Nandu 1 – அல்லிக் கோட்டை

This entry is part 6 of 41 in the series 25 செப்டம்பர் 2011

இரா.முருகன்

“லில்லி காஸில். அங்கே இருந்து டுர்ஹாம் எட்டு மைல். இந்த வழி முச்சூடும் ஒண்ணு இல்லே ரெண்டு இல்லே, இருபத்து மூணு மதுக்கடை”

நண்பர் நண்டுமரம் உரக்கச் சொன்னார். ஸ்காட்லாந்து இளைஞர். வயது இருபத்தைந்து பிளஸ் கொசுறாக ஐம்பது. பக்கத்தில் ஸ்டியரிங்கை முரட்டுத்தனமாக வளைத்து லில்லி காஸில் பக்கம் திருப்பிய வேட்டைக்காரத் தடியன் அதிவேகமாகக் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். இவனும் ஸ்காட்டிஷ் காரன் தான். அசல் இளைஞன். வயது இருபத்தேழு. நோ கொசுறு.

அசல் ஸ்காட்டீஷ் பெயர் க்ராப்ட்ரீயை நண்டுமரமாக்கியது மாதிரி, ஒரு சவுகரியத்துக்காக ஹண்டர் என்ற அவன் பெயரை வேட்டைக்காரனாக்கி, லில்லி காசிலை அல்லிக்கோட்டையாக்கியிருக்கிறேன்.

ஆனாலும், கார் பின்சீட்டில் என் பக்கத்தில் இருந்த ஸ்டெல்லாவைத் தொடக்கூட மாட்டேன். தொட்டால் பூ மலருமோ என்னமோ, வேட்டைக்காரன் என் படத்தை ஆணியடித்துச் சுவரில் மாட்டிப் பூப்போட வைத்துவிடுவான்.

ஸ்டெல்லாவுக்காகத்தான் இந்தப் பயணமே. அவளுடைய பாய் ப்ரண்ட் வேட்டைக்காரன் வற்புறுத்தி நண்டுமரத்தையும் என்னையும் கூட வரச்சொல்லி அவனுடைய ஓட்டைக்காரில் கூட்டிப் போகிறான். பியர்க்கடையில் இந்த ஜோடியோடு எனக்கும் நண்டுமரத்துக்கும் ஏற்பட்ட சிநேகிதம் இப்போது எடின்பரோவிலிருந்து மதியத்தில் கிளம்பி கார்ப் பயணமாக நீண்டிருக்கிறது.

“எட்டு மைல் தூரத்திலே இருபத்து மூணு கடை. அத்தனையிலும் வழிய வழிய பியர். மெய்யாலுமா?” வேட்டைக்காரன் நாக்கைச் சப்புக்கொட்டிக் கொண்டு ரியர்வ்யூ கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கண்ணடித்தான். என் பக்கத்தில் ஸ்டெல்லா தூங்கி வழிந்துகொண்டிருந்தாள். வழக்கத்தை விட இறுக்கமான இத்துணூண்டு கருப்புச் சொக்காயும் அரை டிராயருமாக அவள் நிமிடத்துக்கு ஐந்து தடவை என்மேல் அபாயமாகச் சாய்வதில் செஞ்சுரி அடித்திருக்கிறாள்.

“சொன்னா நம்ப மாட்டே. பின்னாடி பெட்ஷீட்டை இடுப்பிலே சுத்திக்கிட்டு உட்கார்ந்திருக்கானே மெட்ராஸ் பையன், அவனும் தான். அதுனாலே இருபத்துமூணு பியர்க்கடை இல்லேன்னு ஆயிடுமா?” நண்டுமரம் கேட்க நான் அவசரமாக மறுத்தேன். நான் தழையத் தழையக் கட்டியிருப்பது எட்டு முழ வேட்டி. அதுவும் என் மல் ஜிப்பாவும் அங்கங்கே கத்தரிப்பூ நிறமாகிக்கொண்டு வருகிறது. பக்கத்திலிருந்து சரிகிறவளின் உதட்டுச்சாயக் கறை அதெல்லாம்.

“டுர்ஹாம் யூனிவர்சிட்டியிலே படிக்கிற பசங்களுக்கு அப்போ அல்லிக் கோட்டையிலேதான் ஹாஸ்டல். காலையிலே ரயிலை, பஸ்ஸைப் பிடிச்சு, இல்லே பொடிநடையா எட்டுமைல் நடந்து காலேஜ் போயிடுவாங்க. சாயந்திரம் படிச்சு முடிச்சு ஏறக்கட்டி காலேஜ் படி இறங்கினதும், கோட்டைக்கு ஓட்டம் ஆரம்பமாகும். எப்போ? 1955-லே. அதாவது, சுமார் நாற்பத்தஞ்சு வருசம் முந்தி”

நண்டுமரம் விலாவாரியாகத் தொடர, பக்கத்து சீட் ரவுசைப் பொறுமையாக சகித்தபடி கேட்டதன் சுருக்கத்தைப் பத்து வரிக்கு மிகாமல் இப்படி எழுதலாம்.

சாயந்திரம் ஆறுமணிக்கு டுர்ஹாமிலேருந்து கிளம்பு. காலேஜ் பக்கத்து மதுக்கடையில் தெம்பா ஒரு கிளாஸ் பியர் ஊத்திக்கோ. ஓட்டமும் நடையுமாக ஒரு பர்லாங். தோ பாரு, அடுத்த கடை. தார் டப்பாவைக் கரைச்ச மாதிரி கெட்டியா கறுப்பா லாகர் பியர் இருக்கா? ஊத்து நைனா. தாங்க்ஸ். இந்தா, காசைப் பிடி. ஹோல்டான். ஓடிப் போய்ப் பஸ் ஏறு. ஒரு மைல் அப்பாலே போய் இறங்கு. வாவான்னு கூப்பிடுது பாரு அடுத்த நாலு கடை. ஒண்ணொண்ணாப் படி ஏறு. சுதி ஏத்திக்க. அடுத்த பஸ்ஸைப் பிடி. ரெண்டு மைல் போ. அடுத்த மூணு கடை. தாகம். சாந்தி. பஸ். கடை. நடை. ராத்திரி ஒன்பதுக்கு அல்லிக் கோட்டை ஹாஸ்டல்லே நுழையறபோது சட்டைப் பாக்கெட்டுலே ஏழெட்டு பஸ் டிக்கட். வவுத்துலே இருபத்து மூணு கிளாஸ் பியர். ஜெயிச்சவனுக்கு அடுத்தநாள் ரிபீட்டு ஓட்டம் சிநேகிதங்க செலவுலே.

“அந்த இருபத்து மூணு கடையிலே ஒண்ணு கூடவா இல்லாம அஸ்தமிச்சுப் போச்சு?” வேட்டைக்காரன் ஒரு பிரம்மாண்டமான டிரக்கை ஓவர்டேக் செய்தபடி விசாரித்தான்.

“அதான் காலத்தின் கோலம். கடையெல்லாம் போய்க் கட்டடம் வந்தாச்சு. ஆனா, டுர்ஹாம் யூனிவர்சிட்டி இருக்கு. அல்லிக் கோட்டை இருக்கு. அங்கே ஸ்டார் ஓட்டல் இருக்கு. ஸ்டெல்லா இருக்கா. அவளோட பர்த்டே பார்ட்டி இருக்கு.”

நண்டுமரம் ‘வாம்மா மின்னல்’ ஸ்டைலில் இழுத்து இழுத்துக் கூவினார். ஸ்டெல்லா சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டாள். மதர்ப்பாக சோம்பல் முறித்தபடி என் தோளில் இடித்து, “இது என்னன்னு பாரு” என்றாள். எதை என்று புரியாமல் பார்க்க, வெளியே கையைக் காட்டினாள். கார் ஜன்னலுக்கு வெளியே பார்க்க புதுக்கோட்டை டவுன், அதான் நியூ காசில் கடந்து போனது. “இன்னும் பத்து நிமிடத்துலே அல்லிக் கோட்டை” என்றான் வேட்டைக்காரன். எல்லாம் சரிதான், நான் அல்லிக் கோட்டை பக்கம் எங்கே வந்தேன்? எதற்காக வந்தேன்?

இதெல்லாம் போன சனிக்கிழமை வெங்காய சாம்பாரில் தொடங்கியது. மோரிசன் தெருமுனை பங்களாதேஷ்காரன் கடையில் வாங்கிய சின்ன வெங்காயம். புதுப்புளி. சென்னையிலிருந்து எடுத்துவந்த மசாலா பொடி. கமகமவென்று சாம்பார் வயிற்றில் பசியைக் கிளப்பிக்கொண்டு பொங்கிவர அடுப்பில் அது கொதித்துக் கொண்டிருந்த கல்சட்டியும் காரணம். அம்பலப்புழையில் உருவாக்கி, நாலு தலைமுறையாக சென்னையில் என் வீட்டில் குழம்பு செய்ய உபயோகமான அந்தக் கல்சட்டியைப் பரணில் இருந்து எடுத்து லாப் டாப் கம்ப்யூட்டருக்கு இணையாகப் பாதுகாப்போடு பெட்டியில் வைத்தபோது தலைதலையாக அடித்துக்கொண்டு டாட்டா காட்டினார்கள்.

பொலபொலவென்று பாஸ்மதி அரிசி சோறு, சுடச்சுட வெங்காய சாம்பார், ஆனையடி அப்பளம், முன்பாரம் பின்பாரமாக வெள்ளை ஒயின், சிவப்பு ஒயின். “சுவர்க்கம் இதுதான்” பத்து விரலாலும் எடுத்துச் சாப்பிட்டு ஒவ்வொன்றாக நக்கிக்கொண்டு நண்டுமரம் சொன்னது போன சனிக்கிழமை சாயந்திரம். கூடவே கம்பெனி கொடுத்த வேட்டைக்காரத் தடியனும், ஸ்டெல்லா பொண்ணும் அவர் சொன்னதை அப்படியே வழிமொழிந்ததோடு, சாம்பாரின் சுவைக்குப் பாரம்பரியம் மிக்க கல்சட்டியும் காரணம் என்பதை முழுமனதாக ஒப்புக் கொண்டார்கள். “ஹெரிட்டேஜ்”. அந்தக் கல்சட்டியை இன்ஷ்யூர் செய்யச் சொன்னார் நண்டுமரம்.

அப்போது கார்டியன் தினசரியின் கனமான சனிக்கிழமை பதிப்பை ஒரு கையால் புரட்டிக் கொண்டிருந்த என் கண்ணில் பட்டது அல்லிக் கோட்டை விளம்பரம். அங்கே தங்க இந்த வாரம் முழுக்கச் சலுகைக் கட்டணமாம். ஐம்பது பெர்சண்ட் தள்ளுபடி. ஒரே நிபந்தனை. ஒரு ராத்திரி தங்கியிருந்து விருந்து சாப்பிட வருகிறவர்கள் அவர்களுடைய கலாச்சார, பாரம்பரிய உடுப்பில் வரவேண்டும்.

“இந்த சனிக்கிழமை ஸ்டெல்லா பிறந்த நாள் வருது. டால்ரி தெரு பியர்க்கடையிலே பாதி, பாம்பே பைசைக்கிள் ரெஸ்ட்ராண்டிலே மீதின்னு கொண்டாட நினைச்சேன். ஒரு தம் பிடிச்சு அல்லிக் கோட்டைக்குப் போய் வித்தியாசம நடத்தினா என்ன?” வேட்டைக்காரன் கேட்டான். செயின்ஸ்பெரி சூப்பர் மார்க்கெட்டுக்கு வேனில் இறைச்சியும் முட்டையும் கொண்டுவந்து கொடுக்கும் வேலை கிடைத்திருந்ததால் அவன் கையில் பணம் புழங்குகிறது. மாதாந்திரத் தவணைக்கு ஒரு பழைய பென்ஸ் காரை வாங்கி அது அவ்வப்போது உபத்திரவம் செய்தாலும் அட்ஜஸ்ட் செய்து ஓட்டிக் கொண்டிருக்கிறான். ஸ்டெல்லா லோத்தியன் தெரு பிக்காசோ முடிதிருத்தகத்தில் உதவியாளராகச் சேர்ந்து பலபேர் தலையிலும் பயிற்சி எடுத்து வருகிறாள்.

“நான் வரலே. கையில் காசு கம்மி”, நண்டுமரம் தாடியைத் தடவிக் கொண்டு வருத்தம் தெரிவித்தபோது நாங்கள் காசு தர உடனே நேசக்கரம் நீட்டினோம்.

“பாரம்பரிய உடைதான் பிரச்சனை” என்றேன் நான். “என்ன பிரச்சனை? என்கிட்டே கில்ட் இருக்கு. உன்னோடதும் தச்சுக் கொடுக்க ஆள் தேடிடறேன்”.

நான் கட்டம் போட்ட ஸ்கர்ட் மாட்டிக்கொண்டு படி இறங்கமாட்டேன் என்று திடமாக அறிவிக்க, “உங்க ஊர் உடுப்பு இருக்குமே” என்றாள் ஸ்டெல்லா. வேட்டி, ஜிப்பா சகிதம் இந்தப் பயணம் அதேபடிதான். வேட்டைக்காரனும் வேட்டிக்காரனாக ஆசைப்பட்டான். கைவசம் வேறே வெள்ளை வேட்டி இல்லாத காரணத்தால், நண்டுமரம் போல அவன் கூட தற்போது பாவாடைச்சாமி.

விஸ்தாரமான கல்பாறை. மேலே நாலு உயரமான கோபுரம். சுற்றி மதில் சுவர். தூர்ந்துபோன அகழி. ஏழெட்டு நூற்றாண்டு முற்பட்ட கம்பீரத்தைத் தக்கவைத்தபடி அல்லிக் கோட்டை சாயங்கால வெய்யிலில் சிவப்பு பூசிக்கொண்டு எதிர்ப்பட்டது. உயரத்தில் ஏற கார் பிடிவாதமாக மறுக்க, வேட்டைக்காரன் அதை வண்டை வண்டையாகத் திட்டினான். அவனை அடக்கிவிட்டு ‘ஆம்பளையாடா நீ” என்று காரைப் பார்த்து ஸ்டெல்லா உசுப்பேற்ற, அது ரோஷமாகி ஜிவ்வென்று மேலே ஏறி கோட்டைக்குள் கனகம்பீரமாக நுழைந்தது.

பரந்த புல்தரைகளுக்கு இடையே நீண்ட பாதையில் வளைந்து வளைந்து திரும்பி பிரம்மாண்டமான கோட்டைக் கதவுப் பக்கம் போய்ச் சேர்ந்தோம். அல்லிக் கோட்டை ஓட்டல் ரிசப்ஷன். அங்கே ஜெர்மானிய உச்சரிப்போடு இங்கிலீஷ் பேசிய தேங்காய்நார் பிரஷ் மீசைக்காரர் விசாரித்தார். “எத்தனை ரூம் வேணும்?”

“நாலு ” என்றேன். “மூணு போதும்” என்றான் வேட்டைக்காரன்.

“நீ, அந்தத் தாடி வாத்தியார், உங்களுக்கு டிஸ்கவுண்ட்லே ரூம். பாரம்பரிய உடையிலே வரல்லியேம்மா. முழுக் கட்டணம் தான் உனக்கும் உன் ஜோடிக்கும்” ஹோட்டல் மேனேஜர் ஸ்டெல்லாவிடம் கறாராக அறிவித்தார். “என் பாரம்பரிய உடுப்பு தானே. இதோ”. ஸ்டெல்லா நிதானமாக மேல் சட்டையை அவிழ்க்கத் தொடங்க, அவர் அவசரமாகக் கையமர்த்தி, சோபாவில் உட்காரச் சொன்னார்.

நான் மெல்ல நடந்து அந்தக் கட்டிடத்தைச் சுற்றி வந்தேன். காலம் உறைந்து கிடந்த அங்கே பாதிக்கு மேல் இருட்டாக இருந்தது. ரிசப்ஷனை ஒட்டி குகைபோல் நீண்ட அறையில் முணுக் முணுக் என்று நாலைந்து மெழுகுவர்த்திகள் பெரிய ஸ்டாண்ட்களில் ஒளிவிட்டுக் கொண்டிருந்தன. கவனித்துப் பார்த்தால் மெழுகுவர்த்தி போல் செய்த மின்சார விளக்கு. அறை முழுக்க வாளும், கத்தியும், போருக்குப் போகிற உடையும், குதிரைச் சவுக்குமாகப் பரத்தி இருந்தது. நடுவில் பெரிய தேக்கு மேஜை போட்டு பிரபுக்களின் குடும்பம் ஒன்று விமரிசையாக விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. எல்லாம் தத்ரூபமான மெழுகு பொம்மைகள்.

“ரூம் சாவி” ஜெர்மன்காரர் கரிசனத்தோடு கூப்பிட்டுக் கொடுத்தார். கோட்டைக்குள் நாலு கட்டிடம். வடக்கு மூலையில் என் அறை. வேட்டைக்காரனும் ஸ்டெல்லாவும் தெற்கில் நடந்தார்கள். “ஏழு மணிக்கு டின்னர் ஹால் வந்துடு” என்றாள் ஸ்டெல்லா.

அறைக்குள் நுழைந்தேன். அறையா அது? கோட்டையில் நாலு பெரிய தூண்களுக்கு நடுவே பாறையே சுவராக, முன்னால் பிளைவுட் அடைத்து எப்படியோ ஒரு படுக்கை அறை. நுழைந்தால் தலையில் இடிக்கும் அந்த இடத்தில் டெலிவிஷன் செட், காபி மேக்கர், எழுத்து மேஜை, வெளிர்நீல நிறத்தில் விரிப்போடு அழகான மஞ்சம். பொம்மை அறைக் கதவு திறந்த இடத்தில் வாஷ்பேசின்.சின்ன டாய்லெட். சந்தேகமில்லை. நம்மூர் •அறுநூறு சதுர அடி பிளாட் கட்டுகிற ஆசாமி யாரோ பிளைட் ஏறி வந்து கட்டிக் கொடுத்திருக்கிறார்.

விக்டோரியா மகாராணி காலத்து சோப்பால் முகம் கழுவிக்கொண்டு விருந்து மண்டபத்தில் நுழைந்தபோது ஒரு கோஷ்டி நீளமான வயலின்களை நிறுத்தி வைத்து நிதானமாக வாசிக்க, மற்றொன்று மெல்ல அசைந்து ஆடிக்கொண்டிருந்தது. சுவரை ஒட்டி அழகான உபசரிப்புப் பெண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். நேர்த்தியான, டியூடர் வம்ச காலத்து உடுப்பில் இருந்தார்கள் அவர்கள் எல்லோரும். மெழுகுவர்த்தி பொம்மைகளாக இருக்கும் என்று நினைத்தேன். ஒருத்தி முன்னால் வந்து ஷேக்ஸ்பியர் இங்கிலீஷில் வரவேற்று கடைசி மேஜைக்கு அழைத்துப் போனாள். அசல் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கடைசி மேஜையில் நண்டுமரம் மற்றும் வேட்டைக்காரன் ஜோடி. ஏதோ பதினான்காம் நூற்றாண்டு ஐரோப்பிய ஓவியத்துக்குள் நுழைந்தது போன்ற சூழல். ஸ்டெல்லா கூட முழுப் பாவாடையில் ஜூலியட் போல் வசீகரமாக இருந்தாள். நண்டுமரத்தைப் பார்த்தால் லியர் அரசன் ஞாபகன் வந்தது. “நீ மகராஜா போல் இருக்கே. கிரீடம் தான் மிஸ்ஸிங்க்”. விஸ்கி குடித்து விக்கியபடி வேட்டைக்காரன் எழுந்து என்னோடு கைகுலுக்கினான். பாவம் மகாராஜாக்கள்.

ஸ்டெல்லாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னேன். அவளும் வேட்டைக்காரனும் வெகு அழகாக நடனம் ஆடினார்கள். நண்டுமரம் கூட பத்து தப்படி எடுத்து வைத்து, அப்புறம் முழங்காலைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார். சுவர் ஓரமாக நின்ற சரித்திரகால அழகிகள் ஓடோடி வந்து காலை நீவிவிட்டு அவருக்கு இன்னும் கொஞ்சம் பியர் வார்த்தார்கள். நானும் ஆடியிருக்கலாம்.

“எத்தனை மணி வரைக்கும் இங்கே ஆடலாம்?” நண்டுமரம் அந்தக் கூட்டத்தில் குறுகுறுவென்று சுற்றிக்கொண்டிருந்த பெண்ணை விசாரித்தார். எத்தனை மணி வரை இங்கே உட்கார்ந்து குடிக்கலாம் என்று அர்த்தம்.

“பதினோரு மணிக்கு சாப்பாட்டுக் கடையை ஏறக்கட்டிட்டு நாங்க போயிடுவோம்” அந்தப் பெண் சொன்னாள். “என்ன அவசரம்?” நான் கேட்டேன்..

“பின்னே இல்லியா? அல்லிக் கோட்டை பேய் பிசாசு எல்லாம் நடுநிசிக்கு உலாத்த வந்துடும். அதுங்களுக்கு அழகான பொண்ணுங்க, இல்லாட்ட கிரிக்கெட் ஆட்டக்காரன்னா ரொம்பவே இஷ்டமாம்” அவள் சிரித்தாள். மேலும் தகவல் விசாரிக்க ஆரம்பித்தார் நண்டுமரம்.

அழகான பெண்களை ஹிப்னாடிசத் துயிலில் ஆழ்த்தி, கோட்டையின் கிழக்கு மூலையில் பழைய கிணற்றுப் பக்கம் அழைத்துப்போய் விடுமாம் அதில் ஒரு திடகாத்திரமான ஆண் பிசாசு. “உறை வச்சிருக்குமில்லியா?”. ஸ்டெல்லா அக்கறையாகக் கேட்க, வேட்டைக்காரன் அவள் முதுகில் சாத்தினான்.

அழகான பெண் சமாச்சாரம் இருக்கட்டும். அதென்ன கிரிக்கெட் பிசாசு? இரண்டு வருஷம் முன்னால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ராத்தங்கியபோது ஷேன் வாட்சன் இருந்த அறையில் ஒரு பிசாசு குறுக்கும் நெடுக்குமாக ஓட, அவர் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்தாராம். அப்போது தொடங்கி ட்வெண்டி-20 நடக்கிற இந்த நாள்வரை மேற்படி ஷேன் வாட்சன் உடம்புக்கு ஏதாவது நோக்காடு வந்தபடி இருக்கிறதாம். ஏழு வருஷம் முன்னால் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வந்தபோதும் கேப்டன் ஜிம்மி ஆடம்ஸை கிரிக்கெட் ரசிகப் பிசாசு ஒன்று ஆட்டோகிராப் வாங்க நடுராத்திரியில் துரத்தியதாம்.

எனக்குப் பயமாக இருந்தது. “பள்ளிக்கூடத்துலே படிக்கும்போது நானும் கிரிக்கெட் விளையாடியிருக்கேன். ஒரு மாட்சிலே முப்பத்திரெண்டு ரன் எடுத்து, உள்ளூர்ப் பத்திரிகையிலே, காலமானார் விளம்பரத்துக்கு மேலே பொடி எழுத்திலே வந்தது”.

“கவலைப்படாதே. உங்க ஊர்ப் பத்திரிகை எல்லாம் இந்த ஊர்ப் பிசாசு படிக்காது. லண்டன் டைம்ஸ் அதுவும் லேட் எடிஷன் தான் அதுக்கு இஷ்டம்”. வேட்டைக்காரன் ஏதோ பேய்க்கூட்டத்தோடு தாயாதி பங்காளியாகப் பழகியதுபோல் சொன்னான். நண்டுமரம் என்னை இன்னொரு கிளாஸ் ரம் குடிக்கச் சொல்லி உற்சாகப்படுத்தினார்.

என்ன குடித்தேன், எவ்வளவு குடித்தேன் எப்போது கிளம்பினேன் என்று எனக்கே தெரியாது. வேட்டியை மடித்துக் டப்பாக்கட்டு கட்டி, அங்கவஸ்திரத்தைத் தலையில் முண்டாசாகச் சுற்றிக்கொண்டு விருந்து மண்டபத்திலிருந்து வெளியேறியபோது பேஷன் பேரேட் பார்க்கிறதுபோல் எல்லோரும் எழுந்து நின்று ஒருசேரக் கைதட்டியது மசங்கலாக நினைவு இருக்கிறது. உத்தேசமான திசைநோக்கி மெல்ல என் அறைக்கு நடந்தேன். வழியில் வேட்டைக்காரன் கார் கண்ணில் பட்டது. கதவைத் தள்ளினேன். தன்னால் திறந்துகொண்டது அது. அந்த மடையன் கார்ச் சாவியை வண்டியிலேயே விட்டுப் போயிருக்கிறான்.

கருப்பாகக் கவிந்து குளிரோடு சூழ்ந்து இறங்கும் இங்கிலீஷ் ராத்திரி. ஏதேதோ பூக்கள் இருட்டில் வாசம் வீசுகின்றன. பச்சைப்புல் கூட இதமான மணத்தோடு மனசை அள்ளுகிறது. எதிரே கருத்த மலைப்பாம்பாக சாலை விரிந்து கிடக்கிறது.

சட்டென்று காரில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தேன். ராத்திரி முடியும்வரை இருட்டும் வெளிச்சமும் விளையாட்டுக் காட்டுகிற அந்தச் சாலையில் காரை மெதுவாக ஓட்டிப் போகக் கை பரபரத்தது. காரைக் கிளப்பினேன். முண்டாசு அவிழ்ந்து கண்ணை மறைத்தது. வழுக்கிக்கொண்டு கியர் விழுந்தது. கோ பார்வர்ட்.

ஆனாலும் கார் ஏனோ பின்னால் தான் நகர்ந்தது. வேட்டைக்காரன் போல் அதைத் திட்ட நினைத்தபோது வசவு ஞாபகம் வராமல் போக, கலவரமாக ஒரு பெரிய சத்தம். கிழக்கு மூலைக் கிணற்றுச் சுவரில் இடித்து நாலைந்து செங்கலை உடைத்துவிட்டுக் கார் பரமசாதுவாக சேதமின்றி நிற்க நான் முழுசாக சுய நினைவுக்கு வந்தேன்.

பின்கதைச் சுருக்கம் சொல்ல வேண்டிய நேரம் இது.

புராதனமான கோட்டைக் கிணற்றுச் சுவரை இடித்து பாரம்பரியம் மிக்க நாலைந்து செங்கலைப் பெயர்த்துப் போட்டதால், நாலாயிரம் பவுண்ட் நஷ்ட ஈடு கட்டவேண்டும் என்று ஹோட்டல் மேனேஜர் தீர்ப்பு கூறினார். எல்லோரும் கூட்டாகக் கையைப் பிசைகிற நேரத்தில் நண்டுமரம் அட்டகாசமான ஒரு யோசனை தெரிவித்தார். அதன்படி எங்கள் வீட்டுப் பரம்பரை சொத்தான கல் சட்டி அல்லிக் கோட்டை ஹோட்டல் நிர்வாகத்தினர் வசம் போய்ச் சேர்ந்தது. ஐநூறு வருட இங்கிலீஷ் செங்கலுக்கு நூறு வருட இந்தியக் கல்சட்டி நஷ்ட ஈடு. அதில் என் கண் முன்னால் வயலெட் பூக்கொத்து அடுக்கி, பிரபுக்கள் குடும்பம் மெழுகு பொம்மைகளாக இருந்து சாப்பிடும் அறையில் மேஜை மேல் அலங்காரமாக வைத்தார்கள். நண்டுமரம் தற்போது எடின்பரோவில் கடைகடையாக பாத்திரம் வாங்க ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். “கல்சட்டி தவிர வேறு எதில் வைத்தாலும் வெங்காய சாம்பாரில் மஸ்த் இல்லை” என்று அவர் சொல்வதை ஸ்டெல்லாவும் வேட்டைக்காரனும் பலமாக ஆமோதிக்கிறார்கள்.

Series Navigationபந்தல்பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *