ஆனந்தயாழ் – தங்கமீன்கள்

This entry is part 15 of 28 in the series 5 மே 2013

 

‘கற்றது தமிழ்’ போலவே வரிகளுக்கும் ராகத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அத்தனை பாடல்களிலும், பின்னணி இசை அடக்கியே வாசிக்கிறது. தெரியாத இசைக்கருவிகள் கொண்டு இசைக்காது எப்போதும் வழமை போல இருக்கும் சாதாரண கருவிகள் கொண்டே இசைக்கப்பட்டிருக்கிறது. மெல்ல இறங்கும் விஷம் போல தன்னையறியாமல் எனக்குள்ளே இறங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளுக்குள்ளே ஊறிப்போய் வழியும்போது புறங்கையை கொஞ்சம் சுவைத்துப்பார்க்கவே தோணும் தேன் குடித்தவன் நிலையில் இப்போது நான், இது ஒரு புதிய அவதாரம் யுவனுக்கு. ‘கற்றது தமிழ்’, ‘பருத்திவீரன்’, ‘ஆரண்ய காண்டம்’, ‘7ஜி ரெயின்போ காலனி’ வரிசையில் யுவனின் இந்த மீன்கள் என்றும் நீந்தும் நம் மனதில்.

 

பாசத்தை இசையில் வெளிப்படுத்துவது என்பது கத்தி மேல் நடப்பது போன்று. காதலன்/காதலிக்கென இசைக்கும் அதே வயலின் அம்மா/மகனுக்கும், அப்பா/மகளுக்குமான பாசத்தை அதற்கான ரசம் கொண்டு இசைக்கவில்லையெனில் கேட்பவன் மனதில் வேறு மாதிரியான எண்ணங்களுக்கு விரைவில் இடம் கொடுத்துவிடும். அடிப்படையில் எல்லாம் அன்பே என்ற போதிலும், சமூக மாற்றங்களுக்கு உட்பட்டு , விலங்கினத்திலிருந்து பரிணாம வளர்ச்சி கொண்டு மேலே வந்திருக்கும் மனிதனுக்கு ஒரு சிறு கம்பியிழை வேறுபாட்டில் மீண்டும் தவறி அங்கேயே வீழ்ந்துவிட வாய்ப்பு வெகுவாக இருக்கிறது. அதை வெளிக்காட்டி விட இசைக்கருவிகளின் வாசிப்பு போதும்.!

 

ஒரு பாடல் என்பது நம்மை அழுந்தச்செய்து , எழுந்து போக விடாமல் , தொடர்ந்தும் கேட்கவைத்து உள்ளுக்குள் மனதுள் பலபடிகள் அடிவரை சென்று தங்கும் விஷயமாக வாய்ப்பது என்பது ஒரு சில பாடல்களுக்கு மட்டுமே. அதற்குப்பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

 

முதன் முதலில் அதை எந்த இடத்தில் வைத்துக்கேட்டோம், யாரோடு சேர்ந்திருக்கையில் அது கேட்டோம், எந்த மாதிரியான சூழலில் அதை நம்மைத்தேடி வந்ததது என்பன போன்ற பல விஷயங்களை உள்ளடக்கி ஒரு பாடல் நம் நெஞ்சில் பதிந்துபோகிறது. முன்முடிவுகளுடன் ஒரு பாடலை அணுகாது , அதுவாகவே வந்து நம்மைக்கொள்ளை கொண்டு போகும் பாடல்கள் மிகவும் அரிது. எண்ணிச்சொல்லிவிடமுடியும் அது போன்ற பாடல்களை. யாருமில்லாத தீவுக்கு உன்னைக்கொண்டுபோய்ச் சேர்த்துவிட முடிவு செய்தால் எந்தெந்தப்பாடல்களை எடுத்துக்கொண்டுபோவாய் என்று கேட்டால் பத்தோ பதினைந்தோ பாடல்களை அனைவரும் பட்டியல் போட்டுவிடுவர்,

 

அது போன்ற பட்டியலில் இடம்பெறக்கூடிய பாடல்களில் தமதும் சேர்ந்து விடவேண்டுமென்று அத்தனை இசையமைப்பாளரும் விரும்புவர். முகவும் வலிந்து ஏகப்பட்ட சங்கதிகளைச் சேர்த்து இதுவரை யாரும் செய்யாத முயற்சிகளில் பாடலை உருவாக்கி வெளிக்கொணர்ந்தால் அது அத்தனை எளிதில் சேர்ந்து விடுவதில்லை கேட்பவரிடம், போகிறபோக்கில் இசைத்துவிட்டுப்போகும் அவரறியாமல் வந்து விழும் பாடல்கள் என்றுமாக நம் நெஞ்சில் தங்கிப்போய்விடும். இசைப்பவனின் மனதும்,ரசனையும் கேட்பவருடன் ஒத்துப்போகும்போது பாடல் அழியாப்புகழ் பெறுகிறது. அத்தகைய பெறுபேறு பெற எத்தனித்த இசைக் கோவைகளுள் ஒன்று இந்தத் ‘தங்கமீன்கள்..!’ வழக்கம் போல அதிகம் பாடல்கள் இல்லை என்ற குறை தவிர வேறேதும் தோன்றவில்லை எனக்கு.

 

ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும் இயக்குநர்’ராம்’ வந்து சின்ன ஹைக்கூக்களை நம்மிடம் சொல்லிச் செல்வது முதலில் கொஞ்சம் இடைஞ்சலாகத் தோன்றினாலும் (80-களில் இந்தப்பாணி நடப்பில் இருந்து பின்னர் தாமாகவே வழக்கொழிந்து போனது) பின்னர் பழகிப்போகிறது.அவரின் உச்சரிப்பில் ஏகத்துக்குப் பிழையிருப்பினும் 

 

ஆனந்தயாழை மீட்டுகிறாய் – தமிழ்த்தாலாட்டு

 

“மாமன் அடித்தானோ மல்லிகைப்பூச்செண்டாலே” என்று தாலாட்டாக ஆரம்பிக்கிறது ஆனந்தயாழ். அம்மா  நமக்கெனப்பாடியிருந்தும், நம்மால் அதை ஞாபகம் வைத்திருக்க முடிவதில்லை இருப்பினும், அந்தப்பாட்டு நமக்குள் உறைந்துபோய்க்கிடக்கும் எப்போதும். அப்படிக்கிடக்கும் ஒன்று இன்று யுவனால் மீளக்கொணர்ந்து சேர்க்கப்பட்டிருக்கிறது நம்மிடம்.‘தேனே தென்பாண்டி மீனே’ மற்றும் ‘வரம் தந்த சாமிக்கி பதமான லாலி‘க்குப் பிறகு அப்பா மகளுக்குப் பாடும் தாலாட்டாக  வந்திருக்கும் பாடல் இது.

 

‘அக்கார்டியனை’ வைத்துக்கொண்டு பரவி நிற்கும் அதன் கருப்பு வெள்ளைக்கட்டைகளை மெதுவே அழுத்தி ஆரம்பிக்கிறது பாடல். தாளமே தேவையில்லை என்று முடிவெடுத்து , ராகத்துக்குப் பொருத்தமாக சிறிதே பின்னணியில் ‘சிம்பல்’ கொண்டு இசைத்து தாலாட்டு உறங்கவைக்கத்தான் என்று அறுதியிட்டுக்கூறுகிறார் யுவன் ! (இந்தப்பாடல் முழுக்க முழுக்க ராஜாவின் ‘டச்’ தெரிகிறது.)

 

இடையிசையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் செல்லோ’வும் பியானோவும் இணைந்து ராஜபாட்டை போடுகிறது. ஒரு தாலாட்டு என்றால்,‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பதுபோல,அவன் எந்த நிலையில் இருப்பினும் அவனவனுக்கு அவனவன் மகள் இளவரசி தான் , ஒரு ராஜா தன் மகள் இளவரசிக்கு பாடுவது/இசைப்பது போல அத்தனை ரிச்’சாக அமைந்திருக்கிறது. தாலாட்டும் ஒரு ஸிம்ஃபொனியாகவே ஒலிக்கிறது இங்கு.

 

யாருக்குத்தான் தாலாட்டுப்பிடிக்காது ? ஹ்ம்,, எத்தனை முறை கேட்டாலும் அலுத்துச்சலித்துப்போகாத ராகமும், இசையமைப்பும் , ஸ்ரீராம் பார்த்தசாரதியின் குரலுமாக ( ‘இளங்காத்து வீசுதே’வுக்குப்பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக ) விலகிச்செல்ல விடாது அப்படியே கட்டிப்போடும் வகையாக அமைந்திருக்கிறது பாடல். வெய்யில் காலத்தில் வேப்ப மரங்களூடே பயணித்து வரும் இளந்தென்றலைப் போல வருடிச்செல்லும் பாடல் இது. யுவன் இந்தப்படத்தின் பாடல்களை தம் இதயத்திலிருந்து கொண்டு வந்ததாகச்சொல்லியிருந்தார். ஹ்ம்..அது சென்று சேரும் இடத்தைத்தான் அடைந்திருக்கிறது.  என்ன ஒன்று கேட்டதும் உறங்கிவிடாமல் இருக்கவேண்டும் 

 

பாடல் முடியும்போது, அதுவரை தொட்டிலை ஆட்டிக்கொண்டே தாலாட்டுப்பாடிக்கொண்டிருந்த தாய், அவள் பாட்டிலும், சுற்றிவரும் காற்றிலுமாக உறங்கிவிட்ட குழந்தையை, தாலாட்டைச் சற்று நிறுத்தி விட்டு தொட்டில் சேலையை நீக்கி, “உறங்கிவிட்டானா” என்று பார்த்துவிட்டு மெலிதே மீண்டும் தொடர்வாள். அதுபோல ஸ்ரீராம் பார்த்தசாரதி ‘ஆனந்தயாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில்’ என்று சொல்லி விட்டு அங்கு கொஞ்சம் இடைவெளி விட்டு ‘வண்ணம் தீட்டுகிறாய்’ என்று மெதுவாக முடிக்கிறார்.!

நதி வெள்ளம் – நீர்ச்சுழி

 

நதியின் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் கற்களில்,தேங்கிக்கிடக்கும் கற்களில் நீர் அடிபட்டு வெளிப்படும் சப்தம் நிறைந்து கிடக்கிறது பாடல் முழுக்க. ‘ராகுல் நம்பியாருக்கு’ சொல்லிக் கொள்ளும் படியான ஒரு பாடல் அவரது குரல் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, ”பறபறவென” என்ற நீர்ப்பறவைப் பாடலுக்குப் பிறகு. யூகிக்க முடியாத இசைக்கோவையில் இசைக்கும் அழுத்தமான கிட்டார் தந்திகள் ஆரம்பத்திலும், இடை இசையாகவும் ஒலித்து நம்மை மீள விடாமற் செய்கிறது இதயத்துடிப்பை அடி நாதமாகக்கொண்டு பாடல் இசைக்கிறது.

 

1:01 ல் ஆரம்பிக்கும் பின்னணியில் அந்த மணி போன்ற ஒலி, அதிகமாக சீனப்பாடல்களில் இசைக்கப் படுவது.கூர்ந்து கவனித்தால் புலப்படும் அந்த மணிகள். நமது மேயப்போகும் மாடுகளுக்கென , கோவில் மணி போலல்லாது வேறு வகையான மணி கட்டிவிடுவது வழக்கம்.ஓரளவு அதுபோல இசைக்கிறது.நம் கவனத்தை திசை திருப்பவியலாது தொடர்ந்தும் பின்னணியில் ஒலிக்கிறது.

 

1:49 ல் ஆரம்பிக்கும் வயலினும் வேய்ங்குழலுமான சேர்ந்திசை ஆர்ப்பாட்டமின்றி ஆரம்பித்து தவழ்ந்து சென்று இதய வானெங்கும் பரவி, அன்பை அத்தனை இடங்களுக்கும் அறிமுகப்படுத்திவிட்டு வரிகளுக்கு

வழி விட்டு நின்றுபோகிறது.

 

3:27 ல் ஆரம்பிக்கும் புல்லாங்குழல் , இதயத்தின் சுவர்களில் புதைந்து, வெளிக்காட்ட விருப்பின்றி உள்ளுக்குள்ளேயே அமிழ்ந்துகிடக்கும் பாசத்தை வெளிக்கொணர எத்தனித்து ,‘எதற்கு இதையெல்லாம் பூட்டி வைத்திருக்கிறாய், எடுத்து வெளியே விடு, மனது இலகுவாகட்டும் என்று கூறுவது போல’, அதிர்ந்து ஒலிக்காது, நம்மைக் கூர்ந்து கவனிக்கச்செய்கிறது.

 

இடையிசை எப்போது ஆரம்பிக்கிறது , எப்போது முடிகிறது என்று வழக்கமாக கவனிப்பது போல இந்தப்பாடலில் என்னால் கவனம் செலுத்த இயலவில்லை. வேண்டும்போது தானாக எழுந்து ராகுல் நம்பியாரின் குரலை கொஞ்சமே பின்னுக்குத்தள்ளி முன்வந்து விட்டு பின்னர் தாமாகவே சென்று பின் மறைந்து விடுகிறது. இந்தப்பாடலைக் கேட்பதற்கென மனநிலையைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை, தாமாகவே உங்களை உள்ளிழுத்துக்கொள்ளும் இந்தப்பாடல்.

யாருக்கும் தோழனில்லை –சூஃபி

 

சுரைக்குடுக்கையில் கம்பிகளைக் கட்டிக்கொண்டு வாயிலில் வந்து அவ்வப்போது ஃபக்கீர்கள் பாடிச் செல்வது போல பாடல் அமைந்திருக்கிறது. நிறைய சூஃபி கலந்து ஒலிக்கிறது பாடல். பின்னணியில் பாடிக்கொண்டே செல்லும் அந்தக்குரல் இதயத்தை அறுக்கிறது. முதலிலும் இடையிடையேயும் ஒலிக்கும் மாண்டலின்/கிட்டார் கொஞ்சம் “போகாதே”வை ஞாபகப்படுத்தினாலும் பாடல் செல்லச்செல்ல மறைந்துபோகிறது. அடிஸ்கேல் போன்று நீளமாக குச்சிகளில் சோடா டப்பிகளை பொருத்தி வைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் சப்ளாக்கட்டைகளை இசைப்பது போல எங்கும் ஒலிக்கிறது பாடல் முழுக்க. என்ன ஒரு குறை என்றால் “ஏன் இந்தப்பாடல் இரண்டு சரணங்கள் மூன்று முறை பல்லவி என ஒலிக்காமல் சுருக்கென முடிந்து விடுகிறதே” என்பது மட்டுமே.! இப்படியான இலக்கணங்களை விரும்பாத ஃபக்கீர்கள் தான் இந்தப்பாடலை இசைக்கிறார்கள் என்ற கட்டுடைப்பு செய்யும் முயற்சியில் பாடல் அமைந்திருக்கிறது.

 

நுஸ்ரத் ஃபத்தே அலிகானின் பல பாடல்கள் இது போன்ற Genre களில் ஒலிக்கும். இன்னும் பின்னால் போய்ப்பார்த்தால் “லம்பி ஜுதாயி” மற்றும் ‘லக்கி அலி’யின் ‘ஓ சனம்‘, ‘Desert Rose’ கூட சொல்லலாம். விட்டேற்றியாய் அலைந்து திரியும் மனநிலையில் பின்னணியில் ஒலித்தால் நன்றாக இருக்குமே என்று நம்மைக் கூறு போட்டு விட்டு போகும் பாடல்கள் இந்த ரகத்தைச்சேர்ந்தவை. இதே போல ஒரு பாடல் “கற்றது தமிழிலும்” ‘உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது’ என்று ஒலித்திருந்தது. ( ட்யூட்டரின் பாடலை ஒத்திருந்த அந்த ஜென் பாடல். ( http://youtu.be/JQdztRg_7nY – Deuter – Second Stage ) )

இங்கு சூஃபி’ இசையுடன் கொஞ்சம் அளவோடு ஜென்’னும் கலந்து ஒலிக்கிறது.அதிகமாக சூஃபி இசை வடிவத்தில் காணக்கிடைக்கும் போக்கில்லாது அலைபவனின் “அரற்றல்”கள் 1:55 லிருந்து ஆரம்பித்து அதைக்கொண்டே பாடலை முடிக்கிறார் அல்ஃபோன்ஸ் ஜோஸப். குரல் புதிதாக அமைந்திருப்பது இந்தப்பாடலுக்கு ஒரு கூடுதல் சிறப்பு.

ஃபர்ஸ்ட் லாஸ்ட்

 

முதலில் கூறிய அத்தனை பாடல்களும் அழுத்தம் நிறைந்து கனத்துப்போய்க்கிடக்க இந்தப்பாடல் அவற்றிலிருந்து விடுபட்டு கொஞ்சம் “ஃப்ரீயா விடு” Genre-ல் ஒலிக்கிறது.

– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationதெளிதல்டௌரி தராத கௌரி கல்யாணம்….! 4
author

சின்னப்பயல்

Similar Posts

2 Comments

  1. Avatar
    புனைப்பெயரில் says:

    மாமன் அடித்தானோ மல்லிகைப்பூச்செண்டாலே–> இன்னும் அந்த கற்கால் உறவு உணர்வுகளிலேயே நிற்காதீர்கள். தாய்மாமன் கல்யாணம் என்பதெல்லாம் பிறக்கும் குழந்தைக்கு ஊனம் விளைவிக்கும் என்று பிரச்சார விழிப்புணர்வு நிலை இன்று. நிலம் சம்பந்தமான சொத்து முறை வாழ்வு இருந்ததால் அந்த மாதிரி கல்யாணமுறை இருந்தது. இப்போது மூளையே பிரதானமாகவும், பலவழி நிதி முதலீடுகள் வந்ததாலும் “மாமன் மல்லிகைப்பு செண்டெல்லாம்” போயாச்சு… “தப்பான யூ டியூப் சாங் போட்டானோ… கங்கம் ஸ்டைல் பாட்டு போடலையோ..” எனும் காலம் வந்தாச்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *