அழகுக்கு அழகு (ஒப்பனை)

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 27 in the series 21 செப்டம்பர் 2014

எஸ்.ஜயலக்ஷ்மி

azhagu

ஒப்பனை என்ற சொல்லுக்குப் பொதுவாக அலங்கரித்தல் என்ற பொருள் என்றாலும் வழக்கில் பெண்கள் செய்து கொள்ளும் அலங்காரத்தையும் நாடக நடிகர்கள் செய்து கொள்ளும் அலங்காரத்தையுமே குறிக்கிறது. நாடகங்களில் இளைஞனை முதியவனாகவும், முதியவரை இளைஞனாகவும் காட்டுவது இந்த ஒப்பனைக் கலையால் தான். இன்னும் ஆணுக்குப் பெண் வேடம் போடு வதும் பெண்ணுக்கு ஆண் வேடம் போடுவதைம் இந்த ஒப்பனையால் தான்..
இன்னும் விரிவாகப் பார்த்தால் நடிகர்களை தேவர்களாகவும், தேவிகளாகவும். அசுரர்களாக வும் கூட மாற்றி விடுகிறார்கள் ஒப்பனைக் கலையால். இக் காலத்தில் அழகுக்கலை ஒரு பாடமாகவே கூட போதிக்கப் படுகிறது. சினிமா நடிக நடிகையர்கள் தங்களுக்கென்றே மேக்கப் மேன் வைத்திருப்பதையும் பார்க்கிறோம். நாட்டியக் கலைஞர்களுக்கும் இந்த ஒப்பனை மிகவும் அவசியம்.

இப்பொழுது திருமணப் பெண் அலங்காரம் என்பது மிகவும் முக்கியமான விஷயமாகக் கருதப் படுகிறது. அது இல்லாமல் திருமண வரவேற்பு நிறைவு பெறாது. நிறைய இடங்களில் ‘மணப்பெண் அலங் காரம் சம்பந்தமான விளம்பரங்களையும் பார்க்க முடிகிறது
சென்ற தலைமுறையில் மணப்பெண் அலங்காரத்திற்கு இந்த அளவு முக்கியத்வம் இருக்கவில்லை. வீட்டிலுள்ள உறவி னரே மணப்பெண்ணுக்கு அலங்கரம் செய்து விடுவார்கள். இப்பொழுதோ திருமணத்திற்கு ஒரு வாரம் பத்து நாட்களுக்கு முன்பிருந்தே மணப்பெண்ணும் அவள் தாயாரும் கூட பியூட்டி பார்லர் சென்று தலைமயிர் முகம் புருவம் எல்லா வற்றையும் அழகுபடுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். முன்பெல்லாம் மருதாணி இட்டுக் கொண்டது போய் இப் பொழுது வட இந்தியப் பாணியில் மெஹந்தி இட்டுக் கொள்வது கட்டாயமாகி விட்டது!

முன்காலத்திலும் நம் நாட்டில் பெண்கள் இதுபோல் தங்களை அழகு படுத்திக் கொண்டார் களா? சிலப்பதிகாரக் கதாநாயகியான கண்ணகி தன்னை அழகு படுத்திக் கொண்டதாக இளங்கோவடிகள் விரிவாக எழுதவில்லை. கோவலனைப் பிரிந்திருந்ததால் அவள் மங்கல நாண் தவிர எதையும் அணியவும் இல்லை, எந்த ஒப்பனையும் செய்து கொள்ளவும் இல்லை. ஆனால் நாடகக் கணிகையான மாதவி தன்னை எவ்விதம் ஒப்பனை செய்து கொண்டாள் என்பதை விரிவாகச் சொல்கிறார்.

மாதவியின் ஒப்பனை.
கடலாடு காதையில் அழகி மாதவி தன்னை அழகுபடுத்திக் கொள்வதைப் பார்ப்போம்.
முதலில் கூந்தல் அலங்காரத்திலிருந்து ஆரம்பிக்கிறாள்.

தன்னுடைய கரிய கூந்தலைப் பத்து வகையான மூலிகைகள். ஐந்து வகையான விரைகள் நன்னாரி, கஸ்தூரி வேர், தமாலம், வகுளம் போன்ற 32 வகை ஓமாலிகளும் ஊற வைத்த நன்னீரிலே கூந்தலை நனைத்தாள். பின்னர் அகிற்புகையில் கூந்தலை உலர்த்தி னாள். அதில் கஸ்தூரிக் குழம்பைப் பூசினாள். இதை,
பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத்திரு வகை ஓமாலிகையிலும்
ஊறின, நன்னீருரைத்த நெய்வாசம்
நாறிருங் கூந்தல் நலம்பெற வாட்டிப்
புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை
வகைதொறு மான்மதக் கொழுஞ் சேறூட்டி

என்று விவரிக்கிறார்.
இதன்பின் செம்பஞ்சுக் குழம்பு தீட்டப்பட்ட சிவந்த பாதங்களில் பீலி, கால் மோதிரம் அணிந்து கொண்டாள். மேலும் சிலம்பு, பாடகம், சதங்கை, பாதசரம் இவற்றோடு தொடையில் குறங்கு செறியென்னும் ஆபரணத்தை அணிகிறாள். விரிசிகை என்னும் முத்தால் ஆன அணிகலன் முப்பத்திரண்டு வடங்களால் ஆனது இந்த மேகலையை பூ வேலைப்பாடமைந்த நீலநிறப் பூந்துகிலின் மேலே சுற்றி அணிந்து கொள்கிறாள்.

       அலத்தகமூட்டிய அஞ்செஞ்சீறடி
        நலத்தகு மெல்விரல் நல்லணி செறீஇப்
        பரியக நூபுரம் பாடகஞ் சதங்கை
        அரியகங் காலுக்கமைவுற அணிந்து
        குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்துப்
        பிறங்கிய முத்தரை முப்பதிருகாழ்
        நிறங்கிளர் பூந்துகில் நீர்மையினுடீ

என்று  காலில் அணியும் அணிகலன்களைப் பார்க்கிறோம்

அடுத்ததாக காமர் கண்டிகை என்ற தோள்வளையை அணிந்தபின் வயிரங்கள் பதிக்கப் பெற்ற
சித்திர வேலைப்படமைந்த சூடகமும், செம்பொன்னால் செய்த வளையும், நவரத்தின வளைகளையும், சங்கினால் செய்த வளைகளையும் பவழ வளைகளையும் பொருத்தமாக அடுக்கிக் கொண்டாள்.

காமர் கண்டிகை தன்னோடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக்கணிந்து
மத்தக மணீயொடு வயிரங் கட்டிய
சித்திரச் சூடகஞ் செம்பொற் கைவளை
பரியகம் வால்வளை, பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக்கமைவுற அணிந்து

என்பதால் அக்காலத்தில் வழக்கில் இருந்த பல்வேறு வளை களைப் பற்றி அறிந்து கொள்கிறோம்.

பல்வேறு விதமான வளைகளை அணிந்து கொண்டபின் பலவிதமான மோதிரங்களையும் தன் செங்காந்தள் விரல்களில் அணிந்து கொள்கிறாள்.எத்தனை வகையான மோதிரங்கள்!

         வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம்
        கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
        வாங்குவில் வயிரத்து மரகதத் தாள் செறி
        காந்தண் மெல்விரல் கரப்ப

அணிந்து கொண்டாள்.
இதன் பின் வீரச் சங்கிலி, நேர்ச் சங்கிலிகளையும் வேலைப்படமைந்த சரப்பளியையும் முத் தாரத்தையும் பூட்டிக் கொண்டாள். முத்தாரங்களில் நவ ரத்தினங்களைக் கோர்த்து முதுகை மறைக்கும் பின்தாலி யையும் அணிந்தாள்

சங்கிலி நுண்தொடர்பூண் ஞாண் புனைவினை
        அங்கழுத்தக வயின் ஆரமோடணிந்து
        கயிற்கடை யொழுகிய காமர் தூமணி
        செயத்தகு கோவையிற் சிறுபுற மறைத்தாள்.

கழுத்துக்கு அணிகளை அணிந்த பின் காதணிகளை அணிய  ஆரம்பித்தாள். நீலக் குதம்பை, சந்திரபாணி என்னும் காதணீகள் வயிரக் கற்கள் பதிக்கப் பெற்றவை.
இந்திர நீலத்து இடையிடை திரண்ட
        சந்திரபாணி தகை பெறு கடிப்பிணை
        அங்காதவயின் அழகுற அணிந்து

விளங்கினாள்.
காதணிகளுக்கு அடுத்து தலை யில் அணிந்து கொள்ளும் தென்பல்லி, வடபல்லி, சீதேவி என்ற தலைக்கணிகளை அணிந்து கொண்டு அழகுற விளங்கினாள்.

தெய்வ வுத்தியோடும் செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகந் தொடர்ந்த தலைக்கணி
மையீரோதிக்கு மாண்புற அணிந்து

கொண்டு தன் ஒப்பனையை முடிக்கிறாள். மாதவியின் அலங்காரத்திலிருந்து அக்கால நகைகள். தலைமயிர் பரா மரிப்புக்கான குறிப்புகள் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முடிகிறது.

மணமகன் அலங்காரம்

மணப்பெண் அலங்காரத்திற்குச் சற்றும் குறைவில்லாமல் மணமகனும் அலங்காரம் செய்து கொண்டார்கள் என்பதை, ராமன் அலங்காரம் செய்து கொண்ட நிகழ்ச்சியைக் கம்பன் வாயிலாக அறிகிறோம்.

மங்கல நீராடிய பின் கலவைச் சாந்து அணிந்து கொள்கிறான் ராமன். அவனோ நீலமேகம் போன்றவன். அவன் சாத்திய சந்தணக் குழம்பு நீல மேகத் தைத் தழுவும் நிலவு போலிருந்ததாம்.

    எழுத அரு வடிவு கொண்ட இருண்ட கேசத்தைத்
    தழுவிய நிலவு என கலவை சாத்தியே

என்று காட்டுகிறான் கவி. இதன் பின் முடியலங்காரம் செய்து கொள்கிறான். அலைஅலையாக நெளியும் குழல் தொகுதியில் வயிரமணிகள் பதிக்கப்பெற்ற சுழியம் என்னும் அணிகலனை அணிந்து கொள்கிறான். செந்நெட்டி மாலை யோடு செம்பொன்னாலான மாலையும் பூமாலையும் சூடிக் கொள்கிறான்.
சூரிய சந்திரர்களைப்போல் ஒளி வீசும் குண்டலங்களை காதுகளில் அணிந்து கொள் கிறான். இந்த இடத்தில் கவி அக்குண்டலங்கள், சீதையின் காதலைத் தெரிவிக்கும் தூதுவர் போல் செயல் படுவதாக்க் காட்டுகிறான்.
ஏதம் இல் இரு குழை,
           கதிரும் திங்களும்
           சீதைதன் கருத்தினைச் செவியின் உள்ளுற
        தூது வந்து உரைப்பன போன்று

தோன்றுகிறதாம். சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று சுடர்களுள் சந்திரனை சிவன் தன் திருமுடியில் அணிந்து கொண்டதால் சூரியன் அக்கினி ஆகிய சுடர்க்கூட்டங்களை யெல்லாம் தன் தலையில் சூடுவது போல் வீர பட்டிகையும் திலகமும் அணிந்தான் ராமன்.

அன்னம் ஆடுதுறைக்கருகில் முதன் முதலாகச் சீதையைக் காண்கிறான் ராமன். ராமனை நோக்கிய சீதையும் முத்துப் போன்ற பற்கள் சற்றே தெரிய முறுவல் செய்தாள். பிராட்டியின் புன்னகை ராமன் நெஞ்ச மெல்லாம் நிறைந்து பொங்கி வழிந்து கொண்டிருந்ததாம். இப்பொழுது ராமன் முத்துமாலை அணிவதைக் கம்பன் எப் படிக் கற்பனை செய்கிறான்? ஏற்கெனவே நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்த பிராட்டியின் புன்சிரிப்புத்தான் அப்படி வெளிப் பட்டதோ என்று தோன்றும்படி இருந்ததாம் அந்த முத்து மாலை.

கழுத்து அணி தரள வெண்கொடி    மொய்க்
கருங்குழலினாள், முறுவல்
உள்ளுறப் புக்கன நிறைந்து, மேல் பொடிப்ப
போன்றவே

என்று தன் குறிப்பை வைக்கிறான் கவிஞன்.

முத்து மாலை அணிந்த  பின் வருகிறது தோள்வளை. இந்தத் தோளின் அழகிலே தான் மயங்கினாள் சீதை. மிதிலை நகரத்துப் பெண்களும் :தோள் கண்டார் தோளே கண்டார்”     என்று சொல்லும் படியான மலை போன்று உயர்ந்த தோள்கள்.! அந்தத் தோள்களைச் சுற்றி தோள்வளை அனிகிறான். இதைப் பார்க்கிறபோது ஒரு உவமை தோன்றுகிறது. திருப்பாற்கடல் கடைந்த அந்நாளில் மந்தர மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கடை கயிறாகவும் கொண்டு கடைந்த காட்சி நினைவுக்கு வரு கிறதாம்.
சுந்தரத் தோள் அணிவலயம், தொல்லை நாள்
மந்தரம் சுற்றிய அரவை மானுமே.

என்ன பொருத்தமான உவமை!

தோள்வளைகளுக்கு அடுத்த படியாகத் தனது அகன்ற தடக்கையில் கடகம் அணிகிறான்.
அகலகில்லேன் என்று திருமகள் நித்யவாசம் செய்யும் திரு மார்பிலே ஆரம் அணிகிறான்.மேகக் கூட்டத்திலே வானவில்
எழுந்தது போலிருக்கிறது அக்காட்சி,. இதோடு மாசற்ற உத்த ரீயமும் அணிந்து கொள்கிறான்.

மும்மூர்த்திகளின் வடிவமும் நானே என்று எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள் என்று சொல்வது போலவும் சூரிய சந்திர அக்கினி என்ற முச்சுடர் கள் போலவும் மார்பிலே முப்புரிநூலை அணிந்து கொள் கிறான்

மேவ அருஞ்சுடர் ஒளி விளங்கும் மார்பின் நூல்
ஏவரும் தெரிந்து இனிது உணர் ஈண்டு என
தேவரும் முனிவரும் தெரிக்கலா, முதல்
மூவரும், தான் என முடித்தது ஒத்ததே

அரையில் கட்டிய ஆடை நழுவா மல் இருக்க இக்காலத்தில் பெல்ட் அணிவது போல வயிற் றின் மேல் அணீயும் ஆபரணம் ‘உதர பந்தனம். இராமன் அந்த உதர பந்தனத்தை அணிந்து கொள்கிறான். அது இன்னு மோர் அண்டத்தையும் இன்னுமொரு பிரமனையும் படைப்ப தற்காகத் தன் நாபியில் மேலும் ஒரு கமலத்தை பூத்தது போல் இருந்தது என்கிறான் கவிஞன்.

இத்தனை ஆபரணங்களையும் அணிந்த ராமன் வெண்பட்டாடையும் அணிந்து கொள்கிறான்.
கருங்கடல் பாற்கடலை உடுத்தியது போலிருக்கிறதாம் அக் காட்சி. ராமனை கருங்கடலாகவும் வெண்பட்டை பாற்கட லுக்கும் உவமையாக்குகிறான் கவி

மண்ணுறு வயங்கித் தோன்றிய
      கண்ணுறு கருங்கடல் அதனை கைவளர்
      தண் நிறப் பாற்கடல் தழீஇயது ஆம்? என
            வெண்ணிறப்பட்டு ஒளி விளங்கச் சாத்தியே

என்பது கவிஞன் கற்பனை. வெண்பட்டு உடுத்திய பின் உடைவாளினை இடையில் கட்டினான். வாளின் அருகே செம்மணி மாலையை அணிந்து கொள்கிறான்.

கடைசியாக காலில் சிறந்த வேலைப்பாடமைந்த வீரக்கழலை அணிந்து கொள்கிறான்.
வாமன அவதாரத்தில் பெரிய வடிவு கொண்டு உலகினை ஈரடியால் அளந்தது போல் இந்த ராமாவதாரத்தில் அளக்க விடமாட்டோம் என்று தடுக்கும் தன்மையோடு அவை செயல்படுவது போல் தோன்றுகிறதாம்!

இனிப்பரந்து உலகினை அளப்பது எங்கு? என
தனித்தனி தடுப்பன போலும் சால்பின
நுனிப்ப அரு நுண் வினைச் சிலம்பு நோன்கழல்
பனிப்பருந் தாமரைப் பாதம் பற்றவே

என்ற வீரக்கழல் அணிந்ததை விவரிக்கிறான் கவிஞன்.

பொதுவாக பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வ தாக ஒரு குற்றச் சாட்டு உண்டு. அப்படி யென்றால் மணப் பெண்ணுக்கு அலங்காரம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? முகூர்த்த நேரம் தாண்டி விடக் கூடாதே. எனவே மணப் பெண் சீதையின் அலங்காரத்தையும் பார்த்து விடுவோம்.

மணமகள் [சீதை] அலங்காரம்

ராமன் சிவதனுசை முறித்து சீதையை மணக்கப் போகும் செய்தியை அறிந்த தசரதன் மிதிலை வருகிறான். ஜனகன் சீதைக்கு அலங்காரம் செய்து மணவறைக்கு அழைத்து வரும்படி பணிப் பெண்களிடம் சொல்ல அவர்களும் சீதைக்கு அலங்காரம் செய்யத் தொடங்குகிறார்கள். இங்கும் கேசாதி பாத அலங்காரம் தான்.

முதலில் கூந்தல் அலங்கரம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். கன்னி மாடத்தில் ராமனைக் கண்டது முதல், சீதை அவனையே நினைத்துக் கொண்டிருக் கிறாள். அவன்தன் நீல நிறத்தையே நினைத்து நினைத்து அந்த நிறம் உள்ளத்திலே படர்ந்து, படர்ந்து கூந்தலாகி விட் டதோ என்று தோன்றுகிறது கவிஞனுக்கு. மேகம் போன்ற கூந்தலில் வட்டமான சிகழிகை என்னும் மாலையைச் சூட்டு கிறார்கள். அது மேகத்திடையே தோன்றும் வெண்மதி போலி ருக்கிறது.
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து
மழையில் தோன்றும்
விண் நின்ற மதியின், மென்பூஞ் சிகழிகைக்
கோதை வேய்ந்தார்..

என்று கூந்தலில் பூச்சூட்டிய பின் ஒளி பொருந்திய சுட்டியை நெற்றியில் தொங்க விட்டதைப் பார்க்கிறோம்.

சிவதனுசை முறித்த வீரன் யார்? தன் உள்ளத்தைக் கவர்ந்த காளையா? வேறு யாரோ? தெரிய வில்லையே என்று சீதையின் உள்ளம் ஊசலாடுகிறது இந்த ஊசலாட்டத்தைக் கவிஞன் எப்படிப் பார்க்கிறான்? பணிப் பெண்கள் குழை என்னும் காதணிகளை அணிவிக்கிறார்கள் அவை காதுகளில் அசைகின்றன. சீதையின் ஊசலாடும் உள்ளத்தைக் காதணிகளின் ஆட்டத்தில் பார்க்கிறோம்.

            தனிப் பெரும் பெண்மை தன்னை
            அள்ளிக் கொண்டு அகன்ற காளை
            அல்லன் கொல்? ஆம் கொல்? என்பாள்
            உள்ளத்தின் ஊசலாடும் குழை நிழல்
                    உமிழ இட்டாள்

அடுத்த படியாக கழுத்துக்கு அணிகலன் அணிவிக்க வேண்டும். இவளே திருவின் அவ தாரம். ஆதலால் உலகமகளிர் கழுத்தில் அணியும் ‘திரு’ மாங்கலியமாக இருக்கும் இவள் கழுத்திற்கு யாரால் என்ன அணியை அணிவிக்க முடியும்? என்று திகைக்கிறார்களாம்.
என்றாலும் உலக வழக்கப்படி இருப்பதில் சிறப்பானவற்றை அணிவித்தனர்.
கழுத்தணிகள் அனிவித்தபின் முத்து மாலைகள் அணிவிக்கிறார்கள். வெள்ளை வெளே ரென்றிருக்கும் முத்து மாலைகள் சீதையின் மார்பில் தவழ்ந்தவுடன் செந்நிறம் அடைகின்றனவாம். ஏன்? எப்படி?
செம்மைக் குணம் பொருந்தியவரைச் சேர்ந்தவர்களும் செம் மைக் குணம் பெற்றுத் திகழ்வது போல சீதையின் செந்நிறத் திருமேனியிலே படுவதால் வெண்முத்துக்களும் செந்நிறம் பெறுகின்றனவாம்!

அடுத்ததாகக் கைகளுக்குக் கடகம் அணிவிக்க வேண்டும் என்று அதை எடுக்கிறார்கள். இள வெயிலைச் சுற்றிக் கட்டினாற்போல ஒளிவிடும் பதுமராக மணிக் கற்கள் பதித்த கடகம் பூட்டுகிறார்கள். அடுத்து தார கைச் சும்மை என்ற ஒரு ஆபரணம். இந்த ஆபரண ஒளி, அழகு செய்விக்கும் அந்தப் பெண்களையே அயர வைக்கிற தாம். நட்சத்திரங்களின் கூட்டம் போல் வடிவமைந்த முத்துக் களால் ஆன ஒரு ஆபரணத்தை இடையில் பூட்டி விடுகிறார் கள்.
ஒருவழியாக பெரும்பகுதி அலங் காரத்தை முடித்த பின் காலிலே சிலம்பு அணிவித்ததும் அலங்காரத்தை ஒருவாறு முடிக்கலாம் என்று நினைக்கிறார் கள். சீதையின் பாதங்கள் செம்பஞ்சுக் குழம்பு தீட்டப் படாம லேயே சிவந்து விளங்குகின்றன. அவர்கள் சிலம்பைக் கை யில் எடுத்தவுடன் அவை ஏதோ சொல்வது போல் தோன்று கின்றன. அவை என்ன சொல்லுகின்றன? பெண்களே! உங்க ளுடைய அதீதமான அன்பின் காரணமாக, மிகவும் மென்மை யான திருவடிகளையுடைய இவள்மேல் பெருஞ் சுமையை யேற்றி இவளுக்குத் துன்பத்தைக் கொடுத்து விடாதீர்கள் என்று சொல்வது போல் தோன்றுகிறதாம்

 ’பஞ்சு இன்றிப் பழுத்த பாதம் செய்ய
             பூங்கமலம் மன்னச் சேர்த்திய சிலம்பு
             சால நொய்யவே, நொய்ய’

என்று மிகவும் கரிசனத்தோடு சொல்வதாகக் கற்பனை செய்கிறான் கவிஞன்.
சிலம்பை மிகக் கவனமாகப் பூட்டிவிட்டு கண்ணுக்கு மையெழுதுகிறார்கள். அந்தக் கண் கள் தாம் எப்படி யிருக்கின்றன! வஞ்சகமும்  கள்ளத்தனமும் இல்லாமல் மழை போலக் குளிர்ந்த கண்கள், அவள் உகந்த ராமனுக்கு அமுதாக இருந்தது. ஆனால் இராவணனுக்கு நஞ் சாக ஆனது. அக்கண்கள் கோணல் இல்லாமல் நேராகச் சென்று, திரும்பி, சிவந்த ரேகைகள் நிரம்பப் பெற்று இருந் தன. அந்தக் கரு விழிகளில் தோழியர் இட்டது அஞ்சனத் தையா அல்லது ராமபிரானின் மேனி நிறத்தையா? என்று சந்தேகம் உண்டாகிறது.

 நஞ்சினோடு அமுதம் கூட்டி
            நயனங்கள் ஆன என்ன    
            செஞ்சேவே நீண்டு மீண்டு,
                 சேயறி சிதறி, தீய    
             வஞ்சமும் களவும் இன்றி
                மழையென மதர்த்த கண்கள்

என்று அந்தக்  கண்களின் அழகைப் பார்க்கிறோம். இதன் பின் பிறை போன்ற நெற்றியிலே திலகம் தீட்டுகிறார்கள். சீதாப் பிராட்டியே மங்கையர்க்கெல்லாம் திலகம் போன்றவள். அவளுக்குத் திலகம் தீட்டியதை,

வையக மடந்தை மார்க்கும் நாகர்
கோதையர்க்கும், வானத்
தெய்வ மங்கையர்க்கும் எல்லாம்
திலகத்தைத் திலகம் செய்தார்.

என்று திலகம் தீட்டியதைப் பர்க்கிறோம். இதன் பின் பூச் சூட்டி அழகு செய்கிறார்கள்.
சீதையின் அழகுக்கு அழகு செய்த பெண்கள் தங்கள் கண்ணே பட்டு விடுமோவென்று  கண்ணேறு கழிக்கிறார்களாம். ஆலத்தி நீர் சுற்றிக் காப்பு நாண் இடுகிறார்கள்.  சீதையின் அழகைக் கண்ட அவர்கள்

தம் சொற்கள் குழறி, தம்தம்
                தகை தடுமாறி நின்றார்

என்றால் சீதையின் அழகை என்னென்று சொல்ல? அதனால் தான் கம்பன்,
அழகெல்லாம் ஒருங்கே கண்டால்
                யாவரே ஆற்ற வல்லார்?

என்று அதிசயிக்கிறான்.

==============================================================

Series Navigationவாக்குமூலம்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *