அதுதான் சரி !

This entry is part 12 of 13 in the series 15 ஆகஸ்ட் 2021

 

ஜோதிர்லதா கிரிஜா

 

(இதயம் பேசுகிறது இதழில் 1991 இல் வந்த கதை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – இன் “அது என்ன நியாயம்?” எனும் தொகுதியில் இடம் பெற்றது.)

 

      கடந்த சில ஆண்டுகளாய்த் தன்னை அலைக்கழித்து வரும் பிரச்சனையின் தீவிரம் அதன் உச்ச நிலையை அடைந்து விட்டார்ப் போன்று, அன்று காலை விழிப்புக் கொடுத்ததுமே வத்சலாவுக்குத் தலைவலி மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. அடிக்கடி அவள் இரவுகளில் சரியாகத் தூங்காமல் நீண்ட நேரம் படுக்கையில் புரள்வது உண்டுதானென்றாலும், நேற்று வழக்கத்தைக் காட்டிலும் அதிக நேரம் உறக்கம் வராதிருந்து விட்டது. காய்கறிக்கார இளைஞன் வீட்டுப் பிறந்த நாள் விழாவில்  நடந்த நிகழ்ச்சியே தனது அதிக நேர உறக்கமின்மைக்குக் காரணம் என்பது புரிய, அவள் ஆயாசத்துடன் கட்டிலை விட்டு இறங்கினாள்.  இன்னும் உறங்கிக் கொண்டிருந்த கணவனைச் சிந்தனையுடன் பார்த்தாள். ‘பாவம்! இவருக்கும் உள்ளூற ஏக்கம் இருக்கும்…’

      அவளது எண்ணத்தின் தீவிரத்தால் தாக்குண்டவன் போல் சுந்தரலிங்கம் சட்டெனக் கண் விழித்தான்.

       “காலங்கார்த்தால என்ன யோசனை, வத்சலா?”

       தன் முகக் கோடுகளை அவன் கவனித்துவிட்டதை அப்போதுதான் உணர்ந்த அவள், உடனே இயல்பாகி, “தூக்கம் இன்னும் கலையல்லேன்னு தோணுது. அதான் டல்லடிக்கிற மூஞ்சியைப் பார்த்ததும் நான் ஏதோ யோசிக்கிறதா நெனச்சுட்டீங்க …” என்றாள், ஒரு குறுஞ்சிரிப்புடன்.

       “நல்லா சமாளிக்கிறே. எனக்குத் தெரியாதா உம் மனசுல ஓடுற எண்ணம்? நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில சின்னதா ஒரு வாண்டுப் பையனோ பொண்ணோ படுத்துண்டு இல்லியேன்னு உனக்கு ஏக்கம். சரியா?”

      வத்சலா கணத்துக்கும் குறைவான நேரத்துள் நொறுங்கிப் போனவளாய் அப்படியே கட்டிலில் அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்து முகத்தை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு  அழத் தொடங்கினாள். தங்களுக்கு இன்னும் ஒரு குழந்தை பிறக்காதது குறித்து அவள் அவ்வப்போது வருந்துவதுண்டுதான். எனினும்,  அவள் கண் கலங்கி அவன் பார்த்ததுண்டே தவிர, இப்படி அடியோடு நொறுங்கிப் போய்  விம்மல்களால் தோள்கள் அதிர அழுது அவன் கண்டதேயில்லை

       அவன் போர்வையை உதறித் தள்ளிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான். அவளைத் தன் மீது சாத்திக்கொண்டு, “அய்யே! இவ்வளவுதானா நீ? நம்ம விதி அவ்வளவுதான்னு அடிக்கடி எனக்கு ஆறுதல் சொல்லிக்கிட்டிருந்த நீ இப்படி அழுதா நான் எங்கே போறது? சேச்சே! விடு. அதான் என்னிக்கோ தெரிஞ்சு போயிடிச்சே – நமக்கு இந்த ஜென்மத்துல குழந்தைப் பேறு இல்லைங்கிற விஷயம்? விடு, விடு,” என்றவன் உடனே சுதாரித்து, “காலந்தாழ்த்திப் பிறந்தாலும் பிறக்கும்னிருக்காரே டாக்டர்?” என்று முடித்தான்.

       அவள் தன்னை விடுவித்துக்கொண்டு கண்களையும் துடைத்துக்கொண்ட பின் முகத்தைத் திருப்பிக்கொண்டு விடுவிடுவென்று நகர்ந்து போய்விட்டாள்.

       அவன் எழுந்து காலைக்கடன்களை முடிக்கப் பின்புறத்துக்குப் போனான்.  கால் மணிப் பொழுது கழித்து அவன் முகத்து ஈரத்தைத் துடைத்துக்கொண்டு கூடத்துக்கு வந்த போது சாப்பாட்டு மேசையருகே காபிக்கோப்பைகளுடன் வத்சலா அவனுக்காகக் காத்திருந்தாள். இருவரும் மவுனமாகக் காபியைப் பருகத் தொடங்கினார்கள். அவர்களின் அன்றாடச் சடங்குகளின் தொடக்கச் செயல் அது. பெரும்பாலும் காபி குடிக்கும் போது பேச மாட்டார்கள். குடித்து முடித்த பின் அவசியமாய் ஓரிரு சொற் பரிமாற்றம் செய்துகொண்டதன் பிறகு அவன் குளிக்க எழுவான். அவன் சமையற்கட்டுக்குகுள் நுழைவாள்.

       இன்று அந்தச் சடங்கு மீறப்பட்டது. காபியைக் குடித்துவிட்டு எழ முற்பட்ட அவளை அவன் பிடித்து உட்கார வைத்தான்.

       “என்ன இது, வத்சலா, இன்னிக்கு திடீர்னு?”

       அவள் பதில் சொல்லவில்லை. விழிகள் மட்டும் தாழ்ந்துகொண்டன.

       அவன் தொடர்ந்தான்: “எம்மேலதான் தப்பு.  நான் அது மாதிரி சொல்லி இருந்திருக்கக் கூடாது. நான் வாயை மூடிண்டு இருந்திருந்தா நீ அழுதிருக்க மாட்டே …”

       ‘உங்க பார்வையில படும்படியா நான் இன்னிக்கு அழுதுட்டேன்கிறதுதான் வித்தியாசமே ஒழிய, நான் இது மாதிரி வெடிச்சு அழறதில்லைன்னு நீங்க நினைச்சிண்டிருந்தா அது தப்பு’ என்று தனக்குள் அவள் எண்ணிக்கொண்டாள்.

       அவள் எண்ணங்களைப் படித்துவிட்டவன் போல், “தனியா இருக்கிறப்பல்லாம்  இப்படித்தான் விக்கிவிக்கி அழுவியா?” என்றான் அவன்.

       துயரத்தை அடக்கும் முயற்சியில் அவள் இரண்டு தரம் எச்சில் விழுங்கினாள்.

       “இத பாரு, வத்சலா. நமக்கு அந்த பாக்கியம் இல்லைங்கிறது என்னிக்கோ முடிவாயிட்ட விஷயம். அதனால் இனிமே நீ அதைப் பத்தி ஆதங்கப்பட்றதுல அர்த்தமே இல்லே. இப்ப பாரு. நான் அழறேனா? மீறி நடந்தா கடவுளுடைய அருள்தான் காரணமா யிருக்கும்!” – கடைசி வாக்கியத்தை அவசரமாய்ச் சேர்த்துக்கொண்டான்.

       “நீங்க எங்கள மாதிரி அழாட்டியும், மனசுக்குள்ள இருக்குமில்ல? அதுக்குன்னு எங்களப் போலப் பொங்கிப் பொங்கி அழுதாத்தானா? சில சமயங்கள்ள உங்க முகத்துலயும் தான் ஒரு வாட்டம் தெரியுது. கேக்கறப்பல்லாம், ‘ஆஃபீஸ்ல ஒரு ப்ராப்ளம்’னு சொல்லிச் சமாளிக்கிறீங்க. எனக்குத் தெரியாதா என்ன, நீங்க சொல்றது பொய்னு?”

       “சரி, சரி. இன்னிக்கு என்ன சமையல் பண்ணப் போறே?”

       “பேச்சை மாத்தாதீங்க.”

       அவன் சிரித்தான்.

       “கத்திரிக்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் இதை யெல்லாம் போட்டுப் புளி விட்டு வதக்கி ஒரு கறி பண்ணுவியே, அதைப் பண்ணு. எல்லாக் காயும் தோதா அமைஞ்சிருக்கு. அதுக்குன்னே நேத்து வாங்கிண்டு வந்தேன். என்ன?”

       “சாப்பிட்டுச் சாப்பிட்டு என்னத்தைக் கண்டோம்?”

       “அப்படியெல்லாம் விரக்தியாப் பேசாதே, வத்சலா. இன்னிக்கு என்ன ஆச்சு உனக்கு? வெளியில எங்கேயாச்சும் போயிருந்தியா நேத்து? யாரோ ஏதோ கேட்டிருக்காங்க. அதானே?”

       அவள் வியப்புடன் அவனை ஏறிட்டாள் ‘சரியாய்க் கண்டுபிடித்து விட்டாரே!’

       முந்தின நாள் தெருக்கோடியில் இருக்கும், காய்கறிக் கடைக்காரரின் மகளுக்குப் பிறந்த நாள் விழா நடந்தது. பத்து ஆண்டுகளாய் அந்தக் கடையில்தான் அவர்கள் காய் வாங்கி வருகிறார்கள். எனவே, அவன் தன் முதல் குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு அவளை அழைத்திருந்தான். கிட்டத்தட்ட அந்தத் தெருப் பெண்களில் பாதிப் பேருக்கு மேல் விழாவுக்கு வந்திருந்தார்கள். அங்கே, யாருக்கு எத்தனை குழந்தைகள், எங்கு படிக்கிறார்கள், கனவன் என்ன செய்கிறான் போன்ற சம்பிரதாய வம்புப் பேச்சுகள் நிகழ்ந்த போது, ஓர் அம்மாள் இவளைப் பற்றி விசாரிக்க, அப்போது பக்கத்தில் இருந்த இன்னொரு பெண் விசாரித்த பெண்ணை நாசூக்காய்க் கிள்ளி, ‘கேட்க வேண்டாம்’ என்று உணர்த்தியதை வத்சலா கவனித்து விட்டதுதான் அவளது வேதனைக்கு அடிப்படையாகி விட்டது. தான் பரிதாபத்துக்குரிய ஒரு பொருளாகி இருந்தது அவளை அதிகமாய் வருத்திவிட்டது.  தனக்கு வருத்தமாகலாம் என்பதற்காக அந்தப் பெண் கிள்ளி உணர்த்தியதே அவளது வருத்தத்துக்குக் காரணமாகிப் போனது.

       வீட்டுக்குத் திரும்பி வந்ததும் படுக்கையில் விழுந்து புரண்டு ஒரு பாட்டம் அழுது தீர்த்தாள்.

       “என்ன, வத்சலா? பதிலையே காணோம்?”

       “நேத்து நம்ம் காய்கறிக் கடைக்காரர் குழந்தைக்குப் பிறந்த நாள் விழாவாச்சே? நீங்கதான் ரெண்டு நாளுக்கு முந்தியே வர முடியாதுன்னுட்டீங்களே? அதான் நான் போயிட்டு வந்தேன்.”

       “ஓ! ஆமாமா. நேத்து சாயந்தரம் அதானா அவன் காய்க் கடையிலே இல்லே? அவன் தம்பிதான் இருந்தான். நான் மறந்தே போயிட்டேன்…. அது சரி, அங்க என்ன நடந்தது?”

        அவள் துயரம் குரலில் தழுதழுப்பாய்ப் புரள, நடந்ததைச் சொன்னாள்.

       “அட, பயித்தியமே! அதையே ராத்திரி யெல்லாம் யோசிச்சிட்டிருந்தியா? … நான் கை நிறையச் சம்பளம் வாங்கறேன்னு வேலையையும் விட்டுட்டே. விடுன்னு நான் கட்டாயப் படுத்தல்லே. நீயேதான் விட்டே. இப்ப ஆஃபீசுக்குப் போய்வந்துட்டிருந்தாலும் உனக்கு ஒரு மாறுதலா இருக்கும். அதையே நெனச்சுக்கிட்டு நாள் முழுக்க அவஸ்தைப்பட்டுக்கிட்டிருக்க வேணாம், இல்லியா?”

       “இல்லீங்க. வேலையை விட்டதே ஒரு விதத்துல நல்லது. அங்க இருக்கிற  லேடீஸெல்லாம்  என்னைப்  பரிதாபமாப்  பார்ப்பாங்க.   இல்லாத      பொல்லாத கேள்விகள்ளாம் கேப்பாங்க. யோசனை யெல்லாம் சொல்லுவாங்க. அவங்கவங்க வீட்டுக் குழந்தைங்க பண்ற குறும்பு, அடிக்கிற லூட்டி இதையெல்லாம் பத்திப் பேசுறப்ப நான் அசடு வழிஞ்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்கணும். அது இதை விடப் பெரிய அவஸ்தைங்க.”

       அவனுக்கு வாயடைத்துப் போயிற்று – இப்படி ஒரு கோணம் இருப்பதை நினைத்துப் பாராத அதிர்ச்சியால்!

       “சரி, விடு. எந்திரிச்சுப் போய்ச் சமையலைக் கவனி.”

       பெருமூச்சுடன் எழுந்த அவள், “சமைக்கிறதும் சாப்பிட்றதும்தான் இருக்கவே இருக்கே! வேற என்னத்தை உருப்படியா சாதிச்சேன்?” என்று முனகிவிட்டு அடுக்களை நோக்கிப் போனாள். மெதுவாக நடந்து சென்ற தினுசில் வெளிப்பட்ட அவளது சோர்வைப் புரிந்துகொண்ட அவன் ஒரு பெருமூச்சுடன் குளிக்கப் போனான்.

       இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். ஒரே அலுவலகத்தில் இருவரும் வெவ்வேறு அலுவலர்களுக்குத் தனிச் செயலராகப் பணிபுரிந்து வந்தார்கள். பக்கத்துப் பக்கத்து அறை. அடிக்கடி ஒருவரோடு ஒருவர் பேச வேண்டிய கட்டாயங்களும் வாய்ப்புகளும் இருந்தன. ஒத்த மனப்போக்குள்ளவர்கள் தாங்கள் இருவரும் என்பதைக் குறுகிய காலப் பழக்கத்துக்குள்ளேயே இருவரும் கண்டுகொண்டனர். இதனால் நெடிய மாதங்களுக்குத் தங்கள் மனக்கவர்வை ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொள்ளாமலேயே ஊமைத்தனமான ஓர் ஈடுபாடு இருவரிடையேயும் ஏற்பட்டது.

      இருவருடைய அலுவலர்களும் ஒரு நாள் அலுவலகத்துக்கு வரவில்லை. இருவருக்கும் அன்று அதிகமாய்ப் பேசிக்கொள்ள வாய்த்தது. அந்த வாய்ப்பை அவன் பயன்படுத்திக்கொண்டு நாகரிகமான சொற்பிரயோகத்தில் தனது எண்ணத்தை எவ்வகைத் தயக்கமும் இல்லாமல் – இருவருக்குமே உள்ளூற உடன்பாடான ஒரு விஷயம் இன்று வெளிப்படையாய்ப் பேசப்படுகிறது என்கிற உணர்வுடன் – நம்பிக்கையுடனும் தான் – வெளிப்படுத்திய போது கதைகளிலும் சினிமாக்களிலும் வருகிற பெண்களைப் போல் அநாவசியத்துக்கு நாணிக் கோணாமல், ‘இன்னும் ஒரு மாசத்துக்குள்ள நீங்க இந்தப் பேச்சை எடுக்காம இருந்திருந்தா, நானே எடுத்திருப்பேன்,’ என்றாள் அவள் சிரிப்புடன்.

       ‘அதென்ன ஒரு மாசக் கணக்கு?’ என்றான் அவன்.

       ‘இப்ப டிசம்பரா? ஜனவரிக்குள்ள என் கல்யாணத்தை முடிச்சே தீருவேன்னு எங்கப்பா ரெண்டு கால்லயும் நிக்கிறாரு. அதான்.’

       குளித்துக் கொண்டிருந்தாவனுக்குப் பழைய ஞாபகங்கள் வந்தன.  யாருடைய மறுப்பும் முட்டுக்கட்டை போடாத நிலையில் அவர்கள் திருமணம் ஜாம்ஜாமென்று அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்ட மறு மாதமே நிகழ்ந்துவிட்டது. திருமணம் ஆன பின் மூன்று ஆண்டுகள் வரையில் தங்களுக்கு இன்னும் குழந்தைப் பேறு ஏற்படாதது குறித்த கவலை இருவருக்கும் வரவில்லை என்றே சொல்லிவிடலாம். இதற்கிடையே அலுவலகத் தேர்வுகள் எழுதி முதலாவதாக வந்த சுந்தரலிங்கம் கிட்டத்தட்ட அப்போதைய அவனது சம்பளம் போன்று இரட்டிப்பு வருவாய் தந்த பதவி உயர்வை அடைய, வத்சலா தனக்குப் பிடித்த வேலைகளைச் செய்ய ஆசைப்படுவதாய்ச் சொல்லிக்கொண்டு வேலையை விட்டுவிட்டாள். அவனும் அவளைத் தடுக்கவில்லை. அவனுக்குத் தேவை என்றால் மட்டுமே தான் வேலையில் தொடர விரும்புவதாக அவள் சொன்ன போது, அவன் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டான்.

      ஓவியத் துறையில் அவளுக்கு இருந்த ஈடுபாட்டை அவன் அறிந்திருந்தான். தையல் கலையில் இருந்த ஆர்வத்தையும் அறிந்திருந்தான். படிப்பதில், சமுதாயப் பிரச்சினைகள் பர்றிக் கட்டுரைகள் எழுதுவதில், முடிந்த நேரத்தில் முடிந்த துறைகளில் சேவை செய்வது ஆகியவற்றிலும் அவளுக்கு ஆர்வம் இருந்தது. எனவே அவன் மறுப்புச் சொல்லவில்லை. கைநிறையச் சம்பளம் வாங்குபவனுடைய பெண்டாட்டி வேலைக்குப் போய் வருத்திக்கொள்ளுவதை அவன் ஏற்காதவனும் கூட.

       ஆனால், வீட்டில் இருக்கத் தொடங்கிய பின் இரண்டே ஆண்டுகளில் வத்சலாவிடம் கவனிக்கத்தக்க மாற்றம் விளைந்தது. முகத்து மலர்ச்சி குறைந்துகொண்டிருந்தது. எதையோ இழந்தவள் போல் காணப்படலானாள். கண்கள் தமது ஒளியைப் பெரிய அளவில் இழந்துவிட்டன. அவனுக்குக் காரணம் புரிந்தது. ஏனெனில் அவனும் ‘அந்தப் பிரச்சினை’யால் தாக்குண்டிருந்தான். அலுவலக நண்பர்கள் – அவனுக்கு அப்புறம் மணம் செய்து கொண்டவர்கள் எல்லாம் – தாங்கள் அப்பாக்கள் ஆகிவிட்ட மகிழ்ச்சியில், ‘நீ எப்பப்பா அப்பா ஆகப் போறே?’ என்று வெளிப்படையாகவே கேட்கத் தொடங்கி விட்டிருந்தார்கள்.

       ஒரு நாள் அவன் அவள் மனம் புண்படாத முறையில் அந்தப் பேச்சை எடுத்தான்:  ‘என்ன வத்சலா! நேத்து நம்ம ஆஃபீஸ் ரங்கனுக்கு ரெண்டாவது குழந்தை பிறந்திச்சு. பெண் குழந்தை. ‘நீ எப்படா அப்பா ஆகப் போறே? ஒத்திப் போட்டுக்கிட்டு இருக்கியா?’ன்னு கேக்கறான்… ஆமா? நீ எப்ப என்னை அப்பா ஆக்குவே வத்சலா?’

       அவள் இலேசான சிரிப்புடன்,  ‘நீங்க என்னை என்னிக்கு அம்மா ஆக்குவீங்களோ அன்னிக்கு,’ என்று பதில் சொன்னாள். அவன் குபீரென்று சிரித்து,  ‘அதான் படிச்ச பொண்ணுங்கிறது! சரியா மடக்கிட்டியே என்னை! …நான் உன்னை அம்மா ஆக்க முடியல்லியா, இல்லாட்டி நீ என்னை அப்பா ஆக்க முடியல்லியாங்கிறதை நாம காலவிரயம் பண்ணாம தெரிஞ்சுக்கிட்டு ஆவன செய்துக்கணும். காலம் ஓடிட்டே இருக்கு. என்ன சொல்றே?’

         ‘நான் சொல்ல நினைச்சதை நீங்க சொல்லிட்டீங்க. முதல்ல நான் செக்-அப் பண்ணிக்கிறேன். அப்புறம் நீங்க. சரியா? அதான் உங்க ஃப்ரண்ட்ஸ் அகிலா-ஆனந்தன் டாக்டர் தம்பதிங்க இருக்காங்களே. அவங்களையே பார்க்கலாம். தெரிஞ்சவங்களா இருக்கிறது நல்லது,’ என்றாள் அவள்.

       ‘முதல்ல நான் அப்பாய்ண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிடறேன்.’

       சுந்தரலிங்கம் நேரிலேயே போய் நண்பனைப் பார்த்தான். முதலில் வத்சலாவை அவன் மனைவி அகிலா சோதித்து விடட்டுமென்றும், அதன் பின் தான் அவனிடம் வருவதாகவும் சொன்ன அவன், கூடவே இன்னொரு நிபந்தனையும் விதித்தான்.

       ‘இதபாரு, ஆனந்த்! அவ கிட்ட என்ன குறை இருந்தாலும் அதை அவ கிட்ட சொல்லக் கூடாதுன்னு உன் ஒய்ஃப் கிட்ட சொல்லிடு. என்ன? குறை யார் கிட்டன்னு தெரியல்லே. எங்கிட்டயே இருக்கலாம். ஆனா அவ கிட்ட இருக்கிறதா வெளிப்பட்டா, அது அவளுக்குத் தெரியவே கூடாது. எல்லாமே நார்மல்னுதான் சொல்லணும். இல்லாட்டி இடிஞ்சு போயிடுவா. கொஞ்சம் – கொஞ்சமென்ன? நிறையவே – நியாயமான பொண்ணு. அப்புறம் நான் வேற கல்யாணம் பண்ணிக்கணும்னெல்லாம் சொல்ல ஆரம்பிப்பா. என்ன?”

       நண்பன் ஒப்புக்கொண்டான். கருத் தரிப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பதே சோதனையின் முடிவாக இருந்தது! அவனது வேண்டுகோளுக்கு இணங்க அது அவளிடமிருந்து மறைக்கப்பட்டு எல்லாம் சரியாகவே இருப்பதாய் அவளிடம் சொல்லப்பட்டது. அடுத்து அவன் போனான். அவனைப் பொறுத்த வரையில் எந்தக் கோளாறும் இல்லை என்று ஆனந்த் சொல்லிவிட்டான். உண்மையும் அதுதான் என்பதை – ஒரு வேளை அவன் தன்னை அதிர்ச்சிக்கு உட்படுத்தக் கூடாது என்பதற்காகப் பொய் சொல்லுகிறானோ என்கிற எண்ணத்தால் – இன்னொரு டாக்டரிடமும் சென்று சோதித்துக் கொண்டு சுந்தரலிங்கம் அறிந்துகொண்டான்.

       ‘ஆண், பெண் இருருக்குமே எந்தக் கோளாறும் இல்லாதிருக்கும் நிலையிலும் கருத்தரித்தல் என்பது பல்லாண்டுகள் நிகழாதிருக்கும் வாய்ப்பும் உண்டு’ என்று இருவருக்கும் டாக்டர் தம்பதிகள் எடுத்துச் சொன்னார்கள். இதனால் சற்று நம்பிக்கை கொண்டு வத்சலா குழந்தைக்காகக் காத்திருக்கலானாள். ஆனால் வர வர நம்பிக்கை குறைந்துகொண்டே வந்தது. வாடகை மனைவி வாயிலாகக் கணவனின் குழந்தையைப் பெறுவது என்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. அது தானே தாங்கிப் பெற்று வளர்ப்பதற்குச் சமமாகுமா என்ன! தவிர, அந்தப் பெண் பிறிதொரு நேரத்தில் தான் சுமந்து பெற்ற குழந்தையின் மேல் உரிமை கொண்டாட மாட்டாள் என்பதுதான் என்ன நிச்சயம்? இந்த ஏற்பாட்டில் கணவனுடைய குழந்தையை அடைய முடியுமே தவிர, தாய்மையை அடைய முடியாதே என்பதால் அவள் மனத்தில் அது பற்றிய அருவருப்பே எஞ்சியது. தான் தாங்கிப் பெற்ற குழந்தையின் தகப்பன் யார் என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரிய வராமல் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. அதை வெற்றிகரமாய்ச் சாதிக்க முடியாமல் போனால் – எப்படியோ அந்தப் பெண் எந்த ஆணின் குழந்தையைத் தான் சுமக்கிறாள்  என்பதைக் கண்டுபிடித்து விட்டால் – தீர்ந்தது.

      எல்லாவற்றுக்கும் மேலாக, ஓர் ஆண் தன் குழந்தையை வயிற்றில் வாங்கிச் சுமந்து பெற்றுத் தரும் பெண்ணின் மீது பற்றும் பாசமும் கொள்ளுவது இயற்கையே ஆகும். அந்த இயற்கைக்கு மாறாகச் சுந்தரலிங்கம் நடக்க முன்வராவிட்டால், அவனது அன்பு இன்னொரு பெண்ணால் பகிரந்துகொள்ளப்படுமே என்கிற சாத்தியக் கூற்றை அவளால் சகிக்க முடியவில்லை. தன் குழந்தையைத் தாங்கிச் சுமப்பது எந்தப் பெண் என்பதை எப்படியாவது தெரிந்துகொள்ளும் ஆவல் எந்த ஆணுக்கும் ஏற்படுவதும் இயல்பேயாகும். அவன் அவ்வாறு ஆவல் கொள்ளாதவாறு தடுப்பது அவள் கையில் இல்லை.

      இருவரிடமும் குறை இல்லை என்று அவளிடம் சொல்லப்பட்டிருந்த போதிலும், டாக்டருக்குப் புரிபடாத ஏதோ காரணத்தால் தன்னால் கருத்தரிக்க முடியவில்லை என்கிற எண்ணத்தால் இந்தச் சிந்தனைகள் வத்சலாவிடம் தோன்றின. அல்லது, மாறாக, அவளிடம் குறை என்று வைத்துக்கொண்டால், இன்னொரு மனிதனின் துணையில் தான் கருத்தரிப்பது அவள் குடலைப் புரட்டியது. காதல் என்பதற்கு அர்த்தமே இல்லாது போய்விடும் என்று எண்ணினாள். ஒருவர் மீதொருவர் அழியாக் காதல் கொண்டுள்ள நிலையில் மகப்பேறு கிடைக்காதது சகிக்கக்கூடிய துன்பம்தான் என்றும் இந்தச் சிந்தனைகளுக்குப் பிறகு அவளுக்குத் தோன்றியது.

      இன்னொருவரின் சேர்க்கையால் ஒரு பெண்ணுக்குப் பிறந்த குழந்தையை அவள் கணவன் தன் குழந்தையை நேசிப்பது போல் எங்கேயாவது நேசிப்பானா! அல்லது, இன்னொரு பெண்ணின் வயிற்றில் வளர்ந்த தன் கணவனின் குழந்தையைத் தான் பெற்ற குழந்தையை நேசிப்பது போல் எந்தப் பெண்ணாலாவதுதான் நேசிக்க முடியுமா? இரண்டும் போலியானவை என்று ஆழ்ந்த, நெடிய சிந்தனைக்குப் பிறகு வத்சலா உணர்ந்து தெளிந்தாள்.

      இதற்கு என்னதான் வழி?

      அன்று காலை எழுந்ததிலிருந்தே என்றுமில்லாதபடி தலைவலி அவள் மண்டையைப் பிளந்துகொண்டிருந்தது பற்றி அறிந்தால் சுந்தரலிங்கம் டாக்டரைக் கூட்டி வந்து அமர்க்களம் செய்வான் என்பதால் அவனிடம் சொல்லாமல், அவன்  அலுவலகம் சென்ற பிறகு மருந்துக்கடைக்குப் போய் ஒரு தலைவலி மாத்திரை வாங்கிச் சாப்பிட்டாள். கொஞ்சம் தேவலையாயிற்று. மாத்திரையை விழுங்கிவிட்டு அவள் பிற்பகல் காட்சிக்காகத் தொலைக்காட்சிப் பெட்டியை முடுக்கிய போது, கூப்பிடு மணி அழைத்தது. எழுந்து சென்று கதவைத் திறந்தாள். அவள் பள்ளித் தோழி சீதா இடுப்பில் கழுக்மழுக்கென்று ஒரு குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.

       “அட! வா, வா…”

       குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்ததோடு அவளை நோக்கித் தாவவும் செய்தது. அவள் ஆவலுடன் அதை வாங்கிக்கொண்டாள்.

       “இந்தப் பக்கம் வந்தேன். எப்பவோ நீ சொல்லியிருந்த விலாசம் ஞாபகத்துக்கு வந்தது.  வீட்டு வாசல்ல உங்க வீட்டுக்காரர் பேர் உள்ள போர்டைப் பார்த்தேனா? டக்னு வந்து காலிங் பெல்லை அழுத்திட்டேன்.”

       இருவரும் உட்கார்ந்தார்கள்.

       “இது எத்தனையாவது குழந்தை, சீதா?”

       “இது ரெண்டாவது. தினகரன்னு பேரு வெச்சிருக்கேன்.”

       “சூரியனாட்டமே பளீர்னு இருக்கான்!”

       குழந்தை அவள் சொன்னதைப் புரிந்துகொண்டது போல் பொக்கை வாய் திறந்து சிரித்தது. பின் அவள் தோளில் ரொம்ப உரிமையுடன் தலையைச் சாய்த்துக்கொண்டது.

       “அட! உங்கிட்ட சட்னு ஒட்டிட்டானே! பூர்வ ஜென்மத்து பந்தமா! சாதாரணமா, அவங்க அப்பாவைத் தவிர யார் கிட்டயும் போக மாட்டான். உங்கிட்ட தாவி வந்துட்டானே! என்ன சொக்குப் பொடி போட்டே?”

       “தெரியலியே!” என்றபடி வத்சலா குழந்தையை இறுக அணைத்துக்கொண்டாள். அதுவும் பதிலுக்கு அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டது.

       “ஒரு வயசு ஆயிடிச்சில்ல?”

       “இன்னும் ஒரு மாசம் இருக்கு.”

       “என்ன சாப்பிட்றே? ஹாட்டா? கூலா?”

       “எதுவுமே வேணாண்டி. இப்பதான் வழியில அவரு கூல் ட்ரிங்க் வாங்கிக் குடுத்தாரு. சொன்னாக் கேளு. …அது சரி, உன் விஷயம் என்ன? … அதான்! இன்னும் அம்மாவாகாம இருக்கியே? அதைப் பத்தித்தான் கேக்கறேன். தப்பா எடுத்துக்காதடி.”

       வத்சலா கண் கலங்காது சமாளித்தபடி, “எங்க ரெண்டு பேர் கிட்டவும் எந்தக் குறையும் இல்லேன்னுட்டாங்க. கடவுளுடைய அருளுக்காகக் காத்துட்டிருக்கோம்,” என்று சிரித்தாள்.

       “பாத் ரூமுக்குப் போகணுமே?”

       “போயேன். அதோ … சமையலறையைத் தாண்டினா பாத்ரூம்,” என்று எழுந்த அவளை உட்கார்த்திய சீதா, “நீ வர வேணாம். அதான் காட்டிட்டியே. நான் போய்க்குவேன்,” என்றபடி எழுந்து போனாள்.

       குழந்தையுடன் தனித்து விடப்பட்ட வத்சலா அதன் இரு கன்னங்களிலும் மாறி மாறி ஆதங்கத்துடன் முத்தமிட்டாள். குழந்தை வாய்கொள்ளாது சிரித்தான். காணாதது கண்டவள் மாதிரி – அதைத் தன்னுள்ளேயே புதைத்துக்கொள்ள முயல்பவள் போல் – அதை இறுக்கிக்கொண்டு முகத்தோடு முகம் வைத்துக்கொண்டாள். விவரிக்க முடியாத சிலிர்ப்புக்கு ஆளானாள். அப்படியே முழுசாக ஒரு நிமிஷ இணைப்பில் மெய்ம்மறந்து போனாள்.

      கழிவறைக் கதவு திறந்த ஓசையில் கொஞ்சம் தளர்ந்து சுய நினைவை அடைந்தாள். பரவசத்தில் கண்களில் மல்கி யிருந்த நீரை அவசரமாய்த் துடைத்துக்கொண்டாள். சீதா வாய் கொப்பளித்துக் கால் கழுவி வருவதற்குள் இயல்பாக ஆனாள்.

       சற்று நேரம் இருந்த பின் சீதா விடை பெற்றுப் புறப்பட்டுச் சென்றாள். அவளை அனுப்பிவிட்டு வந்து உட்கார்ந்த வத்சலாவிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தது. அந்தக் குழந்தை தன்னிடம் ஒட்டியதும், அதை அணைத்துக் கொஞ்சியதில் தான் சிலிர்ப்புற்றதும் ஒரு புதிய உண்மையை அவளுக்கு உணர்த்தின.

       சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லாத எந்தக் குழந்தையையும் அவளால் நேசித்துப் பரவசமடைய முடியும்; யார் பெற்றதானால் என்ன? யாரும் அதன் மீது சொந்தம் கொண்டாட வாய்ப்பற்ற நிலையில் உள்ள ஒரு குழந்தைதான் இன்று அவளது தேவை. இருவரிடமும் குறை இல்லை என்பதாக அவளிடம் சொல்லப்பட்டிருந்த போதிலும், அப்படியும் குழந்தை பிறக்காமலே போய்விடக் கூடும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்ததால், மிகவும் காலந்தாழ்த்தி ஒரு குழந்தையைக் கையில் ஏந்துவதை விட, இள வயதிலேயே அம்முடிவுக்கு வந்து விடுவதுதான் வருங்காலம் பிரச்சினைகள் அற்று இருக்க உதவும். அவள் செய்யப் போகும் முடிவு நிறைவேறியதன் பிறகு அவளுக்கே ஒன்று பிறந்தால் என்ன? இதுவும் இருந்துவிட்டுப் போகிறது! புதிதாய் ஒன்று சொந்தமாய் வந்தது என்பதால் வளர்த்த பாசம் போய்விடுமா என்ன! …

       ஒரு புதிய உற்சாகமும் தெம்பும் தன்னிடம் தோன்றிவிட்டதாய் உணர்ந்தாள். பரபரப்படைந்தாள். அந்தப் பரபரப்பின் கிளர்ச்சியைத் தாங்க முடியாமல் – மாலை சுந்தரலிங்கம் திரும்பும் வரை கூடக் காத்திருக்க இயலாமல் – அவனோடு தொலைபேசினாள். தன் எண்ணத்தைச் சொன்னாள். தொலைப்பேசியில் அழைத்துப் பேசுகிற அளவுக்கு அவளுக்கு ஏற்பட்ட அவசர உணர்வை எண்ணி அவனுக்கு உள்ளூறச் சிரிப்பு வந்தது. ஆனால் காட்டிக்கொள்ளவில்லை. ‘வீட்டுக்கு வந்து பேசிக் கொள்ளலாமே?’ என்று சொல்ல நினைத்து, அதனால் அவளது உற்சாகம் வடியலாம் என்கிற அச்சத்தில் – அவளது பரவசத்தைக் கெடுக்க விரும்பாமல் – அவன் பொறுமையாய் அவள் சொன்னதை யெல்லாம் கேட்டுக்கொண்டான்.

       உணர்ச்சி வசப்பட்ட குரலில் சொல்லி முடித்த வத்சலா, “நான் இப்பவே அவருக்கு ஃபோன் பண்ணட்டுமாங்க?” என்றாள்.

       “பண்ணு, வத்சலா! இந்த ஐடியா இத்தனை நாளும் நமக்குத் தோணலியே!” என்று அவன்  மேலும் அவளுக்கு உற்சாகமூட்டினான்.

       … வத்சலா தொலைப்பேசி இலக்கத்தைச் சுழற்றினாள். பதிலுக்குக் காத்திருந்தாள்.

        “ஹலோ! உதவும் கரங்களாங்க?”

        “ஆமாங்க…”

        “மிஸ்டர் வித்யாகரோட பேசணுமே?”

        “வித்யாகர்தாங்க பேசறது…”

        “வணக்கங்க … என் பேரு மிஸஸ் வத்சலா சுந்தரலிங்கம். எங்களுக்குக் கல்யாணமாகி ரொம்ப நாளாயிடிச்சு. இன்னும் குழந்தைப் பேறு இல்லே. அதனால, இன்னாருடைய குழந்தைன்னு முத்திரை இல்லாத ஒரு குழந்தையை – அதாவது முழுக்க முழுக்க ஒரு அநாதைக் குழந்தையை – நாளைக்கு யாரும் இது என்னோடதுன்னு சொந்தம் கொண்டாடிட்டு வர முடியாத ஒரு குழந்தையை – நாங்க தத்து எடுத்துக்க விரும்புறோம். அப்படி ஒரு குழந்தை உங்க கிட்ட இருக்குதா?”

       மறுமுனையில் வித்யாகர் சத்தம் போட்டுச் சிரித்தார்.

       “அதுகளுக்குப் பஞ்சமே இல்லேம்மா. நீங்களும் உங்க வீட்டுக்காரருமா நேர்ல வாங்க. வந்து உங்களுக்குப் பிடிச்ச குழந்தையா செலக்ட் பண்ணிக்குங்க. பிறந்து பத்து நாள் கூட ஆகாத குழந்தைங்க கூட இருக்குதுங்க.”

       “இன்னிக்கு சாயந்தரமே அப்ப ரெண்டு பேரும் வர்றோங்க.”

       “வாங்கம்மா.”

       வத்சலா தொலைப்பேசியின் ஒலிவாங்கியைக் கிடத்திவிட்டு ஒரு புதிய விடியலை எதிர்நோக்கும் மனக் கிளர்ச்சியுடன் – வாழ்வில் அதற்கு முன்னர் நுகர்ந்தே அறியாத மகிழ்ச்சியுடனும்தான் – சுந்தரலிங்கத்துக்காகக் காத்திருக்கலானாள்.

…….

(ஆசிரியையின் பின்குறிப்பு:- இந்தக் கதை வெளிவந்ததற்கு இரண்டு நாள்கள் கழித்து, ”உதவும் கரங்கள்” அமைப்பாளர் திரு வித்யாகர் என்னுடன் தொலைபேசினார்: “என்னங்கம்மா! நீங்க பாட்டுக்கு இதயம் பேசுகிறதுல தத்து எடுத்துக்கிறது பத்திக் கதை எழுதிட்டீங்க. ரெண்டு நாளா எக்கச்சக்கமான ஃபோன்கால்ஸ்ங்க. பதில் சொல்லி மாளல்லீங்க. அநாதைக் கொழந்தைங்களை தத்துக் குடுக்கிற யோசனை இருக்குதான்.  ஆனா அதுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் எத்தினியோ இருக்கு. அதெல்லாம் இன்னும் முடிவடையல்லீங்க….” என்றார். (அவர் சொன்னதன் சாரம் இது. சொல்லுக்குச் சொல் நினைவில்லை.) “மன்னிச்சுக்குங்க, மிஸ்டர் வித்யாகர். உங்களுக்குத் தொல்லை குடுத்துட்டேன்,” என்றேன். “சேச்சே! அதெல்லாம் இல்லீங்க. உங்க கதைக்கு எவ்வளவு ரெஸ்பான்ஸ் இருக்கு பாருங்க. அதைச் சொல்றதுக்குத்தான் கூப்பிட்டேன்…” என்றார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என் கதையின் விளைவாக ஓரிண்டு குழந்தைகளுக்காவது நல்வாழ்வு கிடைத்திருக்கக்கூடுமே” என்பதால்தான்.)

       

Series Navigationமகுடம்இறுதிப் படியிலிருந்து  –   பீஷ்மர்  
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *