ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-6

This entry is part 1 of 27 in the series 21 செப்டம்பர் 2014

 

 

இடம்: ஆனந்த பவனில் சமையற்கட்டு.

 

நேரம்: அடுத்த நாள் பிற்பகல் மணி மூன்று

 

பாத்திரங்கள்: ரங்கையர், சுப்பண்ணா, சாரங்கம், மாதவன் ராஜாமணி, ( பாபா என்று ஒரு கிளீனர்)

 

சூழ்நிலை: (வாழையிலைக் கட்டுக்குப் போட்டிருந்த நார்க்கட்டை பேனாக் கத்தியால் அறுத்துக் கொண்டிருக்கிறார் ரங்கையர். பாபா பில் எழுதும் டெஸ்கிற்கு மேல் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறான். கல்லா மேஜையில் ராஜாமணி அமர்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்)

 

 

சுப்பண்ணா: (லெட்ரீனுக்குப் போய் விட்டு டப்பாவை வைத்து விட்டு வந்து கால் அலம்புகிறார். பாபாவைப் பார்த்து) பாபா என்னடா புத்தகம் அது?

 

பாபா: ஒண்ணுமில்லேண்ணா

 

சுப்பண்ணா: கதைப் புஸ்தகமா?

 

பாபா: ஹிஹிஹிஹி

 

சுப்பண்ணா: எங்கே கொடு பார்ப்போம்! (தலைப்பைப் படிக்கிறார்) நல்லது என்றால் என்ன?  கெட்டது என்றால் என்ன?  எழுதியது யார்றா வி…மாயாக்கோவ் ….ஸ்கி. கொழந்தைங்க புஸ்தகம்… எங்கேடா பிடிச்சே?

 

பாபா: புஸ்தகக் கண்காட்சியிலே வாங்கினேண்ணா!

 

சுப்பண்ணா: என்ன விலை?

 

பாபா: எண்பது பைசா.

 

சுப்பண்ணா: எண்பது பைசாவிலே நல்லது கெட்டது என்னண்ணு தெரிஞ்சுக்கற யாக்கும். அதுவரையிலே உத்தமம் தான்… இந்த சாரங்கன் மாதிரி ஏதாவது சினிமாப் பத்திரிகையைக் கட்டிண்டு அழாமே!

 

சாரங்கன்: கட்டிண்டு அழறனோ கட்டிக்காம அழறானோ ஒமக்கென்ன மாமா வந்தது?

 

சுப்பண்ணா: அதான் ஏற்கெனவே நாரா நரம்பா உருகிப் போயிருக்கியே… இன்னும் ஏண்டா சினிமா நடிகைகளைப் பார்த்து எளைச்சுப் போறே?

 

மாதவன்: (உள்ளே நுழைந்து கொண்டே) மாமா பஜ்ஜி ரெடியாச்சா?

 

சுப்பண்ணா: மூணு மணி தானேடா ஆறது. கால்மணி நேரம் போகட்டும். அடுப்பிலே எண்ணெய் ஏத்தியிருக்கேன்.

 

மாதவன்: என்ன சினிமா நடிகைகனைப் பத்திப் பேச்சு ஓடறது?

 

சுப்பண்ணா: சாரங்கன்தான் இன்றைய ஸ்பெஷல்!

 

மாதவன்: அவன் இன்னமும் உருகி உயிரை விட்டுடாமே வச்சுண்டிருக்கறதுக்குக் காரணமே சினிமா நடிகைகள்தான்!

 

சுப்பண்ணா: எப்படிடா அது சாரங்கா?

 

சாரங்கன்: வந்துவிட்டார் விஞ்ஞான மேதை!

 

மாதவன்: ஆமாம் மாமா! என்னிக்காவது ஒருநாள் அந்த நடிகைகள் ஒவ்வொருத்தி யோடயும் ஒரு சீன்லயாவது நடிச்சுடறது தான் சாரங்கன் அபிப்பிராயம்.

 

சாரங்கன்: பெரிய ஐன்ஸ்டீன்… கண்டுபிடிச்சுட்டார்.

 

(ரங்கையர் கனைத்துக் கொண்டே வருகிறார்)

 

ரங்கையர்: என்னது விவகாரம்?

 

சுப்பண்ணா: ஒண்ணுமில்லேண்ணா சும்மா தமாஷ்.

 

ரங்கையர்: பஜ்ஜி ரெடியாய்ட்டதா?

 

சுப்பண்ணா: எண்ணெய் காயறதுண்ணா.

 

ரங்கையர்: கல்லாவிலே யார் இருக்கா?

 

மாதவன்: ராஜாமணிண்ணா.

 

சுப்பண்ணா: பெரியண்ணா, மத்தியானம் போனவர் வரல்லியோ?

 

ரங்கையர்: வீட்டிலே தூங்கிண்டிருக்கார். நேத்தியிலேர்ந்து மார்வலி. ரொம்ப  ஆயாசமா இருக்குண்ணு படுக்கப் போனார்.

 

சுப்பண்ணா: நேத்திக்கு ஜம்னா வந்து உங்களைக் கூட்டிண்டு போனாளே!

 

ரங்கையர்: ஆமாம்…

 

சுப்பண்ணா: மாதவன் என்னமோ சொன்னான். நம்பிக் கைப்படலே.

 

ரங்கையர்: என்ன சொன்னான்?

 

சுப்பண்ணா: ஆனந்த லட்சுமியம்மா வந்திருக்காளாமே.

 

ரங்கையர்: மாதவா… டேபிள்ளே யாரோ வந்து உட்கார்ந்திருக்கா, நீ போ.

 

(மாதவன் வெளியேறும்போது ராஜாமணி உள்ளே வருவது கண்டு நிற்கிறான்)

 

மாதவன்: என்ன ராஜா வேணும்?

 

ராஜாமணி: உஷ்ஷ்… நீ போடா… கேஷ் வந்தா வாங்கிப் போடு.

 

மாதவன்: அவா பேசறதை ஒட்டுக் கேக்கறியா?

 

ராஜாமணி: (கிசுகிசு குரலில்) கத்தாதேடா… அறைஞ்சேன்னா ஓமப் பொடியாயிடுவே.

 

மாதவன்: சரி சரி. கேட்டுக்கோ.

 

(ராஜாமணி ரங்கையரும் சுப்பண்ணாவும் பேசுவதை ஒட்டுக் கேட்கிறான்)

 

சுப்பண்ணா: ஆனந்த லட்சுமியம்மா எப்படி இருக்காங்க?

 

ரங்கையர்: ரொம்ப எளைச்சுப் போயிருக்காங்க! அவங்களா பேரைச் சொல்ல லேண்ணா என்னாலே கண்டுபிடிச்சிருக்க முடியாது… எப்படிப்பட்ட அழகு… என்ன முடி… என்ன தேஜஸ்! எல்லாம் கரைஞ்சு போயிடுத்தே.

 

சுப்பண்ணா: பதினஞ்சு வருஷமாயிருக்குமா?

 

ரங்கையர்: இன்னும் கூட இருக்கும்! அப்போ ராஜாமணி நாலு வயசுப் பையன்.

 

சுப்பண்ணா: எங்கே இருக்காங்க?

 

ரங்கய்யர்: திருவல்லிக்கேணியிலே இருந்திருக்காங்க.

 

சுப்பண்ணா: மெட்ராஸ்லயா?

 

ரங்கையர்: ஆமா.

 

சுப்பண்ணா: பதினஞ்சு வர்ஷமா அட்ரஸ் தராமே மறஞ்சுருந்திருக்காங்களே.

 

ரங்கையர்: பெரியண்ணா சம்சாரம் கங்காபாய் போயி அவகிட்டே எனக்கு மடிப் பிச்சை போடும்மா. ரெண்டு ஆண் கொழந்த இருக்கு. எங்க குடும்பம் நடக்கணும்னு கண்லே ஜலம் விட்டு நிக்கலே கௌம்பிட்டா… கூட இருந்தா ரெண்டு குடும்பம்ணு பெரியண்ணா மனசு, ரெண்டு பட்டுடும்னு மனசு தாங்காமே கௌம்பிட்டா.

 

சுப்பண்ணா: ஜீவனத்துக்கு என்ன பண்ணினாளாம்? இருந்த நகையெல்லாம் தான் கழட்டிக் கொடுத்துட்டாளே.

 

ரங்கையர்: பத்திருபது ஆபீஸ்காராளுக்கு சின்ன மெஸ் மாதிரி வச்சு சமைச்சுப் போட்டுண்டு இருந்துருக்கா கூடவே ஒரு சித்தி இருந்தாளே ஒமக்கு ஞாபக மிருக்கோ.

 

சுப்பண்ணா: சாரங்கா, வேலையைக் கவனிடா, காபி பில்டர் ஆயிடுத்தா பாரு! (ரங்கையர் பக்கம் திரும்பி) பேஷா நெனவிருக்கே! மூக்குக் கண்ணாடியும் மடிசாருமா ஒரு பாந்தமான முகம். ரங்கையன் மாதிரி ஆசார சீலம் ஆருக்கும் வராதுண்ணு ஓயாமே உம்மைப் பத்தி பேசுவா.

 

ரங்கையர்: (தலை குனிந்து) அவ போன மாசம் காலமாய்ட்டாளாம்.

 

சுப்பண்ணா: அட மஹாதேவா!

 

ரங்கையர்: கைக்கு ஆள் இல்லாமே மெஸ் நடத்த வசதிப் படல்லே; மெஸ்ஸை மூடிட்டு கிளம்பி வந்துட்டா.

 

சுப்பண்ணா: இப்பே வந்திருக்கிற நோக்கம்?

 

ரங்கையர்: வடக்கே யாத்திரை போகக் கௌம்பி இருக்கா! கேதார்நாத் பசுபதிநாத்னு கால் போற போக்கிலே போய் காசியிலே பிராணனை விட்டுடணும்னு தீர்மானம். அதான் கடேசித் தடவையா எல்லாரையும் பார்த்துட்டுப் போயிடலாம்னு வந்திருக்கா.

 

சுப்பண்ணா: பெரியண்ணா ஒம்ம வீட்டுக்கு வந்தாரோ?

 

ரங்கையர்: வந்திருந்தார்! நேத்திக்கி ஆனந்த லட்சுமி இருக்கற நெலமையைப் பார்த்து கண்ணால பொல பொலண்ணு ஜலம் விட்டுட்டார்.

 

சுப்பண்ணா: இருக்காதா பின்னே! எவ்வளவு பிரியமா இருந்தார்… அவகிட்டே! ஒரு வழியிலே இந்த ஓட்டலே அவளோடது! அவ நகைகள் முப்பத்தஞ்சு பவுன்தானே அன்னிக்கு ஹோட்டல் நொடியற டயத்திலே கை குடுத்தது… இங்கயே இருந்துடச் சொல்லி யிருக்கணும் பெரியண்ணா! அப்ப இல்லேண்ணாலும் இப்ப!

 

ரங்கையர்: எவ்வளவோ சொன்னார்.

 

சுப்பண்ணா: கேக்கலியா?

 

ரங்கையர்: கங்காபாய்க்கு இந்த வயசிலே இனிமே நீ ஒரு போட்டி ஆகமாட்டேன்னு கூடச் சொல்லிட்டார்.  ஆனந்த லட்சுமி துளிக் கூட ஒப்புக்கலே. நான் நல்லகதிக்கு யாத்திரை பண்ணிண்டிருக்கேன். மறுபடியும் என்னை பந்தத்திலே இழுத்து விடாதீங்கோண்ணுட்டா.

 

சுப்பண்ணா: அவர் கேட்டு வந்தது அவ்வளவுதான்!

 

(கல்லா மேஜை மீதிருந்த மணியை அடிக்கிறான் மாதவன்.   ராஜாமணி  திரும்பிப் பார்க்கிறான்)

 

மாதவன்: நூறு ரூபாய்க்கு சில்லறை மாத்தணும்.

 

ராஜாமணி: போய் ஒழியேண்டா… படபடன்னு மணியை வேற அடிக்கணுமா.

 

மாதவன்: ஒட்டுக் கேட்டு முடியலியா?

 

ராஜாமணி: பயலே! ஒனக்கு நெஜம்மா அறை இல்லே…

 

 

(திரை)

 

 

[தொடரும்]

 

+++++++++++++++++++++++++++++++

Series Navigationவாக்குமூலம்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *