அவனை எழுப்பாதீர்கள்

This entry is part 2 of 14 in the series 27 மார்ச் 2022

 

 

 

 

தீ விழியை

சாம்பல் இமைகள்

தழுவிவிட்டன

 

தொடர்பற்ற

தொலைக்காட்சித் திரையின்

புள்ளிக்கூட்ட நினைவுகள்

ஓய்ந்துவிட்டன

 

கனவுப்புகை உருவங்கள்

எழுந்தன விழுந்தன

 

நாட்காட்டி ஆயுளை

வாழ்க்கை கிழிப்பது கொஞ்சம்

தூக்கம் கிழிப்பது மிச்சம்

 

தோற்றது

தொலைத்தது

துடித்தது என

காயம்பட்ட இதயத்தை

ஆறப்போடும் தூக்கம்

 

ஆதாம் முதல் அனைவருக்கும்

தூக்கம் பொது

தூக்கத்திற்கில்லை ‘நான்,நீ’

 

வாழ்க்கைத் தேர்வை

தூங்கி எழுந்து எழுதினான்

வென்றான்

எழுதும்போது தூங்கினான்

தோற்றான்

 

தூங்கமுடியாத அரசனும் ஆண்டி

தூங்கமுடிந்த ஆண்டியும் அரசன்

 

இரு தூக்கங்களுக்கிடையே

இன்றையப் பொழுது

வாழ்ந்துவிடு

 

காதலுக்கும் களவுக்கும்

தூக்கம் பகை

 

ஒரே ஒரு மரணத்துக்கு

ஒவ்வொரு நாளும் ஒத்திகை

 

தூக்கவேர் அறுந்த செடிகள்

துளிர்ப்பதில்லை

 

ஓட்டுநர்

தூங்கியதால் பலர் பலியா?

முந்திய நாள்

தூங்காததால் பலர் பலியா?

குறைந்தாலும் மிகுந்தாலும்

உறக்கம் நஞ்சே

 

விடியலைத் தேடி

சில தூக்கம்

விடியலே  வேண்டாமென்று

சில தூக்கம்

 

உயிரைக் கழுவுவது தூக்கம்

வலியை நீவுவது தூக்கம்

 

இதோ ஒருவன்

நிம்மதியாய்த் தூங்குகிறான்

அவனை எழுப்பாதீர்கள்

 

அமீதாம்மாள்

 

 

 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 267 ஆம் இதழ்“அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து
author

அமீதாம்மாள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *