அவன், அவள், அது…!? (முதல் அத்தியாயம் )

This entry is part 21 of 24 in the series 13 செப்டம்பர் 2015

ushadeepan(14 வாரங்கள் தொடர். பிரதிவாரம் தொடரும்)

சேதுராமன் சித்தப்பா அப்படித் திடீரென்று வந்து நிற்பார் என்று கண்ணன் எதிர்பார்க்கவேயில்லை. முன்னதாக ஒரு தகவல் கொடுக்கமாட்டார்களா? இந்தப் பெரிசுகளே இப்படித்தான். எதையாவது அவர்களாக மனதில் பரபரப்பாக நினைத்துக் கொண்டு, அவர்களுக்குள்ளேயே பதறிக்கொண்டு, என்ன ஆகுமோ, ஏதாகுமோ என்று அரக்கப் பரக்க ஓடி வருவார்கள். பெரியவர்களை இம்மாதிரிப் “பெரிசு” என்ற சொல் பதத்தில் விளிக்கக் கூடாது என்று அப்பா கோவிந்தன் எத்தனையோ முறை கூறியிருக்கிறார்.
எல்லோருக்கும் வயதாவது என்பது பொது. எல்லோரும் ஒரு நாள் முதுமையை அடைவார்கள். எல்லோரும் ஒரு நாள் பெரிசுதான். ஆகையால் முதியவர்களை அப்படிக் கூப்பிடாதே….என்றார் ஒரு நாள்.
அதுக்காக அப்டியே ஒருத்தரை அழைக்க முடியுமாப்பா…சொல்லிக்கிறதுதான் என்றான் இவன்.
நண்பர்களோட பேசிப் பேசி அப்டி வந்திடுச்சுப்பா….அதை நாங்க ஒரு கேலியான பதமா நினைச்சு சொல்றதில்லை…அவர்களை அப்படிக் கூப்பிடுறதுமில்லை…எங்களுக்குள்ளபேசிக்குவோம்…வழக்கமாயிடுச்சு அவ்வளவுதான்…. என்று நீண்ட விளக்கம் கொடுத்தான். அதனால் அத்தோடு விட்டார்.
அப்பாவின் உடனடியான கண்டிப்புதானே நம்மை ஒழுங்காக வைத்திருக்கிறது. அதுதானே தப்பு செய்யும்போது, அல்லது செய்ய முனையும்போது வந்து தடுக்கிறது. நினைத்துக் கொண்டான் இவன்.
பொழுது விடிந்ததோ இல்லையோ என்று வந்து நின்று விட்டார்’. ரிசர்வ் செய்து வந்தாரா, அல்லது கிடைத்த பஸ்ஸைப் பிடித்து வந்து விட்டாரா? இந்த வயசான காலத்தில் அப்படி என்ன அவசரம்? எதானாலும் போனில் பேசிக் கொள்ளலாமே. அதன் பிறகு தேவையிருந்தால் வரலாமில்லியா? இதைச் சொல்ல முடியாது. சொன்னால் தவறாக நினைத்துக் கொள்வார்கள். இந்தப் பெரியவர்களே எதைச் சரியாக எடுத்துக் கொள்வார்கள், எதைத் தவறாகக் கொள்வார்கள் என்று தெரிய மாட்டேனென்கிறது. ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது.
வந்தது சரி. இருக்கட்டும். கேட்ட கேள்விதான் சரியில்லை. எடுத்த எடுப்பில் வயிற்றில் புளியைக் கரைக்கிறாரே…? எப்படித் தெரிந்திருக்கும்? தெரிந்துதான் கேட்கிறாரா? அல்லது தெரிந்ததுமாதிரிக் கேட்கிறாரா? போட்டு வாங்குவது என்பார்களே அம்மாதிரியான உபாயமோ?
என்னடா, இப்படிச் செய்திட்ட? என்றார் சேதுராமன்.
பதிலுக்கு எதுவும் சொல்லாமல், தலையைக் குனிந்தவாறே இருந்தான் கண்ணன். இப்படிப் பட்டென்று விஷயத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சிதான். இம்மாதிரி அதிர்ச்சி வைத்தியம் செய்வதே இவர்களுக்கு வேலையாய்ப் போய்விட்டது. மனதுக்குள் சலிப்பு வந்தது. ஒரு மொத்த நாளையும் கெடுக்க வேண்டும் என்றுதான் பொழுது இங்கு வந்து விடியட்டும் என்று ஓடி வந்திருக்கிறார் போலிருக்கிறது.
ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு தொண்டையைச் செருமிக் கொண்டு, தன்னைத் தானே நிதானப்படுத்திக் கொண்டு, கேட்டான் கண்ணன். எதைச் சொல்றீங்க சித்தப்பா…?
அந்த அறியாத்தனத்திற்குரிய முகபாவம் தன்னிடம் பொருத்தமாக அமைந்திருக்கிறதா என்று அவனுக்கே சந்தேகம். சட்டுச் சட்டென்று முகபாவங்களை மாற்றுவதற்கு, தானென்ன நடிகனா? நடிகர்களுக்குத்தான் அப்படிச் செய்து செய்து பழக்கமாகியிருக்கும். ஒரு சாதாரணத் தனி நபருக்கு இது சாத்தியமா?
இவனையே உற்றுப் பார்த்தார் சேதுராமன். அவர் பார்வை உரிய பாவனைகளோடு கரெக்டாக இருப்பதாகத் தோன்றியது இவனுக்கு. நிறையச் சினிமாக்களாய்ப் பார்த்துப் பார்த்து ஒவ்வொருவரின் அங்க அசைவுகள், முகபாவங்கள், இப்படித் துல்லியமாய்க் கவனிக்கும் பழக்கம் வந்திருக்கிறது.
அவரது பார்வையை நேர் கொள்ள முடியவில்லை இவனால். கண்கள் தானாகப் பூமியை நோக்கித் தாழ்ந்து போயின. எதிரே நிற்பவர் மதிப்புக்குரியவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கம், நேர்மை, உண்மை என்கிற சித்தாந்தங்களை நாடி நரம்புகளிளெல்லாம் வியாபித்திருப்பவர்கள். அதுவாகவே, அவைகளுக்காகவே வாழ்வு என்கிற ஆதியோடந்தமான நெறிமுறையான வாழ்க்கையை மேற்கொண்டு வருபவர்கள். அந்தத் தேவ சந்நிதியில் பொய்மையாய் நின்று எதிர்கொள்ள முடியுமா?
அருகில் வந்து இவன் தோளைத் தொட்டார். ஆதூரமான தொடுதல் அது. நெருக்கத்தை உணர்த்துவது. தொடப்படுபவனின் நலனை எதிர்நோக்குவது. நான் இருக்கிறேன் என்கிற ஆதரவினைச் சொல்வது. இவையெல்லாம் அடங்கிய உபாயம்.
கேட்கிறேன்ல, சொல்லு….
கொஞ்சம் அதிகாரம் கலந்திருப்பதாகத் தெரிகிறது. அல்லது இதற்குமேல் அமைதி காக்காதே. அது நன்றாயில்லை என்று பொருள். அதற்காக? உடனே காலில் விழுந்து விட முடியுமா? இல்லை கட்டிக் கொண்டு அழத்தான் இயலுமா?
எதைச் சொல்லச் சொல்றீங்க? என்றான் மீண்டும். தனது இந்தப் பதில் சற்று உஷ்ணமானதுதான். அவருக்கும் தெரியும்தான். ஆனாலும் இதற்கெல்லாம் மசியலாகாது என்பதை அவரும் அறிவார்தானே…!
இப்போதைக்கு நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிக அவசியம். மனசு குழப்பமான சூழ்நிலை இது. அமைதி காக்க வேண்டியது முக்கியம். வந்திருக்கும் பெரியவரை மதித்து நிற்பது அப்பாவையும் சேர்த்து மதிப்பதற்குச் சமம். அவரின் பிரதிநிதிதானே இவர்.
எந்தக் காரியத்தைச் செய்திட்டு, முள்ளு தொண்டையிலே மாட்டின மாதிரி நீ தவிக்கிறியோ, அந்த விஷயத்தைப் பற்றித்தான் சொல்லச் சொல்றேன். உன் வாயாலயே கேட்கணும்னுதான் இந்த வயசான காலத்துல என் உடல் நோவையும் பொருட்படுத்தாமப் புறப்பட்டு வந்திருக்கேன்.
வார்த்தைகள் நிதானமாகவும், தெளிவாகவும், அழுத்தமாகவும் வந்து விழுந்தன.
இருக்கும் சூழ்நிலையைச் சற்று லகுவாக்க நினைத்தான் கண்ணன். அப்போதுதான் பரவியிருக்கும் உஷ்ணம் தணியும். இதமான, பதமான சூழலிலேயே எதுவொன்றையும் பேச யத்தனிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும்.
போய் ஒரு காபி சாப்டிட்டு வந்து பேசுவோமே … என்றான்.
என்ன நினைத்தாரோ…தானும் வந்ததும், வராததுமாக இப்படி ஆரம்பித்தது சரியில்லைதான் என்று தோன்றி விட்டதோ என்னவோ, சரி, வா போவோம்…என்றார் சேதுராமன்.
இருந்தாலும் அந்த வாய் சும்மாவா இருக்கிறது. பெரியவர்களுக்கு அவர்களின் வயதின்பாற்பட்டும்,அனுபவங்களின்பாற்பட்டும் ஒரு அத்யந்த சுதந்திரம் கிடைத்துத்தான் விடுகிறது. அதை அவர்கள் சமயம் கிடைக்கும்போது தவறாமல் பயன்படுத்தவும் செய்து விடுகிறார்கள்.
அட கிறுக்குப்பயலே…! ஏண்டா இத்தனை வருஷக் குடும்ப வாழ்க்கைல ஒரு காபித்தண்ணி போடக் கூடவா உனக்குத் தெரியாது? அதுக்குக் கூடவா கத்துக்காம நீ குடித்தனம் பண்ணினே…? –கேட்டு விட்டு அவன் முதுகில் ஓங்கித் தட்டினார் சேதுராமன். என்ன ஒரு உரிமை?
தான் திருமணமே செய்து கொள்ளவில்லையாயினும், தனக்கு இந்தக் கேள்விகளைக் கேட்கும் தகுதியுள்ளது என்று நினைத்தது போலிருந்தது அவரது இந்த நெருக்கம்.
என்னவோ தெரியவில்லை. அவருக்குக் கல்யாண யோகம் அமையவில்லை. அண்ணா, அண்ணி என்றும், அவர்கள் குழந்தைகள் என்றும் எல்லோருக்கும் அரணாக, பாதுகாப்பாக, தன் நலன் என்று எதையும் பாராது, அதுவே தன் குடும்பம் என்று மானசீகமாக நினைத்து வாழ்ந்து கழித்து விட்டார். காலமும் டாடா காண்பித்துவிட்டு நழுவிவிட்டது. அது பற்றிய எந்தக் கவலையும் அவர் மனதில் இல்லை. அது ஒரு குறையாக இன்றுவரை மனதில் தோன்றியதே இல்லை. அண்ணா குடும்பம்தான் தன் குடும்பம். அண்ணிதான் ரெண்டாவது தாயார். அந்தக் குழந்தைகளின் நல்வாழ்வுதான் தன் நோக்கம். இறுதி மூச்சுவரை அதற்காகப் பாடுபட்டு மாய வேண்டும். அது போதும்.
என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை கண்ணனுக்கு. எந்த பதிலை வாங்குவதற்காக இதைச் சொல்கிறார்? எதைக் கொக்கி போட்டு இழுப்பதற்காக இப்படிப் பேசுகிறார்? லேசான ஒரு உதட்டோரச் சிரிப்பு. அந்தச் சிரிப்பின் அர்த்தத்தைக் கூடப் புரிந்து கொள்வார் அவர். மகா புத்திசாலி. இல்லையானால் இப்படி அப்பா அனுப்பியிருப்பாரா? அதனால்தானே வந்திருக்கிறார்?
உண்மையில் அவனுக்குக் காபி போடத் தெரியும்தான். அடுத்தவர் ரசிப்பது போல் அளவான டிகாக்ஷனைக் கெட்டியாக விட்டு, கள்ளிச் சொட்டான பாலில் காபியைக் கலந்து ஆவி பறக்க நீட்டினால் எவரையும் மயக்கித் தன் பக்கம் இழுத்து விடலாம என்பதான ரசனை அவனுக்கு உண்டுதான். இருந்தாலும் இப்போது அதைச் செய்ய மனமில்லை அவனுக்கு. தான் தனியாகக் கிடந்து கஷ்டப்படுவதாகக் காட்டிக் கொள்ளக் கூடாது. அது இப்போது முக்கியம். அப்படியென்றால் எந்த சிரமமுமில்லை என்பதுபோல் விறுவிறுவென்று போய் பாலைக் காய்ச்சி, காபியைக் கலந்து நீட்ட வேண்டியதுதானே? அதுவல்ல இப்போது முக்கியம். சூழலைத் தளர்த்த வேண்டும். இலகுவாக்கச் செய்ய வேண்டும். சிறிது நேரம் அப்படியே வெளியே போய் வந்தால் மனம் விசாலமாகும். அத்தோடு பிரச்னையிலிருந்தும் கொஞ்சம் நழுவலாம். என்னடா, இந்தப் பய பிடி கொடுக்கவே மாட்டேன்கிறானே என்று அவரும் தவித்து, பிறிதொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பினாலும் போயிற்று. அப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறதுதான். ஏதாவது ஒன்று இப்போதைக்குத் தேவை.
ஆனால் வெளியே காற்றாட வந்ததே, தனக்குச் சாதகம் என்று நினைத்ததுபோல் மீண்டும் அதே கேள்வியையே தொடுத்தார் சேதுராமன். பிறகு தொடர்ந்தார்.
இதோ பார் கண்ணா, சிறு பிராயத்திலிருந்தே உன்னோட வளர்ச்சியிலே கண்ணும் கருத்துமா உங்க அப்பாவோட நின்னு தோள் கொடுத்தவன் நான். அந்த நெருக்கத்திலே, பாசத்திலே கேட்கிறேன். எதுக்காக இப்படிச் செய்தே? கல்யாணமாகி மூணு வருஷமாச்சு. இப்போ போய் மனைவியோட சண்டை போடுறதும், முறிச்சிக்கிறதும், அவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்புறதும்…
ஒரு நிமிஷம்…. – சொல்லியவாறே கையைக் குறுக்கே நீட்டினான் கண்ணன். அவனையே பார்த்தார் சேதுராமன்.
நான் அனுப்பல்லே…அவளாகத்தான் புறப்பட்டுப் போனா…என்றான்.

Series Navigationயட்சன் – திரை விமர்சனம்நெஞ்சு வலி
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    அவன் அவள் அது முதல் அதிகாரம் படித்து இரசித்தேன்.கதையைத் தொடங்கியுள்ள விதம் நன்று. கதை முடிவில் கண்ணனின் மனைவி சண்டையில் தாய் வீடு சென்றுவிட்டார் என்பதைக் கூறி, அவர்களுக்குள் என்ன பிரச்னை என்பதை அறியும் ஆவலைத் தூண்டிவிட்டு தொடரும் போட்டுள்ளார்.சேதுராமன் சித்தப்பா உரிமையுடன் கேட்பதும், கண்ணன் கடைசிவரை பதில் கூறாமல் மழுப்புவதும் சுவையாக உள்ளது. நகைச்சுவையும் இழையோடும் எழுத்து நடை. வாழ்த்துகள் உஷாதீபன் அவர்களே…..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *