அறிவியல் கதிர் நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி

author
3
0 minutes, 3 seconds Read
This entry is part 23 of 24 in the series 13 செப்டம்பர் 2015

பேராசிரியர் கே. ராஜு

நம் நாட்டில் நகரங்களாக இருந்தாலும் கிராமங்களாக இருந்தாலும் பருவகாலங்களில் அடைமழை, மற்ற காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகிய இரண்டையும் மாறிமாறி சந்திப்பது வழக்கமாகிவிட்டது. நகரங்களில் ஏராளமான அடுக்குமாடி வீடுகள் அடுத்தடுத்து கட்டப்படுகின்றன. இந்த வீடுகளுக்குத் தேவையான தண்ணீரைப் பெற 200 அடி வரையும் அதற்குக் கீழேயும் ஆழத்தில் குழாய்க் கிணறுகள் (bore wells) தோண்டப்படுகின்றன. நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பிக்காமல் இந்த குழாய்க் கிணறுகளிலிருந்து எத்தனை நாட்களுக்குத் தண்ணீரைப் பெற முடியும்? மழைநீரைச் சேகரிக்கவில்லையெனில் அது சாக்கடை நீருடன் கலந்து நகரை மேலும் மாசுபடுத்தும் வேலையையே செய்யும். தற்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மழைநீரை வீணாக்காது அதன் ஒவ்வொரு துளியையும் சேமித்துப் பயன்படுத்திட மழைநீர் சேகரிப்பு மையங்களை உருவாக்கி நிலத்தடி நீரை வலுப்படுத்துவது ஒன்றே இப்பிரச்சனைக்குத் தீர்வாக இருக்க முடியும். சென்னை போன்ற மாநகரங்களில் பெருவாரியான மக்களிடையே இது குறித்துப் போதுமான விழிப்புணர்வு இல்லை. நிபுணர்களிடமிருந்து இது பற்றித் தெரிந்துகொள்ள உதவும் அறிவியல் சுற்றுச்சூழல் மையங்களை (Centre of Science and Environment – CSE) நாடு முழுதும் உருவாக்க அவற்றின் நிறுவன இயக்குநர் அனில் அகர்வால் திட்டமிட்டார். அதன்படி அமைக்கப்பட்டதுதான் சென்னை மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள மழைநீர் மையம் (Rain Centre Chennai). ஆகாஷ் கங்கா என்ற அமைப்பு இந்த மையத்தை நிறுவி பராமரித்து வருகிறது. பொதுமக்கள் இந்த மையத்தை அணுகி தங்கள் வீடுகளுக்கேற்ற மழைநீர் சேகரிப்பு மாடலைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு தக்க ஆலோசனைகளைப் பெற முடியும். மொட்டை மாடியில் விழும் மொத்த மழைநீரும் சென்று அடையும் வகையில் சேகரிப்பு மையத்தை உருவாக்க வேண்டும். இதைத் திறம்படச் செய்தால் கிணறுகளிலும் குழாய்க் கிணறுகளிலும் உள்ள நீரின் தரமும் அளவும் மேம்படும். கைபேசிகளை அவ்வப்போது ரீசார்ஜ் செய்துகொள்வதுபோல், நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும். இதற்கு 4லிருந்து 8 மீட்டர் ஆழம் உள்ள குழியை பொருத்தமான விட்டத்தில் தோண்டி அதில் பிவிசி குழாயை முழு ஆழத்திற்கும் வருமாறு பதிக்க வேண்டும். ஜல்லிகள், கூழாங்கற்களை இட்டு நிரப்பி அவற்றின் வழியே மழைநீர் சென்று குழியின் அடிப்பாகத்தை அடையுமாறு செய்ய வேண்டும். இது ஒரு சேகரிப்பு மாடல். வீட்டின் அளவைப் பொறுத்து மாடலின் தன்மையும் மாறும். முன்பு சென்னையைச் சுற்றி 3000 ஏரிகள் இருந்திருக்கின்றன. இன்று ஏரிகள் எல்லாம் கட்டடங்களாக மாறி எஞ்சியிருப்பவை மூன்றில் ஒரு பகுதி ஏரிகளே. இவற்றைப் பாதுகாப்பது, புதிய நீர்நிலைகளை உருவாக்குவது, மழைநீரைச் சேகரிப்பது போன்ற பன்முக நடவடிக்கைகளின் மூலமே எதிர்காலத்திற்கான தேவைகளைச் சமாளிக்க முடியும்.
mazai1

mazai2
மேற்கொண்டு தகவல் வேண்டுவோர் சென்னை மழைநீர் மையத்தின் இயக்குநர் திரு. சேகர் ராகவனை 96770 43869 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Series Navigationநெஞ்சு வலிX-குறியீடு
author

Similar Posts

3 Comments

  1. Avatar
    ஷாலி says:

    வானம் பார்த்த பூமியாம் தமிழகத்தில்,நீர் மேலாண்மை பற்றிய பழமையான அறிவு இருந்தது, அதனால் தான், அணைக்கட்டுகள் சிறியதும் பெரியதும் கட்டி, கண்மாய்கள் வெட்டி அவற்றை ஊருணிகளோடு இணைத்து, கிடைத்த மழைநீரை எல்லாம் தேக்கி வைக்கத் தலைப்பட்டான் தமிழன், இன்று இந்த நீர்நிலைகளை மாசுபடுத்தவும், பிளாட் போடவும், ஆக்கிரமிப்புச் செய்வதும் நாம்தான்.

    ஒரு ஆண்டில் ஒரு 100 ச.மீ வீட்டில் இருந்து 66,000 லிட்டர் மழைநீர் சேமிக்கலாம் .
    இந்த ரீசார்ஜ்டு நிலத்தடி நீர், ஐந்து உறுப்பினர்கள் கொண்ட சாதாரண குடும்பத்தின், நான்கு மாத காலத்தியத் தேவைகளுக்குப் போதுமானது.மழை நீர் சேமிப்பை முன்பு வலியுறுத்திய ஜெ.அரசு, தற்பொழுது குடிமகன்கள் குறை தீர்க்க மது நீர் உற்பத்தியிலேயே கவனம் செலுத்துவது கவலை தருகிறது.

  2. Avatar
    meenal says:

    சிங்கப்பூரில் நிலத்தடி நீர் பற்றிய பேச்சே இல்லை என்றாலும் ஒவ்வொரு மழை பெய்யும் போதும் இந்த நாட்டு அரசுக்கு நான் சபாஷ் போடாமல் இருப்பதில்லை. மழை பெய்த சில நிமிடங்களிலே சாலைகள் ஈரமின்றிக் காய்ந்து கிடக்கும், காரணம் என்ன? மழை நீர் வடிந்துவிடுவதேயாகும். எப்படி? சாலையோரங்களில் அகன்ற அல்லூறு என்று அழைக்கப்படும் வாய்க்கால்கள்.அவை வழியே செல்லும் நீர் இங்கிருக்கும் 14 நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்படுகிறது. சாலை சேறும் சகதியாய் ஆவதுமில்லை. மழைநீரும் குடிநீராய்ச் சேமிக்கப்படுகிறது. வீடுகள் கட்டங்கள் கட்டுவதற்கு முன்னரே மழைநீருக்கும், சாக்கடைகளுக்கும் வடிகால்களுக்குத் திட்டமிட்டுக் கட்டியதே ஆகும். சிங்கப்பூரைச் சொன்னால் அது சிறு நாடு அது முடியும் என்று சொல்லுவதையும் கேட்டிருக்கிறேன். நம் நாட்டு ஒவ்வொரு கிராமத்தையும் ஒரு சிறு ஊராக எடுத்துக்கொண்டு மழை நீரைக் கடலில் கலக்க விடாமல், வீதிகளில் சேறும் சகதியாய்க் காட்சியளிக்கும் குட்டையாய்த் திகழவிடாமல் வாய்கால் வெட்டி கண்மாய்களிலும், ஊருணிகளிலும் விடலாம். கண்மாய் ஊருணிகளுக்கு வரும் வழிகளில் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்வதால் அவற்றின் மடவாய் வழி நீர்வந்து சேருவதில்லை. காரைக்குடிக்குப் பக்கத்திலிருக்கும் ஒ.சிறுவயலில் வெயில் காலத்தில் கூட ஊருணிகளில் நீர் நன்றாகயிருக்கிறது. அக்கிராம மக்களின் சுயதேவைக்கு அது உதவுகிறது. காரணம் அவ்வூர் மக்கள் வடிகாலைச் சுத்தப்படுத்தி நீர் போவதற்கு ஏற்றதாய் அமைப்பதனை நான் நேரில் கண்டேன். அப்படி ஒவ்வொரு கிராமும் காந்தி கண்ட ஸ்தல சுய ஆட்சி முறையைப் பின்பற்றினால் நீர் பிரச்சனை குறைய வழியிண்டு.
    பேராசிரியர் ராஜீ சொன்ன கருத்துகளை ஒவ்வொரு விட்டு உரிமையாளரும் பின்பற்றினால் வளம் பெருகும். எல்லாவற்றிக்கும் ஊழல் நிறைந்த அரசை எதிர் நோக்கும் போக்கும் குறையும். பாலைவனங்கள் கூட சோலை வனங்களாக மாறக்கூடும். ஒவ்வொரு கிராம நகர மக்கள் ஆசிரியர் கூறும் வழிகளைப் பின்பற்றி நீரின்றி வாழாது நீரோடு வாழ வழி செய்தல் வேண்டும்.
    சாலையோரங்களில் வாய்கால்கள் அமைத்திடல் வேண்டும்
    இல்லங்கள் தோறும் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்திடல் வேண்டும்.
    இவை அரசின் பணியல்ல! நம் கைப்பணி என்று எண்ணல் வேண்டும்!
    இயற்கை தரும் மழை நீரை இனி வீணடித்தல் இல்லை என்ற நிலை உருவாகுதல் வேண்டும்
    நகர்கள்தோறும் குடிநீர் பஞ்சம் ஒழிய ஆழ்குழாய்க்ழி கிணறு அவசியம் என்பதை உணர்ந்திடல் வேண்டும்!
    வாழும் மனிதர்களுக்கெல்லாம் நீரே வாழ்வாதாரம் என்பதை அறிந்திடல் வேண்டும்!
    நீரின்றி அமையாத் இவ்வையகம் என்பதை நினைவில் இருத்திடல் வேண்டும்!
    கொட்டுமழையின் ஒவ்வொரு சொட்டையும் சேமித்தல் நன்றே!

  3. Avatar
    arun says:

    why Govt. should make effort in this? When people can do many things on their own, and every tom-dick and harry can hold a highly sophisticated phone in hand but gets free mixie, grinder and fan from the govt at free of cost, let them at least, can have this rain-water harvest on their own.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *