ஆம் ஆத்மி கெஜ்ரிவால்

This entry is part 7 of 23 in the series 15 பெப்ருவரி 2015

kejriwalடெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஜெயித்திருக்கிறது. ஏறத்தாழ அனைத்து பாஜக எதிர்ப்பு வாக்குக்களையும், ஆம் ஆத்மி கட்சி ஆதரவு வாக்குக்களையும் இணைத்து அசுர வாக்கு பலத்துடன் வெற்றி பெற்றிருக்கிறது. 32 சதவீத வாக்குக்களை பாஜக தக்கவைத்துகொண்டிருக்கிறது. ஆனால், சுமார் 20 சதவீத வாக்குக்களை காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சியிடம் இழந்திருக்கிறது. இதனால், 55 சதவீத வாக்குக்களை ஆம் ஆத்மி கட்சி பெற்றிருக்கிறது.

இந்திய நடுத்தர வர்க்கத்தின் அரசியல்சாரா நிலைப்பாடுகள், கொள்கையில்லா நிலைப்பாடுகளின் இன்றைய அரசியல் உருவாக்கமே ஆம் ஆத்மி கட்சி. இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் அதன் மறு உருவாக்கங்களின் ஊழல் மண்டிய ஆட்சி, அரசு அதிகாரிகளின் ஆணவப்போக்கும், மெத்தன போக்கும் என்று பல மொத்துக்களை பட்ட மத்திய தர வர்க்கத்தின் இன்றைய கனவு ஆதர்சமாக ஆம் ஆத்மி கட்சி உருவாகியிருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியின் ஏகபோக தலைவராக இருக்கும் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் சேவை செய்யும் எந்த வித ஆசையும் கிடையாது என்பது அவர் பதவியேற்பின் போதே நன்றாக தெரிந்திருக்கிறது. டெல்லியை முழுவதும் சிசோதியா என்ற துணை முதன்மந்திரியிடம் கொடுத்துவிட்டு பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஆம் ஆத்மியை வலுப்படுத்துவதும், காங்கிரஸ் இழந்துகொண்டிருக்கும் எதிர்கட்சி இடத்தை ஆம் ஆத்மி கைப்பற்றுவதுமே அவரது குறிக்கோள்கள் என்பது தெளிவாகவே உணர்த்தப்பட்டிருக்கிறது. அடுத்தபடி கேரளா, மேற்கு வங்காளம், பிகாரில் நடக்கப்போகும் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய அளவில் ஈடுபடும் என்று கருதலாம்.

ஏற்கெனவே ஆம் ஆத்மி கட்சியால் செய்யமுடியாத வாக்குறுதிகளுக்கு மத்திய அரசின் மீது பழி போடுவது என்பது நிரந்தர கொள்கை நிலைப்பாடாக ஆகிவிட்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி மந்திரிகளில் யாருமே பெண்கள் இல்லை என்பது ஆம் ஆத்மி ஆதரவாளர்களுக்கே உறுத்தலான விஷயமாக ஆகியிருக்கிறது. எல்லா அரசியல்வாதிகளையும் போல அர்விந்த கெஜ்ரிவாலும் பேசி வருகிறார் என்பதும் ஆம் ஆத்மி ஆதரவாளர்களுக்கு உறுத்தலான விசயமாக இல்லை. 8 மாதத்தில் மோடி ஒன்றும் சாதிக்கவில்லை என்று பேசியவர் தன்னிடம் யாரும் காலக்கெடு வைத்து எதுவும் கேட்கக்கூடாது என்று பேசுகிறார்!
kejriwal
காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் சமீபத்தில், காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற எதிர்காலத்துக்காக ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய கட்சியே ஆம் ஆத்மி கட்சி என்று பேசியிருக்கிறார். அதனை ஆம் ஆத்மி கட்சியினர் கண்டுகொள்ளவில்லை என்றாலும், தில்லியில் சுமார் 1 வருடத்துக்கு முன்னால் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் இன்று 9 சதவீத வாக்குக்களை மட்டுமே பெற்று காலாவதி ஆகியிருப்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு இடி போல இறங்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. காங்கிரஸ் இந்தியா முழுவதும் சிதைந்துகொண்டு வருகிறது. மேற்குவங்காளத்தில் சிபிஎம், காங்கிரஸ் என்று இரண்டு கட்சிகள் மட்டுமே முக்கிய கட்சிகளாக இருந்த காலம் மாறி, இன்று திரினாமூல், சிபிஎம் என்று மாறி, இன்று திரினாமூல், பாஜக என்று ஆகிவிடும் போல உள்ளது. காங்கிரஸ் வெறும் 8 சதவீத வாக்குக்களை மட்டுமே பெறும் உதிரி கட்சியாக மேற்கு வங்காளத்தில் ஆகியிருக்கிறது.

மஹாராஷ்டிரத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் பிறகு சரத்பவார் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆளும் கட்சியாகவே நீடித்தாலும், இந்த தேர்தலில் பாஜக முன்னிலை பெற்று பிறகு இரண்டாம் கட்சியாக சிவசேனா கட்சி உருவாகி, மூன்றாம் கட்சியாக காங்கிரஸ் வெறும் 18 சதவீத வாக்குக்களுடன் தள்ளப்பட்டிருக்கிறது. இது மஹாராஷ்டிரத்தில் காங்கிரஸின் வீழ்ச்சியை வேகப்படுத்தும்.

ஹரியானா தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து மூன்றாம் இடத்தை அடைந்திருக்கிறது. முதலாவதாக பாஜகவும் இரண்டாவதாக சவுதாலா நடத்தும் லோக்தள் கட்சியும் வந்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் நிலையை சொல்லவே வேண்டியதில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் காங்கிரஸ் தன் கொள்கைகளாக கொண்ட மதசார்பற்ற தன்மை, சோசலிஸம் ஆகியவற்றுக்கு இருக்கும் மார்க்கெட்டை கைப்பற்ற அகில இந்திய அளவில் ஆம் ஆத்மி கட்சி முயற்சி செய்யும். காங்கிரஸ் முக்கிய எதிர்கட்சியாக இருக்கும் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு நிச்சயமான வருங்காலம் உண்டு.

ஆகவே அர்விந்த் கெஜ்ரிவால் தனது நேரத்தை இப்படி மற்ற மாநிலங்களில் செலவழிக்கவே விரும்புவார். வரும். என்னதான் ஒரு பொறுப்பும் அற்ற முதல்வராக அர்விந்த் கெஜ்ரிவால் இருந்தாலும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி செய்யாத செய்யமுடியாத வாக்குறுதிகளுக்கு பழி நிச்சயம் அர்விந்த் கெஜ்ரிவால் மீதுதான் வரும்.

அவரது சில வாக்குறுதிகளை இந்த ஐந்து வருட காலத்தில் ஒரு சிலவற்றை முடித்தாலே பாராட்ட வேண்டும். அந்த வாக்குறுதிகளை விட, டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக ஆனாலே அது மிக முக்கியமான சாதனை ஆகும்.

புது ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்கள்.

அஸ்ஸாம் உள்ளாட்சி தேர்தல்களிலும் அருணாச்சல பிரதேச உள்ளாட்சி தேர்தல்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் இருந்த இடத்தை பாஜக மற்ற மாநிலங்களிலும் தொடர்ந்து கைப்பற்றி வருகிறது என்பதன் அறிகுறி இது. மேற்கு வங்காளத்தில் போட்டி சிபிஎம்முக்கும் திரினாமூல் காங்கிரஸுக்கும் என்று இருந்த நிலை மாறி, இப்போது பாஜகவுக்கும் திரினாமூல் கட்சிக்கும்தான் என்று ஆகிவருவது சிபிஎம் கட்சியை தீவிர சிந்தனைக்கு ஆளாக்கியிருக்கிறது.

இதனால், சிபிஎம் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் மேற்கு வங்காளத்தில் கூட்டணி சேரலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படி ஒரு கூட்டணி உருவானால், அது கேரளாவில் அரசியலையும் பாதிக்கும். மேற்கு வங்காளத்தில் கூட்டணியில் இருந்துகொண்டே கேரளாவில் எதிரெதிர் அணியில் இருப்பது காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் உறுத்தலை ஏற்படுத்தாது என்றாலும், அது பொது மக்களுக்கும், எதிர்கட்சிக்காரர்களுக்கும் அவலாகத்தான் முடியும்.

Series Navigationகாதலர் நாள்தன்னை வாழ்த்துவோம் வாஎன்னை அறிந்தால் – திரைப்பட விமர்சனம்
author

சின்னக்கருப்பன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது அந்த மாநில மக்களின் அரசியல் விழிப்புணர்வைக் காட்டுகிறது. மோடி அலை அங்கு எடுபடவில்லை. அங்கு படித்தநடுத்தர நடுத்தர மக்கள் அதிகம் என்று கருதுகிறேன். அதனால்தான் ஊழல் அரசியலை அவர்கள் வெறுத்து ஒதுக்கியுள்ளனர். அங்கு சினிமா மோகமும் இல்லை. அதனால்தான் கதாநாயகர் வழிபாடு ( Hero Worship ) இல்லை. அதன் தலைவர் தமது பொறுப்பை உதவி முதல்வரிடம் தந்துவிட்டு பஞ்சாப், கேரளா, மேற்கு வங்காளம், பீகார் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளது, அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. வேறு யாரும் அவ்வாறு பதவியை நம்பிக்கையுடன் அடுத்தவரிடம் தர மாட்டார்கள். ( தமிழ் நாடு நல்ல உதாரணம். அங்கு சிறை தண்டனை பெற்றாலும் முதல்வர் தற்காலிகமானவர்தான் என்ற நிலை ) இதுபோன்ற ஊழலை எதிர்க்கும் ஆம் ஆத்மி கட்சி ஊழல் மலிந்துள்ள மற்ற மாநிலங்களையும் ( தமிழ் நாடு தவிர்த்து. அங்கு இரண்டு கட்சிகளைத் தவிர்த்து வேறு கட்சிகள் வரும் வாய்ப்புகள் குறைவு. ) தங்களின் கைவசம் கொண்டுவந்தால் நாட்டுக்கு நல்லது. இந்திய அரசியல் நிலவரம் பற்றி திண்ணையில் கண்ணோட்டம் எழுதிவரும் திரு. சின்னக்கருப்பன் அவர்களுக்கு வாழ்த்துகள்….டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *