அட்டைக் கத்திகள்

This entry is part 3 of 6 in the series 9 ஜூன் 2019

‘குருவே வணக்கம்’ என்ற வாட்ஸ்அப் செய்தி என் தொலைபேசியில் படபடத்தது. குருவா? நானா? இதுவரை என்னை அப்படி யாரும் அழைத்ததில்லையே. இது யாராக இருக்கும்? என் சேமிப்பில் இருக்கும் நண்பர் பட்டியலிலிருந்து வரவில்லை. ஒரு எண்ணிலிருந்து வந்திருக்கிறது. அந்த வாட்ஸ்அப் எண்ணோடு இருந்த புகைப்படத்தை அகல விரித்துப் பார்த்தேன். எங்கேயோ பார்த்த முகமாகத்தான் இருக்கிறது. யாராக இருக்கும்? வாட்ஸ்அப்பிலேயே உரையாடினேன்.

‘குருவா? நானா?’

‘ஆம்’

‘நீங்கள் என் சிஷ்யனா?’

‘ஆம்’

‘ஹ்ஹ்ஹ்ஹ்ஹா. சரி போதும். சொல்லவந்ததைச் சொல்லுங்கள்’

‘நீங்கள் கதைகள் கவிதைகள் எழுதுவீர்களாம். பாரதி சொன்னார். சமீபத்தில் நீங்கள் வெளியிட்ட கதைத் தொகுப்பு ‘வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்’ அற்புதமாம்.’

‘சரி! அதற்கென்ன?’

‘உயர்நிலை மாணவர்களுக்கு கதை எழுதுவது பற்றிய பட்டறை ஒன்றை நடத்தித் தரமுடியுமா?’

‘இதைச் சொல்லத்தான் இவ்வளவு பெரிய சரணமா? சரி செய்கிறேன்.’

‘ரொம்ப நன்றி. அடுத்த ஜூலை மாத இறுதியில் இருக்கலாம். பள்ளியில் பேசிவிட்டு அனைத்தையும் முடிவு செய்கிறேன். கல்வி அமைச்சின் ஆதரவில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.’

‘சரி’

‘உங்களின் பெயர் வங்கிக் கணக்கில் உள்ளபடி, வங்கி கணக்கு எண், அடையாள அட்டை புகைப்பட பிரதி உடன் அனுப்புங்கள்’

‘இதெல்லாம் பட்டறை முடிந்தபிறகுதானே தேவைப்படும். இப்போதே ஏன் கேட்கிறீர்கள்?’

‘கல்வி அமைச்சுக்கு முன்கூட்டியே சொல்ல வேண்டும் குரு. அவர்களிடமிருந்து உங்களுக்கான காசோலையை முன்கூட்டியே பெறவேண்டும்.’

‘நான் ஏற்கனவே பட்டறை நடத்தியிருக்கிறேன். வங்கிக் கணக்கெல்லாம் கேட்டதில்லையே?’

‘பள்ளி தன் சொந்த நிதியிலிருந்து நடத்தியிருக்கலாம். இது கல்வி அமைச்சின் ஏற்பாடு. முன்கூட்டியே அவர்களிடம் தெரிவித்து காசோலையைப் பெறவேண்டும்.’

பட பட பட  பட ட ட ட ட……..  அவர் கேட்ட அத்தனை தகவல்களையும் அனுப்பிவிட்டேன். அடையாள அட்டையின் புகைப்படம். இரண்டு பக்கத்தையும் உடனே எடுத்து அதையும் அனுப்பிவிட்டேன்.

‘தாங்கள் எழுதிய புத்தகங்கள் கதைகள் கவிதைகள் பற்றிய தகவல்கள், வெளியிட்ட தேதி உட்பட அனுப்பமுடியுமா? பள்ளிக்குத் தெரிவிக்க வேண்டும்.’

பட பட பட  ட்டட்ட  தட்டினேன். அடுத்த நொடி அனுப்பிவிட்டேன். என் நூல்களின் பட்டியலை ஏற்கனவே ஒருவர் கேட்டிருந்தார். அந்த பட்டியலை அப்படியே அனுப்பிவிட்டேன் சில விடுபட்ட நூல்களையும் சேர்த்து.

கிடைத்தும் பாராட்டி ஏதாவது சொல்வார். ‘இப்போது புரிகிறதா? ஏன் உங்களை குருவென்று அழைத்தேனென்று’ என்று ஒரு செய்தியை அனுப்புவார். அதைப்பார்த்து நான் புலகாங்கிதம் அடையலாம் என்றும் எதிர்பார்த்தேன். ‘அடுத்தவர் புகழ்வதை விரும்பமாட்டேன்’ என்று நான் அடிக்கடி சொல்வேன். அதுவே கூட என்னுள் வளர்ந்துவிட்ட ஒரு வக்கிரம் தானே (ஈகோ) அந்த வக்கிரம் எனக்கு இருந்தது. அதை நானே உணர்ந்திருக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இத்தனையும் நடந்தது ஒரு நாள் மாலை 7 மணியளவில். அதன்பிறகு அந்த உரையாடல் நின்றுவிட்டது. அவரின் எண்ணை பட்டறை என்ற பெயரில் சேமித்துக் கொண்டேன். இவ்வளவு பேசியிருக்கிறேன். அந்த மனிதனின் பெயரைக் கூட கேட்கவில்லையே.

உட்லண்ட்ஸில் இருக்கும் என் மாணவனின் தாயார் பெயர் பாரதி. அவருக்கு சமீபத்தில் நான் வெளியிட்ட நூல்களைக் கொடுத்திருந்தேன். அவர்தான் என்னைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும். உறுதியாக நம்பினேன். உடனே என்னைப் பற்றிய தகவல்களைச் சொன்னதும் அதனால்தான். அன்று இரவு அவரிடமிருந்து ஒரு செய்தியும் இல்லை. அடுத்த நாள் காலை, மதியம் ஊஹூம் . பதில் இல்லை. கிட்டத்தட்ட அந்த உரையாடலையே மறந்துவிட்டேன். திடீரென்று ஒரு பயம் தொற்றியது. ஏற்கனவே முன்பின் தெரியாத ஒருவருக்கு என் அடையாள அட்டை எண்ணைச் சொன்னதற்கு என் மனைவி கேட்டார். ‘நீங்கள் என்ன சிங்கப்பூரில் இருக்கிறீர்களா? செங்கிப்பட்டியில் இருக்கிறீர்களா? முன்பின் தெரியாதவர்களுக்கு எந்தத் தகவலும் சொல்லக்கூடாது என்று தெரியாதா? இவ்வளவுக்கும் நீங்கள் ஓர் ஆசிரியர். உங்களிடம் படிப்பவன் உருப்பட்டுவிடுவான்’ என்று தாறுமாறாகத் திட்டினார். என் மகனும் சேர்ந்து கொண்டார். ‘ என்னத்தா எவ்வளவு பேசுறீங்க. ஐசி நம்பரெல்லாம் கொடுக்கக்கூடாதுன்னு தெரியாதா?’ என்று என் மனைவி விட்டுவைத்த வார்த்தைகளால் என் மகனுத் திட்டினார். இவ்வளவும் நடந்திருக்கிறது. நான் எப்படி அடையாள அட்டை, வங்கி விபரம், வங்கிக் கணக்கு எண் கணக்கில் உள்ளபடி என் பெயர் இத்தனையும் கொடுத்தேன். அவர் என்ன வாட்ஸ் அப்பிலேயே என்னை மூளைச்சலவை செய்துவிட்டாரா? அதற்காகத்தான் குருவே என்றாரா? பயத்தில் கொஞ்சம் நடுங்கினேன். சுற்றுமுற்றும் தொடக்கநிலை ஒன்று மாணவனைப் போல் பார்த்தேன். உட்லண்ட்ஸில் நான் நின்றுகொண்டிருந்த 601 பிளாக்கின் சுவரில் சாய்ந்து கொண்டேன். என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுகொண்டிருக்கும் அந்த சண்டாளனை வாட்ஸ்அப்பில் அழைத்தேன். தொலைபேசி கூவுகிறது. அவர் எடுக்கவில்லை. மீண்டும்… மீண்டும். வாட்ஸ் அப்பை மாற்றி சாதாரண அழைப்பில் அழைக்கிறேன். மீண்டும்… மீண்டும். பதிலில்லாத அழைப்பு 25 என்று காட்டியது தொலைபேசி. தொலைபேசி கூவாமல் இருந்தாலும் பரவாயில்லை. கூவுகிறது. ஆனால் எடுக்கவில்லை. எடுக்காதபோது தொலைபேசி றெக்கையைக் கட்டிக்கொண்டு அவன் மண்டையில் கொட்டுவதுபோல் ஒரு செயலியைக் கண்டுபிடிக்கலாம் விஞ்ஞானிகள். அந்த திக்குமுக்கு நிலையிலும் என் ஜோக்கை நானே ரசித்து சிரித்துக் கொண்டேன். இப்போது என்ன செய்யலாம்? நேரம் மாலை 5. எனக்கு 5.30 க்கு ஒரு வகுப்பு இருக்கிறது. மாணவனுக்கு தகவல் சொன்னேன். நாளை மாலை 5.30க்கு வருகிறேன். அந்த மாணவன் ‘சரி’ என்றது ஆறுதலாக இருந்தது. என் மாணவனின் தாயார் பாரதியை அழைத்தேன்.  அவர் இப்போது வேலையில் இருப்பார். தொலைபேசியைத் தொடமாட்டார்.  தெரியும். ஆனாலும் அழைத்தேன். தொடவில்லை. வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினேன். ‘யாரிடமாவது என் பெயர் மற்றும் என் தொலைபேசி, என் நூல்கள் பற்றிய தகவல்களைச் சொன்னீர்களா?’ அந்தக் கேள்வியைப் படித்ததும் உடனே அழைத்தார். ‘எனக்கு அப்படியெல்லாம் நண்பர்கள் இல்லை சார். நீங்கள் புத்தகங்கள் தந்தீர்கள். வாங்கி வைத்தேன். அதைப்பற்றி யாரும் என்னிடம் கேட்கவுமில்லை. உங்களைப் பற்றிய தகவலையோ உங்கள் தொலைபேசி எண்ணையோ நான் யாருக்கும் தரவுமில்லை. அப்படியே யாரும் கேட்டால் சத்தியமாக உங்கள் அனுமதியின்றி கொடுக்கமாட்டேன் சார்.’ அந்த ‘சார்’ என்ற சொல் லேசாக உடைந்தது. அவர் கலங்குகிறார். ‘சார் ஏதும் பிரச்சினையா?’ என் முட்டாள்தனத்தை அவரிடம் காட்டிக் கொள்ளக் கூடாது. ‘பரவாயில்லை எனக்குத் தெரிந்த இன்னொரு பாரதி இருக்கிறார். அவர் தந்திருக்கலாம்’ என்று சமாதானப்படுத்தி தொலைபேசியைத் துண்டித்தேன். மீண்டும் அந்த சண்டாளனை அழைத்தேன். கூவுகிறது. குரல் இல்லை. மீண்டும்…. மீண்டும்…அடப்பாவி எங்கேஇருக்கிறான்? செத்துவிட்டானா? திட்டித் தீர்த்தேன். மனைவியிடமோ மகனிடமோ இதைப்பற்றிப் பேசவே பயந்தேன். எத்தனை தடவைதான் கேனையனாவது. வங்கியை அழைத்து நிலமையைச் சொல்லி யோசனை கேட்கலாமே. அழைத்தேன். ‘ஏன் காத்திருக்கிறீர்கள். வலைத்தளம் செல்லுங்கள் என்று வலைத்தள முகவரியை சொன்னது ஒரு குரல். இந்தப் பிரச்சினையா அந்தப் பிரச்சினையா 1ஐப் பிதுக்கு 2ஐப் பிதுக்கு என்றெல்லாம் சொல்லிவிட்டு மற்ற தகவல்களுக்கு சைபரைப் பிதுக்கு என்று சொன்னது. பிதுக்கினேன். பதிவு செய்யப்பட்ட ஓர் இசை கேட்டது. ‘எல்லாரும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். காத்திருக்கவும்’ என்று அறிவுரை வழங்கியது ஒரு குரல். ஒரு நிமிடம்தான் ஓடியிருக்கிறது. பத்து மணிநேரம் கடந்ததுபோல் இருக்கிறது. அந்த இசை இப்போது நின்றுவிட்டது. அந்தப் பெண்ணின் குரல் கேட்கிறது. ‘உங்களுக்கு நான் எப்படி உதவி செய்யவேண்டும்?’  ‘ஓர் ஆலோசனை கேட்கத்தான் அழைத்தேன். முகம் தெரியாத ஒரு நபரிடம் என்  வங்கிக் கணக்கு எண் உட்பட தனிப்பட்ட தகவல்கள் கொடுத்துவிட்டேன். பயமாக இருக்கிறது. இப்போது என்ன செய்யலாம்?’ ‘தொடருமுன் உங்கள் பெயரைச் சொல்லுங்கள்’. சொன்னேன். ‘உங்கள் அடையாள அட்டை எண்?’ சொன்னேன். ‘சரி. விபரமாகச் சொல்லுங்கள்.’ பட்டறையில் தொடங்கி கல்வி அமைச்சுக்குத் தேவையாம் என்பது வரை சொல்லிவிட்டேன். ‘முன்பின் தெரியாதவர்களிடம் உங்கள் தகவல்களைச் சொல்லக்கூடாது என்பது தெரியாதா?’ எத்தனை பேர் எத்தனை  தடவைதான் கேட்பீங்க. சே! நான் தொடர்ந்தேன். ‘ஏதோ கொடுத்துவிட்டேன். என் அனுமதியின்றி என் கணக்கு எண்ணையும் என் அடையாள அட்டை எண்ணையும் வைத்துக் கொண்டு அவன் என்ன செய்ய முடியும் மேடம்? உண்மையிலேயே தெரியாமல்தான் கேட்கிறேன்.’ ‘என்ன சார் இப்படிக் கேட்கிறீர்கள். குற்றச் செயல்களில் கிடைத்த பணத்தை உங்கள் கணக்கில் மாற்றிவிட முடியும். பின் சம்பந்தமில்லாத நபர் உங்களை அழைத்து தவறாகப் போட்டுவிட்டேன். அந்தக் காசை இந்தக் கணக்குக்கு அனுப்புங்கள் என்று ஒரு வங்கி எண்ணைத் தருவார். நீங்களும் அனுப்பிவிடுவீர்கள். அந்தக் குற்றவாளி பிடிபட்டால் அவனிடம் உங்கள் வங்கிக் கணக்கு இருக்கும். உங்களுக்கு சம்பந்தமில்லை என்று நீங்கள் வாதாடலாம். ஆதாரமில்லாததால் நீங்கள் தப்பித்தும் விடலாம். இந்த நெஞ்சுவலி உங்களுக்குத் தேவையா?’ ‘முட்டாள்தனமாகச் செய்துவிட்டேன். இப்போது நான் என்ன செய்வது?.’ ‘மணி 5.30 இனிமேல் வங்கி இயங்காது. நாளை காலை 8.30க்கு அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் செல்லுங்கள். நடந்ததைச் சொல்லுங்கள். உடனே உங்கள் வங்கிக் கணக்கை முறித்துவிடுங்கள். வேறொரு கணக்கைத் துவங்குங்கள். அந்தப் பழைய கணக்கு இனி செல்லாது.  சரி. கணக்கில் காசு இருக்கிறதா?’ ‘கொஞ்சம் தான் இருக்கிறது. சற்றுமுன்வரை அந்தக் காசு பத்திரமாய்த்தான் இருந்தது.’ ‘சரி மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். எதற்கும் அருகிலுள்ள அக்கம்பக்கக் காவல் நிலையம் சென்று முறைப்படி ஒரு புகாரைப் பதிவு செய்யுங்கள்.’ ‘ரொம்ப நன்றி மேடம்.’ தொலைபேசி துண்டிக்கப்பட்டது. நிமிர்ந்தேன். எதிரே வயதான  சீனத்தம்பதிகள் வந்தார்கள். ‘அய்யா அருகில் ஏதேனும் காவல் நிலையம் இருக்கிறதா?’ ‘என்ன சார் என்ன நடந்தது? ஏன் கலவரமாக இருக்கிறீர்கள்? என்ன நடந்தது? நான் 40 ஆண்டுகளாக இங்குதான் இருக்கிறேன். ஏதாவது தப்பு நடந்திருந்தால் சொல்லுங்கள். நான் உதவி செய்கிறேன்.’ சிங்கப்பூர் இந்த அளவு உயர்ந்ததற்குக் காரணம் இவர்கள் போன்ற மனிதர்கள்தான் என்று புரிந்தது. அவரிடம் சொன்னேன். ‘அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை ஐயா. காவல் நிலையம் இருக்கிறதென்றால் சொல்லுங்கள். அதுதான் நீங்கள்செய்யும் பெரிய உதவி.’ ‘இதோ இந்தச் சாலையில் செல்லுங்கள். அட்மிரால்டி எம்மார்டி வரும் அதைத் தாண்டுங்கள். ஒரு சாலை குறுக்கிடும். போக்குவரத்து விளக்கு இருக்கும். அதையும் தாண்டி நேராகச் செல்லுங்கள். இப்போது உங்களின் இடக்கைப் பக்கம் பாருங்கள் காவல் நிலையம் தெரியும்’. உடனே என் இரு சக்கர வாகனத்தில் பறந்தேன். அவர் சொன்ன இடம் வந்துவிட்டது. யாரையாவது விசாரிக்கலாமே. முகங்களைத் தேடினேன். இடது பக்கம் திரும்பியபோது மண்டை மண்டையாய் எழுதியிருந்தது ‘காவல் நிலையம்’ என்று.  அட! காவல்நிலையம் முன்தான் நிற்கிறேன். அது நடைபாதை. அந்த இடத்தில் என் வாகனத்தை நிறுத்தக்கூடாது. அதுவும் காவல் நிலையத்துக்கு அருகில். இப்போது அதெல்லாம் பார்க்கமுடியாது. அபராதம் விதித்தாலும் செலுத்துவோம். வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு காவல் நிலையம் பறந்தேன். மீண்டும்  அந்த சண்டாளனை 5 முறை அழைத்தேன். அதே கதைதான் கூவுகிறது. குரல் இல்லை. என்னதான் செய்கிறான் இந்தப் படுபாவி. காவல் நிலையம் சென்றேன். நல்ல வேளை. காத்திருப்பில் யாருமில்லை. இரண்டு அதிகாரிகள் மட்டும் இருந்தார்கள். ஏதோ கோப்புக்குள் நுழைந்து எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள். அருகே சென்றேன். பேசவிடவில்லை. சைகை காட்டி அமரச் சொன்னார். அமர்ந்தேன். 5 நிமிடங்கள் ஓடியது. எனக்கு 50 மணியாகக் கடந்தது. ‘என்ன சேதி’ கேட்டார். விபரம் சொன்னேன். எல்லாவற்றையும் சொன்னேன். அந்த வங்கிப் பெண் சொன்ன தகவலையும் சொன்னேன். ‘எனக்கு பயமாக இருக்கிறது’ என்று சொன்னேன். என் கைத்தொலைபேசி கைநழுவி நங்கென்று விழுந்து நான் சொன்னது உண்மைதான் என்பதை அவருக்கு நிரூபித்தது. ‘எல்லாம் சரி ஏதாவது இழந்து விட்டீர்களா? உங்களுடைய பொருள் எதையேனும் அவர் எடுத்துவிட்டாரா? உங்கள் வங்கிக் கணக்கில் அவர் ஏதும் விளையாடியிருக்கிறாரா?’ ‘இல்லை.’ ‘எதுவுமே அவர் செய்யாத போது உங்கள் பயத்தை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி ஐயா குற்றச்சாட்டு பதுவு செய்ய முடியும்.’ ‘எதுவும் செய்யவில்லை இனிமேல் எதுவும் நடந்துவிடாமல் தடுக்கலாமே.’ ‘சரி அந்த நபரின் புகைப்படத்தைக் காட்டுங்கள். அவரோடு நீங்கள் செய்த உரையாடலையும் காட்டுங்கள். அப்படியே ஸ்க்ரீன் சாட் எடுங்கள். இந்த மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.’ ‘சரி செய்து விடுகிறேன். அதற்கு முன் நீங்கள் ஒரு தடவை பார்த்துவிடுங்கள்.’ என் தொலைபேசியை அவரிடம் நீட்டிக் கொண்டிருக்கும்போது என் தொலைபேசியில் யாரோ அழைக்கிறார்கள். அட! அந்தச் சண்டாளன்தான் அழைக்கிறான். ‘சார் அவன்தான் சார் அழைக்கிறான். அவன்தான் சார் அழைக்கிறான்’ என்றேன். தொலைபேசியைத் திறக்காமல். ‘சரி உடனே பேசுங்கள். ஒலிப்பானை பிதுக்குங்கள். அவன் பேசுவதை நாங்களும் கேட்கிறோம்’. ஒலிப்பானைப் பிதுக்கிவிட்டு தொலைபேசியைத் திறந்தேன். ‘என்ன சிஷ்யரே என்ன ஆச்சு உங்களுக்கு. எனனைப் பதற வைத்துவிட்டீர்களே.’ என்றேன்.  ‘குரு 100 முறை அழைத்திருக்கிறீர்கள். இப்போதுதான் பார்த்தேன். பதறிப் போனேன். உங்களுக்கு ஏதும் ஆபத்தா? பட்டறை நடத்த முடியாதா?அப்படியே இருந்தாலும் பைத்தியம்போல் … மன்னிக்கவும் ஏன் அழைத்தீர்கள் குருவே.’ ‘என்ன விளையாட்றீங்களா? என் ஐசி, வங்கிக் கணக்கு என்று எல்லாத் தகவலையும் வாங்கிக் கொண்டு 100 முறை அழைத்தும் தொலைபேசியைத் தொடவில்லை யென்றால் யாருக்குத்தான் பயம் வராது.’ ‘ஹஹ்ஹஹ்ஹா பயந்துவிட்டீர்களா? நீங்கள் ஏன் பாரதியைக் கேட்கக் கூடாது?’ ‘உட்லண்ட்ஸில் இருக்கும் என் மாணவனின் தாயார் பாரதியிடம்தான் சமீபத்தில் என் புத்தகங்களைக் கொடுத்தேன். அவரிடம் கேட்டேன். எந்தத் தகவலும் யாருக்கும் சொல்லவில்லை என்கிறார்’. ‘குரு நான் சொன்னது பாஸ்கர் பாரதி குரு. உங்கள் மகளின் தோழி. ஓவன் ரோட்டில் இருக்கிறார். அவருடைய தொலைபேசி எண் இருக்கிறதா? அல்லது தரவா?’ நான் பேசிக்கோண்டே காவலரைப் பார்த்தேன். அவர் நெற்றியில் அடித்துக் கொண்டு ஓலிப்பானை மூடிவிட்டி வெளியே போய்ப் பேசுங்கள் என்று சைகை காண்பித்தார். ‘வந்துட்டாங்கெ புகார்கொடுக்க’ அவர் மனசுக்குள் சொன்னது என் காதில் விழுந்தது. உடனே வெளியேறினேன். இன்னும் 5 நிமிடம் தாண்டியிருந்தால் காவல் துறை அவரை அழைத்திருக்கும். எல்லாமே திசை திரும்பியிருக்கும். நான் இப்போது காவல் நிலையத்தில் இருப்பது அந்த சண்டாளனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. நானே தொடர்ந்தேன். ‘சரி உங்கள் பெயர் என்ன? அப்போதே கேட்டிருக்க வேண்டும். இப்போது கேட்கிறேன்.’  ‘விஜய் . பாரதியிடம் ‘விஜய்’ என்று சொல்லுங்கள். நான் ஸ்டுடியோவில் இருந்தேன். தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பதுதான் என் வேலை. வசந்தத்தில் வந்த ‘ஏய்’ நாடகம் பார்த்திருக்கிறீர்களா? அது என் தயாரிப்புதான். 10 மணி நேரம் ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பில் இருந்தேன். இடையே தொலைபேசியைத் தொடமாட்டேன். அந்த நேரத்தில் நீங்கள அழைத்திருக்கிறீர்கள். நான் என்ன செய்ய?’ அந்தக் காவலர் ‘இன்னும் தள்ளிப்போய்ப் பேசித் தொலை’ என்று சப்தமிட்டார். துண்டித்துவிட்டால் மீண்டும் இந்த சண்டாளனைப் பிடிக்கமுடியாது. பேசிக்கோண்டே நகர்ந்தேன். ‘பாஸ்கர பாரதியிடம் பேசிவிட்டு பிறகு கூப்பிடுங்கள் குருவே. அடுத்த ஒரு மணிநேரம் தொலைபேசியில் இருப்பேன் குருவே.’ தொலைபேசியைத் துண்டித்துவிட்டு பாஸ்கர பாரதியை அழைத்தேன். ‘நீங்கள்’ என்று ஆரம்பிக்கும்போதே ‘அங்கிள் மன்னித்துவிடுங்கள் அங்கிள். உங்களைப்பற்றிய தகவலை விஜய்யிடம் கொடுத்த உடனேயே உங்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும் தப்புப் பண்ணிட்டேன் அங்கிள். உங்களுக்குத் தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்தி விட்டேன். விஜய் அழகாகச் செய்வார் அங்கிள். நீங்கள் அந்தப் பட்டறையை கண்டிப்பாக நடத்த வேண்டும். நானும் வருவேன்.’ ‘சரி பாரதி . பட்டறையில் சந்திப்போம்.’ என்று சொல்லிவிட்டு விஜயை அழைத்தேன். ஆம் இனிமேல் அவன் சண்டாளன் இல்லை. மின்னல் வேகத்தில் தொலைபேசியை எடுத்தான். பாரதியிடம் பேசிவிட்டேன்.  நன்றி. எல்லாம் தெரிந்துகொண்டேன். பட்டறையில் சந்திப்போம்.

ஓர் இரும்புக் கத்தி அட்டைக் கத்தியாகிவிட்டது.

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationபொடியாஉரசும் நிழல்கள்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *