அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்

This entry is part 48 of 48 in the series 11 டிசம்பர் 2011

1999-ம் வருடம். டிஸம்பர் மாத முதல் வாரத்தில் ஒரு நாள் காலை. தில்லியில் கழித்த ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கை அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு, தில்லியை விட்டுப் பிரிய மனமில்லாது சில வருடங்கள் கழிந்தன. இருந்தாலும் சிறு வயதில் பதிந்திருந்த தமிழ் வாழ்க்கையின் காட்சிகள், மனிதர்கள், உறவுகள் மனதில் அவ்வப்போது திரையோடும். இழந்து விட்டவை அவை. நினைவுகளாகவே ஜீவிப்பவை. இருப்பினும் தமிழ் நாடு இழந்துவிட்ட தாயின் மடியைப் போல சோகத்தோடு தான் நினைவுகளைக் கிளறும். தாயின் மடி தரும் வாத்சல்யமும் சுகமும் வேறு எங்கு கிடைக்கும்? அந்நாட்களில் நான் விழித்தெழுவது மிதந்து வரும் கோயில் மணியோசை காதில் விழ. வீட்டு வாசல் நீர் தெளித்து கோலமிட்டிருக்கும். கொஞ்சம் தள்ளிப் பார்த்தால் குனிந்து கோலமிட்டுக்கொண்டிருக்கும் தெருப் பெண்களைப் பார்க்கலாம். சிலர் காவிரியில் குளித்து ஈரப்புடைவையோடு நீர் நிரப்பிய குடத்தை இடுப்பின் சுமந்து வரும் பெண்கள். முழங்கால் உயரத்துக்கு பிழிந்து கட்டிய ஈரவேட்டியுடன் வருபவர்கள் ஏதோ ஜபத்தை வாய் முணுமுணுக்கும். ஊரில் நுழையும் முன் காவல் தெய்வம் போல சென்னை ஒற்றை அறை வாசம் போல, ஒரு சின்ன கோயிலில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருப்பவர் களையும் பார்க்கலாம். அந்தக் காலை ஏதோ ஒரு காலத்துக்குத் தான் சொந்தமானது. நான் அந்த ஒரு பழங்காலத்துக் காட்சியை முன் வைத்தது போலத் தான் இருக்கிறது இப்போது

அந்தக் காட்சியை இப்போது ஏதும் ஒரு தஞ்சை ஜில்லா குக் கிராமத்தில் காணமுடியுமோ என்னவோ. ஆனால் அந்தக் காட்சியைத் திரும்பக் காணும் கனவுகளைச் சுமந்து கொண்டு தான் தில்லியை விட்டுக் கடைசியாக இங்கு வந்து சேர்ந்தேன். இப்போது இருப்பது சென்னையின் ஒரு புற நகரில். மடிப்பாக்கம். ஐயப்பன் கோயிலைத் தாண்டி அதன் எதிரில் இருக்கும் ஏரியின் கரையொட்டி நடந்தால் பல தெருக்கள். அதில் ஒரு தெரு, முதல் தெருவில் இப்போது ஒரு வாரமாக வாடகை வாசம். அங்கு யாரும் தெரிந்தவர் இல்லை. எனக்குப் பழக்கமானவர் எங்கோ பல தெருக்கள் தள்ளி. கல்லும் கரடும் குழிகளும் தெருவில் வழிந்தோடும் சாக்கடைக் கழிவு நீரும், குப்பைகளும். நான் சிறுவயதில் கழித்த கிராமம் முற்றிலும் வேறான காட்சியைத் தந்தது. காலில் செருப்பு இராது. மடித்துக் கட்டிய நாலு முழ வேட்டி, மேலே ஒரு துண்டு, அவ்வளவே. கப்பி ரோடு தான். குண்டு குழியற்று இருக்கும். இந்த எல்லா தெருக்களும் ஒரு ஏரியைப் பார்த்தவை. அந்த ஏரியின் ஒரு கரையில் வரிசையாக அமைந்தவை. ஏரி என்றால் வட ஆற்காடு, தென் ஆற்காடு எல்லாம் மறு கரை தெரியாத ஏரிகள் என்றில்லை. கலகியின் பொன்னியின் செல்வன் நாவலில் ஆரம்பத்திலேயே வந்தியதேவன் சமுத்திரம் போல் பரந்திருக்கும் வீராணம் ஏரிதானா அது,? குதிரை மேல் அமர்ந்து சுற்றி வருவான். அது கல்கி கதையில். இங்கு நான் இருக்கும் தெருவின் முன் அகன்றிருக்கும் ஏரியில் தினம் லாரிகள் நடமாட்டம் அதிகம். ஏரியில் குப்பையைப் போட்டுச் செல்லும். இன்னும் சில வருடங்களிலது வீட்டு மனையாகும். இயற்கையின் பாரம்பரியத்தின் கடவுளும் முன்னோர்களும் நமக்கு விட்டுச் சென்ற சொத்துகளை பல விதங்களிலும் நாசம் செய்தாகிறது.

நடந்து கொண்டிருந்தேன் ஏரியின் கரையில் அமைந்திருந்த கப்பி ரோடில். பக்கத்தில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர் என் அருகில் வந்ததும் சைக்கிளில் அமர்ந்த படியே நிறுத்தினார். நானும் நின்று தலை திருப்பி அவரைப் பார்த்தேன் ஏன் நின்றார் என்று?. ‘புதுசா வந்திருக்கீங்களா சார்?” என்றார். “ஆமாம்” என்றேன். “நீங்க தான் வெங்கட் சாமிநாதனா? தில்லிலேருந்து வந்திருக்கீங்களா? என்று கேட்டுக்கொண்டே சைக்கிளை விட்டு இறங்கினார் .”ஆமாம், என்ன விஷயம்?” என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவர் தன் காரியரிலிருந்து ஒரு கட்டைப் பிரித்து அதிலிருந்து ஒன்றிரண்டு கடிதங்களை எடுத்து என்னிடம் கொடுத்தார். ” அதான் புதுசா இருக்கேன்னு பார்த்தேன்,. இங்கேயே வாங்கிக்கிறீங்களா, இல்லை நான் வீட்டுக்கு வந்து கொடுக்கட்டுமா? என்றார். நான் சிரித்துக் கொண்டே ரொம்ப தாங்க்ஸ், சரியா ஆளைக் கண்டு பிடிச்சிட்டீங்களே இங்கே தான் பாத்துக்கிட்டோமே, கொடுத்துடுங்க. இங்கேயே வாங்கிக்கறேன். என் வீட்டு முன்னாலே இன்னொரு தடவை சைக்கிளை விட்டு இறங்கவேண்டாமே” என்றேன். ”சரி சார்”. என்று சொல்லி ஒரு சலாமும் எனக்குப் போட்டுவிட்டு அவர் சைக்கிளில் ஏறிச் சென்று விட்டார்.

எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏதோ ஒரு வேலைசெய்கிறார். அதைச் செவ்வனே செய்வது மட்டுமல்லாமல் நாலு வார்த்தை சந்தோஷமாகப் பேசிவிட்டு, எதிர்ப்படும் மனிதர்களோடும் உறவுகளையும் சம்பாதித்துக் கொண்டு செல்கிறவரைப் பார்த்தால் சந்தோஷமாக இராதா?

வெகு ஆண்டுகளுக்குப் பிறகு, இது நிகழ்ந்துள்ளது 1950-ல் நான் ஹிராகுட்டில் வேலையில் சேர்ந்த முதல் வாரத்தில்.இது போன்று நிகழ்ந்துள்ளது. “ மதியம் அலுவலகத்துக்கு எதிரே கொஞ்சம் தூரம் தள்ளி இருந்த வரிசையாக இருந்த கடைகளின் முன் இருந்த நடைபாதையில் நண்பர்களுடன் போய்க் கொண்டிருந்த போது. எதிரே நின்றது தபால்கார உடையில் ஒருவன். “ஆப் நயா ஆயே ஹை க்யா? சாமிநாதன் ஹை க்யா ஆப்கா நாம்? (புதுசா வந்திருக்கிங்களா? உங்க பேர் சாமிநாதனா?) என்று கேட்டான் அவன். ஆச்சரியமாக இருந்தது. இவன் எப்படி கடைத்தெருவில் ஒருத்தனைப் பார்த்து, இந்த ஆள் தான் புதுசா கார்டு வந்திருக்கும் சாமிநாதன் என்கிற ஆள் என்று கண்டு பிடித்தான்? அப்போது சம்பத் தான் கூட இருந்தான்னு ஞாபகம் இங்கே எத்தனை பேருக்கு பெர்சனல் லெட்டர் வரும்? ஒன்றரை வருஷம் ஆச்சு. ஹிராகுட்டிலே இருக்கற வெளி ஆள் எல்லாரையும் அவனுக்குத் தெரியும், சாமா. புது ஆள் வந்தா அவன் கண்டு பிடிச்சிடுவான். அவனவன் வேலையப் பொருத்து கொஞ்சம் கூடுதலா புத்திசாலித்தனம் வந்துடும். லெட்டர்லே பேரு சாமிநாதன். உன்னைப் பாத்தாலே மதராஸின்னு எழுதி ஒட்டியிருக்கு உன் மூஞ்சிலே” என்றான் சிரித்துக்கொண்டே. அவனுக்கு எதையும் கொஞ்சம் கூட கலர் பூசி காலை வாரினா சந்தோஷம்.

ஆனால் அந்த மாதிரியான மனித உறவு கடிதம் வரும் போதெல்லாம் புதுப்பித்துக்கொள்ள சந்தர்ப்பங்கள் பின்னர் ஏற்படவில்லை. பெர்சனல் கடிதங்களுக்கு ஆபீஸில் ஒரு பெட்டி வைக்கப் பட்டது. அதில் போட்டு விட்டுப் போய்விடுவான். தில்லியில் வீடு அடிக்கடி மாறவேண்டி இருப்பதால் அலுவலகத் துக்கே பெர்சனல் கடிதங்களும் ஒரு பெட்டியில் போடப் பட்டு விடும். வீடுவாங்கியது ஒரு அடுக்கு மாடியானால் கேட்டிலேயே சௌக்கிதார் வாங்கிவைத்து விடுவான்.

அந்த ஹிராகுட் 1950 மார்ச் மாத சந்திப்பிற்குப் பிறகு தபால் தரும் ஒரு சேவகனுடன் நேரில் உறவு ஏற்பட்டது சென்னை மடிப்பாக்கத்தில் டிசம்பர் 1999-ல் தான். அது அதிர்ஷ்டவசமாக பத்து வருடங்கள் நீடித்தது. பெங்களூருக்கு குடி போகும் வரை.

தபால் காரன் என்றால் எனக்கு சிறுவயது நிலக்கோட்டை, பின் உடையாளூர் வாழ்க்கையில் அறிந்தது ஒரு நெருங்கிய எங்கள் வாழ்க்கையில் அக்கறையும் ஈடுபாடும் காட்டிய ஒரு ஜீவனை. நிலக்கோட்டையில் கடைத்தெருவில், ரோடில் எங்கு பார்த்தாலும் “சாமி உங்க வீட்டுக்கு லெட்டர் வந்திருக்கு, ஐயா கிட்டே கொடுத்துடறயா ஐயா” என்பார். நிலக்கோட்டை அறிந்தது ஒரே ஒரு தபால் காரரைத் தான். அவருக்கு ஊரில் எல்லோரையும் தெரியும். எல்லோர் வீட்டு நிலவரமும் தெரியக்கூடிய அளவு தெரியும். தெரியாவிட்டால் கேட்கும் ஆர்வமும், உரிமையும் அவருக்கு உண்டு. “ஐயா கல்யாணக் கடுதாசிங்கய்யா, யாருக்குங்க ஐயா கல்யாணம்? என்று கட்டாயம் கேட்பார். சொல்லியாகணும். முகம் மலர்ந்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வார்கள்.? சார் உங்களுக்கு மதுரையிலிருந்து கடுதாசி வந்திருக்கு. குழந்தை பிறந்துட்டதா, அம்மா எப்படி இருக்காங்க பாத்துச் சொல்லுங்க.” என்று சொல்லி நின்று கொண்டிருப்பார். அவருக்குத் தெரியும் கடிதத்தைப் பார்த்ததுமே. அதை மாமா வாயால் சொல்லக் கேட்கவேண்டும். சந்தோஷமாக. ஏதாச்சும் இனாம் கிடைக்கும்.

அது ஒரு காலம். அது ஒரு நாகரீகம். ஒரு பண்பாடு. மனித உறவுகளை வளர்க்கும் பண்பாடு. இது தபால் காரரிடம் மாத்திரமில்லை. நாவிதன்,வண்ணான், கிராமத்தில் தினம் ஒன்றிரண்டு பிடி அரிசிக்கு கறுவேப்பிலை, கொத்தமல்லி கொடுத்துவிட்டுப் போகிறவளும் தான். எல்லோரும் அவரவரது அன்றாட ஜீவனோபாயத்துக்காகச் செய்யும் தொழிலோடு சந்திக்கும் மனிதருடனும் இதமான உறவுகளை வளர்த்துக் கொள்ளும் வாழ்க்கை அது.

தபால் காரர் அனேகமாக மறைந்து கொண்டிருக்கும் ஜீவன் தான். ஐம்பது வருடங்களுக்கு முன், செல்லாப்பாவின் எழுத்து பத்திரிகையில் தபால்காரன் என்று ஒரு சிறுகதை எம்.எஸ் கல்யான சுந்தரம் என்னும் அன்றேகூட மறக்கப்பட்டு விட்ட எழுத்தாளரது வெளிவந்திருந்தது. என் நினைவில் அது தபால்காரருக்கும் கதை எழுதுபவருக்குமான உறவைப் பற்றியது

எனக்கு ஞாபகம் இருக்கிறது. என பெயரில் வந்த முதல் கடிதம் நான் எஸ் எஸ் எல் ஸி முடித்து பரிட்சை முடிவுகளுக்காக கிராமத்தில் தங்கியிருந்த நாட்களில் வந்தது. என் பள்ளி நண்பன் ஆர். ஷண்முகத்திடமிருந்து. மாயவரம் பக்கத்தில் இருக்கும் மணல்மேடு கிராமத்தில் இருந்தான். நான் அந்த கிராமத்தைப் பார்த்ததில்லை. படிக்கும்போது அவன் கும்பகோணத்துக்குப் பக்கத்தில் உள்ள கொட்டையூரில் இருந்தான் அவனிடமிருந்து படிக்க புத்தகம் வாங்கி வர போவேன். அவன் கொடுத்த புத்தகத்தில் ஒன்று மலாயாவில் பிரசுரமான ஹிட்லரின் எனது போராட்டத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. சொல்லியிருக்கிறேன் என் நினைவுகளின் சுவட்டில். அவன் கவிஞன். அவன் கடிதம் ஏழெட்டு பக்கங்களுக்கு கவிதையில் இருக்கும். ஜெம்ஷெட் பூருக்கு வேலை தேடிச்செல்லும் வரை அவன் எழுதிக் கொண்டிருந்தான். இப்போது அந்த நினைவுகள் தான் மிஞ்சி இருக்கின்றன. அவன் கடிதங்கள் இல்லை. ஜெம்ஷெட்பூர் மாமா எழுதிய கார்டுகள் இர்ண்டு பத்திரமாக வைத்திருந்தேன். நினைவுகளின் சுவட்டில் எழுதும்போது அவற்றைத் தேடினேன். கிடைக்கவில்லை. எத்தனை தடவை ஊர் மாறி, இடம் மாறி, வீடுகள் மாறி இந்த இடைப்பட்ட 60 வருடங்களைக் கழித்திருக்கிறேன். இப்போது அவர் இல்லை அவர் கடிதங்களும் இல்லை. ஷண்முகம் எழுதிய கடிதங்களும் இல்லை. தேடும்போது இல்லை என்று தெரிந்ததும் அவற்றை இழந்த சோகம் சொற்களை மீறிய சோகம்.

கடிதங்கள் வெறும் செய்தி மாத்திரம் தாங்கிவருவன அல்ல. அந்த செய்தி எழுதிய அன்புள்ளத்தின் இதய நீட்சி. அந்த ஜீவனின் ரூபத்தை கண் முன் நிறுத்தும். அந்த கடிதத்தில் காணும் எழுத்து எழுதியவரின் தனித்வத்தின் இன்னொரு நீட்சி. இன்றும் செல்லப்பா எனக்கு எழுதிய ஒரு சிலவே ஆன கார்டுகளில் காணும் அவர் கையெழுத்து 1961 செல்லப்பாவை என் கண்முன் நிறுத்தும். அந்நாளில் நான் கேட்ட அவர் குரலைத் திரும்பக் கேட்கும் பிரமையைத் தரும்.

எனக்கு க.நா.சு. எழுதிய முதல் கடிதம் அவர் இலக்கிய வட்டம் பத்திரிகைக்கு என்னை எழுதைச் சொல்லிக் கேட்ட கடிதம். 1964 – 65 கடிதமாக இருக்கவேண்டும். அந்தக் கையெழுத்து என் நினைவில் மிக ஆழமாகப் பதிந்துள்ளது. எத்தனையோ கடிதங்களில் பரிச்சயமான கையெழுத்துக்கள் போல. அவை ஒவ்வொன்றையும் பார்க்கும் போது அக்கையெழுத்துக்கள் பழம் நினைவுகளைக் கிளறுவதற்கும் அப்பால், அவர்கள் ஒவ்வொருவரின் குணத்தின், தனித்வத்தின்,, ஆளுமை நீட்சியாக என் முன் நிற்கும்
.
எனக்கு பரிச்சயமான க.நா.சுவின் கையெழுத்து 1964 ஆண்டுவந்த கடிதத்தினது. சமீபத்தில் அன்பர் ஒருவர் ஒரு கடிதத்தின் நகலைக் காண்பித்து இதில் KNS என்று கையெழுத் திட்டிருக்கிறது. இது க.நா.சு. வா என்று சொல்லமுடியுமா? என்று கேட்டார். எனக்கு 1964- 1980 களில் க.நா.சு. எழுதிய கடிதங்களின் கையெழுத்து பரிச்சயத்தில் சொல்கிறேன். இது க.நா.சு.தான் KNS என்று கையெழுத்திட்டிருந்தாலும் என்று சொன்னேன். அவர் அதை நிச்சயப் படுத்திக்கொள்ள முடிந்தது.

கடிதங்களும், அவை தாங்கி வரும் நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரியவர்களின் எழுத்துக்கள் அவர்களை நம் முன் நிறுத்தும், அவர்களோடு பழகிய நெருக்கத்தையும் கொண்ட நட்புணர்வுகளையும் முன் நிறுத்தும்.. அவை கரிய கோடுகள் மாத்திரமே அல்ல. வெற்றுச் செய்திகள் அல்ல. அவர்களின் குரல்களைக் கேட்கும் பிரமையை நமக்குத் தரும்.

காலம் மாறிவிட்டது. மாறி விட்ட காலத்தை நாம் திரும்பக் கொணர முடியாது. இப்போது கணிணி யுகமாகிவிட்டது. கணிணி இல்லாத மனித செயல்பாடு ஏதும் இல்லையென்றே ஆகிவிட்டது

நான் வயதான காலத்தில் கணிணியை ஒரு சௌகரியத்திற்காக பரிச்சயம் செய்துகொண்டவன். அந்த பரிச்சயம் என் தேவைகளுக்கு ஏற்ப மிக மிக குறுகிய வட்டத்திற்குள் அடங்குவது தான். இதன் முழு சாத்தியத்தின் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட நான் அறியாதவன்.. இருப்பினும் கடந்த 7 வருடங்களாக நான் கையால் எழுதுவதையே மறந்து விட்டவன். உலகம் பூராவும் உள்ள என் பரிச்சயம் கொண்டவர்களின் பெரும்பாலோரின் முகம் அறியேன். அவர்கள் கையெழுத்து அறியேன். குரல் அறியேன்.

இப்படி 50 களில் உலகம் மாறியிருக்குமாயின் செல்லப்பா, க.நா.சு. தி. ஜானகிராமன். த.நா.குமாரசுவாமி, ஹிந்து ரகுநாதன் மௌனி, தருமு சிவராமூ என்று எத்தனையோ பேரின் எழுத்து நாம் அறிந்திருக்க முடியாது. எல்லாம் டிஜிட்டல அவதாரம் பெற்றவை. இந்த சைபரும் ஒன்றும் எத்தனை மாற்றி மாற்றிக் குலுக்கிய கலவையின் மாற்றுரு.. இங்கு நான் எழுதியதைப் படிப்பவர் யாரும் இந்த எழுத்துக்களை என்னின் என் தனித்வத்தின் நீட்சியாகப் பார்க்க முடியாது. இது மின் அலைகள் தந்தது. இங்கு மனித உறவுகள் அழிக்கப்பட்டு விட்டன. செய்தி கொண்டு வருபவரின் முகமோ, பெறுபவரின் முகமோ, செய்தி தந்தவரின் முகமோ உறவு கொள்வதில்லை.

முன்னர் தேசத்தின் பரப்பு முழுதையும் விஸ்தரித்த கடிதப் போக்குவரத்து என்பது ஸ்தாபனமானால் தான் சாத்தியம். ஸ்தாபனம் என்று சொன்னேன். ஆயினும் அந்த ஸ்தாபனம் ஒரு மனித ரூபத்தில் தான் என் முன் வந்து நின்றது. மனித ரூபத்தில் வந்து நின்ற அது தன் வேலையோடு நிற்காது, என்னையும் அறிந்து கொண்டது. நானும் அந்த மனித ஜீவனை அறிந்துகொண்டேன். பரஸ்பர உறவில் மனிதம் தான் துளிர்த்தது. எவ்வளவு பெரிய ஸ்தாபனமானாலும் அது கட்டிடமாக, சட்ட திட்டங்களாக உருவானாலும் மனித உறவுகளை இன்னும் ஓர் நீட்சியில் துளிர்க்க வைத்தது. கடிதம் என்ற காகிதம் கூட எழுதியவரின் தனித்வத்தை, ஆளுமையை, ஒரு பரிமாண நீட்சியாக என் முன் வைத்தது. அது காகிதத்திற்கும் மேல், கோடுகளுக்கும் மேல் கடந்த காலத்தில் நிகழ்ந்த மனித உறவுகளின் தடம் பதித்து என் முன் வைத்தது.

இன்று கணிணியின் திரையில் காணும் இந்த டிஜிட்டல் பதிவில் நான் இல்லை. இதை எதாவாகவும் பெயர் மாற்றி உங்கள் முன் வைக்க முடியும். திரிஷாவா சாரா பாலினா, நானா என்று தடுமாறச் செய்ய முடியும். தமிழில் நாம் காணும் பலரின் எழுத்துக்களின் பின் இருப்பது பெயர் சொல்லப்பட்ட அவர்கள் தானா, இல்லை லத்தீன், அமெரிக்கா, அராபிய நாடுகளிலிருந்து இடம், பெயர் பெயர்ந்து வந்தனவா, இல்லை கூகிளிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டனவா என்று தெரியாது செய்துவிட முடியும். தனித்வம் அழிவது சௌகரியமானதாக, லாபமும் பிராபல்யமும் தரக்கூடிய நல்ல விஷயமாக சிலருக்கு ஆகியுள்ளது இன்றைய டிஜிட்டல் கணிணி யுகத்தின் கோலம்.

வெகுதூரத்தில் இருப்பவர்கள் பலர் என்னுடன் நேர் பரிச்சயமும் தோழமையும் கொண்டவர்கள். சென்னை வரும்போது கட்டாயம் சந்திக்க வருபவர்கள். தொலைபேசியில் நெடு நேரம் பேசுவார்கள் இரண்டு சந்திப்புக்களின் இடைவெளி நீண்டு விட்டால். ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள் அநாவசியமாக?, ஈ/மெயிலிலேயே தொடர்பு கொள்ளலாமே என்று நாம் சில சமயம் சொல்லிப் பார்த்தேன். ”அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். நாம் நம் குரல்களைக் கேட்டுக்கொள்ளலாமில்லையா? அதை இழக்கலாமா?” என்று எனக்கு பதில் வரும். . அவர்களில் ஒருவர். கவிஞர்.இந்த உணர்வு உள்ளவர் கவிஞராகத் தானே இருக்க முடியும்?

இதோ நாற்பத்தைந்து வருட பழைய கடிதம் ஒன்று. . இன்னும் பின்னால் போக நான் தேடி எடுக்கவேண்டும். இந்த கணிணி யுகத்தில் அது இப்போதைய அவசரத்துக்கு உதவாது.

இந்தக் கடிதம் என்ன, இந்தக் கடிதத்தில் எழுதியுள்ள செய்திகளுக்கும் மேல் எனக்கும் தி.ஜானகிராமனுக்கும் இடையில் கடந்த காலத்தை இக்கடிதம் காணும் தோறும் எனக்கு முன் திரையோடச் செய்யும். ஜானகிராமனின் சிரித்த முகத்தை என் முன் நிறுத்தும்.

இந்த கடிதச் செய்தியோ, கணிணியின் தோன்றும் இவ்வாசகத்தின் பதிவோ அந்த ஜீவன் பெறாது. அது என்னுடனேயே சிறைபட்டது.

இதைக் கொணர்ந்து கொடுத்த தபால் காரன் இன்று இல்லை.கடிதங்கள் இல்லை. கையால் எழுதுவாரில்லை. இவற்றோடு ஒரு நாகரீகமும் மறைந்துவிட்டதாகத் தான் தோன்றுகிறது.

Series Navigationமணல்வீடு இதழும் களரி தொல்கலைகள்&கலைஞர்கள் மேம்பாட்டு மையம் நடத்தும் மக்கள் கலையிலக்கிய விழா
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

22 Comments

  1. Avatar
    சின்னப்பயல் says:

    இங்கு நான் எழுதியதைப் படிப்பவர் யாரும் இந்த எழுத்துக்களை என்னின் என் தனித்வத்தின் நீட்சியாகப் பார்க்க முடியாது. இது மின் அலைகள் தந்தது. இங்கு மனித உறவுகள் அழிக்கப்பட்டு விட்டன. செய்தி கொண்டு வருபவரின் முகமோ, பெறுபவரின் முகமோ, செய்தி தந்தவரின் முகமோ உறவு கொள்வதில்லை.

  2. Avatar
    SOMASUNDARAM says:

    Readable article.Life is allways pleasurable,whether it is past or present, if we able to enjoy it .Comfort with circumstances.We should not permited our age to intervene our thinking process.

  3. Avatar
    SOMASUNDARAM says:

    Is it nessary to link the bullak cart and the computor?Please bear in mind that changes are invitable.Accept these facts and to live with the beaty of today.

  4. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    அன்புள்ள சோமசுந்தரம்,

    நாம் எப்போதும், கால மாற்றத்தில் சில பெறுகிறோம். சிலவற்றை இழ்ந்து விடுகிறோம். இழந்து விடுவதில் மனித உறவுகளும், வாழ்க்கை மதிப்புகளாகவுமாக இருந்தால் வருத்தம் ஏற்படுகிறது. சிலருக்கு. சிலருக்கு அதைப் பற்றிய பிரக்ஞை இல்லை

    எப்போதாவது ஒரு பத்து மைல் தூரத்துக்கு கிராமத்தில் ஒரு மாட்டு வண்டிக்காரனோடு பிரயாணம் செய்திருக்கிறீகளா? அந்த அனுபவம் எதில் கிடைக்கும் இப்போது. உ.வே. சா வின் என் சரித்திரம் படியுங்கள்.அந்த காலம் மறைந்துவிட்டதை வருத்தத்தோடு தான் நான் படித்தேன். எல்லோருக்கும் அந்த வருத்தம் இருக்கும், இருக்க வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்த முடியாது.

    போகட்டும். இங்கு மறைந்த வல்லிக்கண்ணனோ, முதுமையில் அயர்ந்திருக்கும் தி.க. சிவசங்கரனோ எப்படி சம்பந்தப்பட்டு வருகிறார்கள்? அவர்களைப் பற்றிய பேச்சே இல்லையே?

  5. Avatar
    punai peyaril says:

    அய்யா சோமசுந்தரம், மனது அசைபோடும் நிலை அனைவருக்கும் வரும். என் குழந்தையின் தொடர்பு அனுபவம், வயர் போனில் இருந்து ஐ.போன் வரை… நாளை என்னவோ…. வெ.சு.. தபால் முதல் கம்யூட்டர் வரை தொடர்பு முறைகளை அனுபவித்ததை பகிர்கிறார்… இதில் அவர் அக்சப்ட் செய்யவில்லை என்று யார் சொன்னது… அவர் அக்சப்ட் செய்ததால் தான் கம்யூட்டரில் இன்றும் எழுதுவது தொடர்கிறார்… மாறுதல் தவிர்க்க முடியாதது என்பது நண்டு சிண்டுக்குக் கூடத் தெரியும்… இது பகிர்தல்… சிலருக்கே வரும்… வ.கண்ணன், தி.க பற்றி இங்கு என்ன பேச்சு… இவரது அனுபவத்தை சொல்கிறார்….. நான் கூட பரணிலிருந்து அப்ப அப்ப பழைய ஏர் மெயில் / பர் அவியன் என்ற கடிதங்களை படிக்கிறேன்.. பழுத்த மரத்திலிருந்து பயன் பெற நிறைய இருக்கு… வெ.சா தொடரட்டும்…

  6. Avatar
    punai peyaril says:

    இழந்து விடுவதில் மனித உறவுகளும், வாழ்க்கை மதிப்புகளாகவுமாக இருந்தால் — அருமை…. சங்கதி…

  7. Avatar
    காவ்யா says:

    அவர் கணணியில்தான் எழுதுகிறார். ஆனால் அதை அவர் விரும்பாமல்தான் செய்கிறார். நீங்கள் மாற்றிச்சொல்கிறீர்கள்?

    He is today using computer to communicate. But he longs for the days when communication was done through post.

    How do u say he has accepted the present practice?

  8. Avatar
    காவ்யா says:

    //இங்கு நான் எழுதியதைப் படிப்பவர் யாரும் இந்த எழுத்துக்களை என்னின் என் தனித்வத்தின் நீட்சியாகப் பார்க்க முடியாது. இது மின் அலைகள் தந்தது. இங்கு மனித உறவுகள் அழிக்கப்பட்டு விட்டன. செய்தி கொண்டு வருபவரின் முகமோ, பெறுபவரின் முகமோ, செய்தி தந்தவரின் முகமோ உறவு கொள்வதில்லை.//

    உங்கள் எழுத்துக்களை உங்களின் தனித்துவத்தின் நீட்சியாகப் பிறர் பார்க்க முடியாது என்று எப்படி உங்களால் சொல்ல முடியும் ? கற்பனை விபரீதமாகப் போகக்கூடாது.

    ஒருவன் எழுதுகிறான்; மற்றவர் படிக்கிறான் அந்த எழுத்துக்கள் என்ன தாக்கத்தைச் செய்கின்றன படிப்பவனிடம் என்று படிப்பவன் தானே சொல்ல முடியும் ? அவன் படித்து சொன்னபிறகுதானே உங்களுக்கும் தெரிய வரும்?

    நீங்கள் டிஜிட்டல் எழுதினாலும், கையெழுத்து மூலமாக எழுதினாலும், உங்கள் எழுத்துக்கள் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

    Urs is the most personalised writing I have come across in recent days. Can’t u see anything w/o mixing too much personal elements ? Of course, it is humanly impossible to write with detachment. But great writers, or good writers do try and succeed to some extent. I don’t refer to this present article. Because it is ur memoir.

  9. Avatar
    விருட்சம் says:

    அருமை.

    காது கேட்கும் திறனை சில வருடங்களாக இழந்துவிட்ட என் அப்பாவுடனான தொலைபேசி தொடர்புகளும் நின்றுவிட்டன. அம்மாவிடம் எப்படி இருக்கார் என்று கேட்டுகொள்வதொடு சரி. அவசர உலகில் எழுதும் பழக்கம் நின்று விட தொலைபேசியில் தொடர்ந்து கொண்டிருந்த இங்கே வெ.சா குறிப்பிடும் அந்த நெருக்கம் அதுவும் இல்லது போனது இப்போது உறைக்கிறது. எனக்கு ஏன் மீண்டும் கடிதம் எழுத வேண்டும் என்று தோணவே இல்லை?
    நன்றி திரு வெ.சா.

    இதை உடனே செய்து விட வேண்டும்.

  10. Avatar
    காவ்யா says:

    கட்டுரையின் வெகுவாக கடிதப்பரிமாற்றம் புகழப்படுகிறது. அதில் உள்ள கையெழுத்து எழுதியவரோடு நம்மால் மனத்தால் இணைய வைக்கிறது. படிக்கத்தெரியாதவன் எழுதத்தெரியாதவர்களும் அக்காலத்தில் ஏராளம். அவர்களுக்கு தபால்காரரே படித்துசொல்வார். அக்கடிதத்தின் கையெழத்தா பேசுகிறது? அக்கையெழுத்தைப்பார்த்த்துப்பார்த்தா மனத்தால் உருவகப்படுத்தி இணைகிறார்கள்?

    சாமிநாதன் படித்தவர். எனவே அவருக்குக் கடிதம் எழுதுகிறார்கள். படிக்காதவர் நிலையென்ன ?

    எனக்கும் நிறையபேர் இ மெயில் அனுப்புகிறார்கள் அவர்கள் தனிநபர் விடயங்களப்பற்றி. ஒவ்வொருவரும் சொல்லும் விசயம் முறை அவர்களின் ஆளுமையின் நீட்சியாகத்தான் தெரிகிறது.

    ஒவ்வொரு காலத்துக்கும் நிறைவுகள், குறைகள் உண்டு. இக்காலத்தை எல்லாமே குறைகள்; அக்காலத்தில் எல்லாமே நிறைகள் என்று நிலைபாட்டை இன்று தள்ளாத வயதை அடைந்தோர் நினைத்து வருந்துகிறார்கள். இது தவறான நிலைபாடு.

    அவர்கள் அக்கால மகிழ்ச்சிகளை மட்டும் இழக்கவில்லை. இக்கால மகிழ்ச்சிகளையும் இழந்துவிடுகிறார்கள். இதில் மேலே இன்னொன்றும் நோக்கத்தக்கது: அக்காலம் பொற்காலம் என்று சொல்லும் இவர்கள் அக்காலமும் பலபல தகாத விடயங்களைச் செய்து அருவருப்பான களிப்பையும் பெற்றது என்பதை நைசாக மறைக்கிறார்கள். ஒருவேளை அந்த மறைப்புக்குத்தான் அக்காலத்தை பொற்காலம் என்கிறார்களோ என்ற சிந்தனையை நாம் தவிர்க்கவ்முடியாது.

    எக்காலமும் பொற்காலமாகலாம். நாம் வாழ்வதைப்பொறுத்தது அது. இறந்த காலம், நிகழ்காலம், – இரண்டிலுமே குறை நிறை இருக்கும்போது ஒன்றைச் சிறந்தது மட்டுமே; இன்னொன்று குறைப்பட்டது மட்டுமே என்னும் உள்ளோக்கத்தைப் படிப்பவரின் மேல் திணிக்கிறது இக்கட்டுரை.

    Nostalgia is the corrosive disease of old men.

    “The old men shall dream dreams; the young men shall see visions”

  11. Avatar
    punai peyaril says:

    காவ்யா, இப்படித்தான் எழுத வேண்டும் எனக் கட்டளையிட நீங்கள் யார்…? ஆம், வெ.சா தனிப்பட்ட தன் விஷயங்களை தான் எழுதுகிறார்…. அது அவரது இஷ்டம்… அதை பிரசுரிப்பது பத்திரிக்கையின் இஷ்டம்… படிப்பதும் படிக்காமல் இருப்பதும் உங்கள் இஷ்டம்…ஆனால் வரைமுறை மீறி எழுதுவது, விமர்சிப்பதும் தவறே… வெ.சா வரைமுறை தவறவில்லை… ஆனால்… நீங்கள்… எல்லா பக்கத்திலும் வெறுப்பை உமிழ்கிறீர்கள்… வெற்றுக்கலகம் புரிகிறீர்கள்… ஆனால், ஒன்று அதனால் முதலில் மனநிலை கலக்கமடைந்தாலும் இதுவும் ஒரு பயிற்சி நிலை – இந்த மாதிரி சூழலில் வாழ்வதற்கு. நாஸ்டால்ஜியா நோயாக இருக்கலாம்.. ஆனால், சிலருக்கு கருத்துச்சொல்வதே நோயாக இருக்கிறதே… அதை என்ன செய்ய…? திண்ணை வாசலில் சும்மா கத்திக் கொண்டே இருப்பார்களே அது மாதிரி நீங்கள் ஆகிக் கொண்டு வருகிறீர்கள்… அது விடுத்து… நீங்கள் கண்டது, கேட்டது, படித்தது, உங்கள் கருத்துக்கள், யோசனைகள் என்று பயனுற எழுதுங்கள்… அடுத்தவர் மனத்தை புண்படுத்துதல் போல் ஒரு கொடுமையான பாவம் எதுவும் இருக்க முடியாது.. ( உடனே ,பாவம் பற்றி லெக்சர் வேண்டாம்… :) )

  12. Avatar
    காவ்யா says:

    நன்றிகள்.
    திண்ணையில் போடப்படும் கட்டுரைகள் – அது தன்வரலாறாகவே இருந்தாலும்! – வாசகர்கள் படித்து உள்வாங்கி தம்முள் என்ன உணர்வுகளை அவை ஏற்படுத்தின என்று சொல்லவே பின்னூட்டப்பகுதி வைத்திருக்கிறார்கள். உணர்வுகள் உண்மையானவை.
    வெ.சாவின் தன்வரலாறு வெறுமனே படித்துக்கொட்டாவி விடுவதற்கன்று. அவற்றின் பின்னுள்ள தத்துவத்தையும் பார்க்கிறேன். அத் தத்துவத்தின் தவறேனுமிருக்கிறதாவென்றும் பார்க்கிறேன்.
    கடிதம் மட்டுமே நாம் படிக்கும்போது எழுதியவரின் ஆளுமையின் நீட்சி; பிறவற்றுக்கில்லை என்பது எனக்கு ஒவ்வாக்கருத்து. எப்படி?
    இப்படி… நான் பலபின்னூட்டங்களும் கட்டுரைகளையும் இங்கு எழுதிவிட்டேன். நான் என்ன கடிதங்களா உங்களுக்கு அனுப்பினேன் என் கையெழுத்தில்? என்னவைகளிலிருந்து எப்படி என்னை எடைபோட்டிருக்கிறீர்கள். உண்மையோ தவறோ? தன் கருத்துக்களை வெட்டவெளிச்ச்மாகப் போடுமாள் என முடிவெடுக்கலாமில்லைதானே? டிஜிட்டல் எழுத்துக்கள்தானே ? கண்ணியில்தான் அடிக்கப்படுகின்றன?
    வயதானவர்கள் எல்லாருமே வெ.சாவைப்போலத்தான். எங்கோரிருவர் வேறாக இருக்கலாம்.
    வயதுக்கு நாம் கரிசனம் கொள்ளவேண்டுமென்றால், கருநானிதிக்கு 88 அன்பழகனுக்கு நேற்று 90 ஆனது. இவர்கள் வந்து பெரியாரைப்பற்றி திண்ணையில் எழுதினால் காரசாரமாகத் தாக்கித்தானே எழுதுவீர்கள்? அல்லது, வயதானவர்கள்; அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பீர்களா?
    வெசாவும் கருனானிதியும் ஒன்று. கருனநாநிதி 47களில் தான் செய்தவற்றைத் திரும்பத்திரும்பச்சொல்லி கடுப்பேத்துகிறார். இவர் தமிழ்நாட்டில் இப்போது வாழ முடியவில்லை. பழைய நினைவுகள் பாடாய்ப் படுத்துகின்றன.
    ‘பொய்யாய் பழங்கதையாய் மெல்லப் போனதுவே: என்று பட்டணத்தாரின் வரிகளைப்போட்டு தன்வரலாற்றுக் கவிதையைத் தொடங்கிய பாரதியார், “சென்றது இனி மீளாது மூடரே.. சென்றதை நினைத்துக்கவலை கொள்ளல் வேண்டா”மென்றும் “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை” என்றும் கண்டிக்கிறார். எனவே அவர் பேலன்ஸ் நல்லா பண்றார்.

    வெசாவும் பண்ணனும். பண்ணினமாதிரி தெரியல.

  13. Avatar
    punai peyaril says:

    கருணாநிதியும், அன்பழகனும், வீரமணியும் பெரியார் பற்றிச் சொன்னால் வரிந்து கட்டி தாக்கலாம்… ஆனால், மலர்மன்னன் போன்றவர்கள் சொன்னால்…? வெ.சா ,கருணாநிதி வகையறா இல்லை.. ம.ம வகையறா… நம்பகத்தன்மை அதிகம். அதும் போக் இங்கு வெ.சா தன் அனுபவங்களை எழுதுகிறார்… அதில் வாழ்ந்த நடந்து வந்த பாதை அனுபவம்.. பழைய பாட்டு கேட்ப்து போல… பழையது என்பது கடந்து போன எதுவுமே… நொடி கடந்த அனைத்துவ்மே… அப்போ நீங்க, நிகழ்கால நொடிக்கும் எதிர்கால நொடிக்கும் மட்டும் தான் வாழ்கிறீர்களா..? பின் ஏன், என்னைக்கோ நடந்த பிறமணாள் விஷயத்தை பீறாய்கிறீர்கள்… பட்டினத்தாரையும் பாரதியையும் இழுக்கிறீர்கள்… அவர்களும் பழசு தானே… எடுத்துக்காட்டாக “கொலைவெறி..” பாட்டில் இருந்து உதாரணம் கொடுத்திருக்கலாமெ… அதும் கூட பழசய்யா….. வெ.சா சமூக, அரசியல் கருத்து எழுதினால், வா வாத்யாரே என்று குதியுங்கள்.. அதும் போக உங்களுக்கு ஏன் மூத்தோர் மேல் கோபம்…? வெ.சா வெறும் நரை கூடி கிழப்பருவம் எய்தியவரல்ல…

  14. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \அந்த காலம் மறைந்துவிட்டதை வருத்தத்தோடு தான் நான் படித்தேன்\

    கடுதாசி எழுதுவது ஒருபக்கம் இருக்கட்டும் முதலில் கையில் எழுதுகோல் பிடித்து காகிதத்தில் எழுதுவது கிட்டத்தட்ட விலுப்தமாகி விட்டது. பத்து நயாபைசா கார்டில் சகல செய்திகளையும் எழுதும் சிக்கனம் ஒரு காலத்தில். எப்போதாவது தமிழில் எழுதுகையில் பால்யத்தில் எழுதியெழுதிப் பழகிய இப்போது கிட்டத்தட்ட விலுப்தமாய்ப் போன கொம்பு வைத்த “ணை” “னை” தான் எழுத வருகிறது. இப்போதைய தலைமுறைக்கு இது விசித்ரமான எழுத்து வடிவமாக இருக்கலாம்.
    காலத்துடன் மறையாத சில விஷயங்களும் இருக்கின்றன ஆச்சர்யம் அளிக்கின்றன ஆறுதல் அளிக்கின்றன. மின்சார நாலு சக்ர வாகனம், ஆகாச ஊர்தி என்றெல்லாம் வசதிகள் இருந்தும் பரிச்ரமப்பட்டு மலையேறி வைஷ்ணோ மாதாவை தரிசனம் செய்யும் கூட்டமே அதிகம். வழி நெடுக “ஜெய் மாதா தீ” என்று சொல்லிக்கொண்டும் ஆங்காங்கு உட்கார்ந்து விச்ராந்தி எடுத்து நிதானமாக தர்சனம் செய்யும் தர்சனார்த்திகள் வசதிகளை விட பரிச்ரம தர்சனம் உசத்தி என சொல்லாமல் சொல்கிறார்கள் போலும்.

  15. Avatar
    SOMASUNDARAM says:

    It is widly accepted fact that the litterary gaints Vallik kannan and Thi. Ka Sivasankaran used to wrote letters to litterary persons in Thamizh Naadu.In that sense I asked Thiru.V.Swaminathan whether he receivwd any letter from them.Nallathu.Belive us, we have respect and regard on Thiru. V.Swaminathan not because of his age but his activeness.We are here to fight against the sectarainism and conservatism.

  16. Avatar
    காவ்யா says:

    வெ சாவின் வயதென்ன ? 70 க்குமேலிருக்கும் கண்டிப்பாக. இது நரைக்கூடி கிழப்பருவம்தான். 40 களில் வேலக்குச் சென்றவர். ஆனாலும் சோமசுந்தரம் எழுதியதைப்போல ஆகிடிவாக இருக்கிறார் அதை நாம் வரவேற்கலாம்.
    கருனானிதி, அன்பழகன் எழுதினால் அவர்களின் எழுத்தையும் கருத்தையும் விரும்ப ஒரு கூட்டமிருக்கும். அவர்கள் எழுத்தை நான் தாக்கும்போது அக்கூட்டம் என்னிடம் ‘வயதானவர்கள் மனங்களை நோகடிப்பது பண்பாகுமா ?” என்பர்.
    மலர்மன்னன், வெ.சா எழுதினால் அவர்களின் எழுத்தையும் கருத்தையும் விரும்ப நீங்கள் ஒரு கூட்டமாக எப்போதும் திண்ணையில் அமர்ந்திருக்கிறீர்கள். அவர்கள் எழுத்தை நான் விமர்சிக்கும் போது, அவ்விமர்சனம் கடுமையாகவிருப்பின், ‘வயதானவர்கள் மனங்களைப் புண்படுத்தலாமா ?’ என்பது உங்கள் கேள்வி.

    உங்களுக்கு ஒரு நியாயம். அடுத்தவருக்கு ஒரு நியாயமா?
    என் நியாயம் என்னவெனில், எழுத்துக்களை மட்டுமே பார்ப்போம்.

  17. Avatar
    punai peyaril says:

    வெ சாவின் வயதென்ன ? 70 க்குமேலிருக்கும் கண்டிப்பாக– சும்மா திமுக விடுற அந்தக்காலத்து சோடா பாட்டில் வீச்சுக்கணக்கா எழுதுறீக காவ்யா…. 70 ஆனாலும் அவர் வெறும் நரை கூடி கிழப்பருவம் கொண்டவரல்ல… என்று நான் சொன்னேன்… அடுத்தவக எழுதுற புரிஞ்ச்க்காம என்னத்த நீங்க எழுதுறீகளோ…

  18. Avatar
    லெட்சுமணன் says:

    எந்த ஒரு “Technology” யும் பழசை புதிப்பிக்கிறது என்று சுஜாதா அடிக்கடி சொல்வார். அப்படிதான் இந்த கடிதப்போக்குவரத்து விசயம்.

    கடிதப்போக்குவரத்து தொலைந்துபோனதால் இன்றைய இளைய தலைமுறை எதிர்கொள்ள்ளும் பிரச்சினை குறித்து கீழ்க்கண்ட கட்டுரையில் நான் குறிப்பிட்டுருக்கிறேன்.

    எதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து
    http://puthu.thinnai.com/?p=1431

    இந்த தலைமுறை இடைவெளி என்பது எல்லா காலத்திலும் இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். வெ.சா -வின் மூத்தோர்கள் வெ.சா – காலத்தைய “Technology Improvements” அல்லது வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்து ”நம்ம காலத்தில எல்லாம் இப்படி இல்ல. கலிகாலம். எல்லாம் இப்படி ஆகி போச்சு” என்று அங்கலாய்த்திருப்பார்கள். இரண்டு தலைமுறைகளின் வாதங்களிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. அவை தவிர்க்க முடியாதவை.

    உடனே, நாம் வெ.சா ஒரு பழம் பஞ்சாங்கம், புதியவற்றை வரவேற்க தெரியாதவர் என்றெல்லாம் சொல்வது முறையாகாது. Technology -ஆல் அன்றாட வாழ்க்கையின் ஒரு பழக்கமும் அதனுடன் தொடர்புடைய மனித உறவுகளின் அன்னியோன்யமும் தொலைந்து போனதை வெ.சா குறிப்பிடுகிறார். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

  19. Avatar
    SOMASUNDARAM says:

    Thiru.V.Swaminathan’s activism means, to protect his sectarian braminical identity and its conservative outlook.His style of writting clearly shows this. He wrote as “Vandikkaaran”.He may be elder than Thiru.Ve.Sa.Why should not Ve.Sa. writes as “Vandikkaarar”? Here,he showes his identity.Understand.

  20. Avatar
    punai peyaril says:

    சோமு, உங்கள் அலுவலகத்தில் பியூனுக்கு பேசாம எம்.டி மாதிரி ஒரு ரூம் போடலாம். டிரைவருக்கு கேபின் தரலாம். எம்.ஜி.ஆர் படத்தின் டைட்டிலை “மாட்டுக்கார வேல(ர்)” என்று மாற்றச் சொல்லி நாம் போராடலாம். மரியாதை தெரிந்த ஒரே மனிதர், காதலிக்க நேரமில்லை பாலையா மட்டும் தான், அவர் தான், “அசோகர் உங்க மகரா…? “ என்று கேட்டார். தமிழக அரசிடம் சொல்லி, இனி பியூன் உள்ளே வந்தால் எல்லோரும் எழுந்து நிற்கச் சொல்ல வேண்டும்.

Leave a Reply to காவ்யா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *