அக்னிப்பிரவேசம்-17

This entry is part 17 of 34 in the series 6 ஜனவரி 2013

yandamuri veerendranath

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்குப் போனதுமே “வா.. போய் தங்கையை வீட்டிற்கு அழைத்து வருவோம். சாப்பிட வரச் சொல்லி நீதான் கூப்பிடநணும்” என்று எப்படிப் பேச வேண்டும் என்பதைச் சொல்லித் தந்து திரும்பத் திரும்ப எச்சரித்தான்.

இரண்டு வீடுகள் தாண்டியிருந்தது வசந்தியின் வீடு. இரண்டே இரண்டு குறுகிய அறைகள். சாமான்கள் எல்லாம் தாறுமாறாய் சிதறிக் கிடந்தன. சுத்தமே இல்லை. ‘வசதிகள்  போதாமல் கஷ்டப்படுவார்கள் என்று அழைத்து வரவில்லை’ என்று முதல் இரவில் கணவன் சொன்னபொழுது பணக்காரர்களாய் இருப்பார்கள் என்று ஊகித்துக்கொண்டாள். வீட்டைப் பார்த்தால் நேர்மாறாக இருந்தது..

அவள் யோசனையில் ஆழ்ந்திருந்தபோதே உள்ளேயிருந்து வசந்தி வந்தாள்.. பாவனா அவளைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துவிட்டாள். பத்தாம் வகுப்பு என்றதுமே சின்னப் பெண் என்று நினைத்திருந்தாள். ஆனால் அவள் வயது இருபத்தைந்துக்கு மேலே இருக்கும். கருப்பாய், குள்ளமாய் இருந்தாள். முகத்தில் அங்காங்கே அம்மைத் தழும்புகள் இருந்தன.

பாவனா அவளுக்கு வணக்கம் தெரிவித்தாள். அதனைப் பொருட்படுத்தாமலேயே வசந்தி “அண்ணா!” என்று ஓடிப் போய் பாஸ்கர் ராமமூர்த்தியின் கைகளில் சரிந்தாள். பாவனா சிலையாய் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ திரைப்பட காட்சியைப் போல் இருந்தது அது.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவர்கள் பழையபடி ஆனார்கள். வசந்தி பாவனாவை ஏறயிறங்கப் பார்த்துவிட்டு “உன் பெண்டாட்டி அழகாய்த்தான் இருக்காடா ராமு” என்றாள்.

‘ராமு’ என்ற அழைப்பை அவள் வாயிலிருந்து வந்ததைக் கேட்டதும் பாவனாவின் மனம் சுருக்கென்றது. தன் உணர்வுகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல் “இன்றைக்குச் சாப்பிட வாருங்கள்” என்றாள்.

“என்ன? கோழி பிரியாணி பண்ணியிருக்கிறாயோ?”

அவள் கேலியாய் கேட்கிறாள் என்று எண்ணிக்கொண்டு “இல்லை. கத்தரிக்காய் கறி, தக்காளி ரசம்” என்றாள்.

“அப்படி என்றால் வரமாட்டேன்.”

பாவனா என்ன செய்வது என்று புரியாமல் கணவனைப் பார்த்தாள். “என் மனைவிக்கு புத்தியில்லை. அடுத்தத் தடவை பண்ணுவாள். உனக்காக நல்ல புடவை வாங்கியிருக்கிறேன். வர மாட்டாயா?”

“என்ன புடவை? ஜார்ஜெட்டா?”

“இல்லை. ஷிபான்.”

“வா.. வா. போவோம் வா.” அதை ஒரு ஜோக்காய் எண்ணிக்கொண்டு புறப்பட்டாள் வசந்தி.

அவர்கள் இருவரும் முன்னால் நடந்து போய்க் கொண்டிருக்கையில் பின் தொடர்ந்து போனாள் பாவனா.

******

பாவனாவைப் பரிமாறச் சொல்லிவிட்டு இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள். சமையலைப் பற்றியும், கல்யாணத்தைப் பற்றியும் கிண்டல் அடித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தார்கள்.

புதிதாய் திருமணம் பண்ணிக்கொண்டு வேறு இடத்திற்கு வந்திருக்கும் அவள், அவ்வளவு வருத்தப்படுவாள் என்று யோசித்துப் பார்க்காமல் கேலியாய் பழிப்புக் காட்டியபடி பேசிக் கொண்டிருந்தார்கள். புதுக் குடித்தனதிற்குப் போகும்போது பெண்ணுடன் துணையாய் யாரையாவது ஏன் அனுப்பி வைக்கிறார்கள் என்று புரிந்தது பாவனாவுக்கு.

அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், தானும் போட்டுக்கொண்டு சாப்பிட்டு விட்டு முன் அறைக்கு வந்தாள். தங்கையின் மடியில் தலை வைத்துக் கொண்டு ஊர் வம்பு பேசிக்கொண்டிருந்தான் அருமை அண்ணன். அவள் கோபமாய் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் கெஞ்சுவது போல் சொல்லிக் கொண்டிருந்தான். பக்கத்திலேயே ஷிபான் புடவை இருந்தது.

பாவானா மௌனமாய் உள்ளே போய்விட்டாள்.

தலைப்பை விரித்துப் போட்டுக்கொண்டு தரையில் படுத்துக் கொண்டாள். வெளியே வசந்தியின் கோபம் தணிந்துவிட்டது போலும். சிரிப்புச் சத்தம் காதில் விழுந்து கொண்டிருந்தது.

******

ஆபீசுக்குப் போவது.. வீட்டிற்குத் திரும்பி வருவது.. சாப்பிடுவது.. படுக்கையில் படுப்பது.. ஏதோ பண்ண வேண்டும் என்று நினைப்பது.. பண்ண முடியாமல் போவது.. உறங்கி விடுவது. இதுதான் அவனுடைய தினசரி நிகழ்ச்சி நிரல்.

பாவனா படித்தவள் அல்ல. அவளுக்கு சைக்கோ அனாலிசிஸ் தெரியாது.

வசந்தி தைரியசாலி. வாய்த் துடுக்குதனத்தால் எல்லா காரியங்களையும் சாதித்துக் கொள்வாள். தன்னிடம் இல்லாத தைரியத்தை அவளிடம் கண்ட பாஸ்கர் ராமமூர்த்தி அவளுக்கு அபிமானியாகி விட்டான். அவள் அவனுக்கு ராக்கி கட்டினாள். அவன் அண்ணன் ஆகிவிட்டான். இத்தனை நாளும் தன்னுடைய கைக்குள் அடங்கி இருந்த ‘அண்ணன்’ திருமணம் பண்ணிக்கொள்ளப் போவதாய் சொன்னதும், அதுவும் தான் பெண்ணைப் பார்த்து ஒ.கே. சொல்லாமலேயே அவன் சம்மதித்துவிட்டு வந்ததும் வசந்தியிடம் பொறாமையை ஏற்படுத்தின. அதனால் வந்ததுமே பாவனாவைப் பேச்சினாலேயே ஒரு பதம் பார்த்தாள்.

பாஸ்கர் ராமமூர்த்தி பரமஹம்சாவிடம் போய்விட்டு வந்த பத்து நாட்களுக்குப் பிறகு இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது.

பரமஹம்சா காரில் வந்து கொண்டிருந்தான். ஸ்கூட்டர் ஒன்று அவனைத் தாண்டி முன்னோக்கிப் போயிற்று. அதை பாஸ்கர் ராமமூர்த்தி ஒட்டிக்கொண்டிருந்தான். அவன் பரமஹம்சாவைப் பார்க்கவில்லை. பரமஹம்சாவுக்கு அவனுடைய மூன்று கண்டங்களைப் பற்றி தான் சொன்ன ஜோசியம் நினைவுக்கு வந்தது. காரின் வேகத்தைக் கொஞ்சம் அதிகரித்து அவன் பக்கமாய் ஒட்டிக்கொண்டு போய், முறுவலுடன் ஸ்டீரிங்கை பக்கவாட்டில் திருப்பி, பழையபடி போய்விட்டான்.

இந்த முறை பெரிய விபத்தே நடந்துவிட்டது பாஸ்கர் ராமமூர்த்திக்கு.

பாவனா போய்ச் சேரும்போது ஜெனெரல் வார்டில் கட்டிலில் படுத்திருந்தான் ராமமூர்த்தி. வசந்தியின் கைகளின் முகத்தைப் புதைத்துக் கொண்டு சிறுபிள்ளையைப் போல் அழுது கொண்டிருந்தான்.

அவன் அழுதது விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியால் அல்ல. ஜோசியம் உண்மையாகி, தனக்குச் சொத்து வருமோ வராதோ என்று! அவன் கண்முன்னால் பரமஹம்சாவின் உருவமே நிழலாடிக் கொண்டிருந்தது. நர்ஸ் அவர்களை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.  அந்தச் சமயத்தில் பாவனா அங்கே போனாள்.

“பரவாயில்லையா சிஸ்டர்? ஒன்றும் பயமில்லையே?” பாவனா நர்ஸிடம் கேட்டாள்.

“ஒன்றும் பயப்பட வேண்டியது இல்லை. கால் பிராக்ச்சர் ஆகிவிட்டது. அவ்வளவுதான். அடிபட்டதுமே நினைவு தப்பிவிட்டதால் அப்சர்வேஷனில் வைத்திருக்கிறார்கள். கணவன் மனைவிக்கு அவ்வளவு கூட கட்டுப்பாடு இல்லாவிட்டால் எப்படி?” என்றாள் நர்ஸ்.

‘நான்தான் மனைவி, அவள் தங்கை’ என்று சொல்ல நினைத்த வார்த்தைகள் நாக்கின் நுனியில் வரையில் வந்து நின்றுவிட்டன.

கணவனிடம் போய் “என்னங்க? எப்படி நடந்தது இந்த விபத்து?” என்று கேட்டாள்.

“இப்போ இன்னொரு தடவை பண்ணிக் காட்டச் சொல்கிறாயா? கொஞ்ச நேரம் கண்ணில் படாமல் எங்கேயாவது போய்த் தொலை” என்று கத்தினான். அந்தக் கத்தளைக் கேட்டு எல்லோரும் இந்தப் பக்கமாய் பார்த்தார்கள். பாவனா அவமானத்தால் குன்றிப் போய்விட்டாள்.

“கல்யாணம் பண்ணிக் கொண்டது முதல் சனியன் என் தலையில் ஏறி உட்கார்ந்து விட்டது.” முணுமுணுத்துக் கொண்டிருந்தான் அவன். வசந்தி அவன் தலையை வருடிக் கொடுத்தபடி தேற்றிக் கொண்டிருந்தாள்.

வார்டில் இருந்த நோயாளிகளின் நிலைமை பயங்கரமாய் இருந்தது. உடல் முழுவதும் ரத்த காயம், கட்டுகள். இதையெல்லாம் பார்த்து கணவன் மேலும் பயந்துவிட்டான் என்று எண்ணி, “வசந்தி! ஸ்பெஷல் ரூம்கள் ஏதாவது கிடைக்குமா என்று கேட்டுப் பார்க்கலாமா?” பயந்துகொண்டே மெதுவாக சொன்னாள்.

“போம்மா. சும்மா உட்கார்ந்து இருக்காமல் போய் கேட்டுப் பாரேன்.” பழிப்பது போல் சொன்னாள் வசந்தி.

பாவனா பயந்தவாறு பார்த்தாள். வசந்தி கர்வம் மேலிட சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஏளனம் இருந்தது.

நீச்சல் தெரியாதவனைப் பிடித்து வலுக்கட்டாயமாக தண்ணீரில் தள்ளிவிட்டால் அவனை அறியாமலேயே கையை கால்களை உதைத்துகொண்டு கரையேறுவதற்கு முயற்சி செய்வான். வசந்தியின் அலட்சியமும், ஏளன தோரணையும் பாவனாவின் இதயத்தில் தூங்கிக் கொண்டிருந்த  தைரியத்தைத் தூண்டிவிட்டது.

எழுந்து எதிரே தென்பட்ட டாக்டர் அறைக்குப் போனாள். அதற்கு முன்னால் இருந்த நர்ஸிடம் உதவியைக் கேட்போம் என்பது அவள் உத்தேசம். உள்ளே அவள் இருக்கவில்லை. இளம் டாக்டர் ஒருவன் உட்கார்ந்து சீரியஸாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.

“எஸ்” என்றான் நிமிர்ந்து. ஒரு நிமிஷம் அவன் பார்வை அவள் முகத்தின் மீதே நிலைத்துவிட்டது.

“டாக்டர்!” கூப்பிட்டாள் பாவனா, அவள் குரல் அவளுக்கே கேட்காத அளவுக்கு மெதுவாய்.

“ஊம், என்ன சொல்லுங்கள்.” அதற்குள் தேறிக்கொண்டவன் கேட்டான்.

“என் கணவருக்கு ஸ்பெஷல் ரூம் ஏதாவது கிடைக்குமா என்று..”

“எந்த பெட் பேஷண்ட்?”

அவள் விவரங்களைச் சொன்னாள்.

“அதாவது எமெர்ஜென்சி வார்ட பேஷண்ட். சாதாரணமாய் ஸ்பெஷல் ரூம் யாருக்கும் தர மாட்டாகள். ஆனால் இந்த பில்டிங்கிற்கு அப்பால் ஆர்.எம்.ஒ. அவர்களின் ஆபிஸ் இருக்கு. போய் அங்கே விசாரித்துக் கொள்ளுங்கள்.”

பாவனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த பில்டிங் மாயன் கட்டிய மாளிகையைப் போல் இருந்தது அவளுக்கு.

“டாக்டர்! எனக்கு இந்த ஊர் புதுசு. இந்த ஆஸ்பத்திரி அதைவிட புதுசு. ப்ளீஸ், கொஞ்சம் உதவி பண்ண முடியுமா?” மெதுவாய் கேட்டாள்.

அவள் குரலில் இருந்த உருக்கதிற்குதான் கரைந்து விட்டானோ அல்லது கண்களில் தென்பட்ட தீனம்தான் அவனை அசைத்து விட்டதோ தெரியாது. உடனே எழுந்து கொண்டான். “என்னுடன் வாங்க” என்று வழி நடந்தான்.

தொடர்ந்து காரியங்கள் எல்லாம் வேகமாய் நடந்து முடிந்தன. அரைமணி கழித்து பாஸ்கர் ராமமூர்த்தி ஸ்பெஷல் அறையில் இருந்தான்.

“டாக்டர்!”

போகத் திரும்பிய அவன் பாவனாவின் குரல் கேட்டு நிமிர்ந்தான்.

“தாங்க்யூ டாக்டர்! உங்கள் உதவியை மறக்க மாட்டேன்.” இரு கைகளையும் கூப்பினாள்.

“அதற்கென்ன வந்தது சிஸ்டர்! என்னால் முடிந்ததை செய்தேன். நீங்க இந்த அளவுக்கு நன்றி சொல்லத் தேவை இல்லை. நான் டாக்டர் கூட இல்லை. நாலாவது ஆண்டு மாணவன். வருகிறேன்” என்று கூறி போய்விட்டான்.

அதுவரை நிகழ்ந்ததை, பாவனா அவற்றை திறம்பட நடத்திய விதத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வசந்தி, அவன் போனதுமே “நான் போய் எத்தனையோ தடவை கேட்டபோதும் வாயைத் திறக்கவில்லை அந்த டாக்டர். இவளைப் பார்த்துவிட்டு எப்படி ஐஸ்கட்டியாய்  உருகிவிட்டான் பார்த்தாயா ராமு” என்றாள் வெறுப்புடன்.

பாவனாவின் முகம் நிறமிழந்தது. அவள் அழகானவள்தான். ஆனால் இந்த அபவாதம்?

“அவனோடு அத்தனை நேரம் என்ன பேச்சு? இவ்வளவு நாளாய் வெளியே காலடி எடுத்துவைக்க வாய்ப்பு கிடைக்காமல், இப்போ வெளியே வந்ததும் தொடங்கிவிட்டாயா உன் தேவடியாள் புத்தியை?” என்றான் கோபமாய்.

அவள் திகைத்துப் போய்விட்டாள். கணவனுடைய புதிய அவதாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பதில் சொல்ல மாட்டாள். ஊமைக்கொட்டான் போல் வாயே திறக்க மாட்டாள். நீ போய் நாம் சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கிக்கொண்டு வா” என்றான் அவன்.

வசந்தி போய் பழம் வாங்கி வந்தாள். இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்.

பாவனா வெளியே வந்தாள். லேபர் ரூமிலிருந்து ஒரு தாயின் கதறல் காதில் விழுந்து கொண்டிருந்தது. அவள் வெளி திண்ணையில் இயலாமையுடன் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். அதுவரையிலும் அடக்கி வைத்துக் கொண்டிருந்த அழுகை கட்டுமீறி வெளியேறியது. “அம்மா! அம்மா! என்னை ஏன் பெற்றேடுத்தாய்?” என்று கைகளால் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதாள்.

தான் எந்த லேபர் ரூமுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து அழுது கொண்டு இருக்கிறாளோ, அந்தப் பிரசவ அறையில் இருபது வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்தான் தன்னை இன்று இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ளது என்று பாவனாவுக்குத் தெரியாது.

(தொடரும்)

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 47 இனிமைத் திருவடிவம்ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் கவிதைப் போட்டி
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *