அஞ்சலி: திருமதி கமலா இந்திரஜித் மறைவு

This entry is part 23 of 29 in the series 19 ஜூலை 2015

சுப்ரபாரதிமணியன்

திருமதி கமலா இந்திரஜித் அவர்கள் ஜீன் 28ல் மறைந்தார். மன்னார்குடி புள்ளமங்கலம் கிராமத்தைச் சார்ந்தவர். 200க்கும் மேற்பட்டச் சிறுகதைகளை எழுதியவர். நல்லாசிரியர் விருது பெற்றவர். நல்லாசிரியருக்கு மேலாக உயர்ந்த உள்ளமாகத் திகழ்ந்தவர். புள்ளமங்கலம் கிராம மக்களிடம் அவரின் குடும்பம் கொண்டிருந்த பிணைப்பும் அன்பும் சொல்லி மாளாது.அவரின் மகன் வில்சனும், மருமகளும் கூட எழுத்தாளர்களே . ( வில்சன் 75 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நெய்வேலி புத்தகக் கண்காட்சியை ஒட்டிய தினமணி சிறுகதைப்போட்டியில் வில்சனின் கதைக்கு இரண்டாம் பரிசு- சென்ற வாரச் செய்தி இது ) . அவரின் ஒரு சிறுகதைத் தொகுப்பை ” காவ்யா ” வெளியிட்டுள்ளது. அவரின் குடும்பத்தாருக்கு அஞ்சலி. நாவல் ஒன்றை எழுதுவதைக் கனவாகக் கொண்டிருந்தார். எம்.ஜீ. ஆர் , எம்மெஸ்சுப்புலட்சுமி நூற்றாண்டுகளை ஒட்டி இரு நூல்களை எழுதத் திட்டமிட்டு பணிபுரிந்து வந்தார். இறுதி வரை வாசிப்பும், எழுத்தும் என்று தோய்ந்து கிடந்தார். நோய் அவரை ஓய்வு கொள்ள வைத்து விட்டது.
. அவரின் சிறுகதைத் தொகுப்பிற்கு நான் எழுதிய முன்னுரை கீழே உள்ளது. :
வெகுஜன இதழ்களின் முக்கிய பரிசுக்கதைகள் மூலம் என் கவனத்திற்கு வந்தவர் திருமதி கமலா இந்திரஜித் அவர்கள். இவர் பரிசு பெற்ற ஒரு கதை ரூ 50,000 பரிசை பெற்ற போது ஒவ்வொரு வார்த்தையும் நூறு ரூபாய் சன்மாம் பெற்றிருப்பதாய் கணக்கிட்டு எழுத்தாளனுக்கு கிடைத்த அங்கீகாரத்தை எண்ணிப் பூரித்துப் போயிருக்கிறேன்.சக எழுத்தாளர்கள் பரிசும் பாராட்டும் பெறுவது மகிழ்ச்சியே தருகிறது. (ஆனால் பரிசுக் கதைகளுக்கான் பார்முலாவில் தொடர்ந்து இயங்குகிற எழுத்தாளர்களின் உலகம் உவப்பானதாக இல்லை )

இவரின் 30 ஆண்டுகளுக்கு மேலான ஆசிரியப் பணியும்., தஞ்சை மக்களின் வாழ்க்கையும், கிராமியச் சூழலும் இவரின் படைப்புகளுக்கான களமாக இருக்கின்றன. இதைத்தாண்டி புள்ளமங்கலம் என்ற இவர் வாழும் கிராமத்துச் சூழலும் , பெரிய கடை என்ற பல்பொருள் அங்காடியும் அது சாதாரண மக்களை கொண்டு சேர்க்கிற அம்சங்களும் மிக முக்கியமானவை..

இக்கதைகளில் தஞ்சை மாவட்ட விளிம்பு நிலை மக்களின் வாழக்கைப் பதிவுகளைப் பிரதானமாகச் சொல்லலாம். அவர்களில் பெரும்பான்மியினர் விவசாயக்கூலிகள் சாதாரண விதியின் சதிக்குள்ளும், நிலப்பிரபுத்துவ அடக்குமுறைகளுக்குள்ளும் அடங்கிப்போனவர்கள்.தேர் வடக்கயிறு பிடிக்க அருகதையற்ற வகையில் புறகணிக்கப்பட்டவர்கள். அறுவடைகால நியாயங்களில் முடங்கிப் போனவர்கள்.. வெகு சாதாரணமாக கைவிடப்பட்டவர்கள். ” இந்த வலி எல்லோருக்கு கிடைக்காது. பொம்மனாட்டிகளுக்கு மட்டுந்தா ” என்று பிரசவத்தையும், தாய்மைப் பேற்றையும் மனதில் கொண்டிருப்பவர்கள். கணவன்மார்களின் சிதரவதைகளைப் பொறுத்துக் கொள்பவர்கள். தேனீக்களோ, இயற்கை நியாயங்களோ அவர்களை கேள்வி கேட்கும் என்று திடமாய் நம்புகிறவர்கள். விவாகரத்து கோரினாலும் 60ம் கல்யாணக் கோலங்கள் பார்த்து திருந்தி விடுபவர்கள். உழைப்பை பிரதானமாகக் கொண்டு வாழக்கையை நடத்துபவர்கள். உறவுகள் சொந்தமாக்குகின்றன. சொந்தங்கள் உறவுகளாகின்றன இவர்களுக்கு,

மறுபுறம் கிராமத்தின் கால்நடைகளும், மிருகங்களூம் வெகு லகுவாக இந்தக் கதைகளில் பிரவேசித்து சக மனிதர்களுடன் நடமாடுகின்றன. கால்நடைகளின் மீதான பிரியம் வாழக்கைக்கு வேறொரு அர்த்தம் கொடுக்கிறது. உயிரற்ற பொருட்களும் தரும் புது உபயோக்ஙக்ளும், அணைப்பும் சக மனிதர்களின் பூரிப்பிற்கு இடம் தருகின்றன.இவர்களுக்கு சடங்குகள் பாரங்களாக அமைவதில்லைல் பாரத்தைக் குறைக்கிற அருமருந்துகளாக அமைகின்றன. மனித நேயம், சமய சங்குகளை ஒழித்த அன்பின் வெளிப்பாடு எங்கும் பரவிக்கிடக்கிறது.

பரிசுக்கதைகளின் பார்மலாவிற்கென்று கட்டமைக்கப்பட்ட பல்சமயமனிதர்களின் நோக்கும் மனிதாபிமானமும் எப்போதைக்கும் சகமனிதர்களின் சாதாரண உணர்வுகளை கவ்விப்பிடித்து விடுவதை இதில் உள்ள சிலகதைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ஹேமாவின் அம்மா போன்ற கதைகளில் தலைப்பு முதல் பிறரின் புகழ் பெற்ற கதைகளின் பாதிப்பையும் காண முடிகிறது, கிராமியப்பாடல்கள், குழந்தைப்பாடல்கள் என்று கிராமியச் சூழலில் இணைந்த கதையாடல்கள் கதைகளை வேறு தளங்களுக்கு நகர்த்திச் செல்கின்றன. மூடு பல்லக்கில் உலவும் பல பெண்களின் முகங்களைக் காட்டுகிறார். அல்லது கிழித்தெறிகிறார். ஆழ்கடலென பல்வேறு சமய மனிதர்கள் சக பயணிகளாக மனிதாபம் கொள்ளச் செய்கிறவர்களாக் இருக்கிறார்கள். கதை சொல்வதில் சரளத்தன்மை இருக்கிறது. புழங்கும் மொழியில் தஞ்சையும், பிராமணியமும் மணக்கிறது. இன்னும் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கலாம் என்று பல சமயங்களில் நினைக்கத் தோன்றியது. வெகுஜன இதழ்களின் பிரசுரிப்பும் முக்கிய காரணம்.

பெரியகடையும், புள்ளமங்கலமும் இன்னும் நிறைய செய்திகளையும், அனுபவங்களையும் சுரங்கங்களாகத் தர இருப்பதன் முதல் அடையாளமாக மூடுபல்லக்கில் முகம் விலக்கிப் போகும் பல தஞ்சை மனிதர்களுடன் இக்கதைகளில் பயணிக்கிறோம்.

Series Navigationதறிநாடா நாவலில் பாத்திரப்படைப்புசினிமா பக்கம் – பாகுபலி
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *