ஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்

This entry is part 3 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

அன்னா ஹசாரே ஆதரவு பேரணிகள் மும்பையிலும் மும்பை புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றன. பேரணி, போராட்டம், உண்ணாவிரதம் என்றாலே மும்பையில் ஆசாத் மைதானம் தான் எல்லோருக்கும் நினைவில் வரும். இந்திய சுதந்திர போராட்டத்தின் குரல் ஒலித்த ஆசாத் மைதானம் இன்று அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் மையமாக மாறி இரண்டாவது சுதந்திர போராட்டம் என்று பதாகைகளில் காந்தியும் பகவத்சிங்கும் அருகருகே இருந்து வாழ்த்த மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறது.

நேற்று (18/8/2011)நானும் என் தோழியர் மலையாள எழுத்தாளர் மானசி, மராத்திய எழுத்தாளர் லலிதா மூவரும் முற்பகல் 2 மணிக்கெல்லாம் சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம் சென்றடைந்தோம். ரயில்நிலைய சந்திப்பிலிருந்தே கூட்டம் கூட்டமாக சிறிய பெரிய ஊர்வலங்கள் . நாங்களும் அந்த ஊர்வலத்தில் கரைந்து ஆசாத் மைதானத்தைச் சென்றடைந்தோம். கொட்டும் மழை. குடைப்பிடித்தாலும் எல்லோரையும் நனைத்துப் போடும் வேகமானக் காற்றுடன் பெய்த மழை.

உயர்ந்தப் பதவியிலிருப்பவர்கள் முதல் அன்றாட கூலித்தொழிலாளியாக
இருப்பவர்கள் வரை… ஆசாத் மைதானம் நிரம்பி வழிந்தது. சாலையின் இருபக்கமும் தொலைக்காட்சி ஊடகங்களின் வாகன நெரிசல். என்ன செய்வது என்று தெரியாமல் கூட்டத்தை ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த காவல்துறை.. கல்லூரி முடிந்தவுடன் பார்க் சினிமா என்று சுற்றாமல் ஒரு குடையின் கீழ் நனைந்துக் கொண்டு வந்த இளைஞனும் இளைஞியுமாக ..

வந்தேமாதரம்…!
இன்குலாப் ஜிந்தாபாத்!

என்று ஊர்வலங்களில் ஓங்கி ஒலித்தக் குரல்களுக்கு நடுவில் ஆங்காங்கே மேடைகளில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த லோக்கல் தலைவர்களின் வீர உரைகள்..

மழைக் கொட்டிக்கொண்டே இருந்தது.
ஆசாத் மைதானம் எல்லோரையும் பாகுபாடின்றி ஈரமாக்கிவிட்டது.
யாருக்கும் அதைப் பற்றிக் கவலை இல்லை.
குடை கையில் இருந்தாலும் இந்த மழை இந்தப் பேய்க்காற்று எல்லோரையும் நனைத்துப் போட்டுவிடும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அந்தக் கோபம்… சட்டம், நீதிமன்றம், மக்களவை , தேர்தல் இத்தியாதி என்னவெல்லோமோ இருந்தாலும் இந்தியாவில் பிறந்த அனைவரும் எதோ ஒருவகையில் லஞ்சம் என்ற பேய்க்காற்றின் முன்னால் குடை இருந்தும் பயனின்றி நனைந்து தொலைந்து களைத்துப் போயிருக்கிறார்கள்.

இவர்கள் சதாரணமக்கள். பொதுஜனங்கள்.
இவர்களுக்குச் சட்டம் தெரிந்திருக்கிறதா?
மத்திய அரசு தயாரித்த லோக்பால் மசோதாவை ஏன் எதிர்க்கிறார்கள்?
அன்னா ஹசாரே குழு தயாரித்த ஜன் லோக்பால் மசோதாவின் ஷரத்துகள் என்ன ?
ஜன் லோக்பால் மசோதாவில் இந்தியப் பிரதமருக்கு விலக்களிக்க வேண்டுமா? கூடாதா?
ஜன் லோக்பால் மசோதா வந்து விட்டால் இந்தியாவில் லஞ்சம், ஊழல் ஒழிந்துவிடுமா?

வந்தேமாதரம், இன்குலாப் ஜிந்தாபாத, பாரத மாதாக்கி ஜே என்று சாலைகள் எங்கும் ஊர்வலமாய் காட்சி தரும் இதே பொது ஜனங்கள், அடுத்தமாதம் கண்பதி உற்சவம் வந்தவுடன் அன்னா ஹசாரேயை மறந்துவிட்டு கண்பதி பப்பா ஊர்வலத்தில் கலந்துக் கொள்வார்கள். இவர்களுக்கு என்று திட்டமிடல், திட்டங்களை வழிநடத்தும் குழு, தலைமை .. யார்?

ஊழலுக்கு லஞ்சத்திற்கு எதிராக திரண்டிருக்கும் இந்தப் பொதுமக்களின் எழுச்சியை உண்மையான ஒரு போராட்ட திசை நோக்கித் திருப்பும் சாத்தியக் கூறுகள் இந்தியச் சமூகத்தில் இருக்கிறதா? இம்மாதிரியான கேள்விகளுடனேயே ஆசாத் மைதானம் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று பதாகைகளுடன் தன்னிடம் வந்தவர்களைப் பார்த்துக் கொண்டே மழையில் நனைந்துச் சேறாகிக்கொண்டிருந்தது.

*பொதுமக்கள் அனைவருமே ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் எதிராக எழுந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை. அன்னா ஹசாரே ஏதாவது செய்துவிடமாட்டாரா? என்று நினைக்கிறார்கள்!

*ஓட்டுவங்கியின் வலுவான நடுத்தர வர்க்கத்தின் அதிருப்தி அரசியல்வாதிகளை அதிலும் குறிப்பாக ஆளும் கட்சியை அசைக்கும் வலிமைப் படைத்தது. அந்த வலிமையை தக்கவைத்துக் கொள்வதும் அரசியல் கட்சிகளிடம் காவு கொடுக்காமல் காப்பதும் அன்னாஹசாரே & குழுவால் முடியுமா?

*ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தை ஒட்டி தயாரித்த இந்திய தேசியக்கொடியின் விலை அன்னா ஹசாரே ஆதரவாளர்களின் பயன்பாட்டு புண்ணியத்தால் தங்கத்தின் விலை மாதிரி தாறுமாறாக ஏறி இருப்பதாக ஊடகங்கள் சிறப்பு செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

(2)

மும்பையில் இளைஞர்கள்:

ஆகஸ்டு 15ல் சுதந்திர தினத்தை ஒட்டி சில கல்லூரி மாணவர்களிடம் ஊடகங்கள் கேட்ட கேள்விகளும் அவர்கள் சொன்ன பதில்களிலிருந்து சிலத் துளிகள். (குறிப்பு: இரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் வாசிக்க வேண்டாம்.!!)

(டைம்ஸ் ஆஃப் இந்தியா, 14, ஆக, பக் 4)

இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ராஜிவ் காந்தி!

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்டவர் மகாத்மா காந்தி!!

இந்தியச் சட்டத்தை எழுதிய மேதை… அப்துல் கலாம்!!!

பண்டித ஜவஹர்லால் நேருவின் புகழ்பெற்ற சுதந்திர உரை:
Brothers and sisters of america என்றழைக்கப்படுகிறது!

வந்தேமாதரம் பாடலை எழுதியவர் சுபாஸ் சந்திரபோஸ்!

காந்தி திரைப்படத்தை எடுத்தவர் மவுண்ட்பேட்டன்!

மும்பை வரும்போது மணிபவனில் தங்கி இருந்தவர் ஜவஹர்லால் நேரு!

காந்தியின் கடைசி வார்த்தை “ஜெய் ஹிந்த்” / சத்திய மேவ ஜெயதே!

>I think Republic day is celebrated because before achieving Independence, we were known as a republic. And it is celebrated on Jan 26th because that was the day the British moved out of India!! ( இதை என்னால் தமிழாக்கம் செய்ய முடியலை… !!!)

இப்படியாப்பட்ட பதில்களை நீங்கள் காமெடி சீனில் கூட கேட்டிருக்க முடியாது. இந்த மாதிரியான பதில்களைச் சொன்னவர்கள் மும்பை என்ற பெருநகரில் BMS, BBA, B.Com, BBI, BA, BMM படிக்கும் கல்லூரி மாணவர்கள் என்பதுதான் பேரதிர்ச்சியான செய்தி. அவர்களின் உண்மையான பெயர்களுடனேயே இச்செய்தி பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

டாலர் சம்பாதிக்கும் வழியை மட்டுமே சொல்லிக்கொடுக்கும் கல்லூரிகள்.. இம்மாதிரியான இளைஞர்களை மட்டுமே உருவாக்க முடியும்!

(3)

மீண்டும் நான் ஆசாத் மைதானத்திற்கே வருகிறேன். வரலாறு தெரியாதவர்களால் வரலாறு படைக்க முடியுமா?

எனக்கு அச்சமாகவே இருக்கிறது. நேற்று பெய்த மழை இன்று வெறித்திருப்பது போல நாளை இந்த அச்சமும் களைந்துப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்போதைக்கு இம்மாதிரியான பகல் கனவுகளுடன் நானும் காத்திருக்கிறேன்.

புதியமாதவி,
மும்பை.
(அடுத்தவாரம் ஜன்லோக்பால் மசோதாவும் கறுப்புபணமும்)

Series Navigationபுணர்ச்சிசின்னஞ்சிறிய இலைகள்..
author

புதிய மாதவி

Similar Posts

Comments

  1. Avatar
    விருட்சம் says:

    //டாலர் சம்பாதிக்கும் வழியை மட்டுமே சொல்லிக்கொடுக்கும் கல்லூரிகள்.. இம்மாதிரியான இளைஞர்களை மட்டுமே உருவாக்க முடியும்!//

    பள்ளிகள் சொல்லித் தந்திருக்க வேண்டியவை என்பதால் , இதை இப்படிச் சொல்லலாம்; மதிப்பெண் எடுக்க மட்டும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளால் இம்மாதிரி மாணவர்களை மட்டுமே உருவாக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *