ஆண் செய்தாலும், பெண் செய்தாலும், தப்பு தப்புதான்!

This entry is part 7 of 21 in the series 10 ஜூலை 2016

 

இந்த எழுத்தாளர் பெண்ணுரிமைவாதிதான்.  ஆனால் “லெக்கின்ஸ்” போன்ற உடலை ஒட்டிய – அதன் அமைப்பை அப்பட்டமாய்க் காட்டும் – வெளிப்பாடான உடைகளுக்கு முதல் எதிரி. எனவே, என் உடை என் சொந்த விஷயம் என்று ஒரு பெண் சொல்லுவதில் உடன்பாடு இல்லாதவள். உடலளவில் வலுக்குறைவான பெண்ணை ஆண் அடிப்பது தவறெனில், மனத்தளவில் வலுவற்ற ஆணை ஒரு பெண் பாலியல் தூண்டுதல் செய்வதும் தவறுதான். சின்னஞ்சிறு பெண் குழந்தைகளைக் கூடச் சில ஆண்கள் விட்டு வைக்காத நிலையில் பெண்ணின் உடை வெளிப்பாடாக இருப்பதே வன்னுகர்வுக்குக் காரணம் என்பதை முழுவதுமாய் ஏற்க இயலாதுதான். எனினும் அதுவும் ஆணைத் தவறு செய்யத் தூண்டுகிறது என்கிற நிலையைப் பெண்கள் ஏற்றுத்தானாக வேண்டும். எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்து அதை மேலும்  கொழுந்து விட்டு எரியச் செய்வது அறிவுடைமை யாகாது.

பாரதியார் காலத்திலேயே பெண்கள் ஆண்களுக்கு இணையாக எல்லாத் துறைகளிலும் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள் என்று சில அறிவுஜீவிகள் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது காதில் பூச்சுற்றுகிற வேலைதான்.! ஒரிரண்டு பெண்களின் முன்னேற்றத்தை வைத்து ஒட்டுமொத்தக் கணிப்பில் ஈடுபடுவது முறைதானா? இந்திரா காந்தி, ஜெயலலிதா, திலகவதி, சிவகாமி, சந்திரலேகா, மம்தா பேனர்ஜி, மாயாவதி போன்றவர்கள் இன்றளவும் சிறு பான்மையினரே. விரல்விட்டு எண்ணக்கூடியவர்களின் முன்னேற்றத்தின் அடிப்படையில் அனைத்துப் பெண்ணினத்தின் நிலையையும் கணிப்பது நேர்மைதானா?

பெண்ணியம் என்கிற சொல்லே ஆண்களுக்குக் கசக்கிறது. இந்தக் கசப்பை வெளியிடவும் ஆண்கள் தயங்குவதில்லை. அப்படி ஒரு சொல் புழக்கத்தில் வருவதற்குக் காரணாமாக இருந்ததே ஆண்களின் அராஜகமே என்பதை ஆண்கள் எப்போதுதான் புரிந்துகொள்ளப் போகிறார்கள்? பெண்களில் பெரும்பாலோர் முன்னேறி விட்டதாய் இவர்கள சொல்லிக்கொண்டிருப்பது எந்த அடிப்படையில்? எந்த நாட்டின் முன்னேற்றமாக இருந்தாலும், அதன் கிராமங்களும் பட்டிதொட்டிகளும் அவற்றில் வாழும் மக்களும் எந்த அளவுக்கு முன்னேறி யுள்ளார்கள் என்பதன் அடிப்படையில் தான் அந்த நாட்டின் நிலையைக் கணிக்க வேண்டும். அல்லது அதன் பெரும்பாலான மக்களுடைய முன்னேற்றத்தின் அடிப்படையில் அதைக் கணிக்க வேண்டும்.

’நம் அரசியல் அமைப்புச் சட்டம்தான் பெண்களுக்குச் சம உரிமைகளுக்கு வகை செய்துள்ளதே? அப்படி இருக்க, இன்னும் ஏன் பெண்ணுரிமை, பெண்ணுரிமை என்று கோஷம் போடுகிறீர்கள்?’ என்றும் பல ஆண்கள் கேட்கிறார்கள். பெண்களுக்குச் சம உரிமையை நம் சட்டங்கள் தருவது உண்மைதான். ஆனால் அந்த உரிமைகள் எந்த அளவுக்கு அவர்களை முன்னேற்றியுள்ளன என்பதே கேள்வி. கீழ் மட்டத்துப் பெண்கள் யாவரும் குடிகாரக் கணவர்களிடம் அடி வாங்கிச் சாகிறவர்களாகவே இன்றளவும் இருக்கிறார்கள். மேல் மட்டத்திலும் அதே நிலைதான் என்று சொல்லப்படுகி
றது. கானடா, அமெரிக்கா, மேலும் சில ஐரோப்பிய நாடுகள் போன்ற முன்னேறிய நாடுகளிலும் குடிகாரக் கணவர்களிடம் பெண்கள் நாள்தோறும் அடி வாங்குவதாய் ஆண் சமுதாய ஆர்வலர்களே அந்நாடுகளின் ஏடுகளில் எழுதும் கட்டுரைகள் தெரிவிக்கின்றன. (சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் – திண்ணைக் கட்டுரையாளர் – திரு ஜெயபாரதன் அவர்கள் எனக்கு அனுப்பிவைத்த கானடா நாட்டு ஏடுகளிலிருந்து தெரிந்து கொண்ட தகவல் இது. இப்போதும் அப்படித்தான் என்கிற தகவலும் கிடைத்துள்ளது.)

ஒரு காலத்தில் கணவனின் பெயரைச் சொல்லுவது கூடக் குற்றமாய்க் கருதப்பட்டு வந்தது.  காலப்போக்கில் அது மறைந்து விட்டது.  ஆனால் பன்மையில் தான் ஒரு பெண் தன் கணவனை அவர், இவர் என்றெல்லாம் மரியாதையாகக் குறிப்பிடுவாள்.  தந்தை பெரியார் தன் மனைவியே யானாலும் ஒருவன் அவளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியவர். திராவிடக் கழகத்தினர் பலர் தங்கள் மனைவியரை ‘வாங்க, போங்க’ என்றுதான் மரியாதையுடன் விளித்துப் பேசுவதாய்ச் சொல்லப் படுகிறது.

ஆனால், அண்மைக்காலமாகச் சில பெண்கள் கணவனை ஒருமையில் விளித்துப் பேசுவது பெருகி வருகிறது. இதற்காகச் சில ஆண்கள் கொதிப்படைந்து போயிருக்கிறார்கள். கணவனை வாடா போடா என்று ஒரு பெண் விளிப்பதும் அவளுக்கு அவன் குற்றேவல் புரிவதும் இருவருடையவும் சொந்த விஷயம்.  ஆனால்  காலங்காலமாகக் கணவர்கள் ‘அடியே, வாடி, போடி’ என்று பெண்களை அழைத்து வந்துள்ளமைக்கும் இருபத்து நான்கு மணி நேர ஊழியைகளாகக் கருதி வந்துள்ளமைக்கும் இன்றளவும் அது தொடர்வதற்கும் எவரும் ஆட்சேபிப்பதில்லை.  “டீ” தவறில்லை யெனில்  “டா” வும் தவறில்லை.

சில பெண்கள் – எழுத்தாளர்களும், கவிஞர்களும் – மனித உடல் உறுப்புகள் பற்றிக் கொச்சையாக எழுதுவது பற்றியும் சில அறிவு ஜீவி ஆண்கள் புலம்பத் தொடங்கி யிருக்கிறார்கள். கொச்சையாகவும் வக்கிர உணர்வுகளைக் கிளறும் வண்ணமும் ஆபாசமான முறையில் உடல் உறுப்புகள் பற்றி யார் எழுதினாலும் அது அருவருப்பானதுதான்.  இதுகாறும் படு மட்டமாக எழுதிவந்துள்ள ஆண் எழுத்தாளர்களை இத்தமைய அறிவுஜீவிகள் விமர்சித்தது உண்டா? அவர்கள் எழுதினால் இவர்களும் எழுதலாம் என்பது நமது நிலைப்பாடன்று. யாருமே அப்படி  எழுதிச் சமுதாயத்தைக் கெடுக்கக் கூடாதுதான். இத்தகைய எழுத்துகள் வன்னுகர்வை நிகழ்த்த வல்லவை. ஆனால், பெண் என்று வரும் போதுமட்டும் ஆண்கள் தனி அளவுகோலுடன் அலைகிறார்களே அது சரியா என்பதே கேள்வி.

இரவு விடுதிகளில் சில பெண்களும் குடித்துக் கூத்தாடுவது பற்றியும் இவர்கள் அங்கலாய்க்கிறார்கள். இரவு விடுதிகள் தடை செய்யப்பட வேண்டியவை. அங்கே யார் குடித்துப் புரண்டாலும் தவறே. பெண்ணை மட்டும் தனிப்படுத்திக் கண்டிக்க வேண்டியதில்லை. சிகரெட்டும் அப்படியே. தவறான பழக்கங்களுக்கு இருபாலருமே ஆளாகாமல் இருப்பது அவர்கள் பெறும் குழந்தைகளின் உடல்நலத்துக்கு உகந்தது. பெண்களும் கெட்டுப் போவதற்கு அடிகோலுகிற ஆண்களையும் இந்த அறிவுஜீவிகள் திருத்த முயல வேண்டும். அதுதான் நேர்மையான அணுகுமுறை! அதை விடுத்து, ஆணகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால் பெண்கள் மட்டும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று பேசுவதும் எழுதுவதும் நடுநிலை ஆகாது.

………

 

Series Navigationவே.சபாநாயகம் என்னும் தமிழ் விருட்சம்ஒரு கவிதையின் பயணம்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

6 Comments

  1. Avatar
    meenal devaraajan says:

    ஆசிரியரின் கருத்து உண்மையானது. லெக்ன்ஸ் டைட் ேடீ சர்ட் கலாச்சாரம் என் உடல்களை அப்படமாக காட்டுகிறேன் என்பதற்கு அடையாளம். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சுதந்திரம் எனற பெயரில் ஆபாசம் கூடாது. இக்காலப் பெண்கள் தன் பின்னால் எத்தனை ஆடவரைச்சுற்ற வைக்க முடியும் என்று நினைக்கிறார்கள். நட்பு ஆண்ணுட ன் இருந்தாலும் பெண்ணுடன் இருந்தாலும் கூடா நட்பு ஆகாது. நற்பழக்கங்கள் உடையவர்களை நட்பாகக் கொள்ள வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்கு கடுமையான சட்டங்களை ஆண்களுக்கு எதிராகக் கொண்டு வர் வேண்டும்

  2. Avatar
    BSV says:

    ஆனால் “லெக்கின்ஸ்” போன்ற உடலை ஒட்டிய – அதன் அமைப்பை அப்பட்டமாய்க் காட்டும் – வெளிப்பாடான உடைகளுக்கு முதல் எதிரி.//

    லெக்கிங்க்ஸ் அணிந்து…. நிற்கும், அருகில் அமரும், நடக்கும் இளம் பெண்களை நான் நாடோறும் பயணிக்கிறேன். தொழில் நிமித்தமாக்வும் என்னுடன் பழகிக்கொண்டிருக்கிறார்கள்.. எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவர்களை பிற் ஆண்களும் உற்றுப்பார்த்ததாகத் தெரியவில்லை. லெக்கிங்க்ஸ் அணிந்து மேலுடை முழங்காலுக்கும் கீழேதான் போடப்படுகிறது. எனவே லெக்கிங்க்ஸ் முழுவதுமாகத் தெரியாது. அதே சமயம், டைட் அல்லது தை ஹக்கிங் ஜீன்ஸ் *thigh hugging jeans) உடல் நெளிவு சுளிவுகளை மறைப்பதில்லை. காரணம் மேலுடை குட்டை.

    டீ போட்டுக்கொண்டு ஜீன்ஸ் என்றால்….இளைஞன் பரீட்சையில் கோட்டைவிடுவான். அவள் பாஸ் பண்ணி விடுவாள்.

    சல்வார்கம்மீசை விட வசதியான உடை லெங்கிங்ஸ். இதற்குத்தான் மற்ற உடைகள் எதிரி. She can jump, walk, run and even kick the molester – very conveniently and confidently.

    Viva la legging.

  3. Avatar
    BSV says:

    கட்டுரையின் மையக்கருத்து: ஆண்கள் செய்வதையே பெண்களும் செய்யும் போது, அது தவறான போக்காக இருந்தால், ஆண்கள் பெண்ணை மட்டுமே விமர்சனம் செய்கிறார்கள். அவர்களை எவருமே விமர்சனம் செயவதில்லை. எனப்துவே. இல்லையா?

    ஆண், தன் மனைவியை, வாடி என, பெண் வாடா எனச்சொல்ல முடியாமல் சமூகத்தால் தடுக்கப்படுகிறாள். நான் மனைவியை, வாடி என்று பேசும் கணவன்மார்களை சொற்பமாகத்தான் பார்த்திருக்கிறேன். அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களிடம் மட்டுமே. மற்றவர்கள். பெயர் சொல்லித்தான் கூப்பிடுகிறார்கள். கோபம் வந்தாலோ, சண்டை மூண்டாலோ, வாடி என்று சொல்லமாட்டார்கள். தே….யா முண்டைதான்.

    இங்கு நான் ஆணாதிக்கம், பெணணடிமைத்தன்ம் என்று பார்க்க விரும்பவில்லை. காலங்காலமாக இப்ப்டியே போய்க்கொண்டிருக்கிறது. கட்டுரையாசிரியர் இப்பழக்கங்களை மாற்ற அறிவுஜீவிகளுக்கு விண்ணப்பிக்கிறார். இறுதிப்பாராவில். கட்டுரையின் தொடக்கத்தில் அறிவுஜீவிகளை உதவாக்கரைகள் என்றும்படி எழுதுகிறார். அறிவுஜீவுகளால் சமூகப்பழக்க வழக்கங்களை மாற்ற முடியாது. ஆனால் அடித்தட்டு மாந்தர்களால் முடியும்.

    வாங்க…போங்க என்று அவன் அழைத்தால், என்னவாகும்? அந்நியப்படுத்துகிறான் என்றாகும். பக்கத்தில் இருப்பதே சில அரைமணித்துளிகள். அதிலும் அந்நியப்படுத்திவிடுகிறானே பாவி என்றல்லா அவள் நினைப்பாள்.

    I take all interactions between a man and his wife (this is how English language puts it.) as beautiful and lovely. They are called intimacies. Address her in anyway you like and if there is love, that is all enough. A bitter word – in another context – will turn sweet here. You can call your baby badava rascal if it urinates on your sari. மனதினிலே ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம். என்றார்.இதன் பொருள்: மனதினிலே ஒளியுண்டாயின், எப்படிப்பட்ட வாக்காயிருப்பினும் அதில் ஒளியுண்டாகும். எவர் கேட்கவேண்டுமே அவர் கேட்பின்.

    In Shakespeare’s Othello, on the nuptial night, Othello uses a variety of dirty words to address her: one of which is theevadiya (wench). Shakespeare accentuates the tragedy by making the scene very intimate and ‘ugly’ in the estimate of our article writer. Later on, many scenes after, on the same bed, he kills her by smothering her with the pillow shouting the same word தேவடியா முண்டை என்னை ஏமாற்றிவிட்டாய்!

    மாறா ஒரே சொல். இருவேறு கட்டங்கள்; இருவேறு பொருட்கள். ஒரு கணவனுக்கும் மனைவுக்குமிடையில், இடம் பொருள் ஏவல் ஒரு சொல்லின் பொருளை தீர்மானிக்கிறது எனபதே செகப்பிரியரின் முடிவாகும்.

  4. Avatar
    ஷாலி says:

    //“லெக்கின்ஸ்” போன்ற உடலை ஒட்டிய – அதன் அமைப்பை அப்பட்டமாய்க் காட்டும் – வெளிப்பாடான உடைகளுக்கு……//

    உடலை மறைப்பதற்கே ஆடைகள் என்ற நிலை மாறி, அழகை அவிழ்த்து விடவே ஆடைகள் என்ற கலி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.பெண்களின் முன் பின் முப்பரிமாணங்களை முழுதாய் காட்டும் டைட் ஜீன்ஸ் பனியன் போய்,தற்போது புது அவதாரம் எடுத்திருக்கும் லெக்கின்ஸ், பெண்களுக்கு பூரண விடுதலை கொடுத்துள்ளதாக பேசப்படுகிறது.

    கால் தொடைகளிலிருந்து இடுப்பு பிரதேசம் வரை, அசல் கன பரிமாண சைஸை அப்படியே காட்டும் லெக்கின்ஸ், ஆண்களுக்கு நிச்சயமாக “லெக் பீஸ் சிக்கன்”தான்.இதில் இன்னும் தாராள மனமுள்ள மாதர்கள், மேலே அணியும் டி சர்ட் பனியனை இடுப்புடன் “தடா” போட்டால்….. அவ்வளவுதான்.!

    அன்று இந்திரா காந்தி காலத்தில், வீட்டுச் சுவரில் குடும்பக்கட்டுப்பாட்டு “சிவப்பு முக்கோணம்” காட்சி அளித்தது போல் ..இன்று அன்னைகள் அணிந்து நடமாடும் ரோட்டில், லெக்கின்ஸில் முக்கோணம் கவர்ச்சி அளிக்கிறது.

    அன்று பெண்களின் மார்பை மறைத்த துப்பட்டாக்கள்…. இன்று மப்ளராக மாறி கழுத்தை மறைக்கிறது.மார்போ..”நிமிர்ந்த நெஞ்சும் நேர் கொண்ட பார்வை” பாரதி பாடிய புதுமைப் பெண்ணாய் நிமிர்ந்து நிற்கிறது.

    பாரதி பாடியபடி, லெக்கின்ஸ் புதுமைப் பெண்களை நாமும் வாழ்த்திப் பாடுவோம்!

    பிறந்த இடம் காட்டி நடந்த தென்றலே
    பெருமையுடன் வருக!

    நின் திருவடி தாமரை தொடங்கிய
    பாதையில் தேசம் நாசமுறுக!

  5. Avatar
    ஷாலி says:

    //ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால் பெண்கள் மட்டும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று பேசுவதும் எழுதுவதும் நடுநிலை ஆகாது.//

    நடுநிலை ஆகாதுதான்.ஆனால் நாட்டு நடப்பு அப்படித்தானே நடக்கிறது.புராண காலத்திலிருந்து இன்றுவரை, ஆண்கள்,பல ரயில்கள் வந்து செல்லும் ஜங்ஷனாகவும்,பெண்கள்..ஒரு ரயில் மட்டுமே வந்து செல்லும் ஸ்டேசனாகவும் இருக்கிறாள்.

    பெண்களும் ஜங்ஷனாக மாறவேண்டும் என்று உங்களால் சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது.
    “ஐவருக்கும் தேவி அழியாத பத்தினியை” அன்று சரிகான முடிந்தது.இன்று அவுசாரி-தேவடியா பட்டமே அழியாமல் தொடரும்!

    புண்ணிய புராணங்களில் கூட ஏக பத்தினி விரதன் ஒரு ராமனுக்கு மேல் பார்க்க முடியவில்லை.அனைத்து கடவுளரும் இரண்டிற்கு குறைவில்லாமல் தேவிகளை வைத்துள்ள நிலையில்,அற்ப மானிடனை ஆசை விடுமா?ஆகவே அவன் பங்கிற்கு ஒய்ப் ஒன்று! வைப்பு..!திசைக்கு ஒன்று!

    ஒரு ஆண் ஒன்றுக்கு மேல் துணை தேடுவது சட்டப்படி தவறு.சாஸ்திரிய சம்பிராதயாப்படி தவறல்ல!

    அதேசமயம் ஒரு பெண் ஒன்றுக்கு மேல் துணைவனை தேடினால் அது சட்டப்படியும் தப்பு…சாஸ்திர,சம்பிராதயப்படியும் தப்பு! ஆக இருவரையும் ஒரு தராசில் வைத்து நிறுக்க முடியாது.

    ஆக,ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்பார்கள்..இருக்கிறார்கள்.ஆனால் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கக் கூடாது.அப்படி அவர்களால் இருக்க முடியாது.அதுதான் ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்கி, நல்ல சந்ததியை வளர்த்தெடுக்கும் தாய்மையின் சிறப்பு.

    ஆகவேதான் அனைத்து மதங்களும் பெண்மையை போற்றுகின்றன.தாய்க்கு தலை வணங்குகின்றன. தாய் மொழி,தாய்த்திருநாடு,என்று பெண்ணை பெருமைப்படுத்துகின்றன.

  6. Avatar
    Rama says:

    @Shalli, when it is convenient, you quote Australian law which does not permit Gay men to donate blood. Why don’t you quote Australian law when it is related polygamy? It is illegal here to have more than one spouse. It does not matter whether you are a man or a woman. Cherry picking foreign laws to suit your views does not add credibility.BTW, polyandry was common in certain parts of Ladak until the busy body British decided to make it illegal.

Leave a Reply to meenal devaraajan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *