ஆழிப்பேரலை

This entry is part 21 of 28 in the series 10 மார்ச் 2013

 

– சிறுகதை

 

கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களின் துறைமுக நகரமாம் மாமல்லபுர கடற்கரை, சூரியன் மேற்கே பழுத்த கோவைப்பழ வெளிச்சக்கீற்றை தன் அன்றைய நாளின் இறுதி மூச்சாய் விட்டுக் கொண்டிருந்தது. அந்திசாயும் இளம்மாலை நேரமானதால் பொருட்கள் கப்பலில் ஏற்றப்படுவதும் வந்த கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கப்படுவதுமாக துறைமுகம் மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட..  அயல் தேச வியாபாரிகள் தாங்கள் தங்கள் தேசத்திலிருந்து கொணர்ந்த வைரம், ரத்தினம், வைடூரியம், கோமேதகம், பவளம், மரகதம் மற்றும் விலை உயர்ந்த கற்களிலான அலங்கார அணிகலன்களையும் வாசனை திரவியங்களையும் பல வேலைப்பாடுகளுடன் கூடிய பாத்திரங்களையும், அரேபிய வியாபாரிகளோ உயர்ஜாதி புரவிகளையும், பேரீச்ச பழங்களையும்  உள்ளூர் வியாபர்களிடம் பண்டமாற்று முறையில் அதற்கு ஈடாக ஏலக்காய், மிளகு, வசம்பு, இலவங்கம், மிளகாய் மற்றும் பல வாசனை பொருட்களையும் அழகிய சிற்பங்களையும் கற்சிலைகளையும் தங்கம், வெள்ளி, முத்து, பவழமாகவோ அணிகலனமாகவோ மாற்றிக்கொண்டிருந்தனர். மாமல்லபுரத்தில் செல்வம் கோலோச்சிக்கொண்டிருந்த காலம் அது.. மாலை நேரங்களில் அந்நகர மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கூடி கடற்கரையில் சித்ரான்னம் சாப்பிடுவதும்… அலையில் அடித்து வரும் சோழிகளை சிறுவர்கள் சேகரித்து அதை அடுத்த குழந்தை மீது வீசி விளையாடுவதும்.. சிறுவர்களும் சிறுமிகளும் ஒருவருக்கொருவர் மணற்பரப்பில் சண்டை இட்டு உருளுவதை அவரவர் பெற்றோர்கள் வேடிக்கை பார்த்து மகிழ்வதும்… வாலிபவயது ஆண்களோ தங்கள் காதலியின் மீது கடற்கரை நண்டுகளை விட்டு அவர்கள் அலறும் சத்தத்தைக் கண்டு ரசிப்பதும்… பெண்கள் தாங்களும் ஆண்களுக்கு சற்றும் சலைத்தவரில்லை என்பதை நிரூபிப்பது போல ஆண்கள் மீது அலையின் நுரையை இரு கைகளிலும் அள்ளி அவர்களுக்கு தெரியாமல் தலை மீது ஊற்றச் செய்து உடலை நனைத்து கைகொட்டிச் சிரிப்பதும் அன்றாடம் நடக்கும் வேடிக்கை நிகழ்ச்சிகள். அன்று சித்ரா பௌணர்மி, நிலவுக் காதலி அலைக் காதலன் மீது தன் ஒளியை பாய்ச்சி அதனை வெள்ளிப் பாளங்களாய் கடலில் மிதக்க விட்டுக்கொண்டிருக்க, அந்த அலையோ சில்லென்று வீசும் காற்றை தன்னில் வாங்கி  நிலவுக் காதலியை பிடிக்க முடியாத கோபத்தில் ‘ஹோ’வென்ற பேரிரைச்சலை பெருமூச்சாய் விட்டுக்கொண்டிருந்தது. அந்த அலையின் ஓசையையும் மீறி உளியின் ‘ணங்’,’ணங்’ ஓசை கேட்கிறதென்றால் சிற்பிகள் பாறையில் சிலையை செதுக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று கொள்ளலாம். ஆனால் அந்த இரவு வேலையில் எங்கெல்லாம் உளியின் ஓசை கேட்கிறதோ அங்கெல்லாம் கண்டிப்பாக அந்த பித்தன் இருக்க வேண்டும் அலையின் ஓசையும் சில்லென்று வீசும் உப்புக்காற்றையும் பொருட்படுத்தாமல் கற்சிலையை சிரத்தையாய் செதுக்கிக்கொண்டிருப்பான் அவன். கண்கள் பஞ்சடைந்து உடல் மெலிந்து தலை முழுவதும் கடல்  நுரையை தலையில் கொட்டியபடி நரை படர்ந்து வியாபித்திருப்பதும் மோவாய் முதல் தொடை வரை நீண்ட தாடியும் பார்ப்பதற்கு பரதேசியாய் காணப்பட்டாலும் உடல் செதுக்கிய பாறையாய் உறுதியுடன் இருப்பது மட்டும் யாருக்கும் எளிதில் புரியாத அதிசியம். தள்ளாத வயதிலும் கையில் உளியுடன் தான் காணும் பாறையில் எல்லாம் தனக்கு தோன்றிய உருவங்களை நடு ஜாமம் வரை செதுக்கிக் கொண்டு… கிடைப்பதை உண்டு நகரமெல்லாம் சுற்றி வந்த போதிலும் அவன் உறங்குவதற்கு மட்டும் சரியாக இளவஞ்சியின் வீட்டிற்குச் சென்று விடுவான். அன்று அவனது கால்கள் மணலில் சிக்கி தள்ளாடுவதையும், சிக்கிய கால்களை பெரும் பிராயத்தனம் பட்டு வெளியே எடுத்து மெல்ல மெல்ல இளவஞ்சியின் குடிலை நோக்கி முன்னேறியபடி நடக்க… அவன் மனமோ பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது.

 

’எத்தனை முறை கூறியிருக்கிறேன்… இந்த நடுசாமத்தில் வரவேண்டாம் என்று…’ ஊருக்கு ஒதுக்குபுறமாய் அமைந்த குடில் அது… வெண்ணிலவு தலைக்கு நேர் வரும் நள்ளிரவு வேளை.. உளி கொண்டு அடித்த உடம்பின் வலியை சோமபாணம் உண்டு மயங்கிய நிலையில் மணல்தரையில் கால்கள் கோலம் போட இளவஞ்சியின் குடிலை வந்தியசேனன் அடைந்தபொழுது அவள் கேட்ட முதல் கேள்வி அவனை மேலும் தடுமாற வைத்தது..

 

இளவஞ்சி… பேரரசு முதல் பெருந்தனக்காரர்கள் வரை விரும்பும் போகப்பொருள்..  அலைமகள் அள்ளித்தந்த விலைமகள்.. ஆம்… சில ஆண்டுகள் முன் கடலில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.. அந்தப் பெருமழையில் கடலில் சென்ற படகுகள் கவிழ்ந்து அதில் பயணித்த அனைவரும் மூழ்க… ஒரு பெட்டியில் பத்திரமாக அலையில் அடித்து கரை சேர்ந்த அந்த மழலையை  ‘இளவஞ்சி’ என்று நாமம் சூட்டிய வளர்த்தவள் ஊரின் நாட்டியக்காரி. மழலையாய் வந்தவள் முலை வளரும் பருவம் வந்தவுடன் முறைப்படி கோவிலில் பொட்டு கட்டி விடப்பட.. அந்த ஊரின் தேவதாசியானவள்.

 

’என்ன செய்வது… நீயும் அனாதை… நானும் அனாதை… பகல் முழுவதும் பாறையை செதுக்குவதும்.. மாலை வந்தால் வலியை மறக்க மதுவை அருந்துவதும் இரவு வந்தால் இன்பம் பெற உன்னை சந்திப்பதும் முறை மாறாமல் நடப்பதுதானே…’

 

’அதற்குத்தான் கூறினேன்.. ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துகொள் என்று’

 

’அது ஏன் நீயாக இருக்கக் கூடாதா…’

 

’என்ன குடித்து விட்டு பிதற்றுகிறாய்… நீ வாழவேண்டியவன்… வாலிபன்… நானோ நாட்டியக்காரி… பகலில் நாட்டியமாடி இரவில் ஊருக்கே விருந்து படைப்பவள்… உனக்கு மட்டும் எப்பொழுதும் தனியாக விருந்து படைத்தல் என்பது நடவாத காரியம்… அதை ஊரும் ஏற்காது… அது மட்டுமல்ல நீயோ இளையவன்.. நானோ மூத்தவள்…‘

 

’மெய்ப்பசிக்கு தெரிகிறதா வயதும் ஆசையும்…’

 

’அப்படிச் சொல்லவில்லை….’

 

’பின்னர் எப்படி…. பெருந்தனக்காரர்களை மட்டுமே விரும்பும் நீ.. என்னை மட்டும் எப்படி விரும்பினாய்.. உன்னுடன் சேர்த்துக்கொண்டாய்..’

 

’அது வந்து….’

 

’சொல்… ஏன் தடுமாறுகிறாய்..’

 

’மற்றவர்களிடமிருந்து வேண்டிய பொருள் மட்டும்தான் கிடைக்கிறது… பாசம்… நேசம்.. ம்ம்ம்.. அது உன்னுடன் பழகுவதில் மட்டும் தான் கிடைக்கிறது… அன்பும் கனிவான பேச்சும் இனிமையான நட்பும் என்னை உன்னுடன் பகிர்வதில் மனதிருப்தியும் கிடைக்கிறது… இது தான் என்னை உன்னிடம் இணைத்தன் ரகசியம்.. புரிகிறதா.. அதற்கென்று இந்த உறவை அடிக்கடி தொடர்வது சரியென்று கூறமாட்டேன்.. உனக்கென்று ஒருத்தி கண்டிப்பாக பிறந்து இருப்பாள்… அவளை வாழ்க்கை துணையாக ஏற்று… இல்வாழ்வை நல்லறமாய் நடத்து…’ அந்த அறையில் உள்ளே காற்றில் அசைந்த நெய்விளக்கின் சுடரொளி அவளின் பேச்சை ஆமோத்திப்பதாய் தன் தலையை அசைக்க, சொன்னவளின் நெஞ்சில் தன் நெஞ்சம் பதித்து…  மெய்மறந்து பஞ்சணையில் கள்ளை உண்ணும் வண்டாய் அவள் மேனியில் மேல் மேவும் வேளையில்… கண்கள் கூசும் காட்சியைக் கண்டு வீசிய காற்றில் நெய்விளக்கு தன் ஒளியை அணைத்துக் கொண்டது அவர்களைப் போல. முயக்க நிலை முடிந்து மயக்க நிலையில் ஒருவரை ஒருவர் தயக்கத்துடன் ஒட்டிக்கொண்டிருந்த அந்த கணப்பொழுதில்… வாசலின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அந்த குகையின் இருளை தீப்பந்தங்கள் விரட்டிக் கொண்டிருக்க… ஒரு உயர்ந்த பாறையில் அமர்ந்திருந்த தலைமைச் சிற்பி விக்கிரமவர்மர் தனக்கு அடுத்த நிலையுள்ள  நான்கு தலைமை சிற்பிகளும் வந்து விட்டார்களா என்று அருகில் இருந்த தன் உதவியாளனைக் கேட்க..

 

’வந்தியசேனன் மட்டும் வரவேண்டும்.. ஆள் அனுப்பி இருக்கிறேன் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவான்… நீங்கள் கூற வேண்டியதை கூற ஆரம்பியுங்கள்..’

 

’அவனும் வரட்டும்.. எங்கே போய்விடப்போகிறான்.. அந்த தாசி வீட்டில் தான் இருப்பான்… பாவம்.. அனாதை.. மிகச் சிறந்த திறமைசாலி… எதற்கு இப்படி கள்ளுண்ணுவதிலும் காமகளியாட்டத்திலும் நேரத்தை வீணடிக்கிறானோ… அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைத்து விட்டால் திருந்தி விடுவான்…’

 

’நீங்கள் தான் அப்படி கூறுகிறீர்கள்.. ஆனால் கள்ளுண்ணுவதும்… கன்னியை ஆள்வதும் போதுமென்று நினைத்து விட்டானோ என்னவோ…’ மூத்த சிற்பி உரைக்க…

 

’கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்…’ மற்றொரு சிற்பி அவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்.

 

’இவன் கல்லுடனே காலத்தை செலவழித்து உளியாய் மாறியவனாயிற்றே… இரும்பை கரைக்க ரசாவாதம் தெரிந்த சித்தரைத்தான் வரவழைக்க வேண்டும்’  தான் ஏதோ விகடமாய் கூறியதாக நினைத்து கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தார் மூத்த சிற்பி மறுபடியும்.

 

’என்ன ஒரே சிரிப்பு… எனக்கும் சொன்னால் நானும் ரசிப்பேன் இல்லையா…’ கூறியவாரே உள்ளே நுழைந்தான் வந்தியசேனன்.

 

’வா.. வந்தியசேனா… அப்படி அந்த பாறையில் அமர். உனக்காகத்தான் காத்திருந்தோம்.. இன்னும் ஆலோசனையை துவங்கவில்லை… ‘

 

’சொல்லுங்கள் தலைமை சிற்பியாரே…. விடிவெள்ளி தோன்றும் வேலையில் பிடிகொண்டு அழைத்து வரக் காரணமென்ன…’

 

’கூறுகிறேன்… அதற்கு முன் நாம் கட்டிக்கொண்டு வரும் கடற்கரைக்கோவில் வேலை எந்த நிலையில் இருக்கிறது…’

 

’இன்னும்  ஒரு மண்டலத்தில் முடிந்துவிடும்… சுற்று மதிற்சுவர் வேலை, கோபுர சிற்ப வேலை மற்றும் கோவிலின் கருவறையின் கடவுள் சிலை உருவாக்கம் மட்டும் முடித்தாக வேண்டியுள்ளது…’ மூத்த சிற்பி சொல்லச் சொல்ல ஆழ்ந்து கேட்ட விக்கிரமவர்மர்,

 

’இன்று மாலை காஞ்சியிலிருந்து அரசர் ஒரு சேதி அனுப்பியிருந்தார்… வரும் சித்ரா பௌர்ணமியில் கோவிலின் குடமுழுக்கு நடத்த முடிவு செய்திருப்பதை..  அதற்கு இன்னும் சரியாக இரண்டு திங்கள் தான் உள்ளது.. எனினும் கடைசி நாள் வரை வேலையை தள்ளிச் செல்வது உசிதம் அல்ல… அதற்குள் எப்படியாவது முடித்து விடவேண்டும்.. என்ன புரிகிறதா…’

 

’அதற்கு ஆட்கள் நிறைய தேவைப்படுமே…’

 

’தேவையான ஆட்களை வெளி ஊர்களிலிருந்து வரவழைத்துக் கொள்வோம்… இப்பொழுது அதுவல்ல பிரச்சனை… எனக்கு ஒரு மற்றுமொரு ரகசிய செய்தி கிடைத்தது..’

 

’என்ன…’ அனைவரும் ஆச்சிரிய முகத்துடன் அவரைப் பார்க்க… வரும் அமாவாசையன்று அரசர் ரகசிய விஜயமாய் இங்கே வருவதாக செய்தி அறிந்தேன்.. எப்படியும் சில நாட்கள் இங்கே தங்க உத்தேசிட்டு இருப்பதாக கேள்விபட்டேன்..’

 

’வரட்டுமே… அதற்கும்  நாம் செய்யும் வேலைக்கும் என்ன சம்பந்தம்..’

 

’சம்பந்தம் இல்லாமல் இதனை சொல்வேனா… அப்படி தங்கும் நாட்களில்… ஏதாவது ஒரு நாளாவது கடற்கரை கோவிலில் நடைபெறும் வேலையை பார்வை இட வராமலிருப்பாரா என்ன… அதனால் இன்னும் அரைத்திங்களில் அதாவது வர இருக்கும்.அமாவாசைக்குள்… நாம் முடிந்த அளவு வேலையில் தீவிரம் காட்ட வேண்டும்… அதற்கு இரவும் பகலும் பாராமல் உழைக்க வேண்டும்… இந்தச் செய்தியைக் கூறவே உங்களை அழைத்தேன்… ‘ என்ன நான் சொல்வது சரிதானே என்பது போல அவர் அனைவரையும் ஒரு பார்வை பார்க்க…

 

’கண்டிப்பாக… வேலையை ஆளுக்கு சமமாக பிரித்து  நேரம் காலம் இல்லாமல் உழைத்தால் போதும்… முடித்து விடலாம்..’ வந்தியசேனன் சொல்ல.. அவன் சொல்லை அனைவரும் ஆமோதித்து பிரிந்தனர். துள்ளி வரும் கடலலையை தள்ளி நின்று பார்ப்பதும்.. தூர நகர்ந்தபின் ஓடிப் போய் கால்களை நனைப்பதுமாய் அந்த இரண்டு கன்னிகள் கடற்கரையையில் விளையடிக்கொண்டிருந்தனர்.

 

’எழுனி… போதும் ஓடியாடியது… கால்கள் வலிக்கின்றன… வா வீட்டுக்குச் செல்வோம்.. அலைகள் பெரிதாக வருகின்றன.. ஆபத்தை விலைக்கு வாங்காதே” அவளுடன் வந்த தோழி சொல்ல… எதையும் காதில் வாங்காமல் அவள் அலைகளை ரசித்தப்படி தண்டை அணிந்த கால்கள் மணலில் செருக கெண்டை மீன் கண்கள் சுழல ஈர மண்ணில் ஆசை தீர விளையாடி மகிழ்ந்தாள் அவள். எழுனி… காஞ்சியை ஆளும்  இரண்டாம் நரசிம்மவர்மரின் கப்பல்படைத் தலைவன் தழும்பனின் ஒரே செல்ல மகள், முட்டி மோதி திமிரும் பெண்மையை மூடி மறைத்தும், கெட்டியாக கைவைத்து மறைத்தும், விட்டு விட்டு வீசும் கடற்காற்றில் தறிகெட்டு கலைகிறது அவள் கட்டியிருந்த சேலை. பருவம் வளர்ந்து பார்ப்பவர்களின் புருவம் உயர்த்தும்படி உச்சி முதல் உள்ளங்கால் வரை மெச்சும் அழகி.. சுருங்கச் சொன்னால் பேரழகி.

 

’நான் சொல்வது எதுவும் காதில் விழவில்லையா… ‘

 

’ஆமாம் விழத்தான் செய்கிறது.. இந்த இரவு வேளையில் எங்கிருந்தோ உளியின் ஓசை கேட்கிறதே… எங்கே என்று கவனித்தாயா..’

 

’கேட்டேன்.. அந்த பாறை இடுக்கிலிருந்துதான் கேட்கிறது..’

 

’இந்த வேலையில் யார் கல்லைச் செதுக்குவது..’

 

’அது யாராகவேணும் இருந்துவிட்டு போகட்டும்.. நமக்கெதற்கு வா… வீட்டிற்குப் போய்விடலாம்..’

 

’இரு… சென்றுதான் போய் பார்ப்போமே..’

 

’வேண்டாம் இந்த விவரீதம் எழுனி.. சொல்வதைக் கேள்..’ அவள் சொல்லச் சொல்ல கேளாமல் அந்தப் பாறையின் அருகில் செல்ல.. அங்கு தீப்பந்த ஒளியில் வந்தியசேனன் கோவிலின் கருவறை சிலையை வடிக்க பாறையை வெட்டியபடி இருந்தான், அவனின் கருத்த உருவமும் கல்லில் உளி கொண்டு செதுக்கும் கைகளின் தசைச் திரளும் உடம்பில் வழியும் வேர்வையும் தீப ஓளியில் மின்ன.. அப்படி ஒரு இளைஞனை எழுனி தன் வாழ்நாளிலே காணாததைப் போல காண.. இருட்டில் எரியும் தீப்பந்த வாசனையும் மீறி அவர்களின் வளையோசையும் தலையில் சூடிய மலரின் வாசமும் உளியின் வேகத்தைக் குறைக்கச் செய்தது… தலையை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தவன்..

 

’யாரது… ‘ உரத்த குரலில் அதட்ட..

 

’பார்த்து விட்டான்.. வா சென்று விடுவோம்…’ தோழி சொல்ல… ஓடும் வேளையில் பாறையின் விளிம்பில் எழுனியின் கைபட்டு கைவளைவி உடைந்து கையைக் கீற… அவளோ… ‘ஆ‘வென கத்த… அருகில் வந்த வந்தியசேனன் இரண்டு கன்னிகளை கண்டு திகைத்தான்.

 

’நீங்கள்…’ தோழி வாய் திறக்க…. அவளின் வாயை மூடிய எழுனி…

 

’நாங்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள்…. உறவினர் வீட்டிற்கு வந்துள்ளோம்… கடற்கரையைப் பார்க்க வந்தோம்… இருட்டி விட்டது… உங்களின் உளி சத்தம் கேட்டு உதவி கேட்கத்தான் வந்தோம்..’

 

’ஓ… இந்த இருட்டில் இனி தனியாக வரவேண்டாம்… இங்கு கயவர்கள் கள்ளுண்ண இரவில் வருவார்கள்.. சீக்கிரம் இடத்தை விட்டு நகருங்கள்..’

 

’வழி தெரியவில்லை… தாங்கள் நல்லவர் போலத் தெரிகிறது… வழித்துணையாக வந்தால் நல்லது..’

 

’ஆகட்டும்… முதலில் காயத்தைச் சுற்றி கட்டு போடுங்கள்… இரத்தம் வீணாகிறது…’ கிடைத்த பச்சிலைகளைக் கொண்டு காயத்துக்கு மருந்திட.. எழுனியோ அவனின் திடமான அங்கங்களின் அழகிலும், அடுத்தவர் நலம் காணும் சிரத்தையும் கண்டு மலைத்தாள்.. திளைத்தாள்… உணர்வை இழந்தாள்… உள்ளத்தை பறிகொடுத்தாள். அடி மேல் அடி வைத்தால் அம்மி நகருமோ இல்லையோ கற்பாறை மேல் படும் உளியின் அடி மேல் அடியால் அது தன் உருவமிழந்து சிலையின் வடிவைப் பெறும் என்பது சிற்பக் கலைஞர்களின் கூற்று. வந்தியசேனன் மிகவும் சிரத்தையாக அந்தச் சிலையை வடித்துக் கொண்டிருந்த மறு இரவில்…

 

’என்ன சிற்பியாரே…. சிலை இன்னும் முழுமைபெற எத்தனை இரவுகள் தேவைப்படும்…’ எழுனி கேட்கவும்..

 

’யார் அது…’

 

’அதற்குள் மறந்து விட்டீர்களா…’

 

’இல்லை இல்லை… நேற்று நடந்ததை இன்றே மறக்கும் அளவுக்கு வயதாகவில்லை… எங்கே உங்களின் வால் நட்சத்திரம்…’

 

’என்னது…’

 

’இரவில் தானே நட்சத்திரத்தைக் காண முடியும்… அதுவும் நீங்கள் நட்சத்திரம் என்றால் உங்கள் பின்னாடியே சுற்றித் திரியும் வால் அதான் உங்கள் தோழியைத்தான் அப்படி கேட்டேன்.. எப்பொழுதும் உங்கள் அருகில் இருப்பார்களே… இன்று எங்கே என்று..’

 

’ஓ… கல் உடைக்கும் சிற்பிக்கு கூட கொல் என்று சிரிக்க வைக்கும் சொல் பிறக்குமா என்ன..’

 

’ஏன்… கல்லுடன் பழகுவதால் எங்கள் மனமும் கல்லாகி விட்டாதா என்ன… ‘

 

’தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா.. ‘

 

’இல்லை..’

 

’ஓ… அதுதான்.. பகல் இரவு பாரமல் சிலையையே கொத்திக் கொண்டிருக்றீர்களோ…. மனைவி என்று ஒருத்தி இருந்தால் இப்படி இருக்கமாட்டீர் இல்லையா..’

 

’எப்படி…’

 

’இரவில் அதுவும் குளிர் காற்றில் இப்படி வேலை செய்தால்… எந்த மனைவிதான் அமைதியாய் இருப்பாள்…’ முழு நிலவு தேய்பிறையாக, பிறை நிலவு காதலோ முழு நிலவாய் மாறத் தொடங்கியது தொடர்ந்த நாட்களில். ஒரு இளம் மாலைப் பொழுதில்..

 

’எழுனி நான் சொல்வதைக் கேள்… உன் தகுதிக்கு அவன் உகந்தவன் அல்ல..’

 

’ஏன்… ஏழையை மணந்தாள் பாழ் ஆகிவிடுமா வாழ்க்கை…‘

 

’அவன் தாய் தந்தை அற்ற தனியாள்… நீ தரணி ஆளும் அரசனின் கப்பல்படைத்தளபதியின் மகள்… புரிந்து கொள்..’

 

’ஓ….’

 

’அது மட்டுமில்லை.. மற்றொரு காரணம் இருக்கிறது…’

 

’என்ன…’

 

’சொல்ல நா கூசுகிறது…’

 

’தொண்டை வரை வந்துவிட்டது முழுங்கி விடாமல் முழுவதையும் கொட்டி விடு..’

 

’அவன் ஊர் தாசியிடம் அடிக்கடி செல்வானாம்.. அதனால்..’

 

’அதனால் அவன் கெட்டவன்.. அப்படித்தானே சொல்கிறாய்…’

 

’ஆமாம்…’

 

’அரசன் முதல் ஆண்டி வரை ஆண்கள் செய்வதுதானே… இதில் அதிசியம் என்ன இருக்கிறது… தாசியிடம் செல்பவனும் சோமபாணம் அருந்துபவனும் கெட்டவன் என்றால்… உலகில் இருக்கும் அனைத்துப் பெண்களும் கன்னியாகவே காலம் தள்ள வேண்டியதுதான்..’

 

’தெரியாமல் நடந்தால் பராவாயில்லை… இங்கே தெரிந்து விட்டதே அவனின் அருகதை…’

 

’ஓ.. தெரியாமல் தவறு செய்யலாம்… தெரிந்து தவறு செய்யக் கூடாதா… அப்படித்தானே சொல்கிறாய்.. ஒன்று சொல்கிறேன்.. நீ சொன்னது அனைத்தையும் வந்தியசேனன் கூறிவிட்டான்.. அது அறியாத வயதில் புரியாமல் செய்தது… அன்பு காட்டவும் ஆதரவு தரவும் ஆட்கள் இல்லை… அவனுக்கு ஒரே ஆறுதல் அந்த இளவஞ்சி தான்… இனி தவறு செய்ய மாட்டான் என்று உறுதி அளித்திருக்கிறான் என்னிடம்..’

 

’காதல் அவ்வளவு தூரம் வளர்ந்துவிட்டதா…’ தோழி சொல்ல கன்னம் சிவந்தாள் எழுனி. காஞ்சி மன்னனின் ரகசிய வருகை படைத்தளபதிகள் மட்டுமே அறிந்த ரகசியமாய் காக்கப்பட… அரசர் தங்ககுவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார் மன்னரின் கிழக்கு கப்பல்படைத் தலைவனும் எழுனியின் தந்தையுமான தழும்பன். தேய்பிறை முடியும் நாளின் பின்னிரவில் மன்னன் தன் முக்கிய அரசு அதிகாரிகளுடன் ரகசிய வீட்டில் தங்கினான், படைத்தலைபதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்திவிட்டு ஓய்வாக தங்கி… பின்னர்… மாலையில் அரசு அதிகாரிகள் மற்றும் படைத்தளபதிகளின் குடும்பத்தாருடன் சற்று அளாவளாவிய பொழுதுதான் கவனித்தான் எழுனியை… அவளின் அழகில் மெய்மறந்தான்… மதி மயங்கினான்… தன்னை அவளிடம் பறிகொடுத்தான்… பின்னர் அவள் யார் எவர் என அறிந்து… தழும்பனை தனியாக அழைத்து வரச் சொன்னான்.. கட்டளைக்குப் பணிந்து அரசனின் அறைக்குச் சென்றான் தழும்பன்..

 

’’வாரும் தளபதியாரே….’

 

’மா மன்னர் வாழ்க… தாங்கள் அழைத்ததன் காரணம் அறிய விழைகிறேன்… வரவேற்பில் தவறா… பாதுகாப்பில் பிழையா…’

 

’அமருங்கள்… உங்களிடம் தனியாக ஆலோசனை நிகழ்த்த வேண்டும்…’

 

’கூறுங்கள் மன்னா…. செய்வதில் சித்தமாய் இருக்கிறேன்..’

 

’எழுனி தங்கள் மகளா…’

 

’ஆம் மன்னா…’ எழுனியின் அழகில் மயங்கினோம்… மதி இழந்தோம்… அவளை மணந்து கொள்ள விரும்புகிறோம்… என்ன கூறுகிறீர்கள்…‘

 

’மன்னா….’ அதிர்ச்சி அடைந்த தழும்பன் தன்னை அறியாமல் அலறிட..

 

’எழுனியை மணந்து காஞ்சிக்கு அழைத்துச் செல்கிறோம்… தங்களையும் போர்ப்படை அதிகாரியாக பதவி உயர்வு செய்கிறோம்‘

 

’மன்னா… அதிர்ச்சியில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை… இது என் பாக்கியம்..’

 

’நாளை அமாவாசை… நிச்சியம் செய்கிறோம்…. வரும் சித்ரா பௌர்ணமி அன்று திருமணம்‘ மன்னரிடம் விடைபெற்று மகளைப் பார்த்து மகிழ்ச்சியைப் பகிற சென்றான் எழும்பன்.

 

’அப்புறம்.. என்ன முடிவெடுத்தாய் வந்தியசேனா…’ கண்ணோடு கண் பட்டு கலந்தது முதல் காதலில் விழுந்தது வரை எழுனியுடன் தனக்கு ஏற்பட்ட  நெருக்கத்தையும் அனுபவத்தையும்…. கடந்த இரண்டு நாட்களாக அவள் வராதததையும் அதனால் தான் மன வேதனையில் விழுந்ததையும் கூறி முடித்தவன்… எப்படியோ அவளின் இருப்பிடத்தையும் பிறப்பையும் அறிந்தேன் அவள் தோழி மூலம். அவள் கப்பற்படைத்தலைவன் எழும்பனின் மகளாம்… அவளை அரசர் மணக்கப் போவதாகவும் அறிந்தேன்..  வாய் குழறியபடியே மனவேதனையில் சில நாட்களாக நிறுத்தி வைத்திருந்த மதுப்பழக்கத்தை எழுனியிடன் கொடுத்த உறுதியையும் மீறி அளவுக்கதிகாமாக குடித்துவிட்டு வந்து உளறியபொழுதுதான் இளவஞ்சி அவனைப் பார்த்து அப்படிக் கேட்டாள்.

 

’சொல்.. அப்புறம் என்ன முடிவெடுத்தாய்…’

 

’என்ன செய்வது… எழுனியும் கையறு நிலையில் அவதியுறுவதாகவும்… தன்னைச் சந்திக்க விரும்புவதாகவும்… பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தோழி மூலம் அறிந்தேன்..’

 

’அதற்காகவா அளவுக்கதிமாக குடிப்பது…’

 

’அவளை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்…  நீதான் ஒரு உபாயம் செய்ய வேண்டும்…’

 

’இது அரசர் சம்பந்தப்பட்டது… ஆபத்து மிக்க அதிகம்…. அவசரப்படவேண்டாம்.. உரிய நேரத்தில் உதவுகிறேன்..’

 

’இன்னும் இரண்டு நாட்களில் பௌர்ணமி.. அதற்குள்..’

 

’புரிகிறது உந்தன் வேதனை… எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது…’

 

’என்ன… சொல் இளவஞ்சி..’

 

’ஒரு கட்டுமரத்தை மட்டும் ஏற்பாடு செய்துகொள்… அவளை எப்படியாவது அழைத்து வந்துவிடுகிறேன்…   நீங்கள் இருவரும் தூர தேசத்திற்கு சென்றுவிடுங்கள்.. என்ன சரியா..’

 

’இளவஞ்சி இதை மட்டும்  நீ செய்தால்… உன்னை உயிர் இருக்கும் வரை நினைவில் கொள்வேன்..’

 

’உந்தன் நட்புக்கும்… உன்னால் எனக்கு கிடைக்கும் அன்புக்கும் மகிழ்ச்சிக்கும் முன் இந்த உதவி எம்மாத்திரம்… கவலைப்படாமல் சொன்னதை மட்டும் ஏற்பாடு செய்… எல்லாம் நல்லபடியாக நடக்கும்..’ விடிந்தால் பௌர்ணமி, ஊரே விழாக்கோலம் பூத்திருந்தது… கோவிலின் குடமுழக்கு வேலைகள் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, மறுபுறம் எழினிக்கு மருதாணி இடவும்… மணக்கோல அலங்காரங்களைச் செய்யவும்… இளவஞ்சி அவள் அறைக்குச் சென்றவள்….

 

’எழுனி எல்லாம் தெரியும் எனக்கு…. உனக்காக என் குடிலில் வந்தியசேனன் காத்துக் கொண்டிருக்கிறான்… உன் உடைகளை நான் அணிந்து கொள்கிறேன்… நான் எப்படியோ இங்கு சமாளித்துக் கொள்கிறேன்… உடனே அங்கு செல்’ உணர்ச்சிப் பெருக்கில் அவளை ஆரத்தழுவிய எழுனி…. அவள் சொற்படி கேட்டு… அங்கிருந்து நகர்ந்தாள். அந்த நடுசாம நேரத்தில் இளவஞ்சியின் குடிலில் எழுனியும், வந்தியசேன்னும் சந்திக்க… பிரிந்தவர்கள் கூடினால் பேச வார்த்தை வராமல் கண்களில் ஆனந்தக்கண்ணீர் சொரிய, உணர்ச்சி மேலீட்டால் இருவரும் தழவி உடுத்திருந்த ஆடை நழுவுவதை கூட கவனியாமல் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆடையாயினர், இருமனம் இணைந்தபின் திருமண நாடகம் எதற்கு என்பது போல அக்கணமே பிணைந்தனர், மீறிய உணர்ச்சிப் பெருக்கில் கூடிய இருவரும் களைப்பில் கண்ணயர… கோழி கூவுவதைக் கேட்டபிறகு தான் விழிப்பே வந்தது. இருவரும் களைந்த ஆடைகளை திருத்தி பிரயாணத்திற்கு கிளம்பத் தயாராயினர். பௌர்ணமி தினம் என்பதால் பனை மர உயர அலைகளை கடல் கடும் சீற்றத்துடன் வீசிக்கொண்டிருந்தது.  விடியும் காலைப்பொழுதை விடிவெள்ளி கிழக்கில் தோன்றி அறிவித்தது…. அசுர பலத்துடன் அந்த கட்டுமரத்தை கடலில் செலுத்தினான் வந்தியசேனன்… அருகில் எழுனி கருநீலக் கடலின் சீற்றத்திலும் குளிர் காற்றிலும் படபடக்கும் நெஞ்சின் பயத்திலும் உறைந்துபோய் அமர்ந்திருந்தாள். மகளைக் காணாமல் எழும்பன் தவிக்க… மறுபுறமோ அரசனுக்கு பதிலுரையாய் என்ன உரைப்பது என்று மனம் பேதலிக்க… இளவஞ்சியை அழைத்து விசாரிக்க.. அவள் எதையும் சொல்லாமல் மறைக்க… அவளின் குடிலில் ஆராய.. அங்கு எழுனியின் ஆடைகளில் கோர்த்த விலையுயர்ந்த கற்கள் சிதறி கிடப்படதைக் கண்டு வெகுண்டவன். இளவஞ்சியை மிரட்டி, சித்திரவதை செய்து நடந்தவற்றை அறிந்து தானே முன்னின்று தனக்கு மிக நெருக்கமான படை வீரர்களுடன் படகில் ஏறி எழுனியைத் தேட முற்பட்டான் எழும்பன். அதறக்குள் எப்படியோ தகவல் அரசனின் காதுக்குச் செல்ல… சினந்தவன்…வந்தியசேனனை உயிருடன் பிடித்து வருமாறு படைவீரர்களுக்குக் கட்டளையிட்டான். சித்ரா பௌர்ணமி நாள்… சந்திரன் அன்று நடைப்பெறப்போகும் மிகப்பெரிய அழிவைக் காணவோ என்னவோ பயந்து மேகப்பொதிதியில் மறைந்தபடியே கடலிருந்து தன் முகத்தை மேலே கொண்டு வந்தது. காலையில் மந்திரங்கள் ஒத, ஓமகுண்டம் வளர்த்து, மிக கோலாகமாக  குடமுழுக்கு விழா நடந்தது பொழுது….

 

’பிடித்து விட்டீர்களா… அவனை’ எழும்பனை பார்த்து மன்னன் விளம்ப..

 

’ஆம் மன்னா… தனி அறையில் அடைந்து வைத்துள்ளேன்’ தன் இருப்பிடத்திற்கு அவனை அழைத்து வரச்செய்து விசாரனை செய்தார் அரசர்.

 

’அவர்கள் இருவருக்கும் உதவிய இளவஞ்சி பெண் என்பதாலும் ஊரின் நாட்டியக்காரி என்பதாலும் மன்னித்து விடுதலை செய்தார் அரசர். அடுத்து வந்தியசேனனைப் பார்த்து அமைச்சர்…

 

’அரசருக்கு நிச்சியக்கபட்ட பெண்ணை கவர்ந்து சென்று இருக்கிறாய்.. இது ராஜ துரோகம்… என்ன துணிச்சல் உனக்கு…’

 

’மன்னிக்க வேண்டும் அமைச்சரே.. நிச்சியப்படுவதற்கு முன்பே என்னால் உச்சரிக்கபட்டவள்..’

 

’அமைச்சரே இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்..’

 

’வழக்கம்போல் இவனை கடலில் கல்லைக் கட்டி வீசி எறியுங்கள்… ‘ அமைச்சர் சொல்ல…

 

’ஆம்.. அதுதான் சரியான தண்டனை.. கோவிலின் குடமுழுக்குக்கு உயிர்பலி செய்ததாக இருக்கட்டும்.. அதுவும் இன்றிரவே…. ‘ அரசர் கட்டளையிட்டார்…. அடுத்து…. எழுனியைக்காண் அவள் அறைக்குச் சென்றார்…

 

’உன்னை மணந்துகொண்டு அரசியாக்க நினைத்தேன்… நீ செய்த காரியத்திற்கு… உன்னை என் அந்தப்புரத்தின் ஆசை நாயகியாக இருக்க உத்திரவிடுகிறேன்… … இன்றிரவு என் பசிக்கு இரை நீ தான்.. யாரங்கே.. அழைத்துச் செல்லுங்கள் இவளை அந்தப்புரத்திற்கு’

 

’அது ஒருக்காலும் முடியாது… நான் எச்சில் பட்டவள்… உன் இச்சைக்கு அடிபணிய மாட்டேன்..’ அவள் திமிரத் திமிர… ‘அழைத்துச் செல்லுங்கள் பாதுகாப்பாக அவளை.’ உத்தவிரட்டார் அரசர், சிறகொடிந்த கிளியாய் தங்கக்கூண்டில் அடைபடப்போவதை உணந்த எழுனி…

 

’மன்னா… எனக்கு ஓரு ஒரு ஆசை… அதை மட்டும் நிறைவேற்றுங்கள்.. நான் உங்கள் சொற்படி கேட்கிறேன்..’

 

’என்ன சொல்..’

 

’வந்தியசேனனை கடலில் வீசும் முன் கடைசியாக ஒருமுறை அவர் முகத்தை காண அனுமதி கொடுங்கள் அது போதும்..’ யோசித்த அரசர்…

 

’சரி அனுப்பிவைக்கிறேன்….’ அரசன் தன் பரிவாரங்களுடன் மலையின் உச்சியிலிருந்து விளக்கொளியில் மின்னும் கடற்கரை கோவிலையும் அதன் ஊடே நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளையும் ரசித்தப்படி இருக்க.. அவன் மனமோ இரவு எழுனியுடன் நடைபெறப் போகும் உறவை நினைத்து நினைத்து களித்தது. சங்கலியால் கட்டி வைத்த பாறாங்கல்லில் கண்கள் சொருக வந்தியசேனன் தன் கடைசி பயணத்திற்கு பிரயாணமானான்… ஒரு பொழுது வாழ்க்கை வாழ்ந்து மறு பொழுது தன் கண் முன்னே காதலன் உயிர் பிரியப்போவதை தாங்கொணாமல் கன்னம் சிவக்க அழுது… கண்கள் வீங்கி… தலைமுடி கலைந்து… உயிரற்ற பிணமாய் வீற்றிருந்தாள் படகின் மறுபுறம் எழுனி.

 

’நடுக்கடல் வந்தாயிற்று… வீசி எறியுங்கள் அவனை….’ படகை ஓட்டிய தலைமைக் காவலன் சொல்ல… படகில் இருந்த பாறையோடு கட்டிய அவனை தூக்கி வீசும் சமயம்… ஓ என்று கதறியவாறு எழுனி அவன் மார்பில் விழுந்து கதற… அவளை தனியே பிரித்து.. அவனை கடலில் தள்ளும் சமயம்…. ‘வந்தியசேனா…’ ஆவேசம் கொண்டு எழுந்த எழுனி…. ஒரு தாவாய் அவனை கட்டித் தழுவியபடி தானும் கடலில் விழுந்து மூழ்கினாள்.

 

’எத்தனை முறை கூறியிருக்கிறேன்… இந்த நடுசாமத்தில் வராவேண்டாம் என்று…’

 

அந்தப் பெரியவர் இளவஞ்சியின் குடிலை அடைந்து கதவை தட்ட, திறந்த கதவில் ஊடே அந்த பெண் அவரைப் பார்த்து கூறவும் சரியாக இருந்தது.

 

‘பழகிவிட்டது…’

 

‘நேரத்தோடு வர வேண்டாமா… காத்திருந்து காத்திருந்து என் தூக்கம் தான் கலைகிறது.. மறுநாள் நான் நாட்டிய மாட சிறிது உறக்கம் அவசியம் இல்லையா…’

 

‘இனி எப்பொழுதும் இது மாதிரி நடவாமல் பார்த்துக்கொள்கிறேன்..’

 

‘இப்படி தாங்கள் கூறியதை கேட்டு கேட்டு எனக்கும் சலித்துவிட்டது..’

 

அவள் பொய்க்கோபத்துடன் அந்தப் பெரியவரை கைப்பிடித்து பஞ்சனையில் படுக்கவைத்து செல்ல… அவளின் தலையைக் கோதிய்வாறு….

 

‘இன்பவல்லி…. நாளை முதல் அந்தி சாயும் பொழுதே வந்து விடுகிறேன்… நிம்மதியாக படுத்துறங்கு…’

 

‘எந்த “நாளை” என்று சொல்ல மறந்து விட்டீரே.. அப்பா…’

 

அன்று வந்தியசேனன், எழுனியின் உடல்கள் மூழ்கிய பொழுது கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் வீசிய ஆழிப்பேரலை வந்தியசேனனை மட்டும் கடற்கறையில் ஒதுக்க… வந்தியசேனன், இளவஞ்சியால் காப்பற்றப்பட்டு  இன்பவல்லியைப் பெற்றபின் இளவஞ்சி இறக்க… அந்தக் குழந்தையை வந்தியசேனனே வளர்த்து பெரியவளாக்கி குலத்தொழிலான நாட்டியத்தையே கற்கவைத்து இறுதி மூச்சு வரை அவளுடனே வாழ்ந்து மடிந்தான்.

 

அன்று அந்தக் கடற்கரை கோவிலை ஆழிப்பேரலை தன்னுள் உள்வாங்கிக்கொள்ள இன்றும் அந்தக் கோவில் கடலில் மூழ்கியபடி மாமல்லபுரத்தின் தற்போதைய கடற்கரைக் கோவிலுக்கு சற்று தொலைவில் காணப்படுகிறது.

 

 

 

(முற்றும்)

Series Navigationவனசாட்சி அழைப்பிதழ்செவ்வாய்க்கிரகத்தின் நிலத்தின் கீழே பல பில்லியன் வருடங்களுக்கு முந்திய வெள்ளத்தின் தடயங்கள் கண்டுபிடிப்பு
author

ரிஷ்வன்

Similar Posts

Comments

  1. Avatar
    Sivasankar says:

    Very nice.

    You are getting better with each story. I never thought you will become an author one day :)

    Congratulations and keep it up.

    Sivasankar, Chicago.

Leave a Reply to Sivasankar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *