இடைவெளிகள் – 12: மண்ணும் மனிதர்களும் இடைவெளிகளும்

This entry is part 9 of 23 in the series 14 அக்டோபர் 2012

 

    நாட்டுக்கு நாடு, பாரம்பரியத்துக்குப் பாரம்பரியம் இடைவெளிகள் இருக்கின்றன. இரண்டு வேறுபட்ட மனோபாவத்தில், பாரம்பரியத்தில் வந்தவர்கள் ஒன்றாய் சேர்ந்து வாழும் போது அதனால் ஏற்படுகிற தாக்கங்களை அசைபோட்டுப் பார்க்கிறது மனசு.

    சிங்கப்பூரில் சமீப காலத்தில் அதிகமாகப் பேசப்படுகிற ஒரு விசயம் இடைவெளி பற்றியதுதான். சிங்கப்பூரியர்களுக்கும், சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கும் உள்ள இடைவெளி பற்றியது. அவர்கள் ஒன்றாய்க் கலப்பதில்லை. காரணம் இருவேறுபட்ட மனோபாவங்களும், இருவேறுபட்ட விழுமியங்களும், இருவேறுபட்ட நம்பிக்கைகளும்தான். அவரவர் ஊறிய குட்டைகள் அப்படி. அந்தக் குட்டைகளின் குணம் மட்டைகளில் ஏறியிருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

     மனிதன் தாமரை இலையில் நீர்த்திவலைகள் போலே ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்ந்து விடுகிறான். அவனை வெளியே இழுத்து வந்து ஒட்டவைக்க எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் வர மறுக்கிறான். புதிய ஊடகங்கள் அவனைத் தங்களுக்குள் புதைத்துக் கொள்கின்றன. நேரம் அற்றுப் போனவனாக அலைகிறான். அப்படியே வந்தாலும் இவன் வந்தால் அவன் வருவதில்லை. அவன் வந்தால் இவன் வருவதில்லை. பழகுவது குறைந்து விட்டது. பாப்பையா சினிமாவில் சொன்னது போல யாராவது ‘பழகுங்க..பழகுங்க’ என்று சொல்ல வேண்டும் எனக்காத்திருக்கிறார்கள் மக்கள். வீடுகளில் கதவுகள் எப்போதும் சாத்தியே வைக்கப்படுகின்றன. அண்டைவீட்டுக்காரன் எப்படியிருப்பான்? அவன் பெயர் என்ன? எத்தனைபேரால் இதற்குச் சரியான விடையளிக்க முடியும்? 10 ஆண்டுகள் பக்கத்துப் பக்கத்து வீட்டில் வசித்தாலும் இன்னும் பக்கத்து வீட்டுக்காரனின் முகம் நினைவுக்கு வருவதில்லை என்ற நிலைதான் நெஞ்சில் முள்ளாய்க் குத்துகிறது. கடல் கடந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் முகம் தெரியாதவர்களிடம் எல்லாம் (FACE BOOK) முகநூலில் நண்பர்களாக இணைத்துக் கொண்டு அலைகிறான் மனிதன். மின் தூக்கியில் போகிற போது சகமனிதனைப் பார்த்து புன்னகைக்க மறந்து போகிறான்.

    இவற்றையெல்லாம் பார்க்கிற போது எனக்குத் தோன்றும் வேலைகளை எல்லாம் இருவர் இருவராகச் செய்கிற மாதிரிச் செய்து விட்டால் என்ன என்று. வேலையின் நிமித்தமாகவாவது இருவரும் பேசிக்கொள்வார்களே என்று நினைப்பேன். வயதானவர்கள் பேச்சுத்துணை இல்லாமல் அலைகிறார்கள். மனநோய் பீடிக்கிறது அவர்களை. சமீபத்தில் அதிகமாக ‘மன உளைச்சலா? எப்படிக்குறைக்கலாம்’ என்று வானொலியில் தினமும் அறிவிக்கிறார்கள். நிலைமை அந்த அளவுக்கு மோசமாகி விட்டது போலும்.

    சிங்கப்பூரில் அண்டை வீட்டுக்காரர்கள்தான் பழகமாட்டார்கள், அமைச்சர்கள், அமைப்புகளின் தலைவர்கள் அரசில் இருப்பவர்கள் அப்படியில்லை. நன்றாகப் பழகுவார்கள். எளிமையாக இருப்பார்கள். அவர்களை பொதுமக்கள் அணுகிப் பேசலாம்; ஒரு தடையும் இல்லை; கனிவோடு விசாரிப்பார்கள்; கைகுலுக்குவார்கள்; பாராட்டுவார்கள், ஒருமுறை பார்த்துப் பேசிவிட்டால் நன்றாய் ஞாபகம் வைத்திருப்பார்கள். இந்தியாவில் அரசியல் வாதிகள் அப்படியில்லை. அவர்கள் வந்தால் ஒரு பட்டாளமே உடன் வரும். யாரும் அவர்களை நெருங்க முடியாது. 100 கார்கள் அணிவகுக்கும். அவ்வளவு பந்தாவுடன் வலம் வருவார்கள். அவர்களுக்கும் மக்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கும்.

    இந்தப் பாரம்பரியத்தில் வந்த ஒருவன் சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்து வந்து வாழ்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் இங்குள்ள தலைவர்களோடு எளிதில் பழகுகிற வாய்ப்புக்கிடைக்கிற போது, பாராட்டப்படுகிறபோது, கைகுலுக்குகிறபோது, விசாசிக்கப்படுகிறபோது அவன் மனநிலை எப்படியிருக்கும். ஆரம்பத்தில் அவனுக்கு எல்லாம் புதிதாகத் தோன்றும். போகப்போக அவன் ஒரு கனவுலகில் வாழ ஆரம்பிப்பான். அவன் மனம் அவனை மிகைப்படுத்தப்பட்ட கற்பனா உலகில் தள்ளிவிடும். அதிலிருந்து மீள்தலும் ஒருநாள் அரங்கேறும். அதெல்லாம் மாயை என்று விட்டுவிலகி தன் உண்மை நிலை இதுவென நிலைகொள்ளும் ஒருநாள் நாளடைவில் வந்தடையும். அப்படி நிலைகொள்ளுகிற போது அவனுக்கு ‘இதுதான் நான்’ என்று புரியும். அதன் பிறகு அவன் செயல்பாடுகள் மாறும். மாறும் சமூகத்தில் அவனுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அவன் நிலை கொள்ளுவான். தெளிவான புரிதலோடு செயலாற்றுவான்.

    சமூகம் என்ற சொல்லுக்குப் புதிய விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் அந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. காரணம் இணையம். இணையம் வருவதற்கு முன் சமூக வாழ்க்கை என்பது இடம் சார்ந்த ஒன்றாக இருந்தது. இப்போது அதில் இருக்கிற இடம் விடுபட்டுப் போய் விட்டது. சைபர் ஸ்பேஸ்தான் களம். உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் எவரும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இன்றைய தொழில்நுட்பங்கள் வழிவகை செய்கின்றன. வேறுவேறு நாட்டுக்காரர்கள் இணைந்து குழுக்களாக செயல்படமுடியும். கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ள முடியும். அப்படி குழுக்களாகச் செயல் படுகிறவர்கள் அறிமுகம் அற்றவர்களாகவும் இருக்கலாம். இடைவெளிகள் இருக்கலாம். இவற்றையெல்லாம் கடந்து அவர்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள். வேற்றுமையில் எப்படி ஒற்றுமை காண்கிறார்கள் என்பதில்தான் வெற்றியிருக்கிறது. அது ஒரு ஆரோக்கியமான சிந்தனை வளர்ச்சியாக இருக்குமானால் நல்ல பலனைக் கொடுக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. காரணம் பலரின் பல வேறுபட்ட அனுபவங்களையும், கருத்துக்களையும் கொண்டு வந்து நடு மேசையில் போட்டு ஆராய்ச்சி செய்வது அங்கே சாத்தியமாகிறது.

    நல்லதும் கெட்டதும் ஆராயப்பட்டு ஆராயப்பட்டு, அனுபவப்பட்டு அனுபவப்பட்டு மனிதன் தன்னைச் செம்மைப்படுத்திக் கொண்டு முன்னே நகர்கிறான். வெற்றிகள் அவனுக்கு ஊக்கத்தைக் கொடுக்கின்றன. தோல்விகள் அவனுக்கு பாடங்களைப் பயிற்றுவிக்கின்றன. இடைவெளிகளால் இயக்கம் அவனுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. அதனால் இயக்கம் ஏற்படுத்துகிற இடைவெளிகள் இருந்துவிட்டுப்போகட்டுமே!

 

— முற்றும் —

Series Navigationநிழல்நம்பிக்கை ஒளி! (3)
author

இராம.வயிரவன்

Similar Posts

Comments

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *