191,182) எடுத்தியம்பி அதனை இல்லறக் கடமையாகவும் வலியுறுத்துகிறது.
கணவன் – மனைவிக்குரிய பண்புகள்
கணவன், மனைவி இருவரும் நற்பண்புகள் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இருப்பது இல்லறத்தை நல்லறமாக்கும். கணவனது புறப் போக்குத் தாங்க இயலவில்லையே என்று மனைவி மிக வருந்துகின்றாள். ஏவ்வாற்றானும் அவள் மனம் இசையவில்லை. இதன் விளைவு என்னாகும்? குடும்பம் வறுமைப்படும் குழந்தைகள் மெலிவெய்தும்; இல்லறம் வற்றிப்போம் ஆதலின், அறிவுடைத் தோழி பிடிவாதத் தலைவியை இடித்துரைக்கின்றள். பொறுக்க அறியாமையினால் தெட்ட குடிகளைக் காணாயோ என்று எடுத்துக் காட்டுகின்றனள். பொறுப்பதே மனைவியின் பொறுப்பு என்பது தோழியின் நல்லுரை. இல்லறப் பிணிப்பிற்குப் பொருட் பிணிப்பு ஒரு காரணம் என்பதை,
‘‘பரத்தமை தாங்கலோ இலனென வறிதுநீ
புலத்தல் ஒல்லுமொ மனைகெழு மடந்தை
அதுபுலந் துறைதல் வல்லியோரே
சேய்யோள் நீங்கச் சில்பதம் கொழித்துத்
துhமட்டு உண்டு தமியராகித்
தேமொழிப் புதல்வர் திருங்குமலை சுவைப்ப
வைகுநர் ஆதல் அறிந்தும்
அறியார் அம்மவஃ துடலு மோரே’’ (அகம். 371)
என்ற ஓரம்போகியார் பாடல் அறிவுறுத்துகிறது. கணவன் தவறு செய்கின்றபோது மனைவி பொறுமையாக இருந்து அவனை நல்வழிப்படுத்தல் வேண்டும். அது இல்லறத்தின் மாண்பினை உயர்த்தும் என்று மனைவிக்குரிய பண்பினை இப்பாடல் எடுத்துரைக்கிறது.
தலைவன், தலைவி இருவரும் ஒருவரை ஒருவர; புரிந்து கொணடு வாழ்க்கை நடாத்துதல் வேண்டும். அப்போதுதான் இல்லறம் சிறக்கும். மனைவி இல்லறக் கடமைக்காகத் துன்பத்தினைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும் இதனை,
‘‘அனையகொல் வாழி தோழி மனைய
தாழ்வில் நொச்சி சூழ்வன மலரும்
மவ்வல் மாச்சினை காட்டி
அவ்வள வென்றார் ஆண்டுச்செய் பொருளே’’ (அகம். 23)
என கந்தரத்தனாரின் பாடல் எடுத்தியம்புகிறது. வேற்றூர் செல்லும் தலைவன் தான் திரும்பி வரும் காலத்தைச் சொல்லாற் சொல்லவில்லை. நொச்சி மரத்தின் கிளையில் சுற்றிக் கொண்டு கிடக்கும் முல்லைக் கொடியைத் தலைவிக்குக் காட்டி அங்கு பொருள் ஈட்டுங்காலம் அவ்வளவு நாள் தான் என்றான். முல்லை மலரும் காலமாகிய கார் பருவத்தில் வந்துவிடுவேன் என்பது குறிப்பு காலவளவே பொருளளவு என்று மனைவியின் காதலை மதித்துக் கூறுகின்றான். அதுபோலவே கார்காலம் வரக்கண்டதும் தலைவி கணவன் வரக் காணேன் என்று ஏங்கி விம்மி வெய்துயிர்த்து விழவில்லை. கணவனுக்காக அதனைப் பொறுத்துக் கொள்கிறாள். இவ்வாறு அகநானூறு தலைவன், தலைவியின் பண்புகளைச் சுட்டிக்காட்டி இல்லறம் சிறக்க, கணவன் மனைவி இருவரும் ஒத்த கருத்துடையவராய் இருத்தல் வேண்டும் என இயம்புகிறது.

Series Navigationசில்லறை நோட்டுகாதறுந்த ஊசி
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    This article brings us back to the Sangam literature days and gives us a glimpse of the virtuous family of those days. Though Aganaanooru was written about 2000 years ago yet what was said stands true even today. We are proud that Tamils led a noble and illustrious life even in the days when there were no proper schools and universities. It is a wonder where our ancesters learnt these vitues and noble ways of living! I thank Prof.S.Sethuraman for enlightening us on the Sangam literature through THINNAI.

  2. Avatar
    M. VISWANATHAN says:

    தயவு செய்து அகநானூறு உணர்த்தும் வாழ்வியல் அறன்கள் Books ஐ அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *