ஆக  வேண்டியதை…. 

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 11 of 12 in the series 28 பெப்ருவரி 2021

 

              ஜனநேசன்   

  அழைப்புமணி   கூவியது. ‘ இந்தக்  கொரொனா ஊரடங்கும்  தளர்வு ஆகிவிட்டது.  பத்து .மாசமா தள்ளிப்போன கல்யாணம் எல்லாம் நடத்த  ஆரம்பிச்சுட்டாங்க . கொரோனா பயம் முழுசா தீர்ந்தபாடில்லை ; நித்தம்  ரெண்டுபேரு கல்யாணப் பத்திரிக்கையோடு வந்து விடுகிறார்கள். இன்னைக்கு யாரு வராகளோ, போகமுடியுதோ இல்லையோ, கொடுக்கிற   பத்திரிகையை வாங்கித்தானே ஆகணும். ‘ என்று மனைவி முனு முனுத்தபடி ஜன்னலினூடே பார்த்தாள்.                                        “பக்கத்து  வீட்டுக்காரர்    வந்திருக்கிறார். அவர்  வாயைத் திறந்தால் தன் சாதி பெருமையும்   வடநாட்டில்  மகன் அரசு வேலையில் கார், பங்களாவோடு ,மூன்று வேலைக்காரர்கள் சகிதமாக  ராஜாவாட்டம்  இருக்கிறான் என்று  அலுக்காமல் சலிக்காமல் பேசியே நோகவைத்து விடுவார்  என்று வேலைக்காரம்மா  சொன்னாள். அதனால தூர இருந்து அவரோட  அளவா  பேசி அனுப்புங்க “ என்று  மனைவி எச்சரித்தாள்.

நான் கையுறைகளையும் ,  முகக் கவசத்தையும்  அணிந்து கொண்டு                             கதவைத் திறந்தேன். அவர்  வெளி இரும்புக்கேட்டை  திறந்து  உள்ளே  வந்தார்.  வீட்டுக்குள்ளேயே  இருந்த கருத்தமேனி  வெயில் படாமல்   சாம்பல் நிறமாகி இருந்தது. தூக்கமிழந்த  கண்கள் சிவந்தும் , கீழிமைகள் தேனடைபோலும் தொங்கின. முகத்தில்  குழப்ப மேகங்கள் படர்ந்திருந்தன. கையுரையும்  முகக்கவசமும்  அணிந்திருந்த தோற்றத்தில்  ஓர் அந்நியத் தன்மை தெரிந்தது.

“வாங்க சார், நல்லா இருக்கீங்களா. கொரோனா சிறையில் எப்படி பொழுது போகுது? “

“ நல்லா இருக்கேன் சார். தவிர்க்க முடியாத  வீட்டுச்சிறை அனுபவிச்சுத்  தானே தீர்க்கணும்.  சார்,  உங்ககிட்ட   ஒரு  சின்னயோசனை . ஒரு அஞ்சு நிமிஷம்  பேசலாமில்லை , அவசர வேலை ஏதுமிருக்கா ? “

“ தாரளாம பேசலாம் சார்.  இந்தக்   கொரோனா  காலத்தில்  தனிமையை மறந்து  ஒருத்தருகொருத்தர்   பேசிக்கிறதே உயிர்ப்பைத்  தக்க வைக்கிற முயற்சி தானே  “ .                                                 வீட்டு முகப்பு வராண்டாவில்  மூன்றடி  இடைவெளியில்  இரண்டு  இருக்கைகள் போட்டு  இடப்புறம் நானும்  வலப்புறம் அவருமாய்  முகம் பார்த்து உட்கார்ந்தோம். பக்க வாட்டில்  மல்லிகை ,செம்பருத்தி செடிகள்  அசைவற்றிருந்தன .  கத்தரி வெயிலில் தெருவில்  ஒருவரிருவர் நடமாட்டமே தெரிந்தது. வெயிலேறி  வெறிச்சோடிக் களையில்லாமல்  கிடந்தது. மனைவி  எங்கள் இருவருக்கும்  குடிக்க  தண்ணீரும் , டீயும்  கொண்டு வந்து  நடுவில் வைத்து விட்டு, “ வாங்க சார்,  மகள்  மருமகன்,பேரப்பிள்ளைகள்  நல்லா இருக்காங்களா..?  தினமும்  மகன் ,மகள் கிட்ட  போனில் பேசுவீங்களா ?”                                                     “ ஆமாமாம்மா , எல்லாம்  நல்லா இருக்காங்கம்மா . அனுதினமும்  அவங்களோடு பேசுறது ஒண்ணுதான்  உருப்படியான காரியம் “          இருவரும்  டீயைக்  குடிக்கத்  தொடங்கினோம். மனைவி  உள்ளே போனாள். அவர்  டீயை  ரசனையோடு உறிஞ்சினார்..               பாவம்  அவர் ; ஒரு விபத்தில்  மனைவியை  இழந்தவர்.  இன்சுரன்ஸ் அதிகாரியாகப் பணியாற்றி  ஒய்வு பெற்றவர். அவரது  மனைவி  இருக்கும் போதே மகளுக்கு  கல்யாணம்  செஞ்சு வச்சது , ஓர் ஆறுதல்.    டில்லியில் மத்தியஅரசு  நிறுவனத்தில்  பணிபுரியம் மகனுக்கு  கல்யாணம்  பண்ணி வைத்துவிட்டால்  அப்பா என்ற நிலையில்  கடமை முடியும். மகனுக்குத் தான் சொந்த சாதியில் பொண்ணு அமையவில்லை .  தீவிரமா பெண்ணு தேடிகிட்டிருக்கிறார்.

“டீ  நல்லா இதமா  இருக்குது . நன்றி. சார், என் சக அலுவலர்  ஒருத்தர்  ஒரு  பிரச்சினையை  சொல்லி  யோசனை  கேட்டார். அது  சட்டபூர்வமா  தீர்க்க முடியாத  பிரச்சினை.  அது தான்  உங்ககிட்ட  கலந்துக்கலாமுனு  வந்தேன். “ என்றவர்  முகத்தில்  இறுக்கத்தை  கவசத்தில்  மறைத்தபடி  என்னைப்    பார்த்தார்.

“சொல்லுங்க  சார். தீர்க்க முடியாத  பிரச்சினைன்னு  எதுவுமில்லை. தீர்ப்பது  நம்ம  அணுகுமுறையை பொறுத்ததே. சொல்லுங்க பார்ப்போம் .”

“இப்படி  நம்பிக்கையாய்  பேசுவீங்கனுதான்  உங்ககிட்ட வந்தேன்.. சார், என் நண்பரின் மகன்   மத்திய அரசு பணியில் டில்லியில்  இருக்கிறான். நண்பரின்     சித்தப்பா மகனுக்கு   ஒரே பொண்ணு. அது பீ,ஈ  படிச்சிட்டு சிவில் சர்வீஸ்  தேர்வுகளுக்கு படிச்சுகிட்டு  இருக்கு. ரெண்டு முயற்சிகள்  பண்ணியும்  தேர்வாகலை . அப்பாகாரர்  அந்த பெண்ணுக்கு  சொந்தச்  சாதியிலே மாப்பிளை  தேடி அலைஞ்சுகிட்டு  இருக்கிறார். வருசங்கள்  போகுதே ஒழிய  அந்தப் பொண்ணுக்கு  ஏத்த மாப்பிளை  சொந்தச்  சாதியில  அமையவுமில்லை: அந்தப் பொண்ணு  சிவில் சர்விஸ்  பரிட்சை  பாஸ்  பண்ணவுமில்லை. ரெண்டு  தரப்பு  முயற்சிகளும்  தொடர்ந்துகிட்டே  இருக்கிறது.

இப்படியான  சூழ்நிலையில்  நண்பரின்  மகன் தைப்பொங்கலுக்கு  ஊருக்கு  வந்திருக்கான். அந்த நேரத்தில்  நண்பரின்  தம்பி , டில்லி    பையனிடம்   தனது  மகளை  அறிமுகப்படுத்தி  தொடர்ந்து  சிவில் சர்வீஸ்  பரீட்சை  எழுதிக்கொண்டு  இருக்கும்  விவரத்தை  சொல்லியிருக்கிறார்.  டில்லியில்  நல்ல நல்ல  பயிற்சி நிறுவனங்கள்  இருக்கு. அனுப்பி வையுங்கள் .நான் சேர்த்து விடுகிறேன். ஒரே முயற்சியில்  பாஸ் பண்ண வைத்து விடுவோம்  என்று அந்தப் பையன்  சொல்லி இருக்கிறான்.                                                அவரும்  குடும்பத்தோடு  வாழ்த்தி ஒன்றுவிட்ட  அண்ணன்  தங்கச்சி  இரண்டு பேரையும் டில்லிக்கு  ரயிலேத்தி  விட்டிருக்கிறார்கள்.                                                                  பயிற்சி நிலையத்தில்  படித்துக் கொண்டிருந்த அந்தப்பெண்ணை அந்தப்  பையன்   அடிக்கடி  போய் பார்த்து வந்திருக்கிறான். இந்த  நிலையில் வாரந்திர விடுமுறைகளில்  இருவரும்  ஆக்ரா ,ஜெய்பூர் ,சிம்லான்னு  சுத்தியிருப்பாங்க போலிருக்கு. ரெண்டு பேருக்கும் தொடர்பாயிருச்சு. கொரோனா  முடக்கத்தில்  பயிற்சி நிலையம் மூடப்பட்டதால்  அந்தப்பொண்ணு  அந்தப் பையன் கூடவே தங்கி ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டிருந்தாள். ரயில்,விமானப் போக்குவரத்தும்  முடக்கப்பட்டதால்   அவங்க  ரெண்டு பேரும் அவங்கவங்க  வீட்டுக்கு போன்  செய்யறதோடு  சரி. ஒருவருசமா ஊருப்பக்கம் வரலை. போக்குவரத்தும் , கொரோனா நெருக்கடியும்  சரியானதும்  வீட்டுக்கு வருவதாக  அந்தப்பெண் சொல்லி இருக்கிறாள். டில்லியிலிருந்தபடியே  ஆன்லைனில் அவள்  மாதிரித் தேர்வுகள்  வாரம் தவறாமல்  எழுத வேண்டியிருக்கு.இந்த வட்டம்  ஐஏஎஸ்  பாஸ்  பண்ணிட்டு  வந்துர்றேன்னு  சொல்லவும்  பெத்தவங்களும் நம்பினானாங்க.  .

இந்நிலையில்  பெண்ணின் அப்பா,  டில்லியில் தங்கியுள்ள  மதுரைக்காரர்  மூலம்  விசாரிக்கச் செய்துள்ளார்.. அவர்  விசாரித்ததில்  அவர்கள் இருவரும் புருஷன் பெண்டாட்டியாய் குடும்பம் நடத்துவது  தெரியவந்தது    அத்தகவலை சொல்லியுள்ளார்.                                        இதற்கிடையில் அந்த பையன்  தனக்கு  கல்யாணமாகி  அம்மா மாதிரி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது .உங்களிடம்  சொல்லாமல்  கல்யாணம் செஞ்சுக்கிட்டதற்கு  மன்னிச்சிருங்கப்பா. இந்தக் கொரானா கொடுமையில்  நீங்க  யாரும்  வந்து  அலையாதீங்க. இன்னும்  ஆறு மாசத்தில்  குழந்தையைத்   தூக்கிட்டு   வர்றோம்  என்று போனில் பேசி  அந்த குழந்தை படத்தையும்  அனுப்பி இருக்கிறான். குழந்தையின்முகம் இறந்த  மனைவியின்  முகச்சாயலில் இருக்கவே  மகன் சொல்லாமல் கல்யாணம் செய்தது  நண்பருக்கு   பெரிய குற்றமாகத்  தோன்றவில்லை. மருமகள்  படத்தையும்  அனுப்பி இருக்கலாமே  என்ற ஆதங்கம் தான் அரித்தது .   நண்பர்   அந்த குழந்தை படத்தை   தம்பியின்  வீட்டில் காட்டி இருக்கிறார் . அதற்கு  முந்திய  இரவில் தான்  டில்லியில் அவர்கள்  குடும்பம் நடத்துகிற விவரம்  தெரிஞ்சிருக்கு.

 அப்புறம்  வீட்டுக் கதவை மூடிக்கிட்டு  பங்காளிகள் ரெண்டு பெரும் சண்டை போட்டு  இருக்காங்க. தம்பி  மனைவி தான் குறுக்கிட்டு  இந்த விஷயம்  அங்காளி பங்காளிகளுக்கு , அக்கம் பக்கத்துக்கு  தெரிஞ்சா மானக்கேடு. தங்கச்சியை கட்டின குடும்பமுன்னு  தலைமுறைக்கு சொல்லி  மானத்தை கெடுப்பாங்க. வெட்டியா  சத்தம் போடறதை  விட்டுட்டு கமுக்கமாய்  ஆக வேண்டியதைப்  பாருங்க என்றிருக்கிறாள். அவள்  சொல்றதில்  நியாயத்தை  உணர்ந்து  பேச்சை  நிறுத்தினர். நண்பர்  தான் கொண்டு வந்த செல்லைத்  தேடினார். தம்பியின்  மனைவி அரவமில்லாமல் அடுப்படியில்  செல்லில் பேரக்குழந்தையை  பார்த்துக்  கொண்டிருருந்தாள். தம்பி   செல்லைப்  பிடுங்கி வந்து கொடுத்திருக்கிறார் .                                                                            அடுத்த வாரமே  அவுங்க குடியிருக்கிற  வீட்டை விற்க ஏற்பாடு பண்ணச்  சொல்லிட்டு  ,ஏர்போர்ட் பக்கத்தில் மண்டேலா நகரில்  வீடு பார்த்துட்டு  போயிட்டாங்க.  சொந்தச்  சாதியிலே  சம்பந்தம்   தேடறோமுன்னு  காலத்தைக்  கடத்தி  மகளை  இழந்திட்டோமுன்னு பெண்ணு வீட்டுக்காரர் அழுகிறார்.                                                           வேற சாதியில   மகன் கட்டியிருந்தால் கூட  ஏத்துகிட்டு  மகன் வீட்டுக்கு  போய் வரலாம். பங்காளி  மகளைக் கட்டினவன் வீட்டுக்கு எப்படி போக முடியும்? பெரியப்பான்னு கூப்பிட்டு பழகிய அந்தப்பிள்ளை முகத்தில் எப்படி  முழிக்க முடியும்?  என்று பையன்  அப்பா  அழுகிறார் . கண்ணுக்கு  தெரியாத தூரத்தில்  நடந்ததுக்கு  நாம என்ன செய்ய..?   “ என்று பக்கத்துவீட்டுக்காரர்    சொல்லும்போது அவரது   தொண்டை அடைத்து  கரகரத்தது . தொண்டையைச் செருமி ,  சரி செய்தார். கண்களில்  கசிவை மறைக்க ,முகக்கவசத்தை சரி செய்வது போல்  குனிந்தார். நான்  அவரை ஊடுருவிப் பார்ப்பதை நிறுத்தி விட்டு  , அவரது  தோளைப்  பற்றினேன். அவர்  சிலிர்த்து  நிமிர்ந்தார். பெருஞ் சுமையை  இறக்கி வைத்தது போல் அவரது முகம்  தெளிந்திருந்தது.

“சார் , கொஞ்சம்  யோசிக்க வேண்டிய  .விஷயம். நண்பர்களைக் கலந்துகிட்டு ரெண்டுமூணு நாள்ல  சொல்றேன் “ என்றேன்.                     அவர்  “வர்றேன் சார் “ என் முகத்தைப் பார்க்காமல்  சொல்லிப் புறப்பட்டார்.                                                                     மூன்று நாள் கழித்து காலை நடைக்குப் போகும்போது பார்த்தேன் .அவரது  வீடு வெளியே பூட்டிக்கிடந்தது . உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியதாக செய்தியில் கேட்ட ஞாபகம் வந்தது.

 

Series Navigationகதை சொல்லல் -சுருக்கமான வரலாறுபோதை
author

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    ஆசிரியர்குழுவினருக்கு நன்றி.கதை நன்றாக வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *