ஆனந்த பவன் [நாடகம்] காட்சி -8

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

 

 

இடம்: ஆனந்த பவன். ‘கேஷ் கவுண்டர்’

 

நேரம்: இரவு மணி ஏழரை

 

உறுப்பினர்: தொழிற் சங்கத் தலைவர் கண்ணப்பன், ஆனந்தராவ், கிரைண்டிங் மிஷின் விற்பனைக்கு வரும் நீலகண்டன், ரங்கையர்.

 

(சூழ்நிலை: கண்ணப்பன் கேஷ் கவுண்டருக்குப் பக்கத்தில் போட்டிருக்கிற நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். எதிரில் ஒரு பெஞ்சின் மீது கிரைண்டிங் மிஷின் விறபனை ஆசாமி நீலகண்டன் உட்கார்ந்திருக்கிறார்)

 

 

 

ஆனந்தராவ்: அப்பறம் வந்த சமாச்சாரம் சொல்லுங்கோ கண்ணப்பன்! நீங்க பெரிய தொழிற்சங்க தலைவர். என்ன காரியமா வந்திருக்கீங்க? எதாவது டொனேஷன் தரணுமா?

 

கண்ணப்பன்: அதெல்லாம் ஒண்ணுமில்லே, ஒங்க ஹோட்டல்லே ஒரு தொழிற்சங்கம் ஆரம்பிக்கணும்னு வந்திருக்கேன்!

 

ஆனந்தராவ்: ஓ எஸ், தாராளமா ஆரம்பிங்கோ! பட் ஒரு சின்ன விஷயம்?

 

கண்ணப்பன்: என்னது?

 

ஆனந்தராவ்: அதில் என்னையும் ஒரு மெம்பரா சேர்த்துக்கணம்.

 

கண்ணப்பன்: இது தொழிலாளிகள் சங்கம் ராயரே… ஒங்களுக்குந்தான் தனியா ஹோட்டல் ஓனர்ஸ் சங்கம் இருக்கே. அதிலே சேருங்கோ.

 

ஆனந்தராவ்: அதிலே சேர்த்துக்க மாட்டேன்னுட்டாங்களே.

 

கண்ணப்பன்: ஒங்களைச் சேர்க்கலியா? ஏன்?

 

(ரங்கையர், இரண்டு காப்பி டபராவுடன் வந்து கொண்டிருக்கிறார்)

 

ஆனந்தராவ்: சொல்றேன். ரங்கா அந்த காப்பி டபராவை இவா முன்னாடி வையி.

 

கண்ணப்பன்: (வாங்கிக் கொண்டு) சூடா இருக்கு. அப்புறமா சாப்பிடறேன்! விஷயத்தைச் சொல்லுங்க.

 

ஆனந்தராவ்: நீலகண்டன், நீர் சூடா சாப்பிடுவீரே… சாப்பிடும்…

 

நீலகண்டன்: (ஒரு வாய் பருகுகிறார்) ப்ச்ச்சுச்சு!

 

ஆனந்தராவ்: காப்பி எப்படி இருக்கு நீலகண்டன்?

 

நீலகண்டன்: ஏ ஒன்!

 

ஆனந்தராவ்: ஒம்ம க்ரைண்டரை வாங்கப் போறேன்னு எதிர்பார்த்து ஐஸ் வைக்கப்படாது ஃபேக்டைச் சொல்லுங்கோ!

 

நீலகண்டன்: நீர் ஒருத்தர் வாங்கலேன்னா என் வியாபாரம் படுத்து, கிரைண்டர் டீலர்ஷிப் கான்ஸல் ஆயிடப் போறதாக்கும், ஏன் ராயரே! பத்து வருஷமா ஒம்ம கடைக்கே எதுக்குக் காப்பிக்கு வந்துகிட்டிருக்கேன்?

 

ஆனந்தராவ்: பலே பலே நன்னாவிளாசினீர்! சர்க்கரை விலை ஏறிடுத்து, காப்பிக் கொட்டை விலை ஏறிடுத்து, பால் விலை ஏறிடுத்து… நம்ம காப்பி விலை ஏறணுமோனலியோ?

 

நீலகண்டன்: மூணு ரூபாயா?

 

ஆனந்தராவ்: அதான் இல்லே. அதே ரெண்டு ரூபாதான்;  நீங்க தர வேண்டாம்.  கண்ணப்பன் சார், நீங்களும் தர வேண்டாம். இது காம்ப்ளிமெண்டரி காப்பி… விஷயத்துக்கு வர்றனே! மத்த கடையிலே எண்பது பைசா இட்டிலி… மசால்வடை… மசால் தோசை எல்லா ஐட்டத்தையும் ஏத்துடா விலையைன்னு எங்க அசோஷியேஷன்ல சொன்னா நான் மாட்டேன்னுட்டேன். நீ முதலாளியா இருக்க லாயக்கில்லேண்ணு சங்கத்திலருந்து தள்ளிட்டா! என்ன கண்ணப்பன் சார் சிரிக்கிறீர்?

 

கண்ணப்பன்: பேசுங்க ராயர்.

 

ஆனந்தராவ்: ராயன் கிராக்கி பிடிக்கிறாண்ணு தோணறதோ! அப்படி யில்லே;  நம்ம கஸ்டமர் அதான் பொதுஜனம். அவர் கையில இருக்கற காசை ஊர் ஒலகமெல்லாம் பிடுங்கிண்டு ஓடத் துடிக்கறது. நாவார வயிறார சாப்பிடவாவது செய்யலாம்ணு இங்கே வருவார்! நானும் அவர் ஜேப்பிலேயும் வயித்திலேயும் அடிச்சா அனுப்பட்டும்? கஸ்டமர் வயறு எரிஞ்சுண்டு ராயன் கூட கெட்டுப்டான்! காசு ஆசை பிடிச்சண்டு டுத்துண்ணு வையாமப்போனா அது எனக்குப் பரம சுகம்.

 

(அந்த நேரத்தில் ஒரு பித்தளைத் தூக்குடன் ஒரு பெண் நுழைகிறாள்)

 

சாரங்கன்: வந்துட்டியா சாம்பாருக்கு? சாம்பார் இல்லேம்மா.நெதம் ஒரே மாமூலாப் போச்சு; கழுத்தறுப்பு.

 

ஆனந்தராவ்: சாரங்கா இவாளும் ஒரு வகை கஸ்டமர் தாண்டா. நம்ம ஓட்டல் சாம்பார் ருஜிக்காகவோ வேற ஏதோ இயலாமைக்கோ வர்றா. கொடுக்கற காசை வாங்கிண்டு ஏதோ ஊத்தி அனுப்பு (அவர்கள் பக்கம்திரும்பி) ஆச்சா. நான் ஒண்ணும் பெரிய தியாகி இல்லே. மனுஷன் தான். எனக்கும் காசு வேணும். விபரீதக் காசு, விகல்பக் காசு, வயிறெரிஞ்ச காசு வேணாம். வெலைவாசி ஏறிண்டேதான்போறது! வாஸ்தவம். தலை முழுகற லெவல் வந்தான்னா நான் வெலை ஏத்தணும்? சொன்னேன். போடா போடா போக்கத்தவனேண்ணுட்டா. ஆக முதலாளி சங்கத்திலேர்ந்து எனக்கு கெட்டவுட். இப்ப நீங்க என்னடாண்ணா தொழிலாளர் சங்கத்திலயும் எனக்கு நோ அட்மிஷனுட்டீங்க. அப்ப எனக்கு சங்கமே கெடையாதா?

 

கண்ணப்பன்: ஒம்ம கேஸ் தனி ராயர்வாள்!

 

ஆனந்தராவ்: நான் தனி இல்லே நானும் மெம்பர் ஆகணும். எல்லாருக்குமா நானே சந்தா கட்டிடறேன்.

 

கண்ணப்பன்: தொழிற்சங்கச் சட்டம் எடம் தராது ராயரே!

 

ஆனந்தராவ்: எதுக்கு சங்கம் வேணும்?

 

கண்ணப்பன்: தொழிலாளர் உரிமைக்குப் போராட.

 

ஆனந்தராவ்: அதாவது வேஜஸ், போனஸ், பென்சன், ஒர்க்கிங் அவர்ஸுக்குத் தானே! கொஞ்சம் வெய்ட் பண்ணுங்கோ! மாதவா இங்கே வா (மாதவன் அருகே வந்து நிற்கிறான்) அவர்கிட்டே உன் சம்பளம் என்ன போனஸ் உண்டான்னு சொல்லு.

 

மாதவன்: (தயங்கி நிற்கிறான்)

 

ஆனந்தராவ்: வாயைத் திறந்து சொல்லேண்டா! ஸ்டாம்பு மேல எவ்வளவுக்குக் கையெழுத்துப் போடறே? கைல எவ்வளவு வாங்கறே?

 

மாதவன்: ரெண்டும் ஒண்ணு தானேண்ணா.

 

ஆனந்தராவ்: அதான் எவ்வளவு?

 

மாதவன்: ஐநூத்தி எழுபத்தஞ்சு. கம்பெனி சாப்பாடு. மூணு மாசம் போனஸ். தீவாளிக்கு ரெண்டு ஸெட் டிரஸ்.

 

ஆனந்தராவ்: எத்தனை அவர் வேலை செய்யறே.

 

மாதவன்: ஷிஃப்ட் ஸிஸ்டம். எட்டு மணி நேரம்.

 

ஆனந்தராவ்: பி.எஃப். உண்டா?

 

மாதவன்: பி.எஃப் உண்டு. இன்ஷூரன்ஸ் உண்டு. அண்ணா கட்டறார்.

 

ஆனந்தராவ்: நான் சப்ளை பண்றதுண்டு. சமயத்திலே பலகாரம் போடப் போறதுண்டு க்ளீனர் சொணங்கினா டேபிள் தொடைக்கறதும் உண்டு. மத்த ஓட்டல்காரா விஷயம் வேற எப்படியாவது இருக்கலாம்… இதான் இங்கத்திய நிலைமை.

 

கண்ணப்பன்: நீங்க தானே ப்ரொப்ரைட்டர்…

 

ஆனந்தராவ்: அப்படி ஒரு ஆள் வேணும்னு என்னை நியமிச்சிருக்கே! கரண்ட் பூடுத்து! கிருஷ்ண கிருஷ்ண!

 

கண்ணப்பன்: நான் அப்பறமா வர்றேன் ராயர்.

 

ஆனந்தராவ்: உட்காருங்கோ கண்ணப்பன்! மறுபடியும் லைன் மாத்திக் கொடுப்பாங்க… சாரங்கா, ஸ்டால்லே மெழுகுவர்த்திக் கட்டு ஒண்ணு எடுத்து ஒடச்சுக் கொளுத்தி வையி.

 

கண்ணப்பன்: நீங்க எக்செப்ஷன் ராயர்…

 

ஆனந்தராவ்: நான் மட்டும் இல்லே இந்த ஹோட்டல்லே ஒவ்வொரு கேஸும் எக்ஸெப்ஷன்! இந்த ரங்கையர் இருக்காரே, இவருக்கு லேபர் ஆக்டே புரியாது! விடி காத்தாலே அஞ்சு மணிக்கு ஹோட்டலுக்கு வந்தா, ராத்திரி பத்தரைக்குத் தான் வீடு! லீவு எடு, ரெஸ்டு எடுண்ணு சொல்லிச் சொல்லி எனக்கு வாய் நொந்து போச்சு. என்னிக்காவது பனியனைக் கழட்டி இஸ்திரி ஷர்ட் போட்டார்னா அப்பதான் அவருக்கு லீவ்னு அர்த்தம். மூணு வருஷம் நாலு வருஷம் ஆவும்.   (மாதவன் மெழுகு வர்த்தியைக் கொண்டு வந்து வைக்கிறான்) நான் கவர்ன் மெண்ட்டை ஏமாத்தலே. ஒழுங்கா அக்கவுண்ட் வச்சிருக்கேன். கலப்படம் பழைய சரக்கைப் புதுசரக் காக்கிறது. அப்படி ஒரு கோல்மால் இங்கே கிடையாது. பெரிசா வரலேண்ணாலும் போதுமான அளவு லாபம் வர்றது.

 

கண்ணப்பன்: நான் ஒரு மீட்டிங் போவணும், அப்புறமா வர்றேன் ராயரே!

 

ஆனந்தராவ்: உட்கார்ந்து காப்பியைச் சாப்பிடுங்கோ. லைட் வரட்டும். ரோடு பூரா இருளோண்ணுருக்கு.

 

நீலகண்டன்: சரி ராயரே, அப்போ ஒரு பெரிய மெஷினுக்கு ஆர்டர் எழுதிக்கட்டுமா?

 

ஆனந்தராவ்: நீலகண்டன் சார்! கோச்சுக்கப்படாது. பெரிய மெஷினுக்கு ஆர்டர் கொடுக்க எனக்கு அப்ஜெக்ஷன் இல்ல! எங்க ஹோட்டல்ல மாவாட்டறத்துகுன்னே பொறவி எடுத்தவன் ஒருத்தன் இருக்கான். பேரு கணபதி! மலங்க மலங்க முழிச்சுண்டு நிப்பான். நம்ம ஹோட்டல்ல அவனுக்குக் கொடுக்க வேற வேலை கெடையாது! அநாதையா அவனை வீட்டுக்கும் அனுப்ப முடியாது. அவனுக்கு வீடும் கெடையாது. ஒம்ம மிஷினை வாங்கிட்டா அவனைத் தெருவிலே நிறுத்த வேண்டியதுதான்… மனுஷா முக்கியமா மிஷின் முக்கியமா சொல்லுங்கோ?

 

நீலகண்டன்: என்ன ராயரே இவ்வளவு நேரம் உட்கார்ந்தது வேஸ்ட்டா?

 

ஆனந்தராவ்: மன்னிக்கணும். எனக்கும் கிரைண்டர் மெஷின் வாங்க ஆசைதான்! நம்ம ஹோட்டலும் மாடர்னா இருக்கறது எனக்கு ரொம்ப இஷ்டம்… கணபதியை என்ன பண்ணலாம் சொல்லுங்கோ?

 

(பளிச்சென்று மின் விளக்கு வருகிறது)

 

நீலகண்டன்: நான் வர்றேன் ராயரே!

 

ஆனந்தராவ்: போய் வாங்கோ

 

கண்ணப்பன்: [அவசரமாக எழுந்து] நானும் கௌம்பறேன்.

 

ஆனந்தராவ்: ஒம்ம சங்கத்திலே என்னையும் சேர்த்துடுங்கோ.

 

கண்ணப்பன்: அப்புறமா வந்து பேசறேன்.

 

(இருவரும் அகலுகின்றனர்)

 

ரங்கையர்: அண்ணா, ஒரு சமாச்சாரம்!

 

ஆனந்தராவ்: என்ன விஷயம்?

 

ரங்கையர்: வீட்ல இருக்கற விருந்தாளி நாளைக்கு காலமே வெஸ்ட்கோஸ்ட்ல பொறப்படப் போறாளாம்?

 

ஆனந்தராவ்: நீ சொல்லிப் பார்த்தியோ?

 

ரங்கையர்: நீங்க சொன்னதுக்கு மேல நான் என்னண்ணா சொல்றது?

 

ஆனந்தராவ்: ம்ஹ்ம் (ஆழ்ந்து பெருமூச்சு விடுகிறார்)

 

ரங்கையர்: ஜமுனாவும் எவ்வளவோ சொன்னா! கேக்கல்லே!

 

ஆனந்தராவ்: விட்ட குறையைத் தொட்ட குறைம்பா பெரியவா! கிருஷ்ண கிருஷ்ண… வண்டி எத்தனை மணிக்குப் பொறப்படறது?

 

ரங்கையர்: நாலு அம்பது விடிகாலமே!

 

ஆனந்தராவ்: நீ காலையிலே நாலு மணிக்கு ஒரு ஆட்டோவை வரச் சொல்லிடு உன் வீட்டாண்டே! நான் நாலரைக்கு உன் வீட்டுக்கு வந்துடறேன். ஸ்டேஷனுக்கு நீயும் நானும் போய்ட்டு வருவோம். ம்ஹ்ம்… ரங்கா எனக்கு ரொம்ப ஆயாசமா இருக்கு. கொஞ்ச நாழி கேஷ்ல உட்காரு. நான் ஸ்டோர் ரூம்ல போயி ஈஸிசேர்ல சித்த சாயறேன்.

 

ரங்கையர்: செய்யுங்கோண்ணா!

 

(திரை)

 

[தொடரும்]

Series Navigation
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *