அத்தியாயம்-9 பகுதி-4 இந்திரபிரஸ்தம் திரௌபதியின் சுயம்வரம்

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

அத்தியாயம்-9

பகுதி-4

இந்திரபிரஸ்தம்

திரௌபதியின் சுயம்வரம்

மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் முதன் முதலில் தோன்றிய இடம் திரௌபதியின் சுயம்வரமண்டபமாகும். இது மகாபாரதத்தின்  மூல நூலிலிருந்து வந்தது என்பதற்கு காரணங்கள் உள்ளன. இருப்பினும் திரௌபதி யாககுண்டத்தில் அக்னியிலிருந்து தோன்றியவள் என்பதையோ அவளுக்கு ஐந்து கணவன்மார்கள் என்பதையோ என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் திரௌபதி துருபத ராஜனின் மகள் என்பதை நம்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதே போல் அவளுடைய சுயம்வரத்தில் மேற்கொள்ளப்பட்ட கடும் வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்று அர்ஜுனன் அவளை மணந்து கொண்டான் என்பதையும் நம்பலாம்.அதன் பிறகு திரௌபதிக்கு ஐந்து கணவன்மார்களா இல்லை அர்ஜுனன் ஒருவன்தானா என்பது விவாதத்திற்குரிய விஷயம். வியாசர் மகாபாரதத்தின் ஆரம்பத்தில் நூலின் சாரம் முழுவதையும் முன்னுரை போல கூறும் 150 சுலோகங்களில் திரௌபதிக்கு ஐந்து கணவன்மார்கள் இருந்ததாக குறிப்பிடவில்லை.

ஏற்கனவே சொன்னது போல் ஸ்ரீ கிருஷ்ணரை முதன் முதலாக மகாபாரதத்தில் திரௌபதி சுயம்வர மண்டபத்தில்தான் சந்திக்கிறோம். இங்கே அவர் ஒரு மனிதனாகத்தான் சித்தரிக்கப் படுகிறார்.கடவுளாக அல்ல. மற்ற சத்திரியர்களைப் போல துருபதனால் அழைக்கப் பட்ட யாதவ மன்னர்கள் ஒரு குழுவாக சுயம்வரத்திற்கு வருகின்றனர். ஆனால் சுயம்வரத்தில் நடைபெற்ற போட்டிகளில் யாதவ மன்னர்கள் கலந்து கொண்டதற்கான குறிப்புகள் கிடையாது.

அந்த சுயம்வரத்திற்கு பாண்டவர்கள் மாறு வேடத்தில் வந்திருந்தார்கள். துரியோதனின் கொலை வெறியிலிருந்து தப்பிக்க பாண்டவர்கள் மாறு வேடத்தில் ஊர் ஊராக திரிந்து கொண்டிருந்த காலம் அது. அரக்கு மாளிகையில் பாண்டவர்கள் எரிக்கப்பட்டதாக கௌரவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.

துருபதனின் ராஜ்யத்தில் நடைபெற இருக்கும் சுயம்வரத்தைக் கேள்வி பட்டதும் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற பாண்டவர்களும் வருகின்றனர். அந்தணர்களும் சத்திரியர்களும் கூடியிருந்த அந்த கூட்டத்தில் அவர்களை இன்னார் என்று அடையாளம் கண்டு கொண்டது ஸ்ரீ கிருஷ்ணர் மட்டும்தான். அதற்கு காரணம் அவர் ஒரு அவதார புருஷன் என்பதால் மட்டும் அல்ல. அவர் தனித்துத் தெரியும் ஒரு புத்திசாலி என்பதனால்.( ஏற்கனவே தனது ஒற்றர்கள் மூலம் பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் நடந்த தீ விபத்திருந்து மாறு வேடத்தில் வேறு ஊருக்கு சென்று விட்டதை ஸ்ரீ கிருஷ்ணர்  அறிந்து வைத்திருந்தார்.)

தனது ஊகத்தை ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.” பலதேவா! உறுதியான அந்த வில்லை இழுத்து நாண் பூட்டுபவன் அர்ஜுனன். எனக்கு அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே போல மண்டப வாஇலில் இருந்த  மரத்தை வேருடன் பிடுங்கியவன் விருகோதரன்(பீமனுக்கு மற்றொரு பெயர்).

பின்னர் யுதிஷ்டிரரும் ஸ்ரீ கிருஷ்ணரும் சந்திக்கும்பொழுது யுதிஷ்டிரர் ஸ்ரீ கிருஷ்ணரிடம்   .” முன்னமே எங்களை அடையாளம் கண்டு கொண்டு விட்டீர்களா? எங்கனம்? “ என்று வினவுகிறார். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் “ அக்னியை எவரால் மூடி போட்டு மூட முடியும்?” என்று பதில் அளிக்கிறார்.

பாண்டவர்களை அவர்களுடைய அந்தண மாறு வேடத்தில் கண்டு பிடிப்பதென்பது அரிய செயல் .ஸ்ரீ கிருஷ்ணர் கண்டு பிடித்தார் என்றால் அது அவருடைய புத்தி கூர்மையையும் வேகமாக செயலாற்றும்  எண்ண வேகத்தையும் காட்டுகிறது.

இதை மகாபாரதம் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் இந்தப் பகுதிகளிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால் அந்த கால மாந்தர் அனைவரிலும் தலை சிறந்தவராகவும் புத்தி கூர்மை உடையவராகவும் ஸ்ரீ கிருஷ்ணர் விளங்கினார் என்பதுதான்.

அந்த சுயம்வர மண்டபத்தில் குறிப்பிட்ட இலக்கினை தன் அம்புகளால் துளைத்ததன் மூலம் தான் ஒரு சிறந்த வில்லாளி என்பதை விஜயன் உலகிற்கு பறை சாற்றுகிறான்.( சுழலும் மீன் பொம்மையின் கண்களை தண்ணீரில் தெரியும் அதன் பிம்பத்தை பார்த்து அடிக்க வேண்டும் என்பது போட்டி விதி }

அர்ஜுனனின் இந்த வெற்றியினை பொறுக்காத பிற மன்னர்கள் கொதித்து எழுகின்றனர்.     ” பிக்ஷை எடுத்து வாழும் அந்தணனுக்கு திரௌபதியை அடைய எந்த ஒரு தகுதியும் கிடையாது” என்கின்றனர்.இந்த நேரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களிடம் மத்தியஸ்தம் செய்து அவர்கள் நடுவில் எழ இருந்த மோதலை தவிர்க்கிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் தர்மத்தின் பக்கம் நின்று காத்து ரட்சிக்கும் முதல் இடமாக இது மகாபாரதத்தில் சித்தரிக்கப் படுகிறது. இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் அமைதியை அவர் நிறுவிய விதம் அவர் மேல் ஒரு மதிப்பை ஏற்படுத்துகிறது. ஏன் என்றால் தனது போர்த் திறமையாலும் வினாலும் யாதவர்களின் துணையுடன் ஆயுதம் ஏந்தி எதிர்த்து வந்த பகைவர்களை விரட்டி இருக்கலாம் .பீமனும் அந்த நேரத்தில் ஆயுதம் ஏந்த தயங்கி  இருந்திருக்க மாட்டான். தருமத்தின் வழி நடக்கும் எந்த ஒரு வீரனும் எந்த இடத்தில் அமைதி வழியில் சமாதானத்தை நிறுவ முடியுமோ அந்த இடத்ததில் அமைதி காக்கவே விரும்புவான். ஆனால் எந்த இடத்தில் போர் மூலம் தர்மம் நிறுவப்பட வேண்டுமோ அந்த நேரத்தில் ஒரு உண்மையான வீரன் ஆயுதம் ஏந்தத் தயங்க மாட்டான். அந்த நேரத்தில் ஆயுதம் ஏந்தாமல் இருப்பதை அதர்மமாகக் கருதுவான்.

எனவே ஸ்ரீ கிருஷ்ணர் ஆவேசமாக வீரிட்டெழுந்த மன்னர்களைப் பார்த்து “ மன்னர்களே! இந்த ஐந்து சகோதர்களும் உரிய முறையில் திரௌபதியை அடைந்து இருக்கின்றனர். எனவே அமைதியுடன் இருங்கள்.

இந்த சகோதரகளுடன் மோதுவதை கைவிடுங்கள் ”

அந்த காலத்தில் மன்னர்கள் தர்மத்தை கடைப் பிடித்து வாழ்பவர்கள். தர்மத்தின் வழி நடப்பது நன்மை பயக்கும் என்று நம்பினார்கள். இருப்பினும் அர்ஜுனன் காட்டிய வில்வித்தை திறமும் போட்டியில் அவன் எளிதில் திரௌபதியை வென்றதும் மன்னர்களிடம் சிறு சலனத்தை ஏற்படுத்தி சற்று தர்மத்தை மறக்க செய்தது. தர்மத்தை எடுத்துரைப்பதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களை சுய நினைவிற்குக் கொண்டு வந்தார். பகைமை நின்றது. பாண்டவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பினர்.

இதனை வெறும் சாதாரண மன்னன் ஒருவன் முயன்றிருந்தால் அவனால் ஸ்ரீ கிருஷ்ணரைப் போல வெற்றி பெற்றிருக்க முடியாது. தனது திறமையால் பெரிய பெரிய மனிதர்களையும் வழிக்குக் கொண்டு வருவதன் மூலம் தான் ஏற்கனவே ஒரு நம்பிக்கையான தலைவராக உருவெடுத்து விட்டதையும் மன்னர்கள் மத்தியில் தன் சொல்லுக்கு மதிப்பு மிகுந்து வருவதையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

யுதிஷ்டிரருடன் ஒரு சந்திப்பு

அர்ஜுனன் திரௌபதியை அடைந்த பின்பு அவளை அழைத்துக் கொண்டு தன் இருப்பிடம் திரும்புகிறான். மற்ற வீர்களும் திண்ணையை காலி பண்ணி விட்டு தத்தம் ஊர்களுக்கு திரும்புகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணருக்கும் பாஞ்சால தேசத்தில் தங்கி இருப்பதற்கு சரியான காரணங்கள் ஏதுமில்லை.மற்ற மன்னர்களைப் போல் அவரும் தன் ராஜ்யத்திற்கு திரும்பி இருக்க முடியும். பலதேவரை அழைத்துக் கொண்டு பாண்டவர்கள் இருப்பிடத்திற்கு செல்கிறார். அங்கு அவர் யுதிஷ்டிரரை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு  எவ்வித பலனும் இல்லை. இதற்கு முன்பு அவர் யுதிஷ்டிரரை சந்தித்தது கிடையாது. இருவர் இடையிலும் ஒரு சின்ன அறிமுகம் கூட இல்லை.வியாசர் மகாபாரதத்தில் இவ்வாறு கூறுகிறார். “ ய்திஷ்டிரர் அருகில் சென்றதும் வாசுதேவர் அவருடைய கால்களைத் தொட்டு வணங்கி தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். பலதேவரும் தன்னை அவ்வாறே அறிமுகம் செய்து கொள்கிறார். இதன் மூலம் இருவருக்கும் நடுவில் ஏற்கனவே அறிமுகம் ஏற்பட்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது.. இதுவே அவர்களுக்கு இடையில் நடக்கும் முதல் சந்திப்பாகும்.           ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களை தனது அத்தையின் பிள்ளைகள் என்ற காரணத்தாலேயே சந்திக்கிறார்.

இது ஸ்ரீ கிருஷ்ணரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.சாதாரண மனிதர்கள் பணபலமும் அதிகார பலமும் மிக்க மனிதர்களுடனேயே நட்பு பாராட்டுவதையே விரும்புவர்.ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர் வலிய சென்று பாண்டவர்களை சந்தித்தப் பொழுது அவர்கள் சொந்த தேசம் இன்றி மாறுவேடத்தில் அலைந்து கொண்டிருந்த நேரம்.

ஸ்ரீ கிருஷ்ணர் பாஞ்சாலியின் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஞ்சால தேசத்திலேயே தங்குகிறார். தனது திருமணப் பரிசாக நகைகள் உயர்ந்த பட்டாடைகள் படுக்கைகள் வீட்டு உபயோகப் பொருட்கள் யானைகள் குதிரைகள் மற்றும் பல மதிப்பு மிக்க பொருட்களை தனது தேசத்திலிருந்து தருவித்து பரிசாக அளிக்கிறார். திருமணம் முடிந்த பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களை சந்திக்காமலே தனது துவாரகை தேசத்திற்கு சென்று விடுகிறார்.

இந்த செய்கை மூலம் அவருடைய பெருந்தன்மையான பரந்த உள்ளம் நமக்கு தெளிவாகிறது.

Series Navigation
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *