அம்மாகுட்டிக்கான கவிதைகள்

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014
கைகளை ஊஞ்சலாக்கி

நெஞ்சில் சாய்த்தபடி
உனை அணைக்கிறேன்..

சில நிமிடங்களில்

தூக்கம் உன் கண்களைத் தழுவ

உனைத் தொட்டியிலோ

படுக்கையிலோ

இறக்கி வைக்க மனமின்றி

ஆடிக் கொண்டேயிருக்கிறேன்

முடிவிலி ஊஞ்சலாய்..

————

கால்களையும்

கைகளையும்

மெதுவாய் வேகமாய்
அசைத்து

காற்றில் நீயெழுதும்
எழுத்துக்களைச் சேர்த்து
வாக்கியமாக்கி
ஒழுங்குபடுத்தி
வாசிக்கும் முயற்சியில்
தோற்றுக் கொண்டேயிருக்கும்
என்னை வெற்றிபெறச் செய்கிறாய்
உன் புன்னகையால்…

—————

தூக்கத்திலும்
விழிப்பிலும்
துளியளவும்
வேறுபாடில்லை
உன் புன்னகை செய்யும் மாயத்தில்

—————-

உனைத் தூங்க வைக்கத்
தாலாட்டுப் பாடிப்பாடி
தூங்கிப் போகிறேன்..
கொட்டக் கொட்ட
விழித்திருக்கும் நீ
பிஞ்சுக்கைகளால்
இலேசாக அடித்தடித்து
எழுப்ப முயற்சிக்கிறாய்

—————–

வெகுநேரம் அழுகிறாய்
அழுகையை நிறுத்த
விளையாட்டுக் காட்டியோ
பாலூட்டியோ
தாலாட்டுப்பாடியோ
முயற்சிக்கும் என்னை
உற்சாகப்படுத்துகிறது
உன் புன்னகை

——————

தூக்கத்தில்
நீ பால்குடிக்கும் பாவனையில்
உதட்டசைக்கும் போது
மனம் துடிக்கிறது

உதட்டுப்பால் குடிப்பதாய்
வீட்டிலுள்ளவர்கள் சொல்லும் போது
அய்யோ பசித்துதான் இப்படிச் செய்கிறாயென
பதறும் மனது
மார்பகத்தில் ஒன்றை
உன் சின்னஞ்சிறு வாயில் வைத்துவிட முயற்சிக்கிறது..

——————————

உனதழுகையில்

பல ரகங்கள்

உச்சா போகவோ

கக்கா போகவோ

பால் குடிக்கவோ

தூக்கச் சொல்லியோ

அழும் உன்னைப் பார்த்துச் சிரித்தால்

நீயும் சிரித்துவிடுகிறாய்

உன் பொக்கை வாய் திறந்து…

——————————

உன் தேவையை

உணர்த்தும் ஆயுதம்

உன் அழுகை மட்டுமல்ல

தூக்கத்தில் உன் வாயும்கூடத்தான்

——————————

தொட்டிலில் தூங்குமுன்னை

எட்டிப் பார்க்கிறேன்..

ஒருபக்கமாய் உன் கழுத்தைச் சாய்த்து

வாயைத் திறந்து திறந்து மூடுகிறாய்

மூடி மூடித் திறக்கிறாய்

உடனே தூக்கி

நெஞ்சில் வைத்தணைக்கிறேன்..

சொட்டுச் சொட்டாய் உறிஞ்சுகிறாய்

என் துயரத்தை

—————————-

ஒருபக்கமாய்

சாய்ந்துறங்கும் உன்னழகில்

பூக்களின் வகைகளும்

தோற்றுப் போகும்

உன் உதட்டின் பால் வாசத்திற்கு

இரண்டாம் முறையும் தோற்கும் பூக்கள்..

—————————–

குப்புறக் கவிழும் முயற்சியில்

உன்னிடம் கற்றுக் கொள்கிறேன்

விடாமுயற்சியின் பலனை…

—————————–

பால் குடிப்பதும்
வேடிக்கை பார்ப்பதுமாய்

போக்குக் காட்டுகிறாய்

நீயெனக்கு விளையாட்டுக் காட்டும்

நேரமிது கண்ணே…

——————————

வாசனைகளுக்கிடையே

போட்டிவைத்தால்

நிச்சயமாய் சொல்கிறேன்

பால்வாசம் கொண்ட

நீதான் முதலிடம் பிடிப்பாய் செல்லமே

—————————–

உலக்த்தை மறக்கச் செய்து

புது உலகம் பிறக்கச் செய்யும்

உன் புன்னகை

—————————-

உன் அப்பாவின் சாயலில் முகமும் நிறமும்

என் அப்பாவின் சாயலில் கைகளும் கால்களும்

இருப்பதாகக் கூறும் சொந்தங்கள்

எனக்குத் தெரியும்

என் அம்மாவின் சாயல்தான் நீ

உன் பிள்ளையின் சாயல்தான் நான்

—————————–

நீயென் விரலை
இறுகப்பற்றும்போது

தளர்ந்து போகிறது
என் கவலை

————————-

நேருக்குநேர்
நம் கண்கள் சந்திக்கும்
நிமிடங்களில்
சிறகடிக்கிறது
ஓராயிரம் பட்டாம்பூச்சிகள்…
அவ்வளவு மகிழ்ச்சி
தேவதை நீ கண்கொண்டு பார்த்தால்..

————————-

உன் சிரிப்பிற்கான காரணங்களை
நானாக கற்பித்துக் கொள்கிறேன்
உன் அழுகைக்கான காரணங்களை
தானாக அறிந்து கொள்கிறேன்..

————————

உன் ஒவ்வோர் அசைவும்
எனக்கொரு மகிழ்வின் விதை…

——————

உனது குட்டி ஆடைகளுக்கு
வலிக்காமல் துவைக்கிறேன்
என் குட்டி நீயதை அணியும்போது
குதூகலித்திருக்க…

———————

வண்ணங்களையும்
ஒலிகளையும்
அடையாளம் கண்டுகொள்கிறாயென
விதவித வண்ண பந்துகளையும்
ஒலியெழுப்பும் பொம்மைகளையும்
வாங்கி நிறைக்கிறேன்..
நீ கைதொட்டு தூக்கியெறிந்து

அவற்றை பிறவிப்பயனடையச் செய்கிறாய்…

Series Navigationதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்சீதாயணம் நாடகப் படக்கதை – 29​
author

இவள் பாரதி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *