அட கல்யாணமேதான் !

author
2
1 minute, 51 seconds Read
This entry is part 11 of 12 in the series 17 ஜனவரி 2021

  சோம. அழகு                                                         

            அந்தச் சம்பவம் எனக்கும் இனிதே அரங்கேறியாயிற்று. அதான்… அந்த… ‘ஒரு தெரிவை தன்னை விட கொஞ்சமே வயது கூடிய ஓர் ஆண்மகனை முறைப்படி தத்தெடுக்கும் வைபவம் !’ கல்யாணம், திருமணம் என்றெல்லாம் கூட நீங்கள் பெயரிட்டு இருக்கிறீர்களே ! அதேதான் ! “ஓ ! என்னமோ ‘அட கல்யாணமே!’னு பகடியா கல்யாண ஆரவாரங்களைக் கிண்டல் செய்து ஒரு காலத்தில் எழுதின? இப்போ எப்படி? தடபுடலா விசேடங்கள் முடிஞ்சுதா?” என அவசரமும் ஆர்வமுமாய்க் கேட்போருக்கு –  ‘இந்தக் கட்டுப்பட்டி ஆட்டுமந்தைச் சமூகம் வழங்க முடியாத நியாயத்தை கொரோனா எனக்கு வரமாக வழங்கியது’. கருப்பும் சிவப்புமே எனக்கான நிறங்களாகிப் போன பின்பு, (வெண்நுரை பொங்கி ஆர்ப்பரிக்கும் நீலக் கடலின் கரையையும் பசுமையைப் போர்த்தியிருக்கும் மலை முகடுகளையும் புரவியேறிக் கடந்து வந்து என்னைக் கண்டடையும் இளவரசன் தோன்றும்) வண்ண வண்ணக் கனவுகள், வெட்கம், நாணம் போன்ற தண்டக்கருமாந்திரங்கள் எல்லாம் துளியும் வருதில்லை! முழுமையாக என் விருப்பப்படி பதிவுத் திருமணம் அல்லது சுயமரியாதைத் திருமணம் என்பதில்லாமல் போனாலும் கூட, குறைந்த அளவிலான கூட்டத்தோடு நன்றாகவே நடந்தது. ‘குறைந்த’ என்பதில் சுப.உதயகுமார் அங்கிள், பாமரன் அங்கிள், அப்பாவின் மூட்டா (MUTA) பேரியக்கத் தோழர்கள் பெரும்பான்மையாகக் கலந்து கொள்ள இயாலாமல் போன வருத்தம் ஒன்று மட்டுமே எனக்கு ! மற்றபடி பிரச்சனை பிடித்த, சி(சீ)க்கு பிடித்த சில உறவுகளைத் தாமாக வர இயலாமல் செய்த கொரோனாவை மெச்சாமல் இருக்க முடியவில்லை. இதற்கு நன்றி நவிலும் முகமாக, மணமான இரண்டு மாதங்கள் கழித்து கொரோனாவை வீட்டிற்கு அழைத்து வந்து அப்பா, அம்மா, தங்கை, நான் என ஆளுக்கு நான்கு நாட்கள் வீதம் நன்கு கவனித்து மரியாதை செய்து வழியனுப்பி வைத்தோம்.  

                        பொய்யும் வழுவும் தோன்றிய பின்னான (நன்றி – தொல்காப்பியம்) இக்காலத்தில் காதலுக்கோ (இன்றைய பெரும்பாலான காதல் திருமணத்தில் முடிவதில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்) காதல் திருமணத்திற்கோ ஆன மெனெக்கிடுதல் எனக்கு இல்லாமல் போனது இயற்கையாகவே தோன்றியது. போதாக்குறைக்கு சிக்மண்ட் ஃப்ராய்ட் போன்றோரை வாசித்துத் தொலைத்தது வேறு ! எனவே ‘மணமான பின்பு கொண்டவனுடனான காதல் மட்டுமே உண்மையானது என்ற கொள்கைப் (!) பிடிப்பு !’ என்று சுற்றி வளைத்தும் கூறலாம்; அல்லது காதலில் தொபுக்கடீர் எனக் குப்புற அடித்து விழுந்து முசரக்கட்டையைப் பெயர்த்துக் கொள்ளும் பொறுமையும் சாமர்த்தியமும் போதவில்லை என்று நேரடியாகவும் கூறலாம்.

                        சாந்த சொரூபியான (அட, நம்புங்க !) என் முகத்தைப் பார்த்ததும் என் மாமனாருக்கும் மாமியாருக்கும் “இந்தப் பொண்ணுக்கு மூக்கு நுனியில சம்மணம் போட்டுல்ல உக்காந்துட்டு இருக்கும் கோபம்!” என்று அவர்கள் ஜோசியர் சொன்னது அடியோடு மறந்து போய், “இவனை இனி சீராட்டிப் பாராட்டி வளர்த்தெடுக்கச் சரியான பெண் இவளே!” என்று எக்குத்தப்பாகத் தோன்றி வைக்க, என் கலகலப்பான பேச்சைப் பார்த்து மாப்பிள்ளைக்கு பல்பு எரிய, தலைவனைப் பார்த்ததும் எனக்கு முன்னால் என் அப்பாவிற்குத் தலைக்கு மேல் பிரகாசமாய் பல்பு எரிந்து, “இவளைச் சமாளிக்கவே அவதாரம் எடுத்தவர் இவர்ர்ர்” என்று தோன்ற…. அப்புறம் என்ன, ஐயர் யாத்தனர் கரணம் தான் (மீண்டும் தொல்காப்பியம்!). இரு வீட்டாரும் ‘April Fool’ சொல்லிக் கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை ! ஹிஹிஹி…

                        மணமகன் வீட்டார் வந்து பார்த்துச் சம்மதம் சொல்லிச் சென்ற பின், திருமணத்தை நோக்கிய அடுத்த நகர்வாகப் பெண்ணின் பெற்றோர் பெரும்பாலும் உறவினரை மணமகன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று தங்கள் வரன் தேர்வினை உறுதி செய்வது வழக்கம். மாறாக என் விஷயத்தில் பெற்றோருடன் தோழர் பொன்னுராஜ் அங்கிள், கலா ஆன்டி இவர்கள் மட்டுமே சென்றது எனக்கான மனநிறைவு. திருமணப்பதிவின் போதும் என் தரப்பில் சாட்சியாக தோழர் நாகராஜன் அங்கிள் வந்தது மேலும் எனக்கான பெருமை. அப்பாவுக்கும் எனக்கும் தலையாய உறவினர்கள் தோழர்களே என்பது ஈண்டும் நிலைநாட்டப்பெற்றது பேருவகை !

                        புது வாழ்க்கை, புதிய உறவுகள், புதிய தொடக்கம், புது இடம். முழுமையாகத் துடைத்துச் சுத்தம் செய்யப்பட்டதைப் போல் மனம் சுற்றிமுற்றி இருந்த எல்லாவற்றையும் நுட்பமாக ரசிக்கத் துவங்கியது. புதுமையை உள்வாங்கிக் கொள்ளவும் மனமுவந்து பூசிக்கொள்ளவும் இது ஒரு நல்ல உத்தி. கிட்டத்தட்ட மலையடிவாரத்தில் அமையப்பெற்ற, நான் வாக்கப்பட்ட(!) வீடு ரசிப்பதற்கேற்ற சூழலையும் வாய்ப்பையும் உருவாக்கித் தந்தது. நமக்குத்தான் ரசித்துவிட்டுக் கடந்து செல்லும் நல்ல பழக்கமில்லையே ! உடனே அதை இரண்டொரு வரிகளில் வடித்து வடிகட்டிச் செதுக்கிப் பெற்றோருக்கும் உடன்பிறந்த ஜந்து குட்டிக்கும் அனுப்பித் தொலைக்கும் கொடூர வியாதி வாய்த்திருக்கிறதே !

            ‘மலையின் மீது சோம்பிக் கவிந்து கிடந்த முகில் இப்போதுதான் தவழ்ந்து செல்லத் துவங்குகிறது’

            ‘எங்கே மண்ணுக்குள் சென்று விடுவோமோ என்கிற பதட்டம். அந்தப் பயத்தில் தரையைக் கூட நனைத்து விடாத கவனம். சிணு சிணுவென்று சிணுங்கும் இத்தூறலும் ரசிக்கவே செய்கிறது’

            ‘இங்கு அடுப்பங்கரை சாளரத்தில் நான் இடும் மிக்சரை எனக்குப் பழக்கப்பட்ட அதே கடுக் முடுக் சத்தத்துடன் உட்கொள்ளும் அணில் மற்றும் காக்கைகள் புதிய சொந்தங்களாகிப் போனதில் அங்குள்ள அணிலும் புறாவும் இன்னும் என் சாளரத்தில் பசியாறிக் கொண்டிருப்பதாய் நம்ப விழைகிறேன். ஏனோ இதில் misophonia வருவதில்லை’

                        முதன்முறையாக பெண்ணைப் பிரிந்த துக்கம் தொண்டை, மூக்கு, காது என மானாவாரியாக எல்லாவற்றையும் அடைக்க, நான் இப்படியெல்லாம் எழுதி அனுப்பியதைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்தோ என்னவோ, ‘கவித ! கவித !’ என்று வசைபாடினார்கள் என் பெற்றோர். இப்படியே நிறைய எழுதித் தள்ளி ‘கவிதையல்ல !’ என்னும் தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிடுமாறு அப்பாவிடம் இருந்து நேயர் விருப்பம் வேறு ! உணர்ச்சிக் களஞ்சியமான அம்மா கூட நான் மணமாகிச் சென்ற நிதர்சனத்தை நான் எதிர்ப்பார்க்காத பக்குவத்துடன் ஏற்றுக்கொண்டாள். உலகியல் விஷயங்களின் எதார்த்தத்தையும் நடைமுறையின் இயல்புகளையும் அதீத நிதானத்தோடு அணுகும் அப்பாதான் இதை ஏற்றுக் கொள்ள மிகவும் சிரமப்பட்டார்கள் என அம்மாவின் வழியாக அறிந்தேன். என்னைக் கொண்டவனுடைய வீட்டில் விடும் போது, “இதெல்லாம் இயற்கையாய் நடப்பதுதானே? உலக வழக்கம்தானே?” என்பதைப் போன்ற முகபாவத்தோடு வலம் வந்தார்கள். வண்டியேறிய மறு நிமிடம் என் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்து விழுந்தது, அப்பாவிடம் இருந்து. “Slowly it dawns on me that we are going to live in a house without Alagu”. நான் இல்லாது போன தனது அறையை எங்ஙனம் எதிர்கொள்வது எனப் புரியாமல் ‘என்னவோ போல் இருக்கு’ என்று அமைதியாய் முடித்துக் கொண்டாள் தங்கை.

                        அதிகாலைப் புலரியில் நீட்டி முறித்து எழ முயலும் போதெல்லாம் கணப்பொழுது சுருக்கிப் பிடித்து இழுக்கும் பின்னங்கால் தசை, நாள் முழுக்க நின்று தீர்க்கும் அம்மாவை அழைத்து வருகிறது. என் விரல்களின் நுனியில் நிரந்தரமாகக் குடியேறத் துவங்கும் கறைகள், எங்களுக்காகக் களிப்போடு கறையைப் பூசிக்கொண்ட அம்மாவின் விரல்களை நினைவுபடுத்துகிறது. அவளது உள்ளங்கை சொரசொரப்பு பிஞ்சினும் மென்மையாய் இருந்த எனது கைகளுக்கு இன்னும் சில நாட்களில் கடத்தப்படுவதில் மகிழ்ச்சியே !

                        இவற்றிலும் இன்னும் பலவற்றிலும் மனநிறைவு பெறும் சூட்சமத்தையும் கூட மறைமுகமாய்க் கற்றுக் கொடுத்திருக்கிறாள் போலும் ! உணவில் எல்லோரும் தெரிவு செய்தது போக மிச்சமிருப்பதே தனக்கு என்ற விதியைத் தன்னிச்சையாக உருவாக்கி எங்களது நிறைவிலேயே அகமகிழ்வு காணும் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறையவே உண்டு. அம்மாவுக்கு(ம்) மிகவும் பிடித்த இட்லி உப்புமா எங்கள் உபயத்தில்(!) ஒரு போதும் அவளுக்குக் கிட்டியதேயில்லை. “ஒரு மாசமாவது கவனமா சமையல் செஞ்சு கையில சுட்டுக்காம இருந்து காமியேன். பாப்போம்” என்று கூறும்போதெல்லாம் கண்சிமிட்டி புன்னகைத்து வைப்பாள் அம்மா. இப்போது ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு முறையாவது நான் வாங்கும் சுடுபுண், வலியையும் தாண்டி அவளது புன்னகையைச் சூடிச் செல்கிறது. என் சமையல் ரசித்து உண்ணப்படுவதைக் கண்டு கிட்டும் நுண்ணிதின் மகிழச் செய்யும் தருணங்கள் அச்சிறு சிறு காயங்களை மாயமாக்குகின்றன.

                        “இப்போதுதான் கல்யாணம் முடிஞ்சுது. அதுக்குள்ள ஏன் எல்லாத்துக்கும் ‘நான்.. நான்’னு நிக்குற? எல்லா வேலையையும் நான் பாத்துக்குறேன்.. நீ போ” என்று செல்லக் கோபம் காட்டும் போது, அடுக்களையில் நான் நுழையும் நொடியில் இருந்து நான் வெளியேறும் வரை ‘ஜாக்கிரதை’, ‘கவனம்’, ‘பாத்து..’ என ஓராயிரம் முறை பதற்றத் தொனியில் அதட்டும் போது, ‘அய்யய்யோ ! வேண்டாம்.. போதும்’ என நான் கால் பிடித்து விடுகையில் நெளியும் போது, காலை நேர இளவெயிலில் இனிமையாக அளவளாவிக் கொண்டிருக்கும் போது, கார் பயணத்தின் போது ‘வா…கொஞ்ச நேரம் தூங்கு ஊரு போற வரை’ என தம் மடியைத் தந்து தலை கோதி விட்ட போது, மனம் விட்டு என்னிடம் பழைய கதைகளைப் பகிர்ந்து கொண்ட போது… இன்னும் பற்பல தருணங்களிலும் எனது இன்னொரு தாயாகிப் போனார்கள் என் மாமியார். ‘தேள் கொட்டுகிறது’ எனத் தெரிந்தாலும் அதனிடமும் அபத்தமாக அன்பைக் காட்டும் ஜென் குருவைப் போல இந்த உலகின் நடைமுறைக்குச் சற்றும் பொருந்தாத மற்றும் தேவைக்கு அதிகமான நல்ல உள்ளத்தோடு இருக்கும் எனது மாமானார்.

                        சமையல் கலையின் நுணுக்கங்களைக் கற்றுத் தருவது, செம அரட்டை அடிப்பது என என்னைத் தனது குட்டித் தங்கையாகவே பாவிக்கும் சுகன்யா அக்கா. பக்குவமும் நிதானமும் கூடிய உடன் பிறந்த சகோதரன் அமையாத குறையை கார்த்தி அத்தான் ஈடு செய்கிறார்கள். அக்கா மற்றும் அத்தானின் கிண்டலிலும் கேலியிலும் இழையோடும் உரிமை அவர்களை என் மனதிற்கு மிக நெருக்கமாக அழைத்து வந்ததில் வியப்பேதும் இல்லை ! என் தங்கையின் பிரிவாற்றாமையை நான் சற்றும் உணர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே அதே குணாதிசயங்களோடு படைத்து அனுப்பப்பட்ட குரு, என் கொழுந்தன். அனைவரின் கைகளுக்குள்ளும் குட்டி தேவதையாகவே வலம் வரும், நான் பெறாமலேயே எனது மூத்த மகளாகிப் போன, அத்விகா.

                        அப்புறம்… எனது கோணங்கித்தனங்களைச் சகித்துக் கொள்ள, எவ்விதத் தயக்கமும் இன்றி நான் நானாக இருக்க, என்னில் உறைந்திருக்கும் குழந்தைத்தனத்தை முழுமையாக வெளிக்காட்டிக்கொள்ள, என் பெற்றோர் இதற்கென்றே அளவெடுத்துக் கண்டுபிடித்துத் தந்த, எனக்கென அமையப் பெற்ற, பல்வேறு வேலைகளுக்கு இடையில் காலப்போக்கில் என்னை நான் தொலைத்துவிடாமல் பார்த்துக் கொள்ள, எனக்கு எல்லாமுமாகிப் போன என்னவன். “இத வாங்கிக் குடுங்க.. அங்க கூட்டிடுப் போங்க… இப்படியெல்லாம் நொச்சு பண்ணவே மாட்டியா? நீ மட்டும் ஏன் இப்படி இருக்க?” – பாராட்டுப் பத்திரம் வாசித்த என்னவனிடம் புத்தகங்கள் வாங்கித் தரச் சொல்லிப் பெற்றுக் கொண்டேன். இக்கேள்விகள் வந்து விழுந்த போது ஒரு புறம் பெருமை(!) பொங்கி வழிய மறுபுறம் பெரும்பாலான பெண்களுக்குரியதாகிப் போன பண்புகள் என்னில் வேரூன்ற விடாது பார்த்துக் கொண்ட காம்ரேடு தோழர்கள் அமையப் பெற்ற என் சூழலை நினைத்துக் கொண்டேன்.

                        என்னில் எட்டிப் பார்க்கும் பெண்மை கண்டு மகிழும் தருணங்களும் உண்டு… ‘கண்ணும் எழுதேம்’, ‘வெய்துண்டல் அஞ்சுதும்’ என என்னவனில் முழுமையாகக் கரைந்து போகவே விழைகிறேன்… ‘Life is not a fairy tale and am no Disney princess’ என்ற அவதானிப்புடன்.

                        இவையனைத்தும், மணமான புதிதில் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படும் உற்சாகமாக மட்டும் நின்று விடாது என்றே நம்ப விழைகிறேன். அதாவது, பாழாய்ப் போன ஆங்கிலத்தில் தோய்ந்து போன சமூகத்தில் (என்னையும் சேர்த்துதான்) இப்படியும் சொல்லித் தொலைக்கலாமோ – Let me hope things do not get over just as an initial euphoria.

                                                                                                   சோம. அழகு

Series Navigationபல்லுயிர் ஓம்பல்“விச்சுளிப் பாய்ச்சல்” (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    ரு. கலா says:

    இன்றுதான் வாசித்தேன் அழகு.
    ஆனந்த மிகுதியில் கண்கள் நிறைந்தன.
    உனக்கு இப்படித்தான் அமைய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *