இட்லிப்பாட்டி

author
0 minutes, 1 second Read
This entry is part 9 of 32 in the series 13 ஜனவரி 2013

குழல்வேந்தன்
ஆலயம் செல்வது சாலவும் நன்றாம். ஆனால் எனக்கோ? கோயில் வழிபாடு,பிரகாரம் சுற்றல், நேர்த்திக் கடன் செலுத்துதல் இவற்றிலெல்லாம் நம்பிக்கையோ ஈடுபாடோ இருப்பதில்லை. ஆனாலும் சடங்குகள், சம்பிர்தாயங்கள், பழக்க வழக்கங்கள் இவைகளிலிருந்து தம்மைக் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எனப் பறை சாற்றிக்கொள்ளும் பகுத்தறிவாளர்களால் கூட தப்பமுடிவதில்லை என்கிறபோது என்னால்மட்டும் எப்படி தப்பமுடியும்? அதிலும் நானோ? ஒருத்தர் இல்லைங்க; மத்தளம் மாதிரி ரெண்டு பேருக்குக் கட்டுப் பட்டவன். நம்ம பாரதி வேற ‘தையலரை உயர்வு செய்’ அப்படினு சொல்லி இருக்கப்போ! நான் மனைவியோ, தாயாரோ அழைத்து ”கோயிலுக்கு வரமுடியாது” என்று மறுத்துவிட்டால் அப்புறம் அவர்களது வா என்ற அம்பராத்தூணியிலிருந்து எரியப்படும் சொல்லம்பு ஆயுதத்திலிருந்து தப்புவது என்பது? ராமனோட அம்புக்கு தப்பமுடியா மாரீச சங்கடம் இல்லையா அது? இப்படி சொல்லரதால வாசிக்கும் நீங்க, தாய் மனைவி ரண்டு பேர்ல யாரு ராமன் யாரு ராவணன் அப்படின்னு எல்லாம் கேட்டு என்ன தயவு செஞ்சி கொழப்பிப்புடாதிங்க.

அப்பறம் என் நெலம அதப்பத்தி எல்லாம் நாம எதுக்கு இப்போ போயி பேசனும்? சரி, குடும்பத்தோடு கோயிலுக்கு போர எண்ணம் என் அம்மாவுக்கு அல்லது என் மனைவிக்கு இருந்து கோயிலுக்கு போலாம்னு கூப்பிட்டா மூக்கணாங்கயிறு குத்தப்பட்ட பசுவோட கண்ணுக்குட்டிமாதிரி நான் முரண்டு பிடிக்காமல் அவர்களைப் பின் தொடர்ந்து செல்வதத் தவிற வேறு என்னங்க வழி எனக்கு? என் அம்மாவும் மனைவியும் கோயில் விஷயத்தில் மாமியார் மருமகளாக நடந்துக்காம தாயும் மகளும் போலத்தான் நடந்துக்குவாங்க.

பொதுவா அவங்க திங்கள் வெள்ளி கிழமைகளிலும் பண்டிகை நாட்களிலும், குழந்தைகளின் பிறந்த நாள், பெரியோர்களின் திருமண நாள் உள்ளிட்ட பல நாட்களிலும் கோயிலுக்குப் போவதை வழக்கமாகக் கொள்வார்கள். அவர்களுக்கு வீட்டு வேலைகள் அதிகம் இருந்தாலோ, விருந்தினர் வருவதாக இருந்தாலோ,கொறஞ்ச நேரத்துக்குள்ள கோயிலுக்கு போய் வீட்டுக்கு திரும்பனும்னு நெனச்சாலோ டௌனுக்குள்ளயே இருக்குற சாலை விநாயகர் கோயில், அங்காளம்மன் கோயில், முருகன் கோயில், ஈஸ்வரன் கோயில், கோட்டைக்கோயில், சென்ராய பெருமாள் கோயில்னு போயிட்டு வரலான்னு என்ன கூப்பிடுவாங்க.

கூடுதலா நேரம் இருக்கிறமாதிரி தோணினாலோ, கொஞ்சம் உல்லாசமா போயிட்டு வரனும்னு நெனச்சாலோ அதியமான் கோட்டை காளியம்மன் கோயில், காலபைரவர் கோயில், அதகப்பாடி ராதா கிருஷ்ணன் கோயில், லட்சுமிநாராயணபெருமாள் கோயில், செக்காரப்பட்டி பச்சியம்மன் கோயில்னு வாடகை ஆட்டோவிலோ, சேர் ஆட்டோவிலோ, எப்போவாச்சும் வசதிப்பட்டா காரிலோ போலாம்னு கூப்புடுவாங்க.

என்னோட நெலம அப்போ? தஞ்சாவூரு தலையாட்டி பொம்மைனு படிக்கிற உங்களுக்கு நானு சொல்லாமலே புரியாதா என்ன?
எங்க வீடு டௌனுக்குள்ளையே இருக்கிறதால கடவீதிப்பக்கம் இருக்குர சாலை விநாயகர் கோயிலுக்குப் போவதானா எனக்கு அத்தனை சங்கடம் இருக்கிறதில்ல. அதுமட்டும் ஏன்னா? அந்த கோயிலை ஒட்டியுள்ள ஆஞ்சினேயர் கோயில் அர்ச்சகர் ஒரு காரணம். நான் அறிஞ்சவரைக்கும் மத்த அர்ச்சகர்களவிட மேற்படியான கோயில் அர்ச்சகர் ரொம்பவும் வித்தியாசமானவர். எப்போ நான் அந்த கோயிலுக்கு போனாலும் என்னை சில தமிழ் பக்திப் பாடல்களைப் பாடச் சொல்லிக்கேப்பாரு. எனக்கு பாடினா கேக்குரமாதிரி குரல் இனிமையா அல்லது இதமா இருக்குமா இல்லையா என்பதைப் பத்தியோ நான் பாடல்களை உரிய ராக தாள பாவத்தோடு பாடரேனா என்பதைப் பத்தியோ அவர் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. படிக்கிற நீங்களும் அதனால என்ன பாடச் சொல்லி கேக்கமாட்டிங்கனும் எனக்குத் தெரியும். ஏன்னா நீங்க யாரும் என்ன பாடச்சொல்லி கேட்டு உங்க காதுகள புண்ணாக்கிக்கிட்டு காது மூக்குத் தொண்ட டாக்டரோட பர்ச! இல்ல இல்ல அவரோட சூட்கேச நெறைக்க நீங்க ஏமாளிகளா என்ன?நானுதான் பாவம்.

பாவத்துக்கும் ராகத்துக்கும் என்மேல என்ன கோபமோ தெரியலிங்க. எனக்கும் ஒரு பாட்டு வாத்தியாரு சகட்டு மேனிக்கு சங்கீதத்துல சரளிவரிசைத் தொடங்கி கீர்த்தனை வரைக்கும் சொல்லிக்குடுக்கிறேன் பேர்வழினு எங்கிட்ட முட்டி மோதிப் பாத்தாரு. என்னோட தலைல இல்ல இல்ல அவரோட தலைல குட்டியும் பாத்தாரு. பாவம் அவரு. கடைசில நம்ம சீழ்த்தலை இல்ல சீத்தலை சாத்தனாரு கதையமாதிரி தன்னோட தலைய புண்ணாக்கிக்கிட்டு போனதுதான் என்னோட பாட்டு வாத்தியாருக்கு நான் குடுத்த குரு காணிக்கை.

அப்புரம்! நாம நம்ம கோயில் கதைக்கு வருவோம். அதுதாங்க அந்த ஆஞ்சினேயர் கோயில் அர்ச்சகர் என்னையும் மதிச்சி பாடச் சொல்வார். நானும் தேவாரம், திவ்விய பிரபந்தம், விநாயகர் அகவல்போன்றவற்றிலிருந்து சில பாடல்களை பாட்டாகவும் இல்லாமல் பேச்சாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட திரிசங்கு நிலையில் ஏதோ அவர் கேட்டுட்டாரே என்பதற்காகவும் நான் மனப்பாடம்செஞ்ச இந்தத்தமிழ் பாட்டுகளும் பாசுரங்களும் மறந்துவிடாமல் இருக்கிறதா என என்னுடைய ஞாபக சக்தியை பரிசோதனை செய்துகொள்வதற்காகவும் அவரிடம் ஒப்புவிப்பேன். அவரும் கேட்டுவிட்டு பேஷ் பேஷ் நன்னா பாடரேள். கத்தவங்களுக்கு சென்ற எடமெல்லாம் சிறப்புன்னு சும்மாவா அவ்வை சொன்னாங்க என என்னை பாராட்டுவார். “சரி, சரி! சரி. நானு கத்தவனில்ல, கத்துரவந்தானே!” னு எனக்குள்ளையே நெனச்சிக்குவேன்.

அந்த குருக்களுடய மற்றொரு நல்ல குணம் தன் பூஜை புனஷ்க்கார காரியங்களை கண்ணும் கருத்துமா செய்வார். தட்டில் விழுவது சில்லரைகளா நோட்டா என்றெல்லாம் கவனிக்கமாட்டார். யார் கோயிலில் நுழைந்து வழிபட்டாலும் தன் தட்டில் எதையாவது இட்டாலும் இடாவிட்டாலும் சுமங்கலிகளானால் பூ, மஞ்சள், குங்குமம்,பிரசாதம் எல்லாவற்றையும் ஒரு துண்டு காகிதத்தில் பொட்டணமா பொதிந்து தருவார். ஆண்களானால் விபூதி குங்குமம் தந்து அனுப்புவார். அவரைப் பொருத்தவரை பூஜை என்பது இறைவனை பூஜிப்பதர்க்கே. பகவானைப் போல பகவான் காரியங்களில் பற்று அற்றிருத்தல் என்பது தன் வாழ்க்கை தர்மமாகக் கொ்ள்ளுபவர். அந்தக் கோயில் அர்ச்சகரை தரிசிக்கவும் கோயிலுக்கு அருகில் கடை வைத்துப் பூஜை சாமான்களை விற்று பிழைப்பு நடத்தும் காமார்த்தெருவைச் சேர்ந்த பாட்டியை தரிசிக்கவும்தான் நான் கோயிலுக்குப் போவேன். அந்தப் பாட்டியோட பேர சத்தியமா என்னானு நான் இண்ணைக்கு வரைக்கும் தெரிஞ்சி வச்சிக்கல. அது தப்போ சரியோ எனக்கு தெரியாது. ஆனா இப்போ நெனச்சிப் பாத்தா தெரிஞ்சிக்காம இருந்தது என்னோட துரதிஷ்ட்டந்தானு இப்போ புரியிது.

அட பகவானே! கண்ண கெடுத்துக்கிட்டு இல்ல சூரிய நமஸ்காரம் செய்ர பேர்வழிதானே நானு. என்னைப் பொருத்தவரை நான் மொதல்ல சொன்ன கோயில் குருக்களும் அந்தப் பாட்டியும் நான் தெரிஞ்சிக்கிட்ட நடமாடும் தெய்வங்கள்னுதான் நினைப்பேன். காரணம் அவர்கள் ரெண்டு பேருமே தங்களோட காரியங்கள ரொம்ப ஞாயமாவும் மன சாட்சிக்கு விரோதம் இல்லாம சுத்தபத்தமாவும் செஞ்சிட்டு வர்ரவங்க என்பதாலத்தான்.

குருக்களப்பத்தி இத்தோட நிருத்திப்போம். காரணம் அவரு நம்ம கதைல முக்கிய பாத்திரம் இல்லை. வேணும்னா அவர உப பாத்திரம்னு வெச்சிக்கோங்களேன். ஏன்னா கோயில் அப்படின்னா தப்பாம பூஜையும் குருக்களும் இருக்கும் அல்லது இருக்கணும் இல்லையா?
கோயிலுக்குள்ள தூர்ரப்பவே “வா சாமி. செருப்ப இங்கயே கழத்திப்போடு. நல்ல நாளும் அதுவுமா கோயிலுக்கு வந்திருக்கிங்களே. சாமிக்கு பிராத்தன பன்றதுக்கு என்னா என்னா தேவையோ எல்லாத்தையும் பாட்டிக்கிட்டையே வாங்கிக்கோங்க. நானு ஒண்ணும் உங்க கிட்ட அதிகமான வெலைக்கு வித்து மாடி மேல மாடி கட்டப் போரதில்ல. உங்களுக்கும் தெரியும் இல்ல சாமி. தேங்கா, பூவு, பழம், பத்திக்குச்சி, சாம்பிராணி, கல்பூரம் எல்லாமே பாட்டிக்கிட்ட இருக்குல்ல. வாங்கினு போங்கன்னு” சொல்லி தன்னோட கடைல இருக்கிற பூஜை சாமான்களை சாதூரியமா பேசி எங்கள வாங்க செய்யும் அந்த பாட்டியம்மா.

நாங்களே மறந்துட்டாலும் பாட்டியம்மா எங்களோட கோவில் கூடைய தன்னோட கேமரா கண்ணால நோட்டமிட்டு நொடி நேரத்துல நாங்க கொண்டு வராத பொருளுங்கள சுட்டிக் காட்டி,

“என்ன சாமி நல்லெண்ணைய கொணார மறந்துட்டிங்க போல இருக்கே. பாட்டி நானு ஊத்தரேன். எவ்வளவு ஊத்த? கால் லிட்டரு ஊத்தட்டுமா?வெளக்கேத்த திரிய கொண்ணார மறந்துட்டிங்க போல இருக்கே. இந்தாங்க எடுத்துக்கோங்க. ரண்டு திரி சேத்தே தாரேன். அட நெருப்பு பொட்டிய உட்டுப்புட்டு வந்திட்டிங்களா? என்னா ஒரு பொட்டி தரட்டா? சரி அத்த உட்டுருங்க. இதோ இதுக்கெல்லாம் காசு ஒண்ணும் வேணா. பொட்டிய எடுத்துட்டு போயி நல்லா கல்புரம் கொளுத்தி வெளக்கேத்தி சாமிய கும்புட்டுப்புட்டு பொட்டிய என்னாண்ட கொணாந்து குடுத்துப்புட்டு போங்க. உங்க செருப்புங்களுக்கு நானு ஜவாப்பு. நல்லா வேண்டிக்கோங்க. ஆண்டவன் அருளால உங்க குடும்பத்துக்கு ஒரு கொறையும் வராது. நாம யாருக்கும் ஒரு கெடுதலும் செஞ்சதில்ல. நீங்க நல்லா இருப்பிங்க” னு வாழ்த்தும் பாட்டியம்மா.

நானும் “அம்மா நானு கோயிலுக்கு உள்ள வரல. நீயும் உன் மருமகளும் பேரன் பேத்திங்களும் சாமி கும்புட போங்க. நானு இங்கயே பாட்டிக்கிட்டயே இருக்கிறேன். ஏன்னா இதோ இப்பதான் சாமியே நம்மள வாழ்த்தி வரங்குடுத்துடுச்சி இல்லையா? அப்புரம் எதுக்கு கோயிலுக்கு வேறன்னு?” சொல்லுவேன்.

“அட பேராண்டி; என்ன கேலி பண்ணாதடா. நானு கண்ணு நெறைய பாத்து, தலைக்கு தண்ணி ஊத்தி, குஞ்சி நீவி முத்தங்குடுத்து,ஒரம் எடுத்து வளத்து உட்ட புள்ளடா நீயி. நீ இண்ணைக்கி என்ன கேலி பண்றியா ஊம் பண்ணு பண்ணு. நீ என்ன கேலி பண்ணாம யாரு கேலி பண்ணுவா? நீ பெரிய புள்ளையா வளந்துட்ட. என் கண்ணு எதுரிலியே நல்லா படிச்ச. உண்ண படிக்க வைக்க உங்கம்மா பட்ட பாடு என்னா ஏதுன்னு எனக்கில்ல தெரியும். படிச்ச படிப்பு வீணா போவலையே. இண்ணைக்கி கை நெறைய சம்பாதிக்கிற. பொஞ்ஜாதி புருஷனா புள்ளக் குட்டியோட இருக்கேனா அதுக்கு காரணம் உங்க அம்மா செஞ்ச தருமமுடா சாமி. நானு என்னோட வேவாரத்துல நொடிஞ்சி போயி நின்னப்ப என்னானு அந்தக் கொடுமைய சொல்லரது?என்கிட்ட இட்லி, ஆப்பம், பலகாரம், பட்சனம்னு கடனுக்கு வாங்கித் தின்னுப்புட்டு நெரையா பேரு கை விரிச்சதால ஆத்தாடி என் பொழப்புல மண்ணு உழுந்து போச்சேன்னு கலங்கினு நின்னப்போவும் மகராசி உங்கொம்மாதான் ஒதவுனா. எங்கூட்டுக்காரு அதுதான் உங்க பாட்டன் பஸ் ஸ்டாண்டுல பொரிக்கட வச்சிப் பொழச்சிக்கிலாம்னு நெனச்சி கடன ஒடன வாங்கி பொரி கடக்கி பூசையெல்லாம் போட்டுகடையத் தொடங்கினாரு. கடையும் ஓஹோனு ஓட்டம் ஓட்டமா ஓடுச்சி. அப்புரம் ஆறே மாசந்தான். அந்த ஆரேமாசத்துக்கப்புரம் பொரிக்கடைலியும் உழக்கூடாத பெரு மண்ணு உழுந்துப்போச்சி. “இது பொரம்போக்கு எடம். இந்த எடத்த பஸ்ஸ்டாண்ட பெருசாக்க சர்க்காரு எடுத்துக்கப்போவுது. நீங்க ஒடனடியா கடைய காலி பண்ணலேன்னா கடை சரக்கையெல்லாம் அள்ளின்னு போரதில்லாம யாரு கடைய வச்சினு இருக்காங்களோ அவங்கள உள்ள தூக்கிப் போட்டுப்புடுவோம், அப்புரம்ஜெயிலுக்குப் போயி கம்பி எண்ணவேண்டியதுதான்.” னு சொல்லி போலிஸ்காரு காலி பண்ண சொன்னப்போ அவங்களும் என்னடா பகவானே செய்யரது? எங்க குடும்பத்துக்கு அடி மேல அடியா உழுந்துப் போச்சே? நாலு சின்னஞ்சிறுசுகள எப்படி காப்பாத்தப்போரமோ?னு நாங்க கலங்கி நின்னப்போ வட்டி வாசி எதுவுமே வாங்கிக்காம, எந்த நகையோ பாத்திர பண்டங்களோகூட அடமானமாவும் வாங்கிக்காம பத்தாயிரம் ரூபாய வெறும் நம்பிக்கயின் பேருல குடுத்த மகராசிடா உங்கொம்மா. அதுகூட இண்ணைக்கி வரைக்கும் உங்கொப்பனுக்குகூட தெரியாதுடா ராசா.

அப்படி எங்களுக்குள்ள ஒரு சினேகமுடா என் கண்ணே. உங்கொம்மா உங்கள என்னாண்டதா உட்டுப்புட்டு நல்லது கெட்டது தீட்டுத் தெடக்கு எது நடந்தாலும் போவா. அவ வர்ரவரைக்கும் உங்கள ஏனைல போட்டு தூரியாட்டி, பாட்டு பாடி,உங்க பசி ருசி அறிஞ்சி உங்களுக்கு பிஸ்கோத்து ஊட்டிவுட்டும், பாலு கீலு,அமுலு டப்பானு கலக்கி ஊத்தியும், நீங்க தெளிச்ச தீர்த்தத்தையும் உங்களோட பிரசாதத்தையும் சுத்தம் பண்ணி உடுப்பு மாத்தி உங்கள பாத்துக்குவேன். போன வேலைய முடிச்சிப்புட்டு ஊட்டுக்கு வந்த உங்கொம்மா என்ன பெத்த தாயி இருந்தாக்கூட இப்படி என் குஞ்சி குளுவான்கள பாத்துக்கமாட்டா எம்மா. உனக்கு எந்த ஜென்மத்துல நானு இந்த கடன தீக்கப்போரனோ தெரிலியேனு சொல்லித் தவிப்பா. அதுக்கு நானு எம்மா ஏன் நாங்க வட்டி கிட்டி குடுக்கலன்னு சொல்லி காட்ரயாம்மானு கேட்டுப்புடுவேன். அவ கண்ணுல இருந்து பொடபொடன்னு தண்ணி மழ பேயரமாரி ஊத்தும். நாங்க அப்போ தாயா புள்ளையா இருந்தோம். என் விதி இப்போ இந்தக் கடைய இந்தக் கோயிலாண்ட ஒரு பரதேசியாட்டம் வெச்சிட்டு இருக்கவேண்டி ஆயிடுச்சி. நாங்க இந்த அளவுக்கு இந்த கோயிலுக்கிட்ட கட கன்னி வச்சிப் பொழக்கிறதுக்கு உங்கொம்மாசெஞ்ச சகாயந்தா சாமி காரணம்.

ஆனா நாங்க வாங்கின கடன ஒரு வருஷத்துக்குள்ளையே திரிப்பிப்புட்டோம். நாங்க வாழ்ந்து கெட்ட குடும்பமடா சாமின்னு” சொல்லி ஒரு காலட்சேபமே பாட்டியம்மா நடத்த ஆரம்பிக்கும்.

“இல்ல பாட்டி. நீ வாழ்த்தினா அந்த சாமியே வாழ்த்தி வரங்குடுத்தமாதிரி பாட்டி. நீ பேசிட்டு இருந்தா கேட்டுக்கிட்டே இருப்பேன் பாட்டி. நான் ஒண்ணும் உன்ன கேலி பண்ணல பாட்டி. மனச தெறந்து நெசமாத்தான் சொல்லறேன்னு” நானும் பாட்டிக்கு பதில் சொல்லுவேன்.

எங்கம்மா “பாட்டியும் பேரனுமா சேந்து பிலேடு போடரத நிருத்துங்கடா. எம்மா தாயி உன்னோட போன காலராமாயண பாரத புரானங்களை எல்லாம் கொஞ்சம் மூட்ட கட்டி வைய்யி. உன்னோட பேரன் இந்த ஊரவுட்டு எங்கயும் போவமாட்டான். சாவகாசமா ஒரு நாலு காத்தாலைல இருந்து ராத்திரி வரைக்கும்கூட நீங்கபுருசன் பொஞ்ஜாதியாட்டம் கொஞ்சி கொலாவினு இருங்க. இன்னைக்கி இத்தோட போதும். நிறுத்து. பூஜ முடியர நேரமாவுது. நீ இப்போ வர்ரையா இல்லயாடா நாங்கமட்டும் கோயிலுக்குள்ள போகட்டுமா?” என கண்டிப்பான குரலில்அம்மா கூற, “சரி நேரமாவுது போயிட்டு வாடா பேராண்டி சாமின்னு” சொல்லி தன்னோட நடுங்குர கைகளால என் கைய்ய புடிச்சிக்கிட்டு கண் கலங்கி பாட்டி எங்களை கோயிலுக்கு அனுப்பும்.

கோயிலுக்குப் போய் பூஜை முடிச்சி வழக்கம்போல நவகிரகமெல்லாம் சுத்திட்டு வெளியே வந்து செருப்பு போடரப்போ வாங்க சாமிங்களா ஒரு வா சாப்பிட்டுப்புட்டு போவிங்களானு வாய் நெறைய அந்த பாட்டியம்மா கூப்பிடும்.

அதுக்கு “அதுக்கென்னாமா இன்னொரு நாளைக்கு வர்ரோம். இங்கதான ஊடு இருக்கு. அட அப்போ நீ குடுத்த இட்லியயும் தோசை ஆப்பங்களையும் தின்னுதான இந்த கொமரன் ஆளானான். சரி நாங்க வர்ரோம்மான்னு” சொல்லி அம்மா விடை பெறுவாள். இது கோயிலுக்கு நாங்க போரப்போவெல்லாம் வழக்கமா நடக்குர சமாச்சாரந்தான்.

வாழ்க்கைச் சக்கரம்தான் எத்தனை வேகமா சுழலுது? அடேயப்பா. அப்போவெல்லாம் கீ கொடுக்கிற டைம் பீஸ் தான் எங்க சித்தப்பா வீட்டுல இருந்ததா ஒரு நெனப்பு. அந்த கடிகாரம்கூட மொதல் நாள் இரவு சாவி குடுத்து வெச்சாதான் கிணிங் கிணிங் கிணிங்னு மணியடிக்கும். ஆனா அந்த அலாரம் அடிக்கும் கடிகாரம் சரியான நேரத்துக்கு மணியடிக்குமோ? அடிக்காதோ? எனக்கு சரியா இப்போ நெனப்பு இல்ல. ஆனா அப்போவெல்லாம் எங்கள மேற்படி காமார்த் தெரு இட்லிப் பாட்டியோட கூப்பட்ர சத்தந்தான் எங்களுக்கு விழிப்பூட்டும் கடிகார மணிச் சத்தம்; இல்லைனா ஏழு மணி சங்கு. “அமுதா, அகிலா, மாரியம்மா, காளியம்மா, கிஷ்ணா, குமரேசா, பழனி, பாண்டுரங்கா ஏண்டா புள்ளைங்களா வாங்கடா வந்து வாங்குங்கடா. சூடா இட்லி இருக்குது. தோச இருக்குது. ஆப்பம் இருக்குது. வட இருக்குது . வாங்கடா. வந்து வாங்குங்கடா. அஞ்சு பைசா பத்து பைசாதான்னு” தெனக்கிம் காத்தால ஏழு மணிக்கெல்லாம் பாட்டி பல்லவியா பாடும்.

இட்லில ரெண்டு தினுசு. அஞ்சு பைசாவுக்கும் பத்து பைசாவுக்குமாக சின்னதும் கொஞ்சம் பெருசுமா இட்லி இருக்கும். ஆப்பம் தோசை எல்லாம் பாஞ்சி பைசாவுக்கு பாட்டி விக்கும். எங்களோட அம்மாமாருங்க காசுக்கும் கடனுக்குமா இட்லி தோசை ஆப்பமெல்லாம் நாங்க சோறு தின்ன மாட்டேன்னு அடம் புடிச்சா வாங்கித் தருவாங்க. பெரும்பாலும் தீபாவளி, பொங்கல், ஆடி 1, ஆடி 18 முதலான பண்டிகைகள் வரப்போ பாட்டி வரமாட்டா. மத்த நாள்ளுங்கள்ள கண்டிப்பா வருவா. பாட்டியோட இட்லி தோசை ஆப்பம் வடைகளோட ருசி இன்னும் இன்னும் நாக்குல எச்சிய வரவைக்குதுனு சொன்னா அது பொய் இல்ல. அப்படி தன்னோட இட்லி வேபாரத்துல சுத்தத்தையும், தன்னோட வாடிக்கையாளர்கள் ஆகிய எங்கக் கிட்ட பிரியத்தையும் காட்டும் அந்த இட்லிப் பாட்டி. காத்தால இட்லிக் கூடைய சுமந்து தன்னோட பேச்சு சாதூரியத்தாலேயும் பலகாரப்பண்டங்களை சுவையா செஞ்சி விக்கிறதாலேயும் பத்து மணிக்கெல்லாம் முழு இட்லிக் கூடையயும் வித்து முடிச்சிடும் பாட்டி. அப்புரம் எப்போ சாப்பிடுமோ எப்போ மத்த காரியங்களையும் புள்ளைக்குட்டிங்க, பேரன் பேத்திங்களையும் கவனிக்குமோ எங்களுக்குத் தெரியாது. அது ஆண்டவனுக்குத் தான் தெரியும் அவனும் தூங்காம இருந்தா! இல்லன்னா கொஞ்சம் ஏமாறாம இருந்தா.
மத்தியானம் 12 மணிக்கெல்லாம் அடுத்த வேவாரத்த தொடங்கிடும் பாட்டி. சீசனுக்கு ஏத்தாப்புல வள்ளிக்கெழங்கு, குச்சிக்கிழங்கு, பொடச்சோளக் கதிரு, பேரிக்காய்ன்னு வெவ்வேறு தினுசான பண்டங்களை பள்ளிக்கூடங்க பக்கத்துல வச்சி வித்திட்டு இருக்கும் பாட்டி. இது பாட்டி வேவாரத்துல இரண்டாங்காலம் போல இருக்கு.
சங்கீதத்துல மூன்றாம் காலம் மாதிரி பாட்டியம்மாவோட வேவாரத்துலையும் மூன்றாம் காலமும் இல்லாம இருக்கமுடியுமா என்ன? இல்லாட்டா பாட்டியம்மாவோட மண்ட பத்மாசூரனோட தல வெடிச்சிட்டமாதிரி பதினாறு சுக்கா வெடிச்சிடாதா பின்ன! நாங்க டௌசரும்- சட்டையும், இல்ல இல்ல பலகையும்-பல்ப்பமும், தப்புத் தப்பு ஊளமூக்கு டப்பியும்-ஜொல்லு ஊத்துமா வெளையாடிக்கிட்டு இருந்த அந்த கால சாயங்கால நேரத்துலையும் பாட்டி தித்திப்பு போண்டா, உளுந்து வடை,குழிப் பணியாரம், அரிசி முருக்கு, நிப்பட்டுன்னு விதவிதமா பலகாரங்கள பண்ணி, சூடாவும் சுத்தமாவும் ருசியாவும் விக்கும். பாட்டியோட பலகார வாசனைக்கு மசியாதமக்க அந்த சுத்து வட்டாரத்துலையே இல்லன்னு நான் சும்மா சொல்லரதா நீங்க இண்ணைக்கு நெனச்சா அது என்னோட குத்தமில்ல. இன்னக்கி எத்தனை எத்தனையோ இனிப்பு வகைகளும் கார வகைகளும் விதவிதமா, கலர் கலரா,தினுசுதினுசா பலகார கடைகளிலும் ஓட்டல்களிலும் விக்கிராங்க. ஆனா? அட இந்த காலத்துக் கொழந்தைகளுக்கு இட்லிப் பாட்டி மாரி பெரிய மனுசிங்க செய்யர பலகாரமெல்லாம் புடிக்குமோ? புடிக்காதோ? அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. அந்தமாதிரி பலகாரங்களத் தின்னு ருசிக்க இந்தக் கால கொழந்தைங்களுக்கு ஏதுங்க அதிஷ்டம்? ஆனா பாட்டியோட பலகார ருசிய நெனச்சா?நெனைக்கறவங்களோட மனசெ ருசி மயமாகிடும். அவளோட பலகாரங்களப் பத்தி நான் சொன்னா நீங்க நம்பமாட்டிங்க! தேவாமிர்தமாமே?யாராச்சும் நம்மவங்க அத ருசிச்சதுண்டா? உங்களப்பத்தி எனக்குத் தெரியாது. ஆனா என்னோட அனுபவத்துல இட்லிப்பாட்டியோட பலகாரங்களுக்குச் சமமாவேற எந்தக் கடையிலும் இதுவரைக்கும் ருசியான பலகாரங்களைத் தின்னதில்லைங்கநானு. இது என்னோட நாக்கு மேல சத்தியம்முங்க. நம்ம கவிச் சக்கரவர்த்தியாருமட்டும் இட்லிப் பாட்டியோட பலகாரங்கள தின்னிருந்தாருனா?இட்லி காண்டம், ஆப்பம் காண்டம், தோசை காண்டம், சட்டினி காண்டம், சாம்பார்காண்டம், அப்படின்னு இட்லி பாட்டிக்கு ஒரு இட்லிப் பாட்டியாயணமே பாடி இருப்பாரு. சாயங்கால பலகாரங்களுக்காக தனித்தனியா முருக்கு அந்தாதி, நிப்பட்டு அந்தாதி, இனிப்பு போண்டா அந்தாதி, வடை எழுவது, குழிப்பணியார வழக்கம் என முற்றாத சிற்றிலக்கியங்கள பாடிப் பாடி பாட்டியம்மாக்கிட்ட இருந்து எல்லா வகை பட்சனங்களையும் இலவசமாவே வாங்கி இருப்பாரு. மன்னிப்புங்க. அப்படி சொல்லக் கூடாது. நம்ம பாட்டியம்மாவே முடியப்ப வள்ளலைப்போல கண்டிப்பா கவிச் சக்கரவர்த்திய ஆதரிச்சி இருந்திருப்பாங்க. ஒரு வேள நான் சொல்லறது பொய்யானா இனியாச்சும் இந்த நாக்கு ஒரு மண்டலத்துக்கு ருசி மறந்த பூனையா இருக்கட்டுமே. நான் சொன்னா இதெல்லாம் நம்ம இளசுங்களுக்கு வேடிக்கையாவும் விளையாட்டாவுந்தான் இருக்கும். இப்போவெல்லாம் சின்னஞ்சிறுசுங்க ஏதேதோ புதுசு புதுசா தினுசு தினுசா பலகார பேருங்கள சொல்லுதுங்க. வாங்கி வாங்கித் தின்னுதுங்க.

இதெல்லாம் வேணாம் புள்ளைங்களான்னு சொல்லிப் பாருங்க. காலு மேல ஏருர கரப்பான பாக்கிறமாதிரி இல்ல நம்மள ஒரு தினுசா மொறச்சிப் பாக்குதுங்க. என்னவோ குர்க்குரேவாம்! மர்க்குரேவாம்! லேசாம்! கீசாம்!பீசாவாம்! தீசாவாம்!பர்கராம்! தோர்கராம்!மஞ்சுவாம்! அஞ்சுவாம்!” அடஇப்படித்தாங்க ஒரு நாளு என் பைய்யன் மஞ்சு வேணும்; மஞ்சு வேணுன்னு” கேட்டாங்க. “அது யாருடா?ஏண்டா எதுத்த வீட்டு பாப்பாவா? இல்ல உன் டூசன் பிரண்டான்னு? கேட்க, அவன் தன்னோட தங்கச்சிங்க கிட்ட சொல்றான்.

“அட நம்ம அப்பா ஒரு லூசு. இந்த அப்பாக்கிட்ட போயி நாம என்ன பண்டங்கள வாங்கித் தரச் சொல்லமுடியும்னு” சொல்லி கெக்களிச்சி சிரிக்கிறான்.

எதுல ஒத்துமையா இருக்காங்களோ இல்லையோ? என்னோட பொண்னுங்களும் பைய்யனோட சேர்ந்து என்ன மட்டம் தட்டருதுல ஒத்துமைனா அப்படி ஒரு ஒத்துமையா இருக்காங்க. இந்த மக்கு அப்பாவுக்கு ஒரு சாக்குலேட்டோட பேருக்கூட தெரியலையே, இது கூட தெரியலனா? இதெல்லாம் நம்மளோட தலை எழுத்துன்னு” பொண்ணுங்கமட்டும்? அவனுக்கு சளச்சவங்களா என்ன? என்னோட பைய்யனும் பொண்ணுங்களும் அவங்க அம்மாக்கிட்ட எப்படியோ தாஜா பண்ணி காசு வாங்கினு போயி இப்படி ஏதேதோ வாய்க்கு வராத பண்டங்களையும் வயித்துக்கு சேருமோ? சேராதோ? எனக்குத் தெரியாம வாங்கித் தின்றாங்க. அப்புறம் வாயி டாக்டர், வயித்து டாக்டர், நாக்கு டாக்டர்ன்னு நமக்குத் தெரியாத டாக்டருக்கிட்ட எல்லாம் நாம புள்ளைங்கள கூட்டிட்டுப் போயி அழவேண்டி இல்ல இருக்கு? புள்ளைங்க ஊசி போட்டிடுவாங்களேனு அழ, நாம எத்தன ஆயிரம் ரூபா ஆகுமோனு அழ, நமக்கு முன்ன புள்ளைங்கள கூட்டிட்டு போன அம்மாளும் அப்பனும் ”நம்ம புள்ளையவே ஒழுங்கா டாக்டரு பாத்து முடிக்கலயே? அதுக்குள்ளையே அடுத்ததுக்கு பெல்ல அடிச்சிப்புட்டாங்களேன்னு” அழ, நர்சம்மாவும் ”சீக்கிரமா ஊட்டுக்கு போக உடமாட்டாங்கபோலிருக்கேன்னு” அழ, மருந்து கடக்காரரு “என்னடா சாமி எத்தன விதமா மருந்துகள வாங்கி வச்சாலும் டாக்டரோட கையெழுத்துக்கு ஏத்தபடி நாம வாங்கி வச்ச மருந்தோட லேபில் ஒரு மாத்திர மருந்துக்குகூட பொருத்தமா இல்லையேன்னு” அங்கலாய்ப்போட அழ இப்படி ஆஸ்பத்திரிகளச் சுத்தி ஒரே அழுகைமயமா இப்போ இருக்கிறமாதிரி அப்போவெல்லாம் இருந்ததுண்டான்னு? கொஞ்சம் நாம யோசிக்கத்தானுங்க வேணும்.
ஒரு பதினஞ்சி நாளுக்கு முந்தி நாங்க கல்யாணத்துக்கு ஆட்டோவுல கெளம்பிட்டு இருந்தமுங்க குடும்பத்தோடுதான். எண்ணைக்கும் இல்லாத அதிசயமா பாட்டியம்மா சாலை விநாயகர் கோயில கடக்கிற நேரம் பாத்து ”சாமி பேராண்டி ஊட்டுக்கு வந்து நீங்க எல்லாரும் ஒரு வா சாப்பிட்டுடுதாண்டா போகணும். என் கை இட்லி பக்குவத்த நீ மட்டும் தின்னா போதுமா? என்னோட பேரனோட புள்ளைங்களும் அத ருசி பாக்கவேணாமா? காசு கேட்டுப்புடுவேனு பயப்படாதிங்க. வாங்க. வந்து ரெண்டு இட்லியாச்சும் சாப்பிட்டுப்புட்டு போங்க சாமிங்களேன்னு” சொல்லிக் கூப்பிட, என்ன பெத்த மகராசி, ”போடி சின்ன ஆயா நாங்க எல்லாம் கல்யாண பந்தில சாப்பிட போரோம்; உன்னோட இட்லிக்கும் தோசைக்கும் இங்க யாரும் வீங்கினு இல்ல. எங்களுக்கு நேரமாச்சி வழி உடு தாயே! நீ போர தெசைக்கி புண்ணியம்னு” சொல்லிட்டு “டே பேச்சி கீச்சி குடுத்த அப்புறம் சொல்லிப்புட்டேன் ஆமா!” ன்னு சொல்லி நாங்க போன ஆட்டோவ வேகமா ஓட்ட சொல்லிப்புட்டாங்க. ஆனாலும் அந்த பாட்டியம்மா கலங்கின கண்ணோடும் நடுங்கின கைய்யோடும் தழுதழுத்த குரலோடும் ஆட்டோவ வழி மரிச்சி “சாமி ஒரு வாய் சாமிபஞ்சாமிர்த அபிசேகம் இருக்கு, இதையாச்சும் எனக்காக தின்னுங்க சாமி” னு குடுக்க,எல்லாரும் கடமையேனு கொஞ்சம் சாங்கியத்துக்கு எடுத்துக்கிட்டோம். என்னோட இளய மக “எனக்கு இன்னும் கொஞ்சம் குடு பாட்டி, பஞ்சாமிர்தம் ரொம்ப நல்லா இருக்கு” னு சொல்லி தன்னோட பிஞ்சு கையால வாங்கி எல்லார் வாயிலேயும் துளித்துளியா ஊட்டிநா. வழக்கம்போல என்ன அணச்சி உச்சி முகந்து நெட்டி முரிக்கிறமாதிரி எளய மகளுக்கு செஞ்சி “என்னோட புத்திசாலி பேத்தி நீதாண்டி கண்ணு போயிட்டு வாடி ஏன் ராஜாத்தி” னு சொல்லி அனுப்பினா அந்த பாட்டி. அதுக்கு அடுத்த நாளே அட சாமி இப்படிக்கூட நடக்குமா வாய் ருசிக்க தந்தவளுக்கு?.
———–

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -42செவ்விலக்கியங்களில் பரத்தையர்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *